Thursday 10 September 2015

பாயும் புலியும் தனி ஒருவனும் :


ஒரேவிதமான கதைக்களன் கொண்ட இரண்டு திரைப்படங்கள், அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகி, ஒன்று மிகச்சிறந்த வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்து கொண்டிருக்க.. மற்றொன்று முதல் காட்சியிலேயே மக்களை முகம் சுழிக்க வைத்துக் கொண்டிருக்கிறது… இரண்டுமே ஒரேவிதமான கதைக்களனை (கிட்டத்தட்ட) கொண்ட திரைப்படங்கள் தான். அப்படி இருந்தும் படத்தின் ரிசல்ட்டில் மட்டும் ஏன் இந்த வித்தியாசம்.?



தனி ஒருவனில் ஹீரோவான ஜெயம் இரவி ஒரு போலீஸ் அதிகாரி. IPS ஆக பணியில் சேர்வதற்கு முன்பே அவர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சி வகுப்பின் போதே, தனக்கான எதிரியை தானே தேர்ந்தெடுத்து, அவனை அழிக்க வேண்டும் என்பதனையே இலட்சியமாகக் கொண்டு, செயல்படவும் தொடங்கிவிடுகிறார். தனக்கான எதிரியாக மூன்று பேரை தரம்பிரித்து, அதில் மிகக்கொடூரமாக இருக்கும் ஒருவனை, தன் எதிரியாக தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கும் போது, அவர்கள் மூவரையுமே ஆட்டி வைக்கும் சக்திஆக இன்னொருவன் இருப்பது தெரிய வருகிறது. அவனையே தன் எதிரியாக தீர்மானிக்கிறார் இரவி.. அவர் தன் இலட்சியத்தில் ஜெயித்தாரா..? என்பது மீதிக்கதை..



பாயும் புலியில், பிரபல தொழிலதிபர்கள் பணம் கேட்டு மிரட்டப்படுகிறார்கள், பணம் கொடுக்காத தொழிலதிபர்கள் ஒரே மாதிரியான முறையில் கொல்லப்படுகிறார்கள்… இந்தக் கொலையின் பிண்ணனியில் பவானி என்கின்ற இரவுடியும் இன்னும் இரண்டு இரவுடிகளும் இருக்கலாம் என தெரியவர, போலீஸ் அதிகாரி விஷால் களமிறங்குகிறார். அவர்களை களை எடுக்க முயலும் போது, இவர்கள் மூவரையுமே ஆட்டி வைக்கும் இன்னொருவன் இருப்பது தெரிய வருகிறது.. அவனை ஹீரோ கண்டுபிடித்து ஜெயித்தாரா..? இல்லையா..? என்பது மீதிக்கதை…

இப்படி கதைக்களனாக ஒரே மாதிரியான கதையாக தோற்றம் தரும் இந்த இரண்டு படங்களும், இன்னும் பல்வேறு ஒற்றுமைகளையும் கொண்டிருக்கிறது.. அவையாவன…
  
ஒற்றுமைகள்:

S. NO
தனி ஒருவன்
பாயும் புலி
1
ஹீரோ போலீஸ்
ஹீரோ போலீஸ்
2
 வில்லன் அரசியலோடு தொடர்புடையவன்
வில்லன் அரசியலோடு தொடர்பு உடையவன்
3
ஹீரோ வேறு மூன்று பேரை முக்கிய குற்றவாளியாக எண்ணிக் கொண்டிருக்க, அவர்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறான் முக்கிய வில்லன்
ஹீரோ வேறு மூன்று பேரை முக்கிய குற்றவாளியாக எண்ணிக் கொண்டிருக்க, அவர்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறான் முக்கிய வில்லன்
4
ஹீரோவின் நடவடிக்கைகளை வில்லன் ஹீரோவுக்கு தெரியாமல் கண்காணிக்கிறான்
ஹீரோவின் நடவடிக்கைகளை வில்லன் ஹீரோவுக்கு தெரியாமல் கண்காணிக்கிறான்
5
போலீஸில் இருக்கும் நம்பகமான குழு ஹீரோவுக்கு உதவுகிறது
போலீஸில் இருக்கும் நம்பகமான குழு ஹீரோவுக்கு உதவுகிறது
6
வில்லன் தன் தந்தையை கொல்ல முயற்சிக்கிறான்
வில்லன் தன் தந்தையை கொல்ல முயற்சிக்கிறான்
7
ஹீரோவைக் கொல்ல வாய்ப்பு கிடைத்தும் அதை தவிர்த்துவிடும் வில்லன்
ஹீரோவைக் கொல்ல வாய்ப்பு கிடைத்தும் அதை தவிர்த்துவிடும் வில்லன்
8
கதைக்களன் : மூன்று வில்லன்களை விடுத்து முக்கியமான வில்லனை தண்டிக்க நினைக்கும் போலீஸ் ஹீரோ
கதைக்களன் : மூன்று வில்லன்களை விடுத்து முக்கியமான வில்லனை தண்டிக்க நினைக்கும் போலீஸ் ஹீரோ

இப்படி இரண்டு படத்துக்கும் மிக முக்கியமான ஒற்றுமைகள் பல இருந்தும் மக்களிடையே இரண்டு திரைப்படத்துக்கும் வேறுவேறு விதமான ரிசல்ட் கிடைத்திருப்பதற்கு காரணமாக இருப்பது, இரண்டு படத்துக்குமான மிக முக்கியமான வித்தியாசங்கள் தான்.. அவற்றையும் பார்ப்போம்..

வேற்றுமைகள் :

S.NO
தனி ஒருவன்
பாயும் புலி
1
ப்ளாஷ்பேக் இல்லாத வாய்சவடால் இல்லாத, எரிச்சலூட்டும் ஹீரோயிசம் இல்லாத, பார்த்ததும் காதலில் விழாத, தனிப்பட்ட குணாதிசயங்கள் கொண்ட வித்தியாசமான ஹீரோ
வாய்சவடால் கொண்ட, எரிச்சலூட்டும் ஹீரோயிசங்கள் கொண்ட, பார்த்ததும் காதலில் விழும், தனிப்பட்ட குணாதிசயங்கள் இல்லாத வழக்கமான ஹீரோ
2
நேரடியான கொலைகள் ஏதும் செய்யாமலே ஆடியன்ஸ் மனதில் அஸ்திவாரம் போட்டு அமர்ந்து கொள்ளும், வித்தியாசமான விசித்திரமான குணாதிசயங்கள் கொண்ட வில்லன் கதாபாத்திரம்
நேரடியான கொலைகள் பல செய்தும் ஆடியன்ஸ் மனதை அசைத்துக் கூட பார்க்க முடியாத வீக்கான வில்லன் கதாபாத்திரம்.
3
மையக் கதையோடு தொடர்புடைய கதாநாயகி கதாபாத்திரம்
தோலுரித்துக் காட்டவே உருவாக்கப்பட்டிருக்கும் கதாநாயகி கதாபாத்திரம்
4
இரசனையான காதல் காட்சிகள்
இழுவையான, திராபையான காதல்காட்சிகள்
5
காட்சிக்கு காட்சி கதை நகர்ந்து கொண்டே இருப்பது
கதைக்கு தொடர்பேயின்றி திணிக்கப்பட்ட காதல் காமெடி காட்சிகள்.
6
ஹீரோ, வில்லன் இருவரின் உணர்வுகளும், லட்சியங்களும் நம்பகத்தன்மையுடன் ஆடியன்ஸ்க்கு நெருக்கமாக இருப்பது
ஹீரோ வில்லன் இருவரின் உணர்வுகளும், இலட்சியங்களும் நம்பகத்தன்மையின்றி ஆடியன்ஸ்க்கு அந்நியமாக இருப்பது
7
மிக விறுவிறுப்பான திரைக்கதை
இடைவேளையிலேயே இறந்து போகும் திரைக்கதை
8
படத்தின் ஆரம்பத்திலேயே படத்தின் முடிவு தெரிந்துவிடும், இருப்பினும், நாம் எதிர்பார்த்ததை விட அதிகமான கற்பனைநயத்துடனும், சுவாரஸ்யத்துடனும் அந்த முடிவை நெருங்கியிருப்பார்கள்
படத்தின் முடிவு இடைவேளையிலேயே தெரிந்து விடும். அதை சராசரியான அல்லது மட்டமான கற்பனை வளத்துடன் நெருங்கியிருப்பார்கள்.
9
படத்தின் ரிசல்ட் HIT
படத்தின் ரிசல்ட்
AVERAGE (OR) FLOP

மேற்சொன்ன வித்தியாசங்களில் சில முக்கியமான வித்தியாசங்கள் தான் தனி ஒருவனை பெரும்பான்மையுடன் ஜெயிக்க வைத்து, பாயும் புலியை பதுங்க வைத்திருக்கின்றன.. அந்த வித்தியாசம் முழுக்க முழுக்க ”திரைக்கதை” தான் என்று கூறினால் அது மிகையில்லை.. பொத்தாம் பொதுவாக திரைக்கதை என்று கூறிவிட்டாலும், அதுயென்ன..? என்பதனை சற்று விரிவாக பேசுவதற்கு(எனக்குத் தெரிந்த மட்டும்) எனக்குக் கிடைத்த வாய்ப்பாகவே இந்த இரு திரைப்படங்களை கருதுகிறேன்.

திரைக்கதை(Screenplay) என்கின்ற பதம் பாமர ரசிகன் கூட பயன்படுத்தும் ஒரு வார்த்தையாக இப்போது மாறிவிட்டது.. ஆனால் அது அப்படி ஒன்றும் ஓரிரு வார்த்தைகளுக்கும் அடங்கிவிடும் பதம் அல்ல. நல்ல திரைக்கதை என்பது பல்வேறுவிதமான விசயங்களை நுணுக்கங்களை உள்ளடக்கிய ஒன்று.. அதற்கு பொத்வான ஒரு வரையறையாக “ ஒரு கதையை எந்தக் காட்சியில் தொடங்கி, எந்தக் காட்சியின் வழியாக நகர்த்தி, எந்தக் காட்சியில்  முடிக்கிறோமோ..” அதையே திரைக்கதையின் அமைப்பு எனலாம். இதுமட்டுமே தான் திரைக்கதையா..? என்று கேட்டால், “இல்லை” அது மட்டுமே திரைக்கதை இல்லை.. “காட்சிகளை முன் பின்னாக கலைத்துப் போடுவது, தொடர்ச்சியாக சுவாரஸ்யமான காட்சிகளை அடுக்குவது, காமெடியாக ஒரு காட்சியை தொடங்கி, சீரியஸாக முடிப்பது, சீரியஸாக தொடங்கும் காட்சி, காமெடியாக தொடர்ந்து, சீர்யஸாக முடிவது, முடிந்து விட்டதாக நினைக்கும் காட்சியை மீண்டும் தொடங்குவது, இந்தக் காட்சியின் தொடர்ச்சி வரும் என்று பார்வையாளன் எதிர்பார்க்கும் போது, அந்தக் காட்சியை அங்கேயே முடித்துவிடுவது, ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத மற்றொன்றை காட்டுவது, பார்வையாளன் யூகிக்கின்ற விசயத்தை பொய்யாக்குவது… Etc. Etc…” இப்படி எனக்குத் தெரிந்து பலவகையான திரைக்கதை நுட்பங்கள் இருக்கின்றன.. இவைகள் அத்தனையையும் உள்ளடக்கியதுதான் திரைக்கதை.

இத்தனை திரைக்கதை நுணுக்கங்களில், மிக முக்கியமானதாக, திரைக்கதையின் முதுகெலும்பாக இருப்பது கதாபாத்திர வடிவமைப்பு. இந்த கதாபாத்திர வடிவமைப்புதான், திரைக்கதையின்  சுவாரஸ்யத்துக்கும், காட்சிகளின் வழியான கதை நகர்வுக்கும் மிகப்பெரிய பலமாக பெரும்பாலும் இருப்பது. தனி ஒருவனிலும் இந்த கதாபாத்திர சித்தரிப்பு என்கின்ற ஒரு திரைக்கதை நுணுக்கம் தான் கைகொடுத்து, திரைபடத்தை ஜெயிக்க வைத்திருக்கிறது.. அது எப்படி என்று பார்ப்போம்.. நமக்கு நன்கு தெரிந்த ஒரு கதையை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்..

“ABC” என்பது ஒரு கதை. அதாவது மூன்று சம்பவங்களை உள்ளடக்கிய கதை. A – பாட்டி வடை சுட்ட நிகழ்வு, B – காக்கா வடையை திருடிய நிகழ்வு, C – நரி காக்கையை ஏமாற்றி வடையை அபகரிக்கும் நிகழ்வு. ஆக இந்த ABC யை தொகுத்தால் கதை கிடைத்துவிடும்.. இப்பொழுது ABC யின் வரிசையை கலைத்துப் போட்டால் திரைக்கதை கிடைத்துவிடும். அதாவது “ BCA, CAB, ABC “ இப்படி மூன்று திரைக்கதை வடிவம் நமக்கு கிடைக்கும். இதில் எது சிறந்த வடிவம் என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு கதாபாத்திரத்தை வடிவமைக்க வேண்டும். அதுயென்ன கதாபாத்திர வடிவமைப்பு..? மேற்சொன்ன கதையில் கதாபாத்திரங்களாக பாட்டி, காகம், நரி இருக்கிறது.. ஆனால் கதாபாத்திரம் தொடர்பான விவரணைகள் இருக்கிறதா..? இல்லை..

பாட்டி இருக்கிறார். எப்படிப்பட்ட பாட்டி….? எவ்வளவு வயதான பாட்டி…? ஏழையா..? பரம ஏழையா..? வடையை இழந்ததால் பாதிக்கப்பட்டாளா..? இல்லையா..? கோபம் கொண்டாளா…? இல்லையா..? இப்படி பாட்டி தொடர்பான விவரங்கள் எதுவுமே இல்லை. காக்கை இருக்கிறது. அது பசியால் வாடிய காக்கையா..? குஞ்சுக்கு உணவு ஊட்ட இரை தேடி வந்த காக்கையா..? தின்று கொழுத்த காக்கையா..? என்று எந்த விவரணைகளும் இல்லை.. நரிக்கும் அதே போலத்தான்.. நரி பசியால் வாடிய நரியா..? சூது வாதுள்ள நரியா..? வரும் வழி நெடுக இதே போல் பிற விலங்குகளையும் வஞ்சகமாக ஏமாற்றியபடி வரும் நரியா..? என எந்த விவரங்களும் இல்லை. இவை எல்லாம் இருந்தால் அதுதான் கதாபாத்திர வடிவமைப்பு…

மேலே சொன்ன காக்கை வடை திருடும் கதையில், நாம் யாரை பின்தொடர்வது. பாட்டி வடையை இழந்ததால் அவள் மீது பரிதாபம் கொள்வோமா..? காகம் வடையை தூக்கியதால் அதன் மீது கோபம் கொள்வோமா..? நரி காகத்தை ஏமாற்றி வடையைப் பறித்ததால் நாம் சந்தோசம் கொள்வோமா..? இதில் எந்த உணர்வையுமே நாம் அடைய மாட்டோம்.. இதை குழந்தைகளுக்கு சொல்லும் விளையாட்டுக் கதையாகவே பெரும்பாலும் அணுகுவோம்.. தமிழ் சினிமா சொல்லும் பெரும்பாலான கதைகளும் இதுபோன்ற குழந்தை விளையாட்டுக் கதையாகத்தான் இருக்கும்.. மேற்சொன்ன உணர்வுகளில் ஏதேனும் நமக்கு தோன்ற வேண்டும் என்றால், அதற்கு கதாபாத்திரங்களின் முப்பரிமாண பிம்பம் தேவை.. முப்பரிமாணம் என்பது கதாபாத்திரத்தின் உடல்நிலை, சமூகநிலை, மனநிலை சார்ந்த கட்டமைப்பு.. அது இல்லாத எந்தவொரு கதாபாத்திரத்தையும் நம்மால் பின்தொடர முடியாது.

ஆக கதாபாத்திர சித்தரிப்பு மிக முக்கியமானது… ஆனால் சித்தரிக்கும் முன் இந்தக் கதையில் நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதனையும் முடிவு செய்துகொண்டு அதற்கு ஏற்றார் போல கதாபாத்திரங்களை சித்தரிப்பது சாலச் சிறந்தது.. அது ஏன் என்பதனையும் பார்ப்போம்.. எந்த பின்புலமும் இல்லாமலே மேற்சொன்ன கதையை அப்படியே சொன்னால், “பாட்டியிடம் காகம் வடையைத் திருட, நரி அதனிடமிருந்து வடையை திருடியது..” என்று சொன்னால் கதை சொல்ல வரும் கருத்து “நீ ஒருவனை ஏமாற்றினால், இன்னொருவன் உன்னை ஏமாற்றுவான்..” என்பதாக வரும். அதே கதையில் BAC என்று திரைக்கதையை அமைத்து, காகத்துக்கு பசியால் வாடும் குஞ்சு ஒன்று கூட்டில் காத்திருக்கிறது என்று ஆரம்பித்து, பல்வேறு இடங்களில் உணவு தேடி அலைந்த காகம், இறுதியில் பின்புலமே சொல்லப்படாத ஒரு பாட்டியிடம் இருந்து வடையை தூக்கியது என்று கதையை நகர்த்தி, கூட்டுக்கு வடையை கொண்டு செல்லும் வழியில், நயவஞ்சக நரியின் வாய் வார்த்தையிலெல்லாம் மயங்காமல், நரிக்கு ஏதோ வகையில் உதவ எண்ணி காகம் பாடியது, வடையை இழந்தது என்று கதையை நகர்த்தினால், நம் மனம் காக்கைக்காக வருந்தும். கதை அத்தோடு முடியக் கூடாது என்றும் விரும்பும், D என்று மற்றொரு நிகழ்வை சேர்த்து, அதில் காகம் நரியை ஏமாற்றி எப்படி வடையை திரும்ப பெற்றது என்று சொன்னால், கேட்போரின் மனமும் திருப்தியடையும்.. கதை சொல்ல வரும் கருத்து “விடாமுயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்..” என்பதாக மாறிப் போயிருக்கும்..

இப்படி சாதாரணமாக நம் எல்லோருக்கும் தெரிந்த காக்கா வடை திருடிய கதையிலேயே கதாபாத்திரங்களுக்கு வடிவமைப்பை கொடுக்கும் போது, திரைக்கதையும், கதை சொல்ல வரும் கருத்தும் மாறுவதை பார்க்கிறோம். ஆக ஒரு கதையில் இருக்கின்ற எல்லா கதாபாத்திரங்களுக்கும் இது போன்ற பின்புல சித்தரிப்புகளை கொடுக்கும் போது, நாம் சொல்ல நினைத்திருந்த விசயம் மாறிப் போய், வேறொரு விசயத்தை இறுதியாக கதை தாங்கி வந்து நிற்கும்.. ஆகவே தான் கதாபாத்திர சித்தரிப்பை தொடங்குவதற்கு முன்பே, நாம் இந்தக் கதை வாயிலாகவோ, திரைப்படம் வாயிலாகவோ என்ன சொல்லப் போகிறோம் என்பதில் நமக்கு தெளிவு இருக்க வேண்டும்.. அந்தத் தெளிவு “ தனி ஒருவன்” படக்குழுவினரிடம் இருந்திருக்கிறது.

அவர்கள் எடுத்திருக்கும் கரு இதுதான். “ உன் எதிரி யார் என்று சொல், நீ யார் என்று சொல்லுகிறேன்…” தன்னை யாரென்று கண்டு கொள்வதற்காக தன் எதிரியை தேடும் நாயகன், அந்த நாயகனின் மூலமாக எதிரி தன்னையும் கண்டு கொள்கிறான் என்பதுதான், திரைப்படம் சொல்ல வரும் சேதி. ஆக க்தைக்கரு கிடைத்துவிட்டது.. நாயகன் போலீஸ் அதிகாரி என்றும் முடிவு செய்தாகிவிட்டது.. இந்த போலீஸ் நாயகனை மற்ற போலீஸ் நாயகர்களிடம் இருந்து எப்படி வித்தியாசப்படுத்துவது..? என்று யோசித்தவர்களுக்கு கிடைத்த Idea தான், “இவன் தன் போலீஸ் அதிகாரி வேலையை பணியில் சேர்வதற்கு முன்னரே பயிற்சி வகுப்பிலேயே தொடங்கியவன்..” என்கின்ற வித்தியாசம்.

ஹீரோ கதாபாத்திரத்தை இப்படி வடிவமைத்தவர்கள், அவனுக்கு நிகரான எதிரியை எப்படி வடிவமைப்பது என்று யோசிக்க.. “ ஹீரோ பணியில் சேர்வதற்கு முன்னரே தன் பணியை தொடங்கியவன் என்றால், வில்லன் தன் பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்பே தன் அரசியல் அயோக்கியத்தனத்தை தொடங்கியவன் என்கின்ற Idea கிடைக்கிறது. இப்படி தராசில் இரண்டு கதாபாத்திரங்களும் சரிக்கு சரியாக நிற்கிறது. அதன் தொடர்ச்சியாக இரண்டு கதாபாத்திரங்களுக்குமான குணாதிசயங்களை ஒவ்வொன்றாக பிடிக்கின்றனர்..

வில்லன் குணாதிசயங்கள் : ” சிறு வயதிலேயே அரசியல் கொலைப்பழி ஏற்றவன் (கொலை செய்தவன்), அரசியலை சிறு வயதிலேயே தொடங்கியவன், மாநிலத்தில் முதலாவதாக படிப்பில் தேறியவன், சைரன் வைத்த காரிலே பிறந்தவன், ஆடம்பர வாழ்க்கையிலும் படிப்பிலும் நாட்டம் கொண்டவன், அதிபுத்திசாலி, நேர்மையில்லாதவன், இரக்கமில்லாதவன், ஏழையாக பிறந்தவன், விஞ்ஞானியாக வளர்ந்தவன், நீதி நேர்மையை கடைபிடிக்காதவன்..” என்கின்ற இந்த சித்தரிப்புகள் கதாபாத்திரத்தின் முப்பரிமாண பிம்பம் கொண்டிருப்பதை பார்க்க முடியும்.. அதே போலத்தான் ஹீரோவும்

ஹீரோ குணாதிசயங்கள் : ”நேர்மையானவன், தன் நாட்டையும் தொழிலையும் நேசிப்பவன், சிறு வயதிலேயே செய்திகளுக்கு பின்னால் இருந்த அரசியலை கண்காணித்தவன், நட்பை அன்பை பேணுபவன், புது உறவுகளில் சிக்க விரும்பாதவன், வீரன், புத்திசாலி, விடாமுயற்சி உடையவன், தன் பணியை முன்னரே தொடங்கியவன், கூட்டு உழைப்பின் மேல் நம்பிக்கை உள்ளவன்..” இதிலும் கதாபாத்திரத்தின் முப்பரிமாண பிம்பம் இருப்பதை உணர முடியும்..

ஆக திரைப்படம் என்ன சொல்ல வருகிறது என்பது ஆடியன்ஸ்க்கு முதல் காட்சியிலேயே தெள்ளத் தெளிவாக புரிந்துவிடுகிறது.. கதை அதனை நோக்கிச் செல்வதற்கு கதாபாத்திர சித்தரிப்புகளும் மிக வலுவாக உதவி இருக்கின்றன.. மேலும் டைட்டில் தனி ஒருவன் என்று இருந்தாலும், ஹீரோ தன் நண்பர்கள் குழுவோடு சேர்ந்தே, இந்த செயல்களில் ஈடுபடுகிறான். அதே துறையில் பணியாற்றும் நாயகியும் அவனுக்கு உதவுகிறாள். என்பதாக கதை பிண்ணனி வளர வளர.. அருவெறுப்பைத் தரும் அதீத ஹீரோயிசம் அடிபட்டு காணாமல் போய்விடுகிறது. முதல் முயற்சியில் ஹீரோ வில்லனிடம் தோற்றுவிழுவதும், கதைக்கு மிகப்பெரிய பலமாக மாறி, இவன் எப்படி வில்லனை வீழ்த்தப் போகிறான் என்கின்ற சுவாரஸ்யத்தை ஆடியன்ஸ்க்கு கூட்டிவிடுகிறது..

இது எதுவுமே பாயும் புலியில் இல்லை என்பது தான், அதன் தோல்விக்கு காரணம், ஹீரோ விஷாலின் கதாபாத்திரத்தைப் பற்றி எழுதத் தொடங்கினால்,

ஹீரோ குணாதிசயங்கள் : ”போலீஸ் அதிகாரி, நேர்மையானவன், வீரன், புத்திசாலி, காதலி உடையவன், பாசம் உள்ளவன்…”  அவ்வளவே.. இந்த ஒருவரி குணாதிசயம் கூட தமிழ் சினிமாவின் பெரும்பாலான ஹீரோக்களுக்கு பல படங்களில் பொருந்திச் செல்லும் புதுமை இல்லாத கதாபாத்திர வடிவமைப்பு.. வில்லனைப் பற்றிப் பார்த்தால்..

வில்லன் குணாதிசயங்கள் : ”அரசியலில் தோற்றவன், அரசியல் ஆசை கொண்டவன், பாசம் கொண்டவன், பாசம் இல்லாதவன், அன்பானவன், முரடன், நல்லவன், கெட்டவன்..” அவ்வளவே.. பார்த்தீர்களா..? எத்தனை குழப்பம் உள்ள கதாபாத்திரம் என்று..

அஞ்சாதே அஜ்மல் கதாபாத்திரம் கூட கிட்டத்தட்ட இதேதான். ஆனால் அந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க, அந்த கதாபாத்திரத்தின் மனமாற்றத்தை தான் காட்சிப்படுத்தும். ஆனால் பாயும் புலியில் இந்த வில்லன் கதாபாத்திரத்தின் மனமாற்றம் என்பது ஒரு 10 நிமிட ப்ளாஷ்பேக் ஆக வந்து செல்கிறது.. அதுவரைக்கும் நாம் திரைப்படம் ஒரு ஹீரோ Vs வில்லன் வகை திரைப்படம் என்று நாம் எண்ணிக் கொண்டு இருக்கிறோம்.. இப்படி திரைப்படம் இந்த விசயத்தைத் தான் பேச வருகிறது, என்பதனை முதலிலேயே ஆடியன்ஸ்க்கு உணர்த்தாமல், குழப்பத்தை ஏற்படுத்தியது, மேலும் கதாபாத்திர சித்தரிப்புகளும் சோடை போவதால், பாயும் புலி, புல்லுக்குள் பதுங்கி மேயும் புலியாக மாறிவிடுகிறது.. பதுங்கிய புலி பாயும் என்று எதிர்பார்த்து, காத்திருந்து, ஏமாந்து, வெறுத்துப் போய், திரையரங்கில் இருந்து பாய்ந்து நாம்தான் வெளியேறுகிறோம்..

தனி ஒருவனில் மிக கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு, தூக்கி நிறுத்தப்பட்ட இரண்டு அதிபுத்திசாலி கதாபாத்திரங்களும், அவர்களுக்கு இடையே அடுத்தடுத்து நடக்கும், அறிவு சார்ந்த புத்திசாலித்தனமான மோதல்களும், ரசிகர்களுக்கு நெடுநாள் கழித்து கிடைத்த விருந்தாக இருப்பதுதான் தனி ஒருவனின் வெற்றிக்கு காரணம்..

தொடர்ச்சியாக ரீமேக் திரைப்படங்களையே எடுத்துவந்த இயக்குநர் இராஜா, தன் பாதையில் இருந்து விலகி, ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன..? என்பதனை இத்தனை ஆண்டுகள் கழித்தாவது உணர்ந்திருக்கிறாரே… நல்லது சைலன்சர் மீது தண்ணீரை ஊற்றி எதிரியின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பது, உடலுக்குள் Tracking Deviceயை செலுத்தி பாலோ செய்வது போன்ற காட்சிகள் சில ஃபாரின் திரைப்படங்களில் பார்த்தது தான் என்றாலும், அதை பயனபடுத்தி இருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது..

இயக்குநர் ஜெயம் இராஜா, ஜெயம் ரவி, அரவிந்தசாமி, தம்பி இராமையா என அனைவருக்குமே இது முக்கியமான திரைப்படமாக அமைந்திருக்கிறது.. கதைக்கான உண்மையான உழைப்பு இருக்கும் திரைப்படங்களை நாங்கள் கைவிட்டு விட மாட்டோம் என்பதனை அழுத்தம் திருத்தமாக மீண்டும் நிருபித்திருக்கிறார்கள் மக்கள். ”கதைக்காகவும் திரைக்கதைக்காகவும் எப்படி உழைக்க வேண்டும் என்பதனை நான் உணர்ந்து கொண்டேன்..” என்று பேட்டி கொடுக்கிறார் இயக்குநர் இராஜா. மற்ற மசாலாப்பட இயக்குநர்கள் எல்லாம், ஒரு திரைப்படம் வெற்றி பெற இவ்வளவு உழைக்க வேண்டுமா..? என்று பீதியோடு இருக்கிறார்கள்.. இந்தப் பீதி தமிழ் சினிமாவிற்கு நல்லது..

ஆக ஓடக்கூடிய விறுவிறுப்பான திரைப்படம் ஒன்றை கொடுக்க வேண்டும் என்ற நினைப்பை மட்டும் வைத்துக் கொண்டு, ஹீரோ இமேஜ்ஜிலும், இயக்குநர் இமேஜ்ஜிலும் ஒளிந்து கொண்டு, அர்பணிப்பான உழைப்பைக் கொடுக்காமல், ஒப்புக்கு ஜல்லியடித்த பாயும் புலி திரைப்படம் தோற்றிருக்க.. அதே நேரம் ஓடக் கூடிய விறுவிறுப்பான  திரைப்படம் எடுக்க வேண்டும், இயக்குநராக தனக்கு இருக்கும் இமேஜையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நினைப்போடு மட்டும் திருப்திபட்டுக் கொள்ளாமல், அதற்கான அயராத உழைப்பையும் கொடுத்த “தனி ஒருவன்” வென்றிருக்கிறது.. இனிவரும் கமர்ஸியல் திரைப்படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, சமீபத்திய முன்மாதிரி இந்த “தனி ஒருவன்”

(பி.கு : கமர்ஸியல் திரைப்படங்களுக்குத்தான் மேற்சொன்ன கதாபாத்திர சித்தரிப்புகள் உதவக் கூடும், யதார்த்த சினிமாக்களில் அந்த மாதிரியான கதாபாத்திர சித்தரிப்புகள் பெருமளவில் கதை நகர உதவாது, அதுபோல பெரும்பாலும் யதார்த்த சினிமாக்களில், கதாபாத்திர குணங்கள் நிலையானதாக இல்லாமல், சம்பவங்களினால் மாறுவதாக இருக்கும்.. அந்த சம்பவங்கள் தான் திரைக்கதையையும் நகர்த்தும்..)