Tuesday 11 November 2014

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா:

சமூகத்தின் முக்கியமான அங்கமாக இருக்கும் ஏதேனும் ஒரு சமூக பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு இனி படம் செய்தால் மட்டும்தான் பிழைக்க முடியும் என்பதனை ஓரளவுக்கு தமிழ் இயக்குநர்கள் உணரத் தொடங்கிவிட்டார்களா…?? அல்லது ஒரு குறிப்பிட்ட படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே மாதிரியான படங்களை வரிசையாக எடுத்துத் தள்ளும் வழக்கமான பார்முலா அடிப்படையில் தான் இது போன்ற படங்கள் வருகின்றதா…? என்று தெரியவில்லை.. ஜீவா, மெட்ராஸ், கத்தி என வஞ்சிக்கப்படும், ஏமாற்றப்படும் மக்களுக்கு எதிராக போராடும் தொனியில் அல்லது அப்படிப்பட்ட மக்களின் ஏமாற்றங்களை பதிவு செய்யும் தொனியில் வந்திருக்கும் மற்றொரு படம்தான் இந்த ஒரு ஊர்ல ரெண்டு ராஜா… ஆனால் அந்த பதிவு தொடர்பான பத்து நிமிட வசனங்களையும் பனிரெண்டு நிமிட காட்சிகளையும் மட்டுமே வைத்துக் கொண்டு, அதற்கு மேல் வழக்கமான காமெடி, பாடல், காதல் என கலர் கலர் ஜிகினா பேப்பர்களைச் சுற்றி நம்மை இம்சை செய்வதைத் தான் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை…


தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் இயங்கிவரும் ஒரு உருக்கு ஆலையில் 140 டெசிபல் ஒலிக்கும் அதிகமான அளவு ஒலி கொண்ட இயந்திரங்களை தொழிலாளர்கள் இயக்குகிறார்கள்.. மேலும் குரோமியம் போன்ற தடைசெய்யப்பட்ட வேதியியல் இரசாயனங்களையும் பாதுகாப்பற்ற சூழலில் கையாளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.. இதனால் செவிட்டுதன்மை, கருக்கலைப்பு, மாரடைப்பு, கேன்சர் போன்ற பல நோய்களுக்கு தோற்றுவாயாக அவர்களது உடல் மாறுகிறது.. இதனை சம்பந்தப்பட்ட நிர்வாகம் கண்டும் காணாமல் இருக்கிறது… இதனை தெரிந்து கொள்ளும் மருத்துவரான கதையின் நாயகி, அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடுக்கிறாள்…. நாயகி வழக்கில் வெற்றி பெற்றாளா…?? இல்லை தோற்றாளா…?? இல்லை கொலை செய்யப்பட்டாளா…?? நாயகன் அவளுக்கு எப்படி உதவினான்…?? இதுதான் மீதி இருக்கும் கதை…. பிறந்ததில் இருந்தே தமிழ் சினிமா பார்த்து வளர்ந்து வரும் தமிழ் சினிமா ரசிகனுக்கு இந்தப் படம் எப்படி முடியும் என்பதை கணிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்றே நம்புகிறேன்…

கதைக்கரு கிடைத்துவிட்டாலே கதை முடிந்துவிட்டது என்று நினைத்து விடுகிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.. என் கணக்கு சரியென்றால், கண்டிப்பாக இது இயக்குநர் கண்ணன் அவர்களுக்கு ஐந்தாவது படமாக இருக்கும்… ஜெயங்கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை இந்த வரிசையில் அடுத்ததாக வந்திருப்பதுதான் ஒரு ஊர்ல இரண்டு ராஜா என்று எண்ணுகிறேன்… ஐந்தாவது படத்தை இயக்கும் போது கூட ஒரு கதாபாத்திரத்தை எப்படி வடிவமைப்பது என்பதை இன்னும் இயக்குநர் முழுமையாக உணரவில்லையோ என்று தோன்றுகிறது…. இந்த கதாபாத்திர வடிவமைப்பு என்பது அவரது முதல்படமான ஜெயங்கொண்டானில் ஓரளவுக்கு இருந்தது.. அடுத்து வந்த திரைப்படங்களில் கதாபாத்திர வடிவமைப்பு என்கின்ற அந்த வஸ்துவை கண்டுபிடிக்கவே முடியவில்லை… ரயில்வே போலீஸ், ஓடிப் போக உடன் வந்த நண்பன், உதவி கேட்டதற்காக லிப்ட் கொடுத்த தம்பி ராமையா, ஏன் உயிரைக் கொல்ல துரத்தி வந்த வில்லன் நாசர் முதற்கொண்டு எல்லோருமே நல்லவர்களாக மாறும் திரைக்கதை…. இப்படி தான்-தோன்றித்தனமான கதாபாத்திரங்களை சமீபத்தில் எந்தப் படங்களிலும் பார்த்ததே இல்லை.. கதை போகின்ற போக்கிற்கு ஏற்ப எல்லா கதாபாத்திரங்களும் தங்களை வளைத்துக் கொண்டே செல்கிறார்கள்…

கதை சொல்லும் முறையிலும் மிகப்பெரிய பின்னடைவு... இந்த மொத்த திரைப்படத்தில் இவர்கள் கதை சொல்லும் இடம் என்பது அந்த 20 நிமிட ப்ளாஷ்பேக் காட்சிகளில் மட்டும்தான்… அதற்கு முன்னரோ அல்லது பின்னரோ அவர்கள் மறந்தும் கூட கதை சொல்ல முயலவே இல்லை… இந்தக் கதையை இவர்கள் தொடங்குவதற்காக நீங்கள் இடைவேளை வரை காத்திருக்க வேண்டும்… மலையாளத் திரைப்படங்களில் கூட கதையை மிக மெதுவாகத்தான் தொடங்குவார்கள்… ஆனால் அந்தக் கதையை தொடங்கும் முன் கதையின் முக்கிய கதாபாத்திரங்களின் குணாதிசயத்தை மிக அழகாகவும் ஆழமாகவும் நம் மனதில் பதித்துவிடுவார்கள்… அதுவும் இங்கு இல்லை.. இடைவேளைக்கு இரண்டு நிமிடம் முன்னர் வரை இவர்கள் சொல்லும் கதை என்ன தெரியுமா…?? நாயகனின் நண்பனுக்கு ஒரு காதல், ஓடிப் போக முயலும் போது காதலி காதலையே கைகழுவி விடுகிறாள்… வேறு வழியின்றி நாயகனும் அவனது நண்பனும் அதே ரயிலில் ஓடிப் போகிறார்கள்…. அங்கு மற்றொரு காமெடியனுக்கு சரக்கு வாங்க நாயகன் உதவுகிறான்… நாயகியைப் பார்க்கிறான்… அவளை தவறான பெண்ணாக புரிந்து கொள்கிறான்…. பின்பு அவள் டாக்டர் என்று தெரிந்து கொண்டு காதலிக்கிறான்…. இவ்வளவே…. இந்தக் கதையை நீங்கள் முன்னே பின்னே என்று எப்படி வேண்டுமானும் மாற்றிக் கொள்ளலாம்… அல்லது மொத்தமாக தூக்கிவிடலாம்… படத்தில் எந்த மாற்றமும் இருக்காது… அப்படி ஒரு பலவீனமான திரைக்கதை…

இந்த சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் திரைப்படங்களில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை… எதனை தீர்வாகச் சொல்வது என்பது… ஒன்று மக்கள் வென்றது போல் காட்ட வேண்டும், அல்லது தோற்றது போல் காட்ட வேண்டும்… தோற்பதைப் போல் காட்டினால் மக்களுக்கு பிடிக்காது, படமும் ஓடாது(என்று அவர்களே நினைத்துக் கொள்கிறார்கள்..) ஆக ஜெயிப்பது போல் தான் காட்ட வேண்டும்… இந்த ஜெயிப்பது போல் காட்டுவதில் எத்தனை வழிமுறைகள் என்பதைத்தான் பெரும்பாலான படங்கள் பின்பற்றுகின்றன.. சட்ட ரீதியாக வெல்வது, சண்டை ரீதியாக வெல்வது என்கின்ற வரிசை பதத்தில் வில்லன் திருந்தியதால், மக்களுக்கு நன்மை கிடைத்தது என்கின்ற அசோகன் காலத்து அதர பழசான பதத்தைக் கொண்டு படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர்…


ப்ரேமில் இருப்பவர்கள் நடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது எல்லா ப்ரேமிலும் தெரிவது போல் அப்படி நடித்திருக்கிறார்கள் எல்லாருமே.. சீனியர் நடிகரான நாசர் கூட இதற்கு விதிவிலக்கு இல்லை.. ரெண்டு ராஜா என்று வைத்ததாலோ என்னவோ நடிகர் சூரிக்கும் ஒரு காதல் உண்டு, காதல் தோல்வி உண்டு, சண்டைக் காட்சிகளில் பங்களிப்பு உண்டு… இவ்வளவு ஏன் க்ளைமாக்ஸ் காட்சியான கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளில் கூட விமலை விட இவருக்குத்தான் முன்னுரிமை அதிகம்…. ஒரு நாயகன் உதயமாகிறார்… ????? நாயகி ப்ரியா ஆனந்த பல ப்ரேம்களில் என்ன செய்வது என்றே தெரியாமல் ஓரமாக நின்றுகொண்டு இருந்திருக்கிறார் என்று நன்றாகவே தெரிகிறது… விசாகா ப்ரியாவின் தோழியாக வந்து போகிறார்… யாரையோ காதலிப்பதாக சொல்லி, அதற்கு ஒரு பாட்டும் வைத்து கடைசி வரை அது யார் என்றே சொல்லவில்லை… இதுபோலத்தான் நாசரும் தீவிர விவாதத்தின் போது, கோர்ட்டு சம்பந்தப்பட்ட ஒரு வார்த்தையை சொல்லி, இப்படி ஒரு விசயம் இருப்பது தெரியுமா என்று வக்கீல்களையே வியக்க வைப்பார்… அது அப்படியென்ன ஒரு விசயம் என்பதையும் கூட இயக்குநர் சொல்லவே இல்லை… என்ன திரைக்கதையோ….!!?? இனியா தான் பாவம்… இதே விமலுடன் வாகை சூட வா திரைப்படத்தில் அவரைவிட சிறப்பாகவே நடித்தும் கூட, இன்று அதே விமல் ஹீரோவாகவே தொடர்ந்து கொண்டு இருக்க, இவரோ குத்துப்பாடலுக்கு ஆடும் அளவுக்கு இறங்கி வந்திருப்பதை நினைத்தால்…..?? என்ன சொல்வது என்றே தெரியவில்லை… தமிழ் சினிமாவின் சாபக் கேடு…??

இமானின் இசையில் இரண்டு பாடல்கள் நன்றாகத்தான் இருக்கிறது…. ஆனால் அந்தப் பாடலின் அவசியம், தேவை என்ன என்பது தான் புரியவில்லை… பார்வையாளர்கள் கூட ஐந்து பாட்டு, நான்கு சண்டை என்னும் கட்டமைப்புக்குள் இருந்து வெளிவந்தாலும் கூட இந்த இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அந்த கட்டமைப்புக்குள் இருந்து வெளியே  வரவே மாட்டார்கள் போலத் தெரிகிறது….  படம் ஓடுவதற்கு இந்த சமாச்சாரங்கள் எந்தவிதத்திலும் உதவாது என்பது அப்பட்டமாக தெரிந்தபின்னரும் கூட இவர்கள் அதையே உடும்புபிடியாக பிடித்து இருப்பதைப் பார்த்தால், இந்த சமாச்சாரங்களில் வேறு ஏதோ சமாச்சாரம் இருக்குமோ என்று ஐயப்படத் தோன்றுகிறது…

மொத்தத்தில் இந்த “ ஒரு ஊர்ல இரண்டு ராஜா” ஒரு கங்கா ஸ்நானம் எடுப்பது போல…… ஆனால் அந்த ஸ்நானத்தில் நீங்கள் மூழ்க மூன்று முறை கூவத்திலும் குளிக்க வேண்டும்… தயாரா….??

கங்கா ஸ்நானம் – கதைக்கரு

கூவத்தில் குளியல் – காதல், காமெடி, பாடல்கள், பிரச்சனைக்கு தீர்வு, இன்னபிற மசாலாக்கள்….

No comments:

Post a Comment