Wednesday, 6 December 2017

அறம் :

கோபி நயினார் இயக்கத்தில், நயன் தாரா நடித்து தயாரித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம். சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த அப்பா திரைப்படத்தில் ஒரு காட்சி இருக்கும். பள்ளி வளாகத்தில் இருந்து தப்ப நினைக்கும் சிறுவர்கள், அதற்கான உபாயம் தேடி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவர்களில் குள்ளமாக இருக்கும் அப்பாஸ் என்னும் சிறுவன் சொல்லுவான், “டேய் கொஞ்சம் வளந்திட்டா, கீழயே பாக்க மாட்டீங்களா…” என்று கீழே இருக்கும் ஒரு பொந்தைக் காட்டுவான்.. அந்தக் காட்சி தான் எனக்கு படம் பார்க்கும் போது நினைவுக்கு வந்தது. ஆம். வல்லரசு கனவு காணும் நாம், கை இரண்டையும் மடித்துக் கட்டிக் கொண்டு ஆகாயத்தைத் தானே வெறித்துக் கொண்டு கனவு காணுகிறோம். கீழே குனிந்து பார்த்தால், மூடப்படாத போர்வெல் குழிகள், குழிகளில் கசியும் மீத்தேன் வாயு, முற்றிலுமாக உறிஞ்சப்பட்டு வறண்டு வாய் பிளந்து கிடக்கும் பூமி, காலடியில் குவிந்து கிடக்கும் ப்ளாஸ்டிக் குப்பைகள், நேரத்துக்கு வந்து சேர முடியாத அரசு வாகனம், வர முடிந்தாலும் வந்து சேராத அரசு இயந்திரங்கள், வாழ்க்கையோடு போராடிக் கொண்டு இருக்கும் மக்களை மீட்க வராமல், தன்னை சார்ந்தவர்களை மீட்பதற்காக மட்டும் படை எடுக்கும் அரசியல்வாதிகள் என இத்தனைப் பிரச்சனைகளை நம் காலடியில் வைத்துக் கொண்டு தான், ராக்கெட் சயின்ஸ் கொண்டு வல்லரசு கனவு காணுகிறோமா.? என்ற அழுத்தமான கேள்வியை எழுப்புகிறது அறம் திரைப்படம்.  


நாம் செய்தித்தாளில் பல முறை படித்து கடந்திருந்த நெஞ்சை உலுக்கும் ஒரு செய்தியை எடுத்துக் கொண்டு, அதை மிகச் சிறந்த திரைக்கதையாக மாற்றி, திரையில் கொடுத்து வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். கதை இல்லை.. கதை இல்லை.. என்று ஒரு இயக்குநர் கூட்டம் புலம்பிக் கொண்டிருக்க… அறம் திரைப்படத்தைப் பார்க்கும் போது, கதை இந்த மண்ணில் நிறையவே இருக்கிறது.. ஆனால் அதெல்லாம் அவர்கள் கண்ணுக்கு கதையாக தெரியவில்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. மிகச் சாதாரண கதை. மூடப்படாத ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த ஒரு ஏழைச் சிறுமியை தன் கையாலாகாத்தனத்தால் காப்பாற்ற முடியாத என்று அரசு நிர்வாகம் கைவிரித்துவிட.. நேர்மையும் துணிச்சலும் விடாமுயற்சியும் கொண்ட ஒரு பெண் ஆட்சியர் அந்த இக்கட்டான சூழலில் என்ன முடிவு எடுக்கிறார் என்பதே அறம் படத்தின் ஒற்றை வரிக்கதை.


படத்துக்கு மிகப்பெரிய பலம், அந்த ஏழைக் குடும்ப உறுப்பினர்களின் இயல்பான தத்ரூபமான நடிப்பும், நயன் தாரா என்னும் அடையாளமும் தான். நயன் தாராவிற்கு மிக அழுத்தமான கதாபாத்திரம். சிறப்பாக செய்திருக்கிறார். திரைப்படம் கொஞ்சம் கூட தொய்வில்லாமல் செல்வது அதன் தனிச் சிறப்பு. அது போல் வசனங்கள் சாட்டையடியாக இருப்பதோடு, கதையோடு சேர்ந்து பயணிப்பதால், இயல்பாக இரசிக்க முடிகிறது. ஜிப்ரானின் இசைக்கு காட்சிக்கான கணத்தை மிகக் கச்சிதமாக கொடுத்திருக்கிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் போர்வெல் குழி தொடர்பான காட்சிகள் தத்ரூபமாக படமாக்கப்பட்டு இருக்கின்றன. படத்தில் சில கதாபாத்திரங்கள் தவிர்த்து, பெரும்பாலான கதாபாத்திரங்கள் மிக இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.


கீழே சில Spoiler-கள் இருப்பதால், படம் பார்க்காதவர்கள் இதைப் படித்து விட்டு, படம் பார்த்தால் அது அவர்களின் சுவாரஸ்யத்தை கெடுக்கும் என்பதால், படம் பார்த்தவர்கள் மட்டும் படிக்கும்படி வேண்டுகிறேன். அறம்
திரைப்படம் ஒரு புள்ளியில் தன் இயல்பான தன்மையில் இருந்து சினிமாத்தனமான பிண்ணனியில் மாறி விடுகிறது. அப்படி இல்லாமல் அது முழுக்கவே தன் இயல்பான தன்மையில் இருந்திருந்தால், அதன் வீச்சு இன்னும் அதிகமாக இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. தன் உயர் அதிகாரியின் முன்னால் விசாரணைக்கு உட்கார்ந்திருக்கும் போது நயன் தாராவிடம் காணப்படும் பதட்டமும் தயக்கமும், அவர் கையாண்ட களத்தில் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்கின்ற பரிதவிப்பை கொடுத்து, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று படம் முடியும் போது, பின்பு ஏன் அந்த தவிப்பும் பதட்டமும் அவரிடம் இருந்தது என்கின்ற கேள்வி எழுவதையும், அது வெறும் சுவாரஸ்யத்தை தக்கவைப்பதற்காக கையாளப்பட்டிருக்கும் தவறான யுத்தி என்று உணரும் போதும் அதை தவிர்த்திருக்கலாமே என்ற எண்ணம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. ஆட்சியராக நயன் தாரா அவர்களின் அன்றைய ஒரு நாள் பயணத்தில் அவர் அடைந்திருக்கும் வெற்றிகள் இரண்டு. ஒன்று தண்ணீரின்றி தவிக்கும் கிராமத்துக்கு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தண்ணீர் கிடைக்க வழி செய்தது. மற்றொன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை பல போராட்டங்கள், சோதனைகள், எதிர்ப்புகளை மீறி, தன் அதிகாரத்தைக் கொண்டு போராடி மீட்டது. இப்படி தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி போராடி மக்களுக்கான இரண்டு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தப் பின்னர், இந்த அதிகார மையத்தில் இருந்து கொண்டு என்னால் மக்களுக்கான நியாயத்தை பெற்றுக் கொடுக்க முடியவில்லை, எனவே இதில் இருந்து நான் விலகுகிறேன், என்று அவர் எடுக்கும் முடிவு திரைக்கதை ஓட்டத்தின் முரணான அம்சமாக அமைகிறது. இரண்டு சம்பவங்களில் ஏதேனும் ஒன்றில் அவர் தோற்றிருந்தால் கூட அந்த முடிவு ஏற்புடையதாக இருந்திருக்கும். மேலும் குழந்தை கயிற்றின் சுருக்குக்குள் சரியாக கை நுழைக்காத போதும், அதை தூக்குவதற்கான முயற்சியில் அவர்கள் இறங்குவதும், அதை ஆட்சியரும் எந்தவித கேள்வியும் இல்லாமல் அனுமதிப்பதும் சற்று நெருடலாக இருந்தது. அது போல திரைப்படம் முழுக்க முழுக்க மக்களின் பரிதாப உணர்வலைகளை மட்டுமே கிளப்பி விட்டு, அதிலேயே பயணம் செய்திருப்பதும், நமக்குத் தெரிந்த அரசியல் சித்தாந்தங்களையே பேசி இருப்பதும் சற்றே பலவீனமாகத் தோன்றியது.


இருப்பினும் சமகால சூழலில் வெளிவரும் திரைப்படங்களுக்கு மத்தியில் ஒப்பு நோக்கினால், உண்மையான அறவுணர்வோடு இத்திரைப்படம் எடுக்கப்பட்டு இருப்பதாலும், திரைப்படம் பேசிய அரசியல் நையாண்டிகளும், சித்தாந்தங்களும் நாம் அறிந்ததே என்ற கூற்று இருப்பினும், அவைகளை திரைப்படத்தில் இடம்பெறச் செய்து, அதனை ஆவணப்படுத்தி இருக்கும் அந்த தைரியம் மற்றும் துணிச்சலுக்காகவும், இந்த அறவுணர்வையும், அரசியல் சார்ந்த விழிப்புணர்வையும் திரைப்படம் வாயிலாக கடைக்கோடி தமிழனுக்கும் கொண்டு போய் சேர்த்திருப்பதாலும் இயக்குநருக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும். இது போன்ற கதையம்சம் உள்ள திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக மட்டும் நடிக்க ஒப்புக் கொண்ட முதிர்ச்சிக்காகவும், அத்திரைப்படத்தை தயாரிக்க முன்வந்த துணிச்சலுக்காவும் நடிகையும் தயாரிப்பாளருமான நயன் தாராவுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். மக்கள் அவர்களது வாழ்க்கையை, வலியை பேசும் திரைப்படங்களை என்றுமே கைவிட மாட்டார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான் இந்த அறம் திரைப்படம்.

மெர்சல்:

தீபாவளிக்கு வெளிவந்திருக்கும் ஆயிரம் வாலா பட்டாசு. (நீ…ளத்தில் சொன்னேன். 2 மணி நேரம் 50 நிமிடம்) அட்லி விஜய் கூட்டணியில் இது இரண்டாவது படம். பழைய தமிழ்ப்படங்களையே புதிதாக ரீமேக் செய்கிறார் என்று இரண்டே படங்களில் பாராட்டுப் பத்திரம் பெற்ற அட்லி, தனது மூன்றாவது படத்தில், அந்தப் பாராட்டுப் பத்திரத்துக்கு தான் பாத்தியமானவன் என்பதை மீண்டும் நிருபீத்திருக்கிறார். கதையாகப் பார்த்தால் பல தமிழ் திரைப்படங்களில் நாம் ஏற்கனவே பார்த்த கதை தான். அப்பாவைக் கொன்ற வில்லனை, மகன்கள் இரட்டையராக வந்து பழிவாங்கும் கதை. ஆனால் மெர்சல் பழைய படங்களின் காப்பி என்பதை அப்பட்டமாக காட்டுவதில்லை. ஏனென்றால் முந்தைய இரு படங்களைப் போல் கதை, திரைக்கதை என இரண்டையுமே ஜெராக்ஸ் செய்யாமல், திரைக்கதையில் சற்று(சற்றே) மெனக்கெட்டு இருப்பதால், மெர்சலில் இருக்கும் பழைய படங்களின் சரத்துகள் துருத்திக் கொண்டு பளீச்சென கண்ணில் தெரிவதில்லை.


ஏழை எளிய மக்களிடம் வெறும் ஐந்து ரூபாய் மட்டும் கட்டணமாக வாங்கிக் கொண்டு, மருத்துவம் செய்யும் சென்னை மருத்துவரான மாறன், தன் மருத்துவ சேவைகளுக்காக ப்ரான்ஸ் நாட்டில் உலக அமைப்புகளிடம் இருந்து விருதும் பெறுகிறார். பொழுதுபோக்காக மேஜிக்கும் செய்கிறார். அப்படி பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு மேஜிக் ஷோவில் பதட்டமின்றி அனைவரின் கண் முன்னே ஒரு கொலையும் செய்கிறார். அவர் மருத்துவரா..? மேஜிஷியனா..?? கொலைகாரனா..?? ஏன் அந்தக் கொலையை செய்தார்..? என்கின்ற கேள்விகளுக்கு விடை சொல்வது தான் படத்தின் கதை. இதை மூன்று காதல் எபிசோடுகளாகவும், மூன்று மோதல் எபிசோடுகளாகவும் பிரித்துக் கதை சொல்லி இருக்கிறார் அட்லி.


தனிப்பட்ட முறையில் விஜய்க்கு இது ஒரு முக்கியமான திரைப்படம். தமிழுக்கான மற்றும் தமிழர்களுக்கான விசயங்களைப் போகிறப் போக்கில் பேசி இருப்பதோடு, அரசியலுக்கான அர்ச்சதைகளையும் ஆங்காங்கே தூவி இருக்கிறார்கள். தளபதியாக வரும் மதுரைக்காரன் கதாபாத்திரத்தில் அவர் காட்டியிருக்கும் உடல்மொழி, சிட்டுகுருவி கிழவியிடம் அவர் காட்டும் அடாவடிகள் எல்லாம் அவர் திரை வாழ்க்கையில் சற்றே புதிது. அது மட்டுமன்றி தோற்றத்தில் பல இடங்களில் குஷி காலத்து விஜயைப் பார்க்க முடிந்தது. ஆனால், தோற்றத்தில் மட்டும் இல்லாமல் நடிப்பிலும் குஷி காலத்து விஜயை அண்ணன் தம்பி இணையும் போதும், அதற்கு பிந்தையக் காட்சிகளிலும் காண முடிவதுதான் பரிதாபம். நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே படத்தில் இருக்கிறார்கள். இவர்களில் சொல்லிக் கொள்ளும் படியான கதாபாத்திரம் நித்யாமேனனுக்கு மட்டும் தான். நிறைவாக செய்திருக்கிறார். சமந்தா ஓரிரு காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவிற்கு அலட்டிக் கொள்ளாத வில்லன் வேடம் அசால்ட்டாக செய்திருக்கிறார்.


பெரிய நடிகர்களுக்கான கமர்ஸியல் திரைப்படத்தை எடுப்பது என்பது சாதாரண விசயம் இல்லை. அது ஒரு மிகப்பெரிய கலை. அது அட்லிக்கு நன்றாகவே கை வந்திருக்கிறது. ஒரு மாஸ் ஹீரோவுக்கான கதையில் என்னென்ன எந்தெந்த அளவு இருக்க வேண்டும் என்பதிலும் நல்ல தெளிவு இருக்கிறது. எல்லோருக்கும் இலவச மருத்துவம் என்னும் ஒற்றை வரிக் கதையின் மீது ஒரு அரண்மனையையே கட்டி இருக்கிறார். எளிய முறையில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், உடைகளைக் கொண்டும், உடல் நிறங்களைக் கொண்டும் ஏர்லைன்ஸ் அதிகாரிகளால அவமானப்படுத்தப்படும் மனிதர்கள் என ஆங்காங்கே உண்மையான சம்பவங்களை கதைகளில் காட்சிகளாகக் கோர்த்திருப்பது படத்திற்கு வலுசேர்க்கிறது. ரஹ்மானின் இசையும் பாடல்களும் படத்துக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கின்றன. அது போல் ஒளிப்பதிவாளர் விஷ்ணுவின் ஒளிப்பதிவும் இடங்களுக்கு ஏற்றார் போல வண்ணங்களை அள்ளித் தெளித்திருக்கிறது. ரூபனின் எடிட்டிங்கில் இன்னும் பல காட்சிகளை வெட்டியிருந்தால், படத்தில் அலுப்பு தட்டி இருக்காது என்று தோன்றுகிறது..

மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் இது ஒரு திருப்தியைக் கொடுக்கும் படமாகவே அமைந்திருக்கிறது. வித்தியாசமான திரைப்படங்களை எதிர்பார்க்கும் சினிமா ஆர்வலர்களுக்கு இந்த திரைப்படம் ஏமாற்றத்தையே தரக் கூடும். திரைக்கதையில் மெனக்கெட்டிருக்கிறார்கள் என்று முன்பு சொல்லியிருந்தாலும், அது மிகப்பெரிய மெனக்கெடல் இல்லை, ஒரு மிகச்சிறிய மெனக்கெடல் தான்.. கதாபாத்திரத்தின் அடையாளத்தை குழப்பவதன் மூலம் திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கூட்டும் டெக்னிக்கை நான்-லீனியர் கதை சொல்லலில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அது ஓரளவுக்கு கை கொடுத்திருக்கிறது. ஆனால் அதுவே தான் திரைப்படம் முடிந்து வெளியே வரும் போது குழப்பத்தையும் கொடுக்கிறது. மருத்துவமும், மேஜிக்கும் தெரிந்த ஒருவன் தான் கொலை செய்திருக்கிறான் என்பது தான், போலீஸ்க்கு கிடைக்கும் க்ளூ. இதைக் கொண்டு தான் ஆடியன்ஸுக்கும் இருவரும் ஒருவரே என்பது போன்ற பிம்பத்தைக் கொடுக்கின்றனர். சிறிது நேரத்தில் அந்தர் பல்டி அடித்து, இருவருமே வேறு வேறு என்று சொல்லி, கதைக்குள் சென்று விடுகின்றனர். மேஜிக் தெரிந்வனுக்கு மருத்துவம் எப்படி தெரிந்தது என்ற கேள்வி கடைசி வரை தொக்கி நிற்கிறது. ஃபிரான்சில் அந்த மாடலிடம் விஜய் பணம் கொடுப்பது எதற்கு...? பின்பு ஏன் காஜலிடமும் உதவி கேட்கிறார்..? மேஜிசியன் விஜய் கதை சொல்ல ஆரம்பிக்கிறார், ஆனால் அவர் சொல்வதெல்லாம் டாக்டரைப் பற்றிய கதை இப்படி படம் முடிந்தப் பின்னர் யோசித்தால் ஆயிரம் கேள்விகள்.. இதுதான் படத்தின் மைனஸ். ஆனால் படம் பார்க்கும் போது, இந்த கேள்விகள் எதுவுமே நமக்குத் தோன்றாமல் இருப்பது தான் படத்தின் ப்ளஸ்..மேயாத மான் :

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்ஜின் தயாரிப்பில், இயக்குநர் இரத்னகுமாரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் மேயாத மான். தன் நண்பனின் ஒருதலைக் காதலை ஒரேயடியாக முடித்து வைப்பதற்காக தன் நண்பனின் காதலியிடம் மற்ற நண்பர்கள், தூது செல்லும் ஒரு கதை. தன் நண்பனை ஒரு தலையாக காதலிக்கும் தன் தங்கையின் காதலை சேர்த்து வைப்பதற்காக நண்பனிடமே தூது போகும் இன்னொரு கதை. என, இரண்டு காதல் கதைகளும் நான்கு கதாபாத்திரங்களுமே சுற்றி வரும் களம் தான், மேயாத மான். ஒரு காதல் ஜோடியாக வைபவ்வும், ப்ரியா பவானி சங்கரும், மற்றொரு காதல் ஜோடியாக விவேக் பிரசன்னா மற்றும் இந்துஜா. இதில் முதல் காதல் ஜோடியை விட அதிகமாக நம்மை ஈர்ப்பது இரண்டாவது ஜோடி தான்.


காதல், நட்பு, காமெடி, கானா என இவற்றைச் சுற்றியே கதை பயணிக்கிறது. தன் காதலை கடைசி வரை சொல்லாமல், ஒரு தலையாகக் காதலித்து மேடைகளில் லைட் மியூசிக் நடத்தி, கானாப் பாடல்களைப் பாடிக் கொண்டு திரியும் வட சென்னை இளைஞரின் கதாபாத்திரம் வைபவ்-க்கு. சோகம், காதல் காட்சிகளை விட காமெடி காட்சிகளில் கச்சிதமாகப் பொருந்துகிறார். தெரு நாயை துரத்திக் கொண்டு ஓடும் காட்சி, ஓடாத கிராமபோனை ஓட வைத்து, தர்மசங்கடத்தில் மாட்டிக் கொள்ளும் காட்சி, ஷேக்ஸ்பியரின் மேற்கோளைச் சொல்லி குடித்து விட்டு புலம்பும் காட்சி போன்ற காட்சிகளில் இவரது நடிப்பு ரசிக்கும் படி உள்ளது. ஆனால் காதல் காட்சிகளிலும் சோகக் காட்சிகளிலும் இவர் தள்ளாடுவது தெரிகிறது. திருமணம் நிச்சயக்கிப்பட்ட நாளில், தன்னை ஒருதலையாக காதலித்த ஒருவன், தன்னை எப்படியெல்லாம் காதலித்து இருக்கிறான் என்பதை அவன் வாயாலேயே அறிந்து கொண்டு, மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவிக்கும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் நாயகி ப்ரியா பவானி சங்கருக்கு. தன்னை காதலிப்பவனுக்கு நல்லது செய்வதா..? அல்லது தன்னை நல்லவனாகக் காட்டிக் கொள்வதா..? என்கின்ற ஊடாட்டத்துக்கு இடையிலான நடிப்பை வெகு சிறப்பாக கையாண்டு இருக்கிறார்.


நண்பனாக வரும் விவேக் ப்ரசன்னாவும், நாயகனின் தங்கையாக வரும் இந்துஜாவும் தான் மொத்த படத்தின் ஹைலைட்டும். தன் அண்ணனின் காதலுக்காக அவனது நண்பர்கள் தூது போனவர்கள் என்பதனை அறிந்து, தன் அண்ணனின் நண்பன் மீதே காதல் கொண்டுவிட்டு, அவன் தன்னைத் தங்கையாகத் தான் பார்க்கிறான் என்பதனை அறிந்து, தன் காதலை சொல்ல முடியாமல், தன் அண்ணனின் நண்பன் மீது வெறுப்பை உமிழும் கதாபாத்திரம் இந்துஜாவிற்கு. அசத்தியிருக்கிறார் இந்துஜா. விவேக் ப்ரசன்னாவும் நடிப்பில் ஜொலிக்கிறார். ஒரு தலைக்காதலால் தன் நண்பனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்கின்ற பரிதவிப்பிலும், தன் நண்பனின் தங்கையை தானும் தங்கையாக பாவித்து கண்ணியமாக நடக்கும் தருணங்களிலும், அவள் மீது தனக்கான காதலை வெளிப்படுத்த நெடுஞ்சாலையில் வைத்து அவர் எடுக்கும் பிரயத்தனங்களிலும் அமர்களப்படுத்தி இருக்கிறார்.


”மது” என்ற பெயரில் ஓரிரு வருடங்களுக்கு முன்னால் ஒரு குறும்படமாக இதனைப் பார்த்த நினைவு. அதையே ஒரு முழு நீளப் படமாக செய்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணனின் இசையில் கானாப் பாடல்களும் பிண்ணனி இசையும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது என்பதனை விட கதையோடும், கதை வாழ்வியலோடும் ஒன்றி இருக்கிறது என்று சொல்லலாம். இயக்குனர் இரத்னக்குமாருக்கு இது முதல் படம். படம் தொடங்கும் முதல் புள்ளியிலேயே படத்தின் முடிவு தெரிந்து விடுவது தான் இந்தப் படத்தின் ஆகப்பெரிய குறை. இதனால் திரைக்கதை மிகப்பெரிய சுவாரஸ்யம் ஏதும் இல்லாமலேயே கடக்கிறது. காட்சிகளில் இருக்கும் நகைச்சுவை ஆங்காங்கே மட்டும் சிரிக்க வைப்பதால் சில இடங்களில் அயர்ச்சி ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. அது போல் கதை நடப்பது எந்தக் காலத்தில் என்பதும் மிகத் தெளிவாக சொல்லப்படவில்லை. மேடைகளில் பாடப்படும் 1980களின் பாடல்களைக் கொண்டு மட்டுமே கதை நடக்கும் காலத்தை யூகிக்க முடிகிறது. ஆனால் இந்தக் குறைகளை எல்லாம் இல்லாமல் செய்வது நாயகனின் தங்கைக்கும், நண்பனுக்குமான காதலும் அதற்கான புதுமையான காட்சிகளும் தான். ஒரு குறைந்த பட்ஜெட்டில் ஒரளவு இரசிக்கும் படியான படத்தையே இயக்குநர் இரத்னகுமார் கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் மேயாத மானை கொண்டாடவும் முடியவில்லை.. அதே நேரம் இரசிக்காமல் புறக்கணிக்கவும் முடியவில்லை என்பது தான் மேயாத மானின் சிறப்பு.


Saturday, 8 July 2017

We Are Animals தமிழ் குறும்படம் :

        குறும்படத்தைக் காண : We are animals Tamil Short film
இந்தக் குறும்படம் உங்களுக்குப் பிடிக்காமல் போவதற்கான சாத்தியக் கூறுகள் மிக அதிகம். குற்றவாளியின் தரப்பில் இருந்து குற்றம் நிகழ்த்தும் மனநிலையை புரிந்து கொள்ள முனையும் ஒரு சிறு முயற்சியே இந்தக் குறும்படம்.  ஏதாவது ஒரு குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபராக நீங்கள் இருக்கின்றபட்சத்தில் உங்களுக்கு இந்தக் குறும்படம் நிச்சயமாக இணக்கமாக இருக்காது. அது பாதிக்கப்பட்ட உங்களையே குற்றம் சாட்டுவதாக நீங்கள் தவறாக புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அதிகம். அவ்வாறு இல்லாமல் நீங்கள் ஒரு குற்றவாளியாகவோ அல்லது குற்றம் நிகழ்த்தும் மனநிலையில் மாட்டிக் கொண்டு, அதிலிருந்து மயிரிழையில் தப்பி வந்தவராகவோ இருக்கின்ற பட்சத்தில் உங்களுக்கு இந்தக் குறும்படம் நெருக்கமானதாகவே இருக்கும்..குற்றம் இல்லாத ஒரு உலகை நம்மால் கற்பனை செய்ய முடியுமா..? கற்பனை தான் என்றாலும் கூட அதுவும் கூட ஏன் கடினமானதாக தோன்றுகிறது. இந்த குற்றங்களின் தோற்றுவாய் தான் எது....? ஏன் இந்த உலகம் குற்றங்களின் குல நகரமாக மாறி நிற்கிறது.. குற்றங்கள் நடப்பதில் குற்றவாளிகளின் பங்கு மட்டும் தான் இருக்கிறதா..? உண்மையில் குற்றங்கள் நடப்பதை நிறுத்தவே முடியாதோ...? இப்படி ஆயிரம் கேள்விகள்.. குற்றங்களைப் பற்றி யோசிக்கும் போது..? இந்தக் கேள்விகள் எல்லாம், குற்றம் புரியும் மனநிலையில் நான் இருந்த போதும், அறைத் தோழன் ஒருவன் குற்றத்துக்கு பலிகடாவாகி உடைந்த மண்டையுடன் உருக்குலைந்து என்னெதிரே நின்ற போதும், இன்னும் ஆழமாக எனக்குள்ளே வேறூன்றின... அந்த வேர்களின் தடம் பிடித்து பயணித்து கண்டு கொண்டது தான் இந்தக் குற்றவாளிகளின் உலகம்.. 


குற்றங்களை புரிந்து கொள்வதற்கும், குற்றவாளிகளின் மனநிலையை புரிந்து கொள்வதற்கும், குற்றம் நடக்கின்ற சூழலை தவிர்ப்பதற்கும், குற்றங்களை களைவதற்கும், குற்றம் இல்லாத ஒரு உலகை படைப்பதற்கும் என ஏதாவது ஒரு விதத்தில் இந்த குறும்படம் உதவுமென்றால், அதுவே இந்த படைப்பின் வெற்றியாக இருக்கும்..

(ஒரு அறைக்குள்ளாகவே நடக்கின்ற கதை வேண்டும், அதிக செலவுகளை கோராத கதை வேண்டும், பெண் கதாபாத்திரமே இல்லாத கதை வேண்டும் என்று எல்லாவிதமான விதிகளையுமே இது பூர்த்தி செய்ததால், இதையே ஒரு குறும்படமாக எடுத்தால் என்ன...? என்று ஒரு எண்ணம் தோன்றியது.. ஆக இதை ஒரு பரிசோதனை முயற்சியாகவே முயற்சித்துள்ளோம்.. இந்த முயற்சிக்கு உதவிக்கரம் நீட்டிய நண்பர்கள், ஜெயகிருஷ்ணன், ராஜேஷ் நாராயணன், விஜய் ஆனந்த், பூரணி ஜெயகிருஷ்ணன், அகிலா விஜய், ராமநாதன், இராஜா வரதராஜன், இசையமைப்பாளர் டிசோன் ப்ரின்ஸ், எழுத்தாளர் என்.சொக்கன் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..)