Wednesday 13 December 2017

வாயை மூடிப் பேசவும் – இப்படிக்கு அரசு


மெர்சல் பட விவகாரம், பத்மாவதி திரைப்படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு, கந்துவட்டி கொடுமையை கார்டூனாக வரைந்ததால் நடத்தப்பட்ட கைது நடவடிக்கை, தீபிகா மற்றும் பன்சாலியின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ஒரு கோடி ரொக்கப் பரிசு என்னும் கொக்கரிப்பு, சனாதன இந்துத்துவத்தை கடுமையாக எதிர்த்த தோழர். கெளரி லங்கேஷ்-க்கு துப்பாக்கி தோட்டாக்கள் பரிசளிப்பு, அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மாநில அரசின் உத்தரவு இன்றி விசாரணைக்கு எடுக்கக்கூடாது என்று நீதிமன்றத்துக்கும், அந்த செய்திகளை பிரசுரம் செய்யக்கூடாது என்று பத்திரிக்கைக்கும் முட்டுக்கட்டைப் போட்டு, இராஜஸ்தான் சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம், என் தந்தையை பாகிஸ்தான் கொல்லவில்லை, போர் தான் கொன்றது என்று ட்விட்டரில் பதிவிட்ட குர்மேகர் கவுர் என்ற பெண்ணுக்கு எதிராக பாலியல் மிரட்டல், சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த கூட்டத்தில், தேசத்தந்தை காந்தியடிகளை, பனியா காந்தி என்று விளித்து, அவர் மீதும் சாதிய சாயம் பூச நாடாளும் கட்சியின் தலைவர் அமித்ஷா முனைந்தது, அவர் ஒன்றும் தவறாக பேசவில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்  தன் பங்குக்கு கொளுத்திப் போட்டது.. என இங்கு நடப்பவைகளைப் பார்த்தால், நிச்சயமாக நாம் அறிவிக்கப்படாத ஒரு அவசர நிலை பிரகடனத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறோமோ…? என்று அச்சமாக இருக்கிறது. அவசர நிலை பிரகடனத்தில் எந்த அடிப்படை உரிமைகளும் தற்காலிகமாக செல்லாமல் போய்விடும் என்பதனை நீங்கள் அறிவீர்கள் தானே..?



இதைப் பற்றி எல்லாம் பேச முனைந்தால், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நாட்டை சீரழிக்கும் அறைகூவலை அனுமதிக்க முடியாது, கருத்துரிமை என்ற பெயரில் நீங்கள் மதத்தையும் நல்ல மனிதர்களின் மனதையும் புண்படுத்துகிறீர்கள் என்று பாரதீய ஜனதா செயற்குழு கூட்டத்தில் இருந்தபடி அமித்ஷாவும், அருண் ஜெட்லியும் அலறுவதும் காதில் கேட்கிறது. இந்த தருணத்தில் நாம் பேச்சுரிமை, கருத்துரிமை என்ற இரண்டு உரிமைக்குமான அடிப்படை வித்தியாசத்தைக் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களிடமும் அண்டை வீட்டாரிடமும், உடன் பணிபுரிபவர்களிடமும் விசாரிக்கும் நல விசாரிப்புகள், உடல் சார்ந்த, குடும்பம் சார்ந்த சந்தோசங்களை, பிரச்சனைகளைப் பேசுவது தான் பேச்சுரிமை. இது தவிர்த்து நீங்கள் தொழில் வணிகம், குழந்தையின் கல்வி, சினிமா, விளையாட்டு, அரசியல், மதம், கருப்புப் பண ஒழிப்பு, GST இப்படி எதைப் பற்றி பேச உங்கள் திருவாயைத் திறந்தாலும் அது  பேச்சாக மட்டுமே இருக்காது, கருத்தாகத்தான் மாறும். அதாவது கருத்துரிமை. இதுதான் பேச்சுரிமை கருத்துரிமைக்கான அடிப்படை வித்தியாசமாகப் பார்க்கப்படுகிறது. இந்த கருத்துரிமை விசயங்களில் தான் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கம் கேட்கிறது. ஏனென்றால் உங்கள் கருத்துரிமையைக் கொண்டு நீங்கள் யார் மனதையாவது புண்படுத்திவிட்டால், அவதூறு வழக்கு, தேசத் துரோக வழக்கு உங்கள் மீது பாய்ந்துவிடும். சரி.. இவர்கள் சொல்லும்படி இந்தக் கருத்துரிமையை எப்படி புண்படுத்தாமல் பயன்படுத்துவது..??, குழப்பமாக இருக்கிறதா..? வெகு எளிது. கீழே உதாரணம் பாருங்கள்.


குடும்பத்தோடு சேர்ந்து ஹோட்டலில் சென்று சாப்பிடுகிறீர்கள், 600 ரூபாய் சாப்பிட்டதற்கு GSTயுடன் சேர்ந்து 800 ரூபாய் பில் வருகிறது. மிகச் சிறப்பான வரித் திட்டம் என்று வாழ்த்துங்கள், இல்லை என்றால் மத்திய அரசின் மனம் புண்பட்டுவிடும். அங்கிருந்து நேராக தியேட்டருக்கு சென்று மெர்ஷல் திரைப்படம் பார்க்கிறீர்கள். GST வரியைப் பற்றிய குற்றச்சாட்டு வருகிறது. கருத்து சொல்ல வேண்டுமே..!!??மிக அற்புதமான வசனம் என்று வாழ்த்துங்கள். இல்லை என்றால் அட்லி மற்றும் விஜயின் மனம் புண்பட்டுவிடும். வெளியே வருகிறீர்கள் தீபிகாவின் தலைக்கு 1 கோடி என்று அறிவிப்பைப் பார்க்கிறீர்கள். இங்கு, கருத்து என்ன சொல்ல வேண்டும்..? தெரிகிறதா…?? கரெக்ட்..!! வாழ்த்த வேண்டும். மிக அற்புதமான அறிவிப்பு என்று வாழ்த்துங்கள். இல்லையென்றால் அறிவிப்பு செய்தவர்களின் மனம் புண்பட்டு நாடு சீரழிந்துவிடும். கூடவே இராஜஸ்தானை ஆளும் பா.ஜ.க முதல்வர் வசுந்த்ரா ராஜே அரசு அலுவலர்களை விசாரிக்க தடைச் சட்டம் பிறப்பித்ததையும், அமித்ஷா, காந்தி ஒரு பனியா என்று கண்டுபிடித்ததையும், ஹெச்.ராஜா விஜய் ஒரு கிறிஸ்துவர் என்று கண்டுபிடித்ததையும் அறிகிறீர்கள். நேரம் தாழ்த்தாமல் வாழ்த்திவிடுங்கள். இல்லையென்றால் மனம் புண்பட்டு நாடு சீரழிகிறதோ இல்லையோ..? நீங்கள் சீரழிந்துவிடுவீர்கள்.. என்ன..? வெளியே திருமா மதச் சாயம் பூசுகிறார்கள் என்று முழங்குகிறாரா..? யோசிக்காமல் பாராட்டுங்கள். இல்லையென்றால் பாவம் அவர் மனம் புண்பட்டுவிடும். என்ன…??? இப்படியெல்லாம் கருத்து தெரிவித்தால் உங்களை பைத்தியம் என்று கூறிவிடுவார்களே..? என்று பயமாக இருக்கிறதா..? அப்படியெல்லாம் உங்கள் மனம் புண்படுவது போல் யாரும் பேசிவிட முடியாது. அது கருத்துரிமையை மீறிய செயல் ஆகிவிடும். என்ன..? இதனை கடைபிடிப்பது கடினமாக இருக்கிறதா.? ம்ம்ம்.. சரி.. அப்படியென்றால் ஒன்று செய்யுங்கள். வாயை மூடிப் பேசுங்கள். (கவனிக்கவும், பேசுங்கள் கருத்து சொல்லாதீர்கள்) இதைத் தான் நம்மை செய்யச் சொல்கிறது ஆளும் அரசு.


இந்திய அரசியலமைப்பு நமக்கு கருத்துரிமை பேச்சுரிமை இரண்டையுமே கொடுத்திருக்கிறது. ஆனால் ஆளும் மத்திய அரசு மேற்சொன்னபடி, பேச்சுரிமையையே கருத்துரிமையாகவும் நம்மை நம்பச் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறது. அல்லது பேச்சுரிமை மட்டும் தான், இனி கருத்துரிமையே கிடையாது என்பதனை சொல்லாமல் சொல்கிறது. இதற்கு நம் இந்திய அரசியலமைப்பு சட்டமும் ஒரு வகையில் துணை போகிறது. எப்படி என்றால் கருத்து சுதந்திரத்திற்கு ஊறு விளைவிக்கும் சில சட்டதிட்டங்கள் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு, இன்றுவரை நீக்கவும் படாமல், திருத்தமும் செய்யப்படாமல் அப்படியே தொடர்கின்றன. அவற்றில் குறிப்பாக பிரிவுகள் 153, 153A, 295, 295A, 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளைக் கூறலாம்.

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த உச்ச நீதிமன்ற வழக்கில் கிரிமினல் அவதூறு சட்டப் பிரிவுகளான 499,500 ஆகியவற்றை நீக்கக் கோரி, அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல்காந்தி, சுப்ரமணிய சுவாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். ஆனால் அந்த சட்டப்பிரிவுகள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதில் ஓரளவுக்கு நலிந்த மக்களுக்கான பாதுகாப்பு இருக்கிறது என்றாலும், பெருமளவில் ஆளும் வர்க்கத்தினர் தான் அதனை தங்களுக்கு சாதகமான விசயமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதால், அதற்கான சட்டத் திருத்தங்களையாவது கொண்டு வருவதில் நாம் தீவிரம் காட்ட வேண்டும் என்றே தோன்றுகிறது.


சரி. இந்த கருத்து சுதந்திரத்தை நாம் எப்படித்தான் புரிந்து கொள்வது, அந்தப் பதத்தை எப்படித்தான் பயன்படுத்துவது என்று கேட்டால், அதற்கும் தேச தந்தை காந்தியடிகள் தனது கட்டுரை குறிப்புகள் மூலம் வழிகாட்டுகிறார். (காந்தி கருத்துரிமைப் பற்றி என்ன சொன்னார் என்றெல்லாம் ஆளும் வர்க்கத்தின் அமித்ஷாக்கள் பேசவே மாட்டார்கள். காந்தி காங்கிரசை கலைக்கச் சொன்னார் என்பதைத் தான் அவர்கள் திரும்ப திரும்ப பேசுவார்கள்.) காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த போது எழுதிய “இந்திய சுயராஜ்ஜியம்” என்ற புத்தகத்தை, இந்தியாவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட, அவரது நண்பர் முயலும் போது, அது தேச துரோக கருத்துக்களை கொண்டிருக்கிறது என்று சொல்லி ஆங்கிலேய அரசு அந்தப் புத்தகத்தை தடை செய்துவிடுகிறது. அந்தத் தடையை நீக்கக் கோரி, காந்தியடிகள் எழுதிய ஒரு கடிதம் ஆவணக் காப்பகத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் காந்தி, ”எந்தவொரு தனி நபருக்கும் அவரது கருத்தை பொதுவெளியில் சொல்லவும், அதை செயல்படுத்தவும், முழு உரிமை உண்டு. எப்பொழுது என்றால், அது மற்றொரு நபரை உடல் ரீதியாக துன்புறுத்தாத வரை.. இது என்னுடைய தாழ்மையான கருத்து..” என்று எழுதியிருப்பதாக வரலாற்றாசிரியர் இராமச்சந்திர குஹா தெரிவிக்கிறார்.


அப்படியென்றால் கருத்துக்கள் மனரீதியாக ஒருவரை துன்புறுத்தலாமா..? என்ற கேள்வி வரும். அப்படி புண்படுத்தாமல் எந்தவொரு கருத்தையுமே நாம் பேச முடியாது என்பதைத் தான் நாம் மேலே சில உதாரணங்களுடன் பார்த்தோம். இருந்தாலும் இதற்கான பதிலையும் மீண்டும் காந்தியிடமே பார்ப்போம்.

”கருத்து சுதந்திரம் என்பது ஒருவர் கருத்தை தெரிவிப்பதால், பிறரின் மனம் புண்படும் என்றாலும் அதை தடுக்காமல் விடுவது என்று தான் அர்த்தம். பத்திரிக்கைகள் மிகவும் காரசாரமாக கருத்துக்களை வெளியிடுவது மட்டும் அல்லாது, அவை செய்திகளை திரித்துக் கூறவும் அனுமதிக்கும் போது தான் அவை சுதந்திரமாக செயல்படுகிறது என்று அர்த்தம்.” என்று யங் இந்தியா இதழில் 12-01-1922 தேதியிட்ட கட்டுரையில் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அப்போது அவர் எதிர்காலத்தில் அரசுகள், திரித்துக் கூறப்பட்ட செய்தி, புண்படுத்தும் செய்தி என்று கருத்து சுதந்திரத்துக்கு தடை விதிக்கலாம் என்பதனையும் யூகித்திருக்கிறார் என்பது புலனாகிறது. மேலும் அவர் ”ஒருவர் தாம் நம்பும் கருத்து, அல்லது கொள்கையை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு இருப்பதோடு, அவைதான் உறுதியான மறுக்க முடியாத உண்மை என்று நம்புவதால் தான் பிரச்சனை உண்டாகிறது. தான் கொண்ட கருத்தின் மேல் புரிதலும் நம்பிக்கையும் இல்லாதவர்கள் தான், மாறுபட்ட கருத்துக்கு அஞ்சி, அதனால் தன் கருத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று கருதி, மாற்றுக் கருத்தை நசுக்கப் பார்க்கிறார்கள். ஒருவர் தான் கொண்ட கொள்கை உறுதியானது,  உண்மையானது, அறம் சார்ந்தது என்ற நம்பிக்கையோடு இருந்தால், மாற்றுக் கருத்தைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. புண்படவும் தேவையில்லை. தவறு என்று தெரிந்தால் திருத்திக் கொள்ளலாம். நாம் எல்லோருமே பிழைகள் செய்பவர்கள், ஆகையால் அடிக்கடி நம் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை வருகிறது. மாற்றுக் கருத்துக்களுடன் உறவாடும் போதுதான், நாம் கொண்டிருக்கும் கருத்து மேலும் வளர்ச்சியும் முழுமையும் அடைகிறது. இது போன்ற ஜனநாயக நாட்டில் உண்மையாகவும் நேர்மையாகவும் கருத்து கொண்டுள்ள எல்லாருக்கும் நாம் இடம் கொடுக்க வேண்டும். அதனால் எதிராளிகளின் கருத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்வதும், அதை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், அதையும் மதிப்பதும் இன்றியமையாததாகிறது. நாம் இது போன்ற தாராள புத்தியும் சகிப்புத் தன்மையும் இல்லாதிருந்தால், நமக்குள் ஏற்படும் சிறுசிறு சச்சரவுகளைக் கூட நமக்குள் பேசி சுமூகமாக தீர்க்க முடியாமல், மூன்றாமானவர்களான அந்நியர்களின் தீர்வுக்கே எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும்.” என யங் இந்தியாவில் 17.04.1924ல் தான் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


ஏனென்றால் காந்தி, பூர்ண இந்திய சுயராஜ்ஜியத்துக்கு கருத்து சுதந்திரம் மிக மிக முக்கியம் என்று கருதியவர். அவரது இறப்புக்கு பின்னர் நடந்த, அவரது வாழ்க்கையோடு தொடர்புடைய ஒரு கருத்துரிமை விசயத்தை இங்கு பார்க்க வேண்டியது கட்டாயமாகிறது. Joseph Lelyveld எழுதிய Great Soul Mahatma Gandhi and His Struggle with India என்ற புத்தகத்தில் காந்திக்கும் அவரது உதவியாளருமான காலன்பாக்குக்கும் இடையே தன் பாலின உறவு இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது குறித்த சர்ச்சை எழுந்ததால், குஜராத் அரசு அந்தப் புத்தகத்தை தடை செய்தது. ஆனால் காந்தியின் பேரன்களான ராஜ்மோகன் காந்தியும், கோபாலகிருஷ்ண காந்தியும் அந்தத் தடைக்கு எதிராக பிரச்சாரம் செய்து, அந்தப் புத்தகத்துக்கான தடையை வாபஸ் பெறச் செய்தனர். Josehp Lelyveld சொல்கின்ற கருத்தை நாங்கள் முற்றிலுமாக மறுக்கிறோம். இருப்பினும் அதைச் சொல்வதற்கான அவரது உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தது, இந்த இடத்தில் மிக முக்கியமானது.

ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ எதிர் கருத்து தெரிவிப்பவர்களுக்கு துப்பாக்கி தோட்டாக்களையும், வழக்குகளையும், சிறைக் கம்பிகளையும் பரிசளித்துக் கொண்டிருக்கிறார்கள். வசுந்த்ரா ராஜே சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ராஜஸ்தான் பத்திரிகா என்ற செய்தித்தாள், கருப்பு கட்டம் கொண்ட காலி தலையங்கத்தை பிரசுரித்திருக்கிறது. இந்திய தேசத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்ட சகிப்புத்தன்மையையும், கருத்து சுதந்திரத்தையும் நாம் எல்லோரும் சேர்ந்து மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதைச் செய்ய நாம் தவறுவோமானால், இங்கு கேலிக்கூத்தாக மாறிப் போயிருக்கும் இந்த ஜனநாயக ஆட்சியில் நாம் அனைவருமே சுயம் இழந்த கோமாளிகளாகத்தான் வலம் வர வேண்டியிருக்கும். 

No comments:

Post a Comment