Tuesday 18 August 2015

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க :

உச்சி வெயில் உச்சந்தலையை எரித்துக் கொண்டிருந்ததொரு நல்ல நண்பகல் வேளையில், சென்னை பெருநகரின் எலைட் போன்ற ஒரு ஹை-பையான பாரில் கிட்டத்தட்ட ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு, ஏதோவொரு சுபயோக சுபதினத்தில் நடந்திருக்கலாம் நீங்கள் கீழே படிக்கப் போகும் உரையாடல். உரையாடலில் உறுதி செய்யப்பட்ட பங்கேற்பாளர்களாக நம் இயக்குநர் எம்.இராஜேஷ் மற்றும் நடிகர் சந்தானத்தை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளலாம். உறுதியற்ற பங்கேற்பாளர்களாக, நடிகர் சந்தானத்தின் நண்பர்கள், இயக்குநரின் அஸிஸ்டெண்ட்டுகள் மற்றும் இயக்குநரின் பிற நண்பர்களும் இருந்திருக்கலாமென்று நம்பப்படுகிறது.


ஆல் இன் ஆல் அழகுராஜா ஊத்திக் கொண்ட சோகத்தில் இருந்த இயக்குநரின் குழுவினருக்கு, ஆறுதல் கொடுக்க வந்த நடிகர் சந்தானம், ஆறுதலாக வழக்கம் போல ஒரு ட்ரிங்க்ஸ் பார்ட்டி கொடுக்க… அந்த ட்ரிங்க்ஸ் பார்ட்டியில் நெகிழ்ந்து போன இயக்குநர், “நண்பேண்டா” என்று நடிகரை கட்டிக் கொள்ள, தொடங்குகிறது அவர்களின் கருத்து மோதல்கள். “டாஸ்மாக் மூடு போராட்ட வன்முறைகளை எப்படி தடை செய்யலாம் என்றும், சரக்கடிக்கும் போது தாம் புதிதாக முயற்சித்துப் பார்த்த சைட்-டிஷ் பற்றியும், நடித்தும் இயக்கியும் சேர்த்தப் பணங்களைக் கொண்டு, எந்த நாட்டுக்குச் சென்று குஜாலாக எந்த வகை சரக்கடிக்கலாம் என்பது பற்றியும் அவர்கள் காரசாரமாக விவாதித்துக் கொண்டு இருக்கும் போது, இடையூறாக இம்சிக்கிறது செல்போன். எடுத்துப் பார்த்தால் எதிர்முனையில் மனைவி. அமைதியாக அதை சைலண்டில் போட்டவர், தலையில் கை வைத்து உட்கார, எதிரே இருப்பவருக்கும் மனைவியிடம் இருந்து போன்.. அவரும் சைலண்டில் போட்டுவிட்டு, அப்செட் ஆனவராக இவரைப் பார்க்க.. இருவருமே மொபைலைப் பார்க்க… தொடர்ச்சியாக  போன் வந்து கொண்டே இருக்கிறது..

வேறு வழியில்லாமல் போனை எடுத்த இயக்குநர், “இங்கதாம்மா, டிவிடி கடைக்கு, பாஸ்கரன் படமும், SMS படமும் வாங்கலான்னு வந்தே(ன்).. நம்ம புதுப்பட வேலை விசயமாத்தா.., அஸிஸ்டெண்டு இந்த சீன் போன படத்திலயே வச்சாச்சு சார்ன்னு சொன்னா.. அதான் டவுட்ட கிளியர் பண்ணலாம்ன்னு..” அய்யய்யோ சத்தியமா இல்லடா செல்லம்.. நா(ன்) தனியா தான் வந்திருக்கே(ன்).. ப்ரெண்ட்ஸ் எவனுமே இல்ல..” ”இல்லம்மா.. டாக்டர் சொன்னதுக்கப்புறம் எப்டி நா(ன்) குடிப்பே(ன்).. வந்துர்றேம்மா..” பாய்..” என்று போனை கட் செய்து நடிகரைப் பார்க்க.. நடிகரும் வேறு வழியில்லாமல் போனை அட்டெண்ட் செய்து, “டார்லிங் இங்கதாண்டா.. புதுசா எதுகை மோனை இணைப்போட ஒரு தமிழ் டிக்ஸ்னரி வந்திருக்குன்னு சொன்னாங்க.. அத வாங்கிட்டா.. டயலாக் எழுத யூஸ் ஆகும் பாரு.. அதான்… வாங்கலாம்னு வந்தே(ன்).. அவனெல்லா நா(ன்) பாத்தே பல மாசமாச்சும்மா.. இதோ வந்திர்றே(ன்).. என்று போனை கட் செய்து, “அப்பாட..” என்று பெருமூச்சுவிட்டவர், ”அது ஏன் இந்த பொண்டாட்டிகளுக்கு புருசனோட ப்ரெண்டுன்னால ஆக மாட்டிக்கு.. அவ ப்ரெண்டெல்லா(ம்) நாம எவ்ளோ அன்பா பாத்துக்குறோ(ம்)…” என்று வேண்டா வெறுப்போடு மீதமிருந்த விஸ்கியை விசுக்கென வாயில் ஊற்றி சரிய, இயக்குநர், நெற்றியை தேய்த்தபடி, “நல்ல கான்செப்ட்ல புருஷன் ப்ரெண்ட்ஸ ஏன் பொண்டாட்டிக்கு புடிக்க மாட்டிக்குது.. இதான் அடுத்த படத்தோட கதை… ஆனா ஏன் பிடிக்க மாட்டேங்குது..” என்று மீதமிருந்த தங்கள் குழுவினருக்கும் போன் அடித்து பார்-க்கு வரச் சொல்லி, மிதமிஞ்சிய போதையோடு, காரசாரமாக விவாதத்தை தொடங்குகிறார்கள்.. பார் மூடும் நேரத்தில் இயக்குநருக்கும் நடிகருக்கும் ஒரே நேரத்தில் ஞானோதயம் பிறக்க.. தங்கள் முன்னால் இருக்கும் பீர் பாட்டிலையும் பிராந்தி பாட்டிலையும் பார்த்தபடி ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தபடி “நண்பேண்டா” என்று கட்டிக் கொள்கிறார்கள்..

ஒன்றும் புரியாமல் முழித்த உதவி இயக்குநரிடம், இயக்குநர், “இது என்ன..?” என்று பீர் பாட்டிலை காட்டிக் கேட்க, “பீர் சார்..” இயக்குநர் “இத எதோட மிக்ஸ் பண்ணி குடிக்கணும்..” உதவி இயக்குநர் “இத அப்டியே குடிக்கலாம் சார்..” பிராந்தி பாட்டிலை கைகாட்டி இயக்குநர் “இதென்ன..?” உதவி இயக்குநர் “பிராந்தி சார்..” இயக்குநர் “இத எதுல மிக்ஸ் பண்ணி குடிக்கலாம்..” உதவி -“இத தண்ணில மிக்ஸ் பண்ணிக் குடிக்கலாம் சார்..” இவர்களின் உரையாடலில் இடைமறித்த நடிகர் “ தண்ணில மட்டுந்தானா..? என்னப்பா இது உண்ட்ட அஸிஸ்டெண்டா இருந்துட்டு சரக்கடிக்கிறதப் பத்தி எதுவுமே தெரியாதவனா இருக்குறா(ன்)… அஸிஸ்டெண்ட்டெல்லா கரெக்டா செலக்ட் பண்றீயா இல்லயா..”  “ஏ என்னப்பா.. நீ என்னவே சந்தேகப்படுற… நா அஸிஸ்டெண்டா சேத்துக்கோன்னு வர்றவண்ட்டல்லா படிக்கத் தெரியுமான்னு கேக்குறேனோ இல்லயோ குடிக்கத் தெரியுமான்னு தான கேக்குறேன்..” என்ற இயக்குநரை, “நண்பேண்டா..” என்று கட்டிக் கொண்டு நடிகர் உதவியை நோக்கி, “தம்பி இந்த மாதிரி பொது அறிவெல்லா தெரிஞ்சுக்கணும், இத, தண்ணி, இளநீர், மோர், ஏன் சமயத்துல ரசத்துலகூட விட்டு அடிக்கலாம்.. சரியா..?” என்று கேட்க, கெக்கபிக்க கெக்கபிக்க என்று சிரிக்கத் தொடங்கிய இயக்குநர், “Note பண்ணிக்க.. Note பண்ணிக்க இதான் க்ளைமாக்ஸ் டயலாக்கு…” என்று சந்தோசத்தில் பிளிற.. உதவியும் அரக்கப் பறக்க அதை குறித்துக் கொண்ட பிறகும் புரியாமல் முழிக்க… அவனை மேலும் தவிக்க விடாமல் இயக்குநரே “டே பொண்ணுங்க ‘பீர் மாதிரி” எதோடயும் மிக்ஸ் ஆகவே மாட்டாங்க.. பசங்க பிராந்தி மாதிரி, கழுத எல்லாத்துக் கூடயும் மிக்ஸ் ஆகிடுவாங்க… இத மட்டும் புரிஞ்சுக்கிட்டா லைஃப்ல பிரச்சனையே கிடையாது.. “ என்னப் புரிஞ்சதா என்று கேட்க.. உதவியும் ஒப்புக்கு தலையாட்ட.. இயக்குநர் “அப்பாடி கதைய முடிச்சாச்சு…” என்று இளைப்பாற, உதவி இயக்குநர் கூட்டத்தில் புதிதாக வந்தவன், “சார்.. க்ளைமாக்ஸ்தா முடிஞ்சிருக்கு… அதுக்கு முன்னாடி கதை..?” என்று தலையை சொறிய.. பிற உதவிகளும், இயக்குநர் அண்ட் கோவும் சிரிக்கத் தொடங்குகின்றனர்.

இயக்குநர் “இப்பத்தான வந்திருக்க.. கத்துக்குவ… ஹீரோவும் சந்தானம் சாரும் ப்ரெண்டு, சந்தானர் சார் வொய்ப்புக்கு ஹீரோவ கண்டாலே புடிக்கல.. ப்ரெண்ட்ஷிப்ப கட் பண்ணுன்னு சொல்றாங்க.. அவனுக்கும் லைஃப்ல ஒரு பொண்ணு வந்துட்டா, அவனே விலகிருவானேன்னு, ஹீரோவுக்கு ஒரு பொண்ணு பாத்து செட் பண்ணிவிடுறாரு சந்தானம் சார்.. அந்த ஹீரோயின் ஹீரோட்ட சந்தானம் சாரோட ப்ரெண்ட்ஷிப் கட் பண்ணச் சொல்றாங்க.. இதான் சாக்குன்னு சந்தானம் சார் கலண்டுறாரு.. ஆனா ஹீரோ, அவரு ஹீரோல்ல அதனால ஹீரோயின உதறிராரு… இது தெரிஞ்சு சந்தானம் சாரும் மனசு மாறி ரெண்டு பேரும் மறுபடி சேந்து தண்ணியடிக்குறாங்க… அங்க ஏன் புருசனோட ப்ரெண்ட பொண்டாட்டிக்கு பிடிக்க மாட்டிக்குன்னு பேசிக்குறாங்க.. அதுக்கு சந்தானம் சார், நீ எழுதி வச்ச டயலாக்க சொல்லி, படத்த முடிக்குறாரு…. நடுநடுல சந்தானம் சாரும், ஹீரோவும் சேந்து குடிக்கிறது… சந்தானம் சார் வேற கேரக்டர ஜோக்ஸ் சொல்லி கடிக்கிறது.. இப்டி சில சீன்ஸ் போட்டு ஃபில் பண்ணா படம் முடிஞ்சது புரிஞ்சதா…?..” என்று கேட்க உதவி இயக்குநர் அவசரமாக தலையாட்ட கதை தயாராகி, திரைக்கதையும் எழுதப்பட்டு, அதற்கு அமோக ஆதரவு பெற்ற ஆர்டிஸ்டிகளும் புக்காகி, சூட்டிங், டப்பிங் இதரப் பணிகள் எல்லாம் முடிந்து திரைக்கும் வந்துவிட்டது.

இது தவிர்த்து படத்தில் என்ன இருக்கிறது என்று கேட்டால், இந்தியத் திரையரங்குகளில் முதன்முறையாக, மது குடிப்பதன் தீமை தொடர்பான சிலைட் படம் முழுக்க காட்டப்பட்ட படம் இதுவொன்றாகத்தான் இருக்கும்.. டாஸ்மாக் மூடு விழா, மது ஒழிப்பு அறப் போராட்டங்கள், உண்ணாவிரதங்களை ஏகத்துக்கு கேலி செய்வதால், கேளிக்கை வரி மட்டும் இன்றி, திரைப்படத்தின் மொத்த செலவுத் தொகையையும், கழக அரசின் பொது நிதியிலிருந்து கொடுக்கப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. மேலும் மது கொள்கை பரப்பு செயலாளராக இயக்குநர் இராஜேஷ் நியமிக்கப்படலாம் என்றும், ஒவ்வொரு டாஸ்மாக் பாரிலும் வாசுவும் சரவணனும் ஒன்னா குடிச்சவுங்க.. என்கின்ற அந்த பொதி கணக்கில் அர்த்தங்களை பொத்தி வைத்திருக்கும் பொன்னான பாடல், குடிமகன்களை கவரும் விதமாக திரும்ப திரும்ப ஒளிபரப்பபட இருக்கிறது..

படத்தை எதிர்த்து எதிர்தரப்பு ஒன்றும் கிளம்பி இருக்கிறது.. அது படத்தில் வரும் காட்சிகள் எல்லாம், வள்ளி திருமணம் போன்ற நாடகங்களில் திரைச்சீலை மாற்றும் இடைவெளியில், பார்வையாளர்களை கவர, ஒரு கோமாளி சில கோமாளித்தனமான செய்கைகளை செய்வான், அதைவிட படத்தின் காட்சிகள், படு திராபையாக இருப்பதாக தெரிவிக்கிறது. மேலும் “நாங்க என்ன சிரிச்சாப் போச்சு…ன்னு தம் கட்டியாப்பா சிரிக்காம இருக்கோ(ம்). இழவு சிரிப்பு வரவே இல்லயேப்பா…” என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்கிறார் அன்பர் ஒருவர்.. மேலும் அவர், “குடியப் பத்தி படம் எடுக்கும் இயக்குநர், ஒரு உண்மையான குடிகாரனைக் கூட இதுவரை காட்டவில்லையே என்று ஏங்குகிறார்..

மேலும் மதுப் பழக்கம் என்பது ஒரு நோய் என்பதனை அங்கீகரித்திருக்கும் இந்திய மருத்துவத் துறை கவுன்சிலுக்கு, அதை விட கொடிய நோயாக இயக்குநர் M. இராஜேஷின் திரைப்படங்களையும் அந்தப் பட்டியலின் கீழ் சேர்த்துக் கொள்ளும்படி கோரிக்கை மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது..

(பி. கு – 1, படத்தில் எப்பொழுதும் ஊற்றிக் கொண்டே இருப்பதால், படமும் ஊற்றிக் கொள்ளுமோ என்று பயந்த உதவி இயக்குநரிடம், இயக்குநர், “இந்த மு… ஜனங்க, இந்த படத்தை ஹிட்டாக்குறாங்களா இல்லயான்னு பாரு…” என்று சவால் விட்டதாக கேள்வி.

பி. கு – 2 கேள்வி : திரை விமர்சனம், திரை விமர்சன பாணியில் இல்லாமல், செய்தி வாசிப்பு பாணியில் எழுதப்பட்டிருப்பது ஏன்..?
பதில் : திரை விமர்சனம் எல்லாம் திரைப்படங்களுக்கு மட்டும் தான்… இந்த மாதிரி -------------------- க்கு இல்லை..)


Sunday 9 August 2015

சண்டி வீர்ன் :

முந்தைய படமான நைய்யாண்டியின் மூலம் ரசிகர்களை அமரர்களாக்கும் முயற்சியில் ஈடுபட்ட இயக்குநர் சற்குணம், தன் குணத்துக்கு எது வரும், எது வராது என்பதை மிகத் தெளிவாக யோசித்து, இயக்குநர் பாலாவின் உதவியுடன் சண்டி வீரன் மூலம் மீண்டு(ம்) களம் கண்டிருக்கிறார். நைய்யாண்டி தந்த பாதிப்பிலிருந்து மீளாமல் இருந்தாலும் கூட, பாலா என்ற படைப்பாளியின் மேல் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில், சண்டி வீரனை முண்டியடித்துக் கொண்டு முதல்நாளே பார்க்காவிட்டாலும், சற்று காத்திருந்து பார்க்கலாம் என்ற எண்ணமிருந்தது.. அதன்படி படமும் பார்த்தாயிற்று. படத்தைப் பற்றி ஒருவரியில் சொல்ல வேண்டும் என்றால், சண்டிவீரன் முழுக்க நொண்டிவீரன் அல்ல..


கதையென்று பார்த்தால், களவாணி கால காதல் கதைதான்.. ஆனால் வெறும் காதலை மட்டும் வைத்துக் கொண்டு இனி தமிழ் பூமியில் வியாபாரம் செய்ய முடியாது என்பதை விளங்கிக் கொண்டு, நாயகனுக்கு இரட்டை வேலை கொடுத்திருக்கிறார்.. முதலாவது நாயகன் வழக்கம் போல காதலியின் தகப்பனை எதிர்த்து ஜெயித்து, காதலியை கைப்பிடிக்க வேண்டும், இரண்டாவதாய், ஊரில் நிலவும் ஒரு முக்கியமான சமூகப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். திரைப்படத்தின் மிகமுக்கியமான பலமே, இயக்குநர் சற்குணம் அவர்கள் தனது முந்தைய படத்தில் தொலைத்த, தான் வாழும் பூமி சார்ந்த கலாச்சாரப் பதிவுகளை மீண்டும் கையிலெடுத்து இருப்பதுதான்.. அதனோடு சேர்ந்து மற்றொரு பலமாக இருப்பது, சமூகத்தின் முக்கியப் பிரச்சனையாக மாறிக் கொண்டிருக்கும் குடிநீர்ப் பிரச்சனையையும் கையில் எடுத்திருப்பது.

களவாணியைப் போலவே இங்கும் தஞ்சை வட்டாரப்பகுதி தான் கதைக்களம். அருகருகே இருக்கும் இரண்டு கிராமங்களுக்கு இடையே குடிநீருக்காக பயன்படுத்தப்படும் ஒரு குளத்தை மையப்படுத்தி பகை இருந்து வருகிறது.. ஒரு கிராமத்துக்கு அந்தக் குளத்தை விட்டால், குடிநீருக்கு வேறுவழியே கிடையாது. ஆனால் மற்றொரு கிராமத்திற்கோ அப்படியில்லை. இதை மனதளவில் உணர்ந்து பக்கத்து கிராமத்தின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாகப் பேசும் நாயகனின் அப்பா, அந்தக் குளப் பிரச்சனை கலவரத்தில் கொல்லப்படுகிறார்.. இருபத்திரண்டு வருடங்கள் கழித்து நாயகன் வளர்ந்து வந்து நிற்கிறான். அந்தப் பிரச்சனையும் அதீதமாக வளர்ந்து நிற்கிறது.. கூடவே சிறுவயதிலிருந்து அவன் வளர்த்து வந்த காதலும் வளர்ந்து நிற்கிறது… காதலியோ அவனது ஊரைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரின் மகள்.. இப்போது நாயகன் செய்ய வேண்டியது என்ன…? என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்… அதை அவன் எப்படி செய்தான் என்பதை திரையரங்கில் பார்த்துக் கொள்ளுங்கள்.

முதல்பாதி நாயகன் நாயகி இருவருக்குமான காதலும், இரண்டு ஊர்களுக்குமான மோதலுமாக மாறிமாறி அடுக்கப்பட்ட காட்சிகளினால் விறுவிறுவென போகின்றது. திருவிழா கொண்டாடும் போது அந்த ஊரில் கடைபிடிக்கப்படும் பழக்கவழக்கங்கள், சிங்கப்பூர் சென்று திரும்பும் அந்த ஊர் மக்களின் அனுபவங்கள், அவர்களின் வாழ்க்கைமுறை, திருவிழாவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள், திருமணம் மற்றும் உடலுறவு சார்ந்த எதேச்சையான கிண்டல் பேச்சுகள், தேர்ட்டு அம்பயராக நிறுத்தப்பட்டு இருக்கும் மொபைல் போன், வீடியோ காலிங்கில் பேசுகிறோம் என்று தெரியாமல் பேசி மாட்டிக் கொண்டு வெட்கப்படும் நாயகி, அந்த செல்போனை ஒலித்து வைக்கும் தந்திரம் என நிலவரைவியலில் உட்புகுந்த அறிவியல் சார்ந்த காட்சிகள் படத்துக்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றன. தூங்கி எழுந்தது போல் ப்ரேமுக்கு ப்ரேம் காட்சியளிக்கும் ஆனந்தி கூட முதல்முறையாக அழகாக தெரிகிறார்.. களவாணி திரைப்படத்தின் சாயல் ஆங்காங்கே தென்பட்டாலும் கூட, இப்படி படத்தில் சில நம்பிக்கையளிக்கும் நல்ல விசயங்கள் முதல்பாதி முழுக்கவே இருக்கின்றன..


ஆனால் அவை இரண்டாம் பாதியில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லாமல் இருப்பதுதான் பிரச்சனை.. முதல்பாதியில் மூர்க்கமாக சண்டித்தனத்துடன் பக்கத்து கிராமத்திற்கு தண்ணீர் கொடுப்பதை எதிர்க்கும் இந்தக் கிராமத்து மக்கள், எதற்காக அதை எதிர்க்கிறார்கள் என்பதற்கான காரணம் படத்தில் எங்குமே சொல்லப்படவில்லை.. அதனாலயே அது சாதிய அரசியல் சார்ந்த காரணமாக இருக்கலாமோ..? அதை இயக்குநர் கவனமாக தவிர்த்திருக்கிறாரோ என்ற எண்ணம் எழுகிறது.. இருப்பினும் அந்தப் பின்புலம் வலுவாக இல்லாததால், அதன் வீரியம் குறைகிறது.. மேலும் இரண்டாம் பாதியில் எதிர்பாராத விதமாக ஏற்படும் சில கதாபாத்திரங்களின் குணாதிசய மாறுதல்கள் நம்பகத்தன்மைக்கு மிகுந்த பங்கம் விளைவிக்கின்றன. உச்சகட்டமாக ஒரு பிரச்சனையை அணுகிக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களுக்கு ஏற்படும் மனமாற்றங்கள் அந்தக் கதாபாத்திர வடிவமைப்பில் இருக்கின்ற சிக்கலைப் பற்றி கூறுகின்றன.. அவ்வளவு வீரியத்துடனும், மூர்க்கத்துடனும் தண்ணீர் பங்கீடை மறுக்கும் கிராமமக்கள், நாயகன் பேசும் ஒரேயொரு வசனத்தில் இந்தளவிற்கு மனம் மாறிவிடுகிறார்கள் என்றால், அதை அவர்கள் வாழ்நாளில் ஒருநாள் கூட யோசித்துப் பார்த்ததே இல்லையா..? என்கின்ற கேள்வி நமக்குள் எழுந்து இம்சித்து, அந்த மனமாற்றத்தை ஏற்றுக்கொள்ளவிடாமல் செய்துவிடுகிறது.. நம் அன்றாட யதார்த்த சமூகப் பிரச்சனைகளிலும் இது போன்ற மாயமந்திர மனமாற்றங்கள் ஏற்பட்டு, பிரச்சனை தீர்ந்துவிடாதா..? என்று ஏங்கும் நமக்கும் ஏனோ அதை திரையில் பார்க்கும் போது சற்று கேலிக் கூத்தாகத் தான் தெரிகிறது..

காதலின் க்ளைமாக்ஸில் அப்பட்டமாக களவாணியை மீண்டும் கண்டு கொள்ள முடிகிறது.. சீரியஸான விசயத்துக்கே சிரிப்பு க்ளைமாக்ஸை ஏற்றுக் கொண்டவர்கள், சிரிப்பு விசயத்துக்கு சிரிப்பு க்ளைமாக்ஸை ஏற்றுக் கொள்ள மாட்டார்களா.? என்று இயக்குநர் நினைத்துவிட்டார் போலும்.. படத்தின் இரண்டாம் பாதியில் சண்டிவீரன் சற்றே நொண்டத்தான் செய்கிறான்.. அதனாலயே அப்பாடி படம் முடியப் போகிறது..!! என்ற எண்ணம் இரண்டாம் பாதியில் அடிக்கடி எழுந்து மறைவதை மறுக்க முடியவில்லை. பொண்டாட்டியின் பேரில் பில் போடுவது போன்ற சில சுவாரஸ்ய முடிச்சுகளை இரண்டாம் பாதியிலும் ஆங்காங்கே தூவியிருந்தால் சண்டி வீரன் நொண்டி இருக்கமாட்டான்..


மொத்தமாக பார்த்தால், இயக்குநர் சற்குணத்தின் நையாண்டியை ஒப்பிடும் போது இந்த சண்டிவீரன் ஒன்றும் அந்த அளவிற்கு மோசமில்லை.. எடுத்துக் கொண்டிருக்கும் சமூகப்பிரச்சனைக்காகவும், தண்ணீரின் தேவை தொடர்பான அந்த முக்கியமான பாடலுக்காகவும், தண்ணீரின் சிக்கனத்தையும், அதன் தேவையை மக்களுக்கு உணர்த்திய தன்மைக்காகவும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கக்கூடிய திரைப்படம் தான். எ..ன்..ன.., இரண்டாம் பாதியை பார்க்க கொஞ்சம் பொறுமை வேண்டும்.. அவ்வளவே..

Wednesday 5 August 2015

ஆரஞ்சு மிட்டாய் :

பதிவுகள் எழுதியே பல காலங்கள் ஆகிறது. எழுதவே கூடாது என்று இடைக்காலத் தடை எதுவும் விதித்துக் கொள்ளவில்லை. ஏனோ ஆசைகளும், நிராகரிப்புகளும், எதிர்பார்ப்புகளும், எரிச்சல்களும், அலுப்பும் அலட்சியமுமாக சேர்ந்து சிலமாத காலங்கள் எழுதாமலே கடந்துவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க சில படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. என் பதிவுகளின் மறுபிரவேசம் “காக்கா முட்டை”யிலேயே நிகழ்ந்துவிடும் என்று நானும் கூட எதிர்பார்த்திருந்தேன். அதுவும் முடியாமல் கடந்ததும், இனி வெளியாக இருக்கும் “குற்றம் கடிதல்” என்ற மிக முக்கியமான தமிழ்சினிமாவில் அந்த பிரவேசத்தை நிகழ்த்தலாம் என்று காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த காத்திருப்பில் கைவலியே வந்து, இனியெங்கே எழுதுவதையே மறந்துவிடுவேனோ என்ற பயத்தில், ”ஆரஞ்சு மிட்டாய்” சுவைத்துக் கொண்டே களம் காணுகிறேன்..


தமிழ் சினிமாவில் கதைகளிலும், கதை சொல்லும் முறைமைகளிலும் சமீபகாலமாக சில குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது தமிழ் சினிமாவிற்கும், தமிழ் ரசிகர்களுக்கும் நல்லதுதான். ஆனால் அந்த குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் மட்டுமே இருந்துவிட்டால் அதுவே நல்ல திரைப்படமாகிவிடுமோ என்கின்ற குழப்பமும் நமக்கு இருக்கின்றது. வணிக சினிமாவின் சூத்திரங்களை பெரிதும் தவிர்த்த, இயல்பான கதாபத்திரங்கள் கொண்ட திரைப்படங்கள் எல்லாமே நல்ல திரைப்படமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது போல மாற்று முயற்சி கொண்ட திரைப்படங்கள் எல்லாமே மிகச்சிறந்த திரைப்படங்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இதற்கு உதாரணமாக கூற என் கைவசம் தற்போது தமிழில் இருப்பது, இந்த ஆரஞ்சு மிட்டாய் திரைப்படம் மட்டுமே.

ஆரஞ்சு மிட்டாய் திரைப்படம் ஒரு மாற்றுமுயற்சி கொண்ட திரைப்படம்.  நாயகன், நாயகி, வில்லன் என்கின்ற வழக்கமான சினிமாவின் வஸ்துக்கள் இல்லாமல், கதாபாத்திரத்தை மையப்படுத்தி, யதார்த்தமான மனிதர்களை சித்தரித்து, அவர்களைச் சுற்றி நடக்கும் வாழ்வியல் சம்பவங்களைக் கொண்டு எடுக்கப்பட்டிருப்பதால் மட்டுமே இது மாற்றுமுயற்சி எனலாம். ஆனால் இந்த மாற்றுமுயற்சி, மற்றொரு முயற்சியாக மட்டுமே சுருங்கியிருப்பது, இவர்கள் திரைப்படத்தில் காட்டியிருக்கும் வாழ்வியல் எந்தவகையிலும் முழுமையடையாமல் இருப்பதால் தான்.

ஆம்புலன்ஸ் வண்டியில் வரும் அவசரகால மருத்துவ உதவியாளர், ஆம்புலன்ஸ் டிரைவர், அதில் நோயாளியாக பயணிக்கும் 60 வயது முதியவர், இவர்கள் தான் திரைப்படத்தின் முக்கிய மைய கதாபாத்திரங்கள். ஆம்புலன்ஸ் பயணம், வயதான நோயாளிப் பெரியவர் என்ற கதாபாத்திரங்கள் தெரிந்தவுடன் நம் மனதுக்குள் பல கதைகள் தோன்றும், மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் ஒரு பெரியவரின் அனுபவமாக கதை இருக்கலாம், அல்லது மரணத்தை எதிர்நோக்கிய பல மனிதர்களை அருகில் இருந்தே பார்த்து வந்திருக்கும் அந்த மருத்துவ உதவியாளரின் அனுபவமாக இருக்கலாம், அல்லது அந்த நோயாளிக்கும் மருத்துவ உதவியாளர்களுக்கும் இடையே ஏற்படும் ஒருவிதமான வாழ்க்கை சார்ந்த புரிதலாக கதை இருக்கலாம் என்றெல்லாம் நமக்கு பல கதைகள் தோன்றும். ஆனால் நாம் மேற்சொன்ன எதுவுமே இந்த திரைப்படத்தின் கதை இல்லை.. ஆக என்னதான் கதையென்று கேட்டால், கதையே இல்லை என்று கூட சொல்லலாம். அதுதான் இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய பிரச்சனை.

திரைப்படத்தின் இரண்டாவது காட்சி, மிக அட்டகாசமாக இருந்தது. 60 வயது பெரியவரான கைலாசத்துக்கு நெஞ்சுவலி என்று போன் வர, அவரை அழைக்க ஆம்புலன்ஸ் செல்லும். ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு பின்னர் ஆம்புலன்ஸ் வண்டி செல்வதற்கு சாலை வசதி இல்லாமல், ஸ்டெரெக்சரை மட்டும் தூக்கிக் கொண்டு இருவரும் நடந்தே சென்று அந்தப் பெரியவரை அழைத்து வருவார்கள். மிகச் சாதாரணமான காட்சி போன்று தெரியும் இந்தக் காட்சி, அரசாங்கத்தின் செயல்பாடுகளை சிறப்பாக பகடி செய்யும் காட்சி. குடிமக்களின் உயிரைக் காக்க 108 அவசர சிகிச்சைக்கு வழி செய்கின்ற அரசாங்கங்கள், அந்த வாகனங்கள் ஊருக்குள் சென்று சேர்வதற்கான சாலைகளை மட்டும் கிராமங்களில் இன்றளவும் அமைக்கவில்லை என்பதாக சொல்லும் காட்சி. படம் முழுக்க இப்படித்தான் இருக்கப் போகின்றதோ என்று ஆச்சரியம் கொடுத்த காட்சி அது. ஆனால் அந்த ஆச்சரியம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மேற்சொன்ன காட்சியில் நான் மையமாக இதைக் குறிப்பிட, திரைப்படம் மையமாக குறிப்பதுவோ அந்த கைலாசம் என்கின்ற  60 வயது முதியவரின் அசட்டுத்தனமான முரண்டு பிடிக்கும் குணத்தை. அவர் தனக்கு வீசிங் வரும் என்று அடம் பிடித்து ஸ்டெரெக்சரில் படுக்காமல் உட்கார்ந்து கொண்டே வருகிறார், அவர்கள் அவரை தூக்க முடியாமல் தூக்கி வருகிறார்கள் என்று காட்சியின் தன்மையை நகைச்சுவையாக மாற்றி சிதைக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தை காமெடியாக சொல்வதா..?, சீரியஸாக சொல்வதா..? என்கின்ற குழப்பமும் இயக்குநருக்கு இருந்திருக்கிறது என்பது படம் முழுவதுமே தெரிகிறது. மருத்துவ உதவியாளராக வரும் ரமேஷ் திலக்-க்கு ஒரு காதல், அது கைகூடுவதில் ஒரு பிரச்சனை, மேலும் ரமேஷ் திலக் சமீபத்தில் தான், தன் தந்தையை இழந்தவர் என்பதான அடிக்கோடிட்ட பிண்ணனி வேறு. இந்த இரண்டு பிண்ணனியுமே முழு நிறைவுடன் இல்லை. கைலாசம் என்கின்ற பெரியவரின் கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டால், ”மகன் உயிரோடு இருந்தும் அவர் தனிமையில் வாழ்பவர், ”தன் தந்தை இறந்தால் மட்டும் தனக்குத் தெரிவியுங்கள்” என்று மூன்றாம் நபரிடம் தெரிவிக்கும் அளவுக்கு அவர் மீதான கோபத்தோடு வாழ்பவன் அவரது மகன்..” என்பதான பிண்ணனி அவருக்கு.. அந்தக் கதையும் அதன் உணர்வுகளும் கூட திரைக்கதையில் முழுமையாக இல்லை.. மரணத்தை எதிர்கொள்ளப் போகும் மனிதர்களிடம் இருக்கும் ஒரு வறட்டு பிடிவாதம் மட்டுமே ஓரிரு காட்சிகளில் தென்படுகிறது.. இது தவிர்த்து அந்த டிரைவரின் கதாபாத்திரம், இந்த கதையோட்டத்திற்கு கொஞ்சம் கூட தொடர்பில்லாத கதாபாத்திரம். திருமணம் ஆன பெண்கள் திருமணம் ஆகாத பெண்கள் என்று வகைதொகையில்லாமல் எல்லா பெண்களிடமும் போனில் அரட்டை அடிக்கும் அந்தக் கதாபாத்திரம், இந்தக் கதைக்களத்துக்கு எப்படி பயன்பட்டது, கதையை அந்தக் கதாபாத்திரம் எப்படி நகர்த்தியது என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.

கைலாசமாக வரும் அந்தப் பெரியவரின் செய்கை விசித்திரமாகவும் வியப்பாகவும் இருக்கிறது.. நடமாட்டம் குறைந்து போய், சாவை எதிர்நோக்கியபடி வீட்டுக்குள்ளாகவே முடங்கிக் கிடக்கும் அந்தப் பெரியவர், வெளியுலகை பார்க்க வேண்டும் என்று தோன்றும் போது, ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து அலைப்பாராம்.. ஆம்புலன்ஸ் வந்தவுடன் அதில் ஏறி ஊரைச் சுற்றிப் பார்த்தபடியே மருத்துவமனையில் இறங்கும் அவர், மருத்துவர்கள் கூறும் ஆலோசனைப்படி எந்த மருந்துகளையும் உட்கொள்ளாமல், மீண்டும் திரும்பி தன் வீட்டுக்கே சென்றுவிடுவாராம்.. ஆக 60 வயது முதியவராகிய அந்தக் கைக்குழந்தை வைத்து விளையாடும் ஒரு பொம்மை போலத்தான், அந்த உயிர்காக்கும் ஆம்புலன்ஸும், அதில் வரும் மருத்துவ உதவியாளர்களும்.. இப்படிப்பட்ட செய்கை கொண்ட ஒரு மனிதரை எதன் அடிப்படையில் நாம் ரசிப்பது என்றே தெரியவில்லை..

”சாகப் போகின்ற உங்களை எங்களால் காப்பாற்ற முடியாது, ஆனால் சாகும் வரை வைத்தியம் மட்டும் செய்கிறோம்” என்று சொல்கின்ற மருத்துவ நிபுணர்களை கேள்விக்குட்படுத்துவதுதான் இத்திரைக்கதையின் மையம் என்றும் நம்மால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் இந்தக் காட்சி வருவதே படத்தின் இறுதிக்காட்சிக்கு சற்று முன்புதான். அதுவும் வலுவில்லாத, மிகச் சாதாரண காட்சியாக நம்மை கடந்து செல்கிறது. இது தவிர்த்து மேக்கிங்கிலும் அவ்வளவு பிரச்சனை.. முதல் காட்சியில் விபத்துக்குள்ளான ஒரு காரைக் காட்டுகிறார்கள்.. அந்தக் கார் தரையில் மல்லாந்து கிடக்கும் கரப்பான்பூச்சியைப் போல் கிடக்கிறது.. சுற்றிலும் மரமோ, தடுப்புச் சுவரோ, பாலச்சுவரோ, பள்ளமோ கூட இல்லை.. சுற்றிலும் வெட்டாந்தரை. இந்த இடத்தில் இந்தக் கார் எப்படி ஆக்ஸிடெண்ட் ஆனது என்ற கேள்வி மட்டுமே எழுகிறது.. மருத்துவமனை என்கின்ற அட்மாஸ்பியரைக் காட்டி, இரவு நேரத்தில் அங்கு ரமேஷ் திலக், விஜய் சேதுபதியை ஆவேசத்துடன் திட்டும் காட்சி வருகிறது. அந்தக் காட்சியில் மருந்துக்கு கூட நோயாளியோ நர்ஸோ யாருமே எட்டிப் பார்ப்பதில்லை.. மொத்த திரைப்படத்திலும் விஜய் சேதுபதிக்கு அந்தக் குத்தாட்டம் போடும் ஒரு காட்சி மட்டுமே பயனுள்ளதாக சொல்லும்படி அமைந்திருக்கிறது.. அவரது கைவண்ணத்தில் வசனங்களும் சுமார் ரகம் தான்.

நல்ல சினிமா என்றால் மெசெஜ்ஜோ, கருத்தோ இருக்க வேண்டுமா என்ன..?? இதோ நாங்கள் எடுக்கிறோம் பார்.. கருத்தோ மெசெஜ்ஜோ இல்லாத ஒரு நல்ல சினிமா, என்று போட்டி போட்டுக் கொண்டு இந்தத் திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.. Running Title ஓடும் போது வரும் பாடல் அதைத்தான் வலியுறுத்துகிறது.. அவர்களிடம் நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.. இந்த திரைப்படம் மூலம் நீங்களும் ஒரு கருத்தை தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள், அது, கருத்தியல் இல்லாத காட்சிகளைக் கொண்டு மட்டுமே கட்டமைக்கப்படும் திரைப்படங்கள், பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய சோர்வைக் கொடுக்கும் என்பதே அது..


ஆக இந்த ஆரஞ்சு மிட்டாயை வழக்கமான தமிழ் சினிமாவில் இருந்து சற்று மாறுபட்ட வித்தியாசமான தமிழ் சினிமா என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் இதனை மிகச் சிறப்பான திரைப்படம் என்றெல்லாம் சொல்லிக் கொள்கின்ற கூட்டத்தில் நான் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்..