Wednesday 6 December 2017

அறம் :

கோபி நயினார் இயக்கத்தில், நயன் தாரா நடித்து தயாரித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம். சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த அப்பா திரைப்படத்தில் ஒரு காட்சி இருக்கும். பள்ளி வளாகத்தில் இருந்து தப்ப நினைக்கும் சிறுவர்கள், அதற்கான உபாயம் தேடி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவர்களில் குள்ளமாக இருக்கும் அப்பாஸ் என்னும் சிறுவன் சொல்லுவான், “டேய் கொஞ்சம் வளந்திட்டா, கீழயே பாக்க மாட்டீங்களா…” என்று கீழே இருக்கும் ஒரு பொந்தைக் காட்டுவான்.. அந்தக் காட்சி தான் எனக்கு படம் பார்க்கும் போது நினைவுக்கு வந்தது. ஆம். வல்லரசு கனவு காணும் நாம், கை இரண்டையும் மடித்துக் கட்டிக் கொண்டு ஆகாயத்தைத் தானே வெறித்துக் கொண்டு கனவு காணுகிறோம். கீழே குனிந்து பார்த்தால், மூடப்படாத போர்வெல் குழிகள், குழிகளில் கசியும் மீத்தேன் வாயு, முற்றிலுமாக உறிஞ்சப்பட்டு வறண்டு வாய் பிளந்து கிடக்கும் பூமி, காலடியில் குவிந்து கிடக்கும் ப்ளாஸ்டிக் குப்பைகள், நேரத்துக்கு வந்து சேர முடியாத அரசு வாகனம், வர முடிந்தாலும் வந்து சேராத அரசு இயந்திரங்கள், வாழ்க்கையோடு போராடிக் கொண்டு இருக்கும் மக்களை மீட்க வராமல், தன்னை சார்ந்தவர்களை மீட்பதற்காக மட்டும் படை எடுக்கும் அரசியல்வாதிகள் என இத்தனைப் பிரச்சனைகளை நம் காலடியில் வைத்துக் கொண்டு தான், ராக்கெட் சயின்ஸ் கொண்டு வல்லரசு கனவு காணுகிறோமா.? என்ற அழுத்தமான கேள்வியை எழுப்புகிறது அறம் திரைப்படம்.  


நாம் செய்தித்தாளில் பல முறை படித்து கடந்திருந்த நெஞ்சை உலுக்கும் ஒரு செய்தியை எடுத்துக் கொண்டு, அதை மிகச் சிறந்த திரைக்கதையாக மாற்றி, திரையில் கொடுத்து வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். கதை இல்லை.. கதை இல்லை.. என்று ஒரு இயக்குநர் கூட்டம் புலம்பிக் கொண்டிருக்க… அறம் திரைப்படத்தைப் பார்க்கும் போது, கதை இந்த மண்ணில் நிறையவே இருக்கிறது.. ஆனால் அதெல்லாம் அவர்கள் கண்ணுக்கு கதையாக தெரியவில்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. மிகச் சாதாரண கதை. மூடப்படாத ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த ஒரு ஏழைச் சிறுமியை தன் கையாலாகாத்தனத்தால் காப்பாற்ற முடியாத என்று அரசு நிர்வாகம் கைவிரித்துவிட.. நேர்மையும் துணிச்சலும் விடாமுயற்சியும் கொண்ட ஒரு பெண் ஆட்சியர் அந்த இக்கட்டான சூழலில் என்ன முடிவு எடுக்கிறார் என்பதே அறம் படத்தின் ஒற்றை வரிக்கதை.


படத்துக்கு மிகப்பெரிய பலம், அந்த ஏழைக் குடும்ப உறுப்பினர்களின் இயல்பான தத்ரூபமான நடிப்பும், நயன் தாரா என்னும் அடையாளமும் தான். நயன் தாராவிற்கு மிக அழுத்தமான கதாபாத்திரம். சிறப்பாக செய்திருக்கிறார். திரைப்படம் கொஞ்சம் கூட தொய்வில்லாமல் செல்வது அதன் தனிச் சிறப்பு. அது போல் வசனங்கள் சாட்டையடியாக இருப்பதோடு, கதையோடு சேர்ந்து பயணிப்பதால், இயல்பாக இரசிக்க முடிகிறது. ஜிப்ரானின் இசைக்கு காட்சிக்கான கணத்தை மிகக் கச்சிதமாக கொடுத்திருக்கிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் போர்வெல் குழி தொடர்பான காட்சிகள் தத்ரூபமாக படமாக்கப்பட்டு இருக்கின்றன. படத்தில் சில கதாபாத்திரங்கள் தவிர்த்து, பெரும்பாலான கதாபாத்திரங்கள் மிக இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.


கீழே சில Spoiler-கள் இருப்பதால், படம் பார்க்காதவர்கள் இதைப் படித்து விட்டு, படம் பார்த்தால் அது அவர்களின் சுவாரஸ்யத்தை கெடுக்கும் என்பதால், படம் பார்த்தவர்கள் மட்டும் படிக்கும்படி வேண்டுகிறேன். அறம்
திரைப்படம் ஒரு புள்ளியில் தன் இயல்பான தன்மையில் இருந்து சினிமாத்தனமான பிண்ணனியில் மாறி விடுகிறது. அப்படி இல்லாமல் அது முழுக்கவே தன் இயல்பான தன்மையில் இருந்திருந்தால், அதன் வீச்சு இன்னும் அதிகமாக இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. தன் உயர் அதிகாரியின் முன்னால் விசாரணைக்கு உட்கார்ந்திருக்கும் போது நயன் தாராவிடம் காணப்படும் பதட்டமும் தயக்கமும், அவர் கையாண்ட களத்தில் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்கின்ற பரிதவிப்பை கொடுத்து, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று படம் முடியும் போது, பின்பு ஏன் அந்த தவிப்பும் பதட்டமும் அவரிடம் இருந்தது என்கின்ற கேள்வி எழுவதையும், அது வெறும் சுவாரஸ்யத்தை தக்கவைப்பதற்காக கையாளப்பட்டிருக்கும் தவறான யுத்தி என்று உணரும் போதும் அதை தவிர்த்திருக்கலாமே என்ற எண்ணம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. ஆட்சியராக நயன் தாரா அவர்களின் அன்றைய ஒரு நாள் பயணத்தில் அவர் அடைந்திருக்கும் வெற்றிகள் இரண்டு. ஒன்று தண்ணீரின்றி தவிக்கும் கிராமத்துக்கு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தண்ணீர் கிடைக்க வழி செய்தது. மற்றொன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை பல போராட்டங்கள், சோதனைகள், எதிர்ப்புகளை மீறி, தன் அதிகாரத்தைக் கொண்டு போராடி மீட்டது. இப்படி தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி போராடி மக்களுக்கான இரண்டு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தப் பின்னர், இந்த அதிகார மையத்தில் இருந்து கொண்டு என்னால் மக்களுக்கான நியாயத்தை பெற்றுக் கொடுக்க முடியவில்லை, எனவே இதில் இருந்து நான் விலகுகிறேன், என்று அவர் எடுக்கும் முடிவு திரைக்கதை ஓட்டத்தின் முரணான அம்சமாக அமைகிறது. இரண்டு சம்பவங்களில் ஏதேனும் ஒன்றில் அவர் தோற்றிருந்தால் கூட அந்த முடிவு ஏற்புடையதாக இருந்திருக்கும். மேலும் குழந்தை கயிற்றின் சுருக்குக்குள் சரியாக கை நுழைக்காத போதும், அதை தூக்குவதற்கான முயற்சியில் அவர்கள் இறங்குவதும், அதை ஆட்சியரும் எந்தவித கேள்வியும் இல்லாமல் அனுமதிப்பதும் சற்று நெருடலாக இருந்தது. அது போல திரைப்படம் முழுக்க முழுக்க மக்களின் பரிதாப உணர்வலைகளை மட்டுமே கிளப்பி விட்டு, அதிலேயே பயணம் செய்திருப்பதும், நமக்குத் தெரிந்த அரசியல் சித்தாந்தங்களையே பேசி இருப்பதும் சற்றே பலவீனமாகத் தோன்றியது.


இருப்பினும் சமகால சூழலில் வெளிவரும் திரைப்படங்களுக்கு மத்தியில் ஒப்பு நோக்கினால், உண்மையான அறவுணர்வோடு இத்திரைப்படம் எடுக்கப்பட்டு இருப்பதாலும், திரைப்படம் பேசிய அரசியல் நையாண்டிகளும், சித்தாந்தங்களும் நாம் அறிந்ததே என்ற கூற்று இருப்பினும், அவைகளை திரைப்படத்தில் இடம்பெறச் செய்து, அதனை ஆவணப்படுத்தி இருக்கும் அந்த தைரியம் மற்றும் துணிச்சலுக்காகவும், இந்த அறவுணர்வையும், அரசியல் சார்ந்த விழிப்புணர்வையும் திரைப்படம் வாயிலாக கடைக்கோடி தமிழனுக்கும் கொண்டு போய் சேர்த்திருப்பதாலும் இயக்குநருக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும். இது போன்ற கதையம்சம் உள்ள திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக மட்டும் நடிக்க ஒப்புக் கொண்ட முதிர்ச்சிக்காகவும், அத்திரைப்படத்தை தயாரிக்க முன்வந்த துணிச்சலுக்காவும் நடிகையும் தயாரிப்பாளருமான நயன் தாராவுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். மக்கள் அவர்களது வாழ்க்கையை, வலியை பேசும் திரைப்படங்களை என்றுமே கைவிட மாட்டார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான் இந்த அறம் திரைப்படம்.

No comments:

Post a Comment