Sunday 27 July 2014

திருமணம் என்னும் நிக்காஹ்:


ஒரு நல்ல காதல்கதை கொண்ட திரைப்படங்களைப் பார்த்து வெகுகாலம் ஆகிவிட்டது.. அந்த ஏக்கத்தை திருமணம் என்னும் நிக்காஹ் திரைப்படம் போக்கிவிடும் என்ற நம்பிக்கை அதன் ட்ரைலரைப் பார்த்தபோது ஏற்பட்டது.. படத்தின் முதல்பாதி வரை அப்படி ஒரு நம்பிக்கை வலுப்பெற்றுக் கொண்டுதான் இருந்தது.. ஆனால் இரண்டாம் பாதியில் கதையை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் இவர்கள் செய்த குழப்பத்தில் அந்த நம்பிக்கை பொய்த்தோடு மட்டும் அல்லாமல் பெரும் ஏமாற்றத்தையும் கொடுத்து விடுகிறது திரைப்படம்..


ஒரு திரைப்படத்துக்கு முதல் இருபது நிமிடங்கள் எப்படி முக்கியமோ அதைவிட கடைசி இருபது நிமிடங்கள் மிகமிக முக்கியம்… முதல் இருபது நிமிடங்களை விட கடைசி இருபது நிமிடங்கள் படத்தின் ரிசல்ட்டை மாற்றும் சக்தி கொண்டவை என்பது அளப்பரிய உண்மை… உதாரணத்துக்கு சமீபத்தில் மிகப்பெரிய வணிக வெற்றி பெற்ற யாமிருக்க பயமேன் திரைப்படத்தை எடுத்துக்கொள்ளுங்கள்… முதல் இருபது நிமிடங்கள் திரைப்படம் மிகமிக மோசமான மூன்றாம் தர காட்சியமைப்புகளைக் கொண்டு இருக்கும்… அது பல பார்வையாளர்களை நெளியச் செய்யும்.. ஆனால் கடைசி இருபது நிமிடங்கள் அப்படியே அதற்கு நேர்மாறாக அனைத்துவிதமான பார்வையாளர்களையும் தன்வசப்படுத்திக் கொள்ளும்… அந்தக் கடைசி இருபது நிமிடங்கள் தான் படத்தின் வெற்றிக்கு மிகமுக்கிய காரணம்… அரிமா நம்பி திரைப்படம் கூட அந்த கடைசி இருபது நிமிடங்களில் நம் சுவாரஸ்யத்தை குறைத்துவிட்டதால், அதன் வெற்றிப்படிகளில் தன்னையும் அறியாமல் சில படிகள் அது சறுக்கி விட்டதாகவே நான் கருதுகிறேன்…

நீங்கள் திரையரங்கை விட்டு வெளியேறும் போது என்ன மனநிலையில் வெளியேறுகிறீர்கள் என்பது அந்த கடைசி இருபது நிமிடங்களின் கணப் பொழுதில் தான் இருக்கிறது… இதுவொரு சின்ன உளவியல் தான்… உங்களுக்கு ஒரு மிகச்சிறந்த நண்பர் இருக்கிறார்… அவர் ஆரம்பத்தில் இருந்தே உங்களுக்கு மிகவும் பிடித்த மனிதராகவும் இருக்கலாம்… அல்லது ஆரம்பகாலங்களில் உங்களுக்கு அவர் பிடிக்காதவராக இருந்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு பிடித்தவராக மாறி இருக்கலாம்… அது இங்கு பிரச்சனையில்லை.. அவரை ஒரு கட்டத்தில் நீங்கள் பிரிய வேண்டிய சூழல் நேர்கிறது…. உங்களுக்குள் ஒரு சின்ன கருத்து முரண்பாடு ஏற்பட்டு, அது மிகப்பெரிய சண்டையாக மாறி நீங்கள் அவரை விட்டுப் பிரிகிறீர்கள்… அல்லது தவிர்க்கமுடியாத சூழலால், அவர் வெளிநாட்டில் சென்று வசிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.. அவரை விமானநிலையத்தில் வழி அனுப்பி பிரியாவிடை கொடுத்து பிரிகிறீர்கள்… இரண்டு பிரிதலிலும் உங்கள் மனநிலை வெவ்வேறாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.. நீங்கள் அந்த நட்பை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதில் பெரும்பகுதியை அந்த கடைசி பிரிதலின் கணங்கள் தான் தீர்மானிக்கின்றன.. இந்த இரண்டு விதமான மனநிலைகளைத் தான் திரைப்படங்களும் கடைசி இருபது நிமிடங்களில் தருகின்றன… நீங்கள் திரைப்படத்துடன் முரண்பட்டு திரையரங்கை விட்டு வெளியேறுகிறீர்களா…? இல்லை அகமகிழ்வுடன் பிரியா விடை கொடுத்து விடைபெறுகிறீர்களா…? இதில் எந்த மனநிலை என்பது தான் திரைப்படம் பற்றிய உங்களது எண்ணம், அபிப்பிராயம், கருத்து எல்லாமே… திருமணம் என்னும் நிக்காஹ் திரைப்படம் நமக்கு பிரியாவிடை கொடுப்பதில்லை… பல பார்வையாளர்களுடன் முரண்பட்டு அது நம்மை திரையரங்கை விட்டு அனுப்பி வைக்கிறது..

இப்பொழுது வெளிவரும் பல படங்களில் இருக்கின்ற முக்கியமான குறை என்னவென்றால், தாங்கள் என்ன சொல்ல வருகின்றோம் என்பதில் தெளிவு இல்லாமல் இருப்பது… ஒரு சின்ன சுவாரஸ்யமான திருப்பங்கள் உள்ள சம்பவம் கிடைத்ததும் அதையே கதையாக்கி விடுகின்றனர்.. அதில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டால், அது அவர்களுக்கே தெரியாது… உதாரணத்து ஒரு வருடம் கழித்து வெளிவரக்கூடிய பேப்பர், உங்கள் கைக்கு கிடைக்கிறது… நடக்கப் போகின்ற சம்பவங்கள் எல்லாம் உங்களுக்கு முன்னரே தெரிந்துவிடுகிறது… இது சுவாரஸ்யமான சம்பவம்… மான்கராத்தே கதையும் இதுதான்… இதிலிருந்து நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்…? என்று கேட்டால் தெரியாது.. இதே பிரச்சனைதான் இந்த திருமணத்திலும்… இந்து பிராமண குடும்பத்தை சேர்ந்த நாயகன், ஒரு அவசரகால பிரயாணத்தில் தன்னை ஒரு இஸ்லாமியனாக காட்டிக் கொண்டு ரயிலில் பயணிக்கிறான்… அங்கு வரும் ஒரு இஸ்லாமியப் பெண்ணை பார்த்தவுடன், தன்னை இஸ்லாமியனாக காட்டிக் கொண்டு காதலிக்க முயல்கிறான்… அவளும் காதலிக்கத் தொடங்குகிறாள்.. உண்மை தெரியவரும் போது என்ன ஆகும்… என்பது தான் கதை என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம்… இங்கு காதலில் ஏற்பட்ட பிரச்சனையைத் தான் நாங்கள் சொல்ல வருகிறோம் என்பதில் படக்குழுவினர் தெளிவாக இருந்திருந்தால் பிரச்சனையே இல்லை.. அந்த பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டு அவர்கள் இணைவார்கள் என்று நாம் நினைக்கும் போது மீண்டும் பிரிகிறார்கள்… இந்த இடம் தான் படம் நம்மை குழப்பத் தொடங்குகிறது….


நாயகன் நாயகி இருவருமே ஆச்சாரமான மதக்கட்டுப்பாடுகளில் வாழ்பவர்கள்.. அந்த கட்டுப்பாடுகள் அவர்களை வெறுப்பேற்றுகிறது… அந்த கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத ஒரு புதிய சூழலில் அவர்கள் வாழ விரும்புகிறார்கள்… அதனால் தான் தங்களுக்கு எதிரான வாழ்க்கை முறை என்று ஒருவரை ஒருவர் விரும்பத் தொடங்குகிறார்கள்.. ஆனால் ஒரு கட்டத்தில் தாங்கள் எதிர்காலத்தில் வாழப் போவது, ஒரு புதிய சூழல் அல்ல.. அதே கட்டுப்பெட்டித்தனமான பழைய சூழல் என்று தெரியவந்ததும், அவர்களது காதல் கசக்கிறது… பிறகு என்ன ஆனது என்பது தான் கதை… இந்த கதைகள் எதுவும் தெளிவாக திரைக்கதையில் இருப்பதில்லை.. படத்தில் முக்கால்வாசி நேரம் நாம், இருவரும் வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் தான் என்பதே காதலர்களுக்கான சிக்கல் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறோம்.. ஆனால் அவர்களது சிக்கல் காதல் வெற்றி பெறுவது அல்ல… தாங்கள் புதிய சூழலில் சென்று வாழ விரும்புவது தான் என்பதே பார்வையாளருக்கு கடைசி இருபது நிமிடங்களில் தான் அரைகுறையாக தெரிய வருகிறது…

மேலோட்டமாகப் பார்த்தால் இது மிகச்சிறந்த ஒன்லைனர்… கண்டிப்பாக ஜெயிக்க வைத்திருக்க வேண்டிய கதையும் கூட… இந்தப் படத்தை பார்க்கும் போது எனக்கு மூன்று படங்கள் நினைவில் வந்தது.. ஒன்று காதல் கோட்டை.. காதலன் இவன் தான் என்று தெரிந்து கொள்ளுவது தான் அந்தப் படத்தில் பிரச்சனை… இங்கு காதலனின் மதம் இதுதான் என்று தெரிந்து கொள்வதில் பிரச்சனை… இதை வெறும் காதல் படமாக மட்டுமே கொண்டு சென்றிருந்தால் கூட ஜெயித்திருக்கும்… நினைவில் வந்த மற்ற இரண்டு படங்கள் ”ரங்கே பசந்தி” மற்றும் ”ஆயுதம் செய்வோம்” இரண்டு படங்களிலும் ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக நாட்டுப்பற்று மற்றும் காந்திசம் என்பதில் மாட்டிக்கொண்டு, அந்த எண்ணங்கள் பிடித்துப் போய் அதுவாக கதைமாந்தர்கள் மாறிவிடும் கதையம்சம் கொண்ட படங்கள்… திருமணம் என்னும் நிக்காஹ்விலும் அதே தான்… காதலுக்காக முஸ்லீம் மதத்தைப் பற்றி அறியத் தொடங்கி, அதை விரும்பத் தொடங்குவது போல்…. இதையாவது தெளிவாக சொல்லி இருந்தால், படம் ஓடியிருக்கும்… இரண்டையுமே செய்யாததால் படம் ஓடுமா..? என்பது சந்தேகமே..


படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ் நஸ்ரியாவின் சின்ன சின்ன க்யூட்டான எக்ஸ்பிரஸ்சன்ஸ் மற்றும் ஜிப்ரானின் தாலாட்டும் இசை.. அதுபோல் அந்த டைட்டில் டிசைனும் மிக அழகாக இருந்தது… ஜெய்யிடம் நடிப்பில் வழக்கம் போல் அதே பிரச்சனை… எல்லா சூழலிலும் ஒரே பாவனை.. இவரும் விமலை போலவே ஆகிக் கொண்டிருக்கிறாரோ என்று தோன்றுகிறது.. படத்தில் முதல்பாதியில் ரசிக்கும் படியான பல காட்சிகள் இருக்கின்றன… ஏன் இரண்டாம் பாதியில் கூட அந்த ப்ரியாணி வாங்கும் காட்சி இருக்கிறது… இப்படி சில நல்ல விசயங்கள் இருந்தாலும் ஆடியன்ஸை குழப்பக்கூடாது என்கின்ற ஒரு முக்கியமான விதியை கடைபிடிக்காததாலும், கடைசி இருபது நிமிடத்தில் குழப்பி அடித்து நம்முடன் முரண்பட்டு திரையரங்கில் இருந்து நம்மை விரட்டியதாலும் அந்த நல்ல காட்சிகள் எதுவுமே மனதில் நிற்காமல், குழப்பம் மட்டுமே மனதில் நிற்கிறது… முஸ்லீம் மதத்தை பற்றி சில நல்ல விசயங்களை பகிர்ந்துகொண்டமைக்காக இயக்குநர் அனீஷ் அவர்களைப் பாராட்டலாம்… மற்றபடி படம் பார்க்கலாமா…? என்று கேட்டால்…. மேற்சொன்ன சில நல்ல விசயங்களுக்காக மட்டும் ஒரே ஒரு முறை கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பார்க்கலாம்…


Saturday 26 July 2014

வேலையில்லா பட்டதாரி:

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அவர்களின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வந்திருக்கும் திரைப்படம் வேலையில்லா பட்டதாரி.. இது தவிர்த்து இது தனுஷ்க்கு 25வது படமும் கூட.. தமிழ் சினிமாவின் நடிக்கத் தெரிந்த ஒரு சில நடிகர்கள் பட்டியலில் தனுஷ் மிகவும் முக்கியமானவர்.. ஆனால் அவரது போதாத காலம் ஆடுகளம் திரைப்படத்துக்குப் பிறகு அவருக்கு சொல்லிக் கொள்வது போல் படங்களே இல்லை.. மரியான், நய்யாண்டி என இரண்டுமே மிகப்பெரிய தோல்விப் படங்களாக போனது… இந்தியில் வெளியான ராஞ்சனா தனுஷ்க்கு ஒரு நல்ல அறிமுகமாக அமைந்தாலும், தமிழில் சொல்லிக் கொள்ளும் படி போகவில்லை.. நான்கு படங்களில் நடித்த நடிகர்கள் எல்லாம் தனுஷ் படத்தில் ப்ரமோசனுக்காக ஒரு பாடலில் வந்து ஆட வேண்டும் என்று தயாரிப்பு தரப்பில் கேட்கும் அளவுக்கு தனுஷின் நிலை மாறிவிட்டதாக கூட ஒரு செய்தி உலவியது.. மேலும் தனுஷே வெளிப்படையாக ஒரு காலத்தில் அனிருத்துக்கு நான் உதவினேன்… இன்று அவர் எனக்கு உதவிக் கொண்டு இருக்கிறார் என்று சொல்லவும் செய்தார்… இப்படி ஏகப்பட்ட திரைமறைவு நிகழ்வுகளுக்குப் பிறகு திரைக்கு வந்திருக்கும் படம்… அதுவும் தனுஷின் தயாரிப்பிலேயே…


முதலில் ஒர் விசயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன்… எனக்கு தனுஷ் பிடிக்கும்… ஆனால் மரியான், நய்யாண்டி இரண்டும் சுத்தமாக எனக்குப் பிடிக்கவில்லை… எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்த திரைப்படங்கள் அவை.. ஆனால் அது போன்ற ஏமாற்றத்தை வேலையில்லா பட்டதாரி திரைப்படம் நிச்சயமாகக் கொடுக்காது என்று கடந்த இரண்டு மாதமாக நம்பினேன்… ஏனென்றால் அந்தப் பாடல் வரிகளும், அந்த ட்ரைலரும் எனக்குள் ஏற்படுத்திய நம்பிக்கை அது… கண்டிப்பாக இதுவொரு மசாலா படமாகத்தான் இருக்கும் என்பதும் அப்போதே தெரிந்துவிட்டது… இது கண்டிப்பாக இன்றைய தமிழ்சினிமாவின் சூழலுக்கு தேவையே இல்லாத ஒரு திரைப்படம் தான்…. ஆனால் கண்டிப்பாக இன்றைய தனுஷின் சூழலுக்கு தேவைப்படும் படம் என்றே எனக்குத் தோன்றுகிறது… ஏனென்றால் ஒரு திரைப்படத்தின் மிக அத்தியாவசிய தேவையாக இல்லாமல் இருக்கும் வஸ்துக்களான நடை, நடனம், நகைச்சுவை இவைகளை மட்டுமே வைத்துக் கொண்டு இன்றளவும் கோலோச்சிக் கொண்டு இருக்கும் மிகப்பெரிய நடிகர்களுக்கு மத்தியில், நடிப்பையும் கதையையும் மட்டுமே நம்பி பெரும்பாலும் களம் காணும் தனுஷ் மாதிரியான நடிகர்கள், தங்கள் இறுப்பை நிலைநிறுத்திக் கொள்ளவாவது அவ்வபோது இதுபோன்ற கமர்ஸியல் மசாலா வெற்றிப் படங்களில் நடிக்கட்டும்… இதை நாம் சகித்துக் கொள்ளத் தவறினால், தமிழ் சினிமாவில் நடிகர்களே இல்லாமல் போய்விடுவார்கள்…

சரி, மரியான், நய்யாண்டி படங்கள் எனக்குப் பிடிக்காமல் போனதற்கும், வேலையில்லா பட்டதாரி பிடிக்காமல் போகாததற்கும் (பிடித்ததற்கு அல்ல…) காரணம் என்ன என்பதில் தான் படத்தின் வெற்றி சூட்சமம் அடங்கி இருக்கிறது… மரியான் படம் மீனவனின் வாழ்க்கையையும் கடல் கடந்து காசு சம்பாதிக்க செல்பவனின் வாழ்க்கையையும் சொல்வதாகச் சொல்லிவிட்டு, மீனவன் என்பவன் கடலில் சென்று மீன் பிடிப்பவன், அவன் கடல்கடந்து காசு சம்பாதிக்க சென்றால், அங்கு அவன் காண்பது கடலளவு பாலைவன மணலையும், சுட்டெரிக்கும் சூரியனையும், சுட்டுக் கொண்டே திரியும் தீவிரவாதிகளையும்….???? தான் என்பதை தவிர்த்து வேறு எதையுமே சொல்லாமல் நம்மை கொலைவெறி ஆக்கியது….. நய்யாண்டி படமோ டைட்டிலை வைத்துக் கொண்டு நம்மையே நய்யாண்டி செய்தது… காதல் கைகூடும் கருமாந்திரத்தை தவிர படத்தில் எதுவுமே இல்லை… இப்படி நம் வாழ்க்கையையும் காட்டாமல், நாம் அறியாத மக்களின் வாழ்க்கையையும் காட்டாமல் பல்லிளித்ததால் படுதோல்வி அடைந்த படங்கள் அவை….


வேலையில்லா பட்டதாரியில் நாம் அறிந்த ஒரு வாழ்க்கை முதல் பாதியில் மட்டும் இருக்கிறது… இரண்டாம் பாதியில் நாம் சமூகத்தில் கடந்து வந்த பிரச்சனைகள் ஆங்காங்கே இருக்கிறது… இவை இரண்டுமே பார்வையாளர்களான நமக்கு நம்பகத்தன்மையை கொடுப்பதால் திரைப்படம் நம் மனதுக்கு நெருக்கமாகிறது… வேலையில்லா பட்டதாரி மிகச்சிறப்பான கதையையோ அல்லது திரைக்கதையையோ கொண்ட திரைப்படம் அல்ல… மிகச்சாதாரண கதை… அதை கதையென்று கூட சொல்ல முடியாது… காட்சிகள்… வேலை கிடைக்காமல் கஷ்டப்படும் ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞனின் இயல்பான மன கொந்தளிப்புகள் மட்டும் தான் முதல் பாதி… இதை வேலை கிடைக்காத கால இடைவெளியில் பெரும்பாலான இளைஞர்கள் கடந்து வந்திருப்பார்கள்.. ஆக படத்தின் வெற்றிக்கு அது முதலாவதாக போடப்படும் அஸ்திவாரம்… கால் தடுக்கி விழுந்தால் கால் செண்டர் வேலைகள் குவிந்திருக்கும் நிலையில் வேலை கிடைக்கவில்லை என்று சொல்வது பொறுந்தாததாகத்தான் தோன்றும்… ஆனால் அதற்கும் திரைப்படத்தில் பதில் சொல்கிறார்கள்… படித்த படிப்புக்கு தகுந்த வேலை தேடுகிறான் நாயகன்… இப்படி ஒரு படம் தொடங்கும் போதே, அது கமர்ஸியல் படமாக இருக்கின்ற பட்சத்தில் அதன் முடிவு என்னவாக இருக்கும் என்று நமக்கு நன்றாகவே தெரிந்துவிடுகிறது… அச்சு பிசகாமல் அதுவே தான் நடக்கிறது… மிகப்பெரிய கம்பெனியில் மிகப்பெரிய பதவியில் அமருகிறான் நாயகன்…

வேலை கிடைக்காத தன் மூத்தமகனை கரித்துக் கொட்டிக் கொண்டே இருக்கும் அப்பா… கருணை காட்டிக் கொண்டே இருக்கும் அம்மா… கடுப்பேற்றும் தம்பி என ஒரு அக்மார்க் நடுத்தர வர்க்கத்து குடும்பத்தை சமீபமாக எந்தப் படத்திலும் பார்த்ததில்லை… தனுஷின் படங்களில் இல்லை இல்லை… நடிக்கத் தெரிந்த எல்லா நடிகர்களின் படங்களில் இருக்கின்ற ஆகச்சிறந்த அனுகூலம், படத்தின் காட்சிகள் எவ்வளவு சினிமாத்தனமாக இருந்தாலும் அவர்களது நடிப்பு நம்பகத்தன்மையை சேர்த்து, அந்தக் காட்சியை பாதிக்கு பாதி யதார்த்தமானதாக மாற்றிவிடும்… அம்மா செண்டிமெண்ட் அதர பழசானது தான்…. அம்மா இறக்கப் போகிறார் என்பதும் அம்மா அம்மா பாடலிலேயே தெரிந்தும்விட்டது… ஆனால் அந்த சினிமாத்தனமான காட்சியில் சமுத்திரக்கனி மற்றும் தனுஷின் நடிப்புதான் அதை ஏற்றுக்கொள்ளும்படி மாற்றிவிடுகிறது… மேலும் தனுஷ் கறி வாங்கச் செல்லும் காட்சியும், ஹெட்போனில் பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் காட்சியும் கூட மிக சாதாரணமான காட்சி தான்… ஆனால் அதை ரசிக்க முடிகிறது… அதுபோல கமர்சியல் படத்துக்கு ஏற்றார் போல், இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்தில் தனுஷ் கதை நாயகனாக இருந்து, கதாநாயகனாக மாறிவிடுகிறார்… அந்த ஃபேஸ்புக் காட்சியும் சண்டை காட்சிகளும் அப்படிப்பட்டது தான்… நடிகர் தனுஷ் ஒரு ஸ்டேட்டஸ் போட்டால் அந்தக் கூட்டம் வரலாம்… ஆனால் ஒரு சாமானியனுக்கு அந்தக் கூட்டம் சாத்தியமே இல்லை… மேற்சொன்னபடி இது போன்ற தவறுகளை சகித்துக் கொள்ளவேண்டியது தான்… ஆனால் அந்த இரண்டாம் பாதியில் இருக்கின்ற அரசியல் நெருக்கடிகள், அதிகார வர்க்கத்தின் ஆளுமைகள், ஊழல்கள் தான் இது போன்ற நெருடல்களை அதிகம் கண்டுகொள்ள விடாமல் நம்மை காப்பாற்றுகின்றன… பல இடங்களில் தனுஷிடம் ரஜினியின் மேனரிசங்களை காண முடிந்தது… அதை அவர் கொஞ்சம் தவிர்த்துக் கொள்வதும், இது போன்ற படங்களில் மட்டுமே பிறரைப் போல் கவனம் செலுத்தாமல் தன்னைக் காத்துக் கொள்வதும் தனுஷுக்கும் தமிழ் சினிமா சமூகத்தும் நல்லது என்பதையும் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்…


அனிருத்தின் இசை படத்துக்கு, தனுஷ் சொல்லியது போல் மிகப்பெரிய பலம்… பாடல்கள் இந்தப் படத்துக்கு கண்டிப்பாக வேகத்தடையாக தெரியவில்லை… அதிலும் முதல் இரண்டு பாடல்களின் நடனத்தில் தனுஷ் காட்டும் அந்த வேகம் நம்மை அசத்திவிடுவது உண்மை.. படத்தில் வில்லனை தவிர்த்து எந்த கதாபாத்திரமும் நடிப்பில் சொதப்பவில்லை… படத்தில் தனுஷின் வண்டியையும் ஒரு கதாபாத்திரமாகவே அலையவிட்டிருப்பதும் படத்துக்கு ப்ளஸ்.. ஒளிப்பதிவாளரே இயக்குநர் என்பதால் கேமரா கோணங்களைப் பற்றியும் பேச வேண்டியதே இல்லை… ஒவ்வொரு ப்ரேமும் அழகு பாரித்துக் கிடக்கிறது…


மொத்தத்தில் வேலையில்லா பட்டதாரியை நம்பிப் போய் பார்க்கலாம்… படம் உங்களுக்கு பிடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகமிக அதிகம்..

Friday 25 July 2014

சதுரங்க வேட்டை:

தமிழ்திரை வட்டாரத்தில் வெளிவருவதற்கு முன்பே ஒருவிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.. அதற்கு மிகமிக முக்கியமான காரணமாக நான் நினைப்பது, திருப்பதி பிரதர்ஸ் படத்தை வாங்கியதோடு மட்டும் அல்லாமல், கோலிசோடா, மஞ்சப்பை வெற்றிப்பட வரிசையில் என்ற கேப்சனோடு படத்தை வெளியிட்டது… ஆனால் மேற்சொன்ன அந்த வரி விளம்பரமே என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது… ஏனென்றால் அவர்கள் குறிப்பிட்ட அந்த இரண்டு வெற்றிப்படங்களுமே எனக்கு வெறுப்பையும் சேர்த்தே கொடுத்த படங்கள்… அதனால் இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றிபெற்றாலும் கூட நமக்கு பிடித்தமான திரைப்படமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தான் படம் பார்க்க சென்றேன்.. படம் பார்த்தப் பின்னர் என் நம்பிக்கை பாதி பொய்த்திருந்தது… ஏனென்றால் இத்திரைப்படம் எந்த இடத்திலும் என்னை வெறுப்பேற்றவில்லை… அதற்காக முழு நிறைவை கொடுக்கின்ற படம் என்றும் என்னால் உத்தரவாதம் தர இயலாது…


ஏனென்றால் இதிலும் சுவாரஸ்யம் இன்மை.. போலித்தனமான அல்லது மிதமிஞ்சிய நடிப்பு.. Cause and Effect என்று சொல்லக்கூடிய காரண காரணிகள் முக்கியமான கதை திருப்பத்தில் இல்லாமல் இருப்பது இவை தவிர்த்து முக்கியமானதான, ஒரு திரைப்படம் பார்வையாளனிடம் கண்டிப்பாக ஏற்படுத்த வேண்டிய மனநெருக்கத்தை (மன மகிழ்வு அல்லது மன உளைச்சல்) ஏற்படுத்தாதது என்று சொல்வதற்கு சில முக்கியமான குறைகள் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.. ஆயினும் இத்திரைப்படம் தமிழ் திரையுலகில் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான முயற்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.. இதே திரைப்படம் ஒரு ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்பாக வந்திருந்தால் இதைவிட சிறப்பான வரவேற்ப்பை பெற்றிருக்கும் என்பது என் எண்ணம்.. இது எந்த வகையான திரைப்படம் என்று சொல்வதற்கு தமிழில் இருந்து ஒரு உதாரணத்தை கூற வேண்டும் என்றால், கண்டிப்பாக நான் மூடர் கூடம் திரைப்படத்தைக் கூறுவேன்… ஆனால் மூடர்கூடத்தில் இதைவிட சிறப்பான திரைக்கதை இருந்தது என்பது வேறு விசயம்.. இருப்பினும் மூடர்கூடம் திரைப்படத்துக்கு பின்னர், ஒர் திரைப்படம் முழுக்க முழுக்க சிறப்பான வசனங்களால் நிரம்பியிருக்கிறது என்றால், அது கண்டிப்பாக இந்த சதுரங்க வேட்டை தான்…

நீங்கள் யாரையாவது ஏமாற்றி இருக்கிறீர்களா…? இதுயென்ன கேள்வி என்று கேட்கிறீர்களா…? கண்டிப்பாக நாம் எல்லோருமே ஏதோ ஒரு இடத்தில் யாரோ ஒருவரை ஏமாற்றி இருப்போம்.. நான் கேட்க வருவது வேறுவிதமான ஏமாற்றுதல். உதாரணமாக ஒன்றுக்குமே உதவாத ஒரு பொருளை ஒருவரிடம் கொடுத்து இதை விற்றால், லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று ஏமாற்றியிருக்கிறீர்களா..? உடல் உழைப்பு இல்லாமல் எளிதாக சம்பாதிக்கும் தொழில் என்று ஒரு தொழிலை தொடங்கி யாரையாவது ஏமாற்றி இருக்கிறீர்களா…? பாதி விலைக்கு தங்கம் தருகிறேன் என்று ஏமாற்றி இருக்கிறீர்களா…? கண்டிப்பாக இது போன்ற ஏமாற்று வேலைகளை செய்திருக்கிறீர்களா என்று ஒரு ஆயிரம் பேரிடம் கேட்டால், அந்த ஆயிரம் பேர் அடங்கிய கூட்டத்தில் குறைந்தது நான் அந்த தொழில்தான் செய்கின்றேன் என்று ஒரே ஒரு ஆள் கையை உயர்த்துவது கூட அபூர்வமானது தான்… சரி கேள்வியை மாற்றி இது போன்ற கும்பலிடம் ஏமாந்து இருக்கிறீர்களா…? என்று கேட்டால் குறைந்தது ஒரு பத்திலிருந்து நூறு பேர் கை உயர்த்தலாம்… ஆயிரத்துக்கு இத்தனை பேர் என்றால், ஆறரை கோடி பேருக்கு எத்தனை பேர் என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்… அவர்கள் தான் இந்த திரைப்படத்தோடு நேரடித் தொடர்பில் இருப்பவர்கள்.. ஆனால் இவர்களுக்கு படத்தின் நாயகனை பிடிக்காது… ஏனென்றால் நாயகனைப் போன்ற ஏதோ ஒருவனால் தான் அவர்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள்… நாயகன் தன் செயலை என்னதான் நியாயப்படுத்திப் பேசினாலும் அதை அவர்களால் ஏற்கவே முடியாது…. ஆக இந்தப் படத்துக்கு தீர்ப்பு சொல்ல வேண்டியவர்கள், ஏமாற்றவும் செய்யாமல், ஏமாறவும் செய்யாமல் இருக்கும் நம்மைப் போன்ற இடைப்பட்டவர்கள் தான்….

உங்களிடம் இன்னொரு கேள்வி..? இன்றைய செய்தித்தாளை பிரிக்கிறீர்கள்.. ஒரு பக்கத்தில் ”பாதி விலைக்கு தங்கம் தருவதாக சொல்லி மக்களை ஏமாற்றிய கும்பல்” என்ற செய்தி வந்திருக்கிறது… அதே பக்கத்தில் பள்ளிக்கூட பஸ் மீது ரயில் மோதியது என்ற செய்தியோ அல்லது கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி என்ற செய்தியோ அல்லது பிரபல நடிகையை பற்றிய கிசுகிசு செய்தியோ இருந்தால், எதை நீங்கள் முதலில் படிப்பீர்கள்… கண்டிப்பாக பாதி விலைக்கு தங்கம் செய்தியை அல்ல… அப்படியே அந்த செய்தியைப் படித்தாலும், அதில் பாதிக்கப்பட்டவரை நினைத்து நீங்கள் பரிதாபப்படுவதற்கான வாய்ப்பு மிகமிக குறைவு… அதே நேரத்தில் ஏமாற்றிச் சென்ற கும்பலின் நடவடிக்கையை நீங்கள் ஆமோதிக்கவோ அல்லது பாராட்டவோ மாட்டீர்கள்…. ஒரு பார்வையாளனாக ஒரு சாதாரண செய்தியை படிப்பதைப் போல் அந்த செய்தியை கடந்து செல்வீர்கள்…. திரைப்படம் பார்க்கும் போது இடைப்பட்டவர்களான நம் மனநிலையும் அப்படித்தான் இருக்கிறது… திரைப்படம் காட்சிகளின் அல்லது சம்பவங்களின் பங்கேற்பாளனாக நம்மை மாற்றாமல் வெறும் பார்வையாளனாக மட்டுமே நம்மை நிறுத்திவிடுகிறது… அதனால் தான் அது நமக்கு எந்தவிதமான மன நெருக்கத்தையும் கொடுப்பதில்லை… இப்படி ஏமாற்றும் தொழில் செய்பவனை நாயகனாகக் கொண்டு வேறு ஏதாவது படம் என்று எண்ணினால், உடனே நினைவுக்கு வருவது பிதாமகன் சூர்யா தான்… ஆனால் அந்த பித்தலாட்டம் பெரும்பாலான நம் மக்களுக்கு வாழ்க்கையோடு நேரடியான தொடர்பு உடையது… மயில் தோகையை புத்தகத்தில் வைத்து ஏமாறுவதற்க்கும், ராசிக்கல் மோதிரம் வாங்கி ஏமாறுவதற்க்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா..?

இப்படி வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி திரைப்படங்களை பார்ப்பது சரிதானா என்று ஒரு கேள்வி எழலாம்…. என்னைப் பொறுத்தவரை அது சரிதான்ஏனென்றால் ஒரு திரைப்படம் நமக்குப் பிடிக்கிறது என்றால், அது நம் வாழ்க்கையோடு நேரடித் தொடர்பில் இருக்கும் திரைப்படமாக இருக்கும்அல்லது அந்தத் திரைப்படத்தில் இருப்பதைப் போல் நம் வாழ்க்கையிலும் நடந்தால் எப்படி இருக்கும் என்கின்ற கனவுகளை நமக்குள் விதைக்கும் திரைப்படமாக இருக்கும்இதற்கு ஆட்டோகிராப், பருத்திவீரன், அட்டகத்தி, பீட்ஸா, சூது கவ்வும், சிங்கம், கில்லி, வீரம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டுஅப்படியென்றால் சூது கவ்வும் விஜய் சேதுபதியைப் போல் நானும் கடத்தல் தொழில் செய்ய விரும்புகிறேனா…? என்று நீங்கள் கேள்வி கேட்டால் என் பதில் நீங்கள் விரும்புவது, நீங்களும் கடத்தல் தொழில் செய்ய வேண்டும் என்பதை அல்லஎன்றாவது நீங்கள் கடத்தப்பட்டால் உங்களைக் கடத்தியவன் விஜய் சேதுபதியைப் போல் உங்களிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பதையே நீங்கள் விரும்புகிறீர்கள்அதுதான் அந்தப் படத்தின் வெற்றிபருத்திவீரன் கார்த்தி ரவுடி தான்…. ஆனால், அவன் ரோட்டில் போகின்ற பெண்ணை கற்பழித்தானா, நேர்மையான ஒரு போலீஸ் கான்ஸ்டேபிளின் காதை அறுத்தானா…? கஞ்சிக்கு இல்லாதவனிடம் வழிப்பறி செய்து அந்த காசில் கள் குடித்தானா…? அப்படி செய்திருந்தால் அந்த கதாபாத்திரம் உங்களுக்கு பிடித்திருக்குமா…? கண்டிப்பாக பிடித்திருக்காதுஇங்கு நீங்கள் விரும்புவது கார்த்தியின் அந்த வீரத்தை, யாருக்கும் பயப்படாத அந்த அடாவடியை…. இப்படித்தான் ஒரு திரைப்படம் நமக்கு நெருக்கமாகிறது..

ஆனால் இந்த சதுரங்க வேட்டையில் நாயகன் காந்தி பாபு, நான் இரண்டாம் பத்தியில் மேற்கோள் காட்டியிருந்த அத்தனை ஏமாற்றுவேலைகளையும் செய்பவன்… கண்டிப்பாக நம்மில் பலருக்கு இந்த ஏமாற்றுவேலைகளை செய்ய மனம் வராது… சரி அவனிடம் ஏமாறுபவனாக நாம் இருக்க விரும்புவோமா என்று கேட்டால் அதற்கும் வழியே இல்லை… ஆக செய்தித் தாளின் செய்தியை சுவாரஸ்யமே இல்லாமல் வாசிப்பதைப் போல் தான் படம் பார்க்க வேண்டியிருக்கிறது… ஆறு எபிசோடுகளாக படம் நகருகிறது… ஆறு எபிசோடுகளிலும் ஒவ்வொரு விதமான ஏமாற்று வேலை… அதில் அந்த கோயில் கலசம் மற்றும் பாதி விலையில் தங்கம் என்ற இரண்டு ஏமாற்று வித்தைகள் மட்டுமே சுவாரஸ்யமாக இருக்கிறது…. அதற்கான டீடெய்லிங்கில் தான் படக்குழுவினரின் மொத்த உழைப்பும் தெரிகிறது… அது தவிர்த்து பிற ஏமாற்று வேலைகள் எல்லாம் சுவாரஸ்யமே இல்லாமல் மழையில் நனைந்த பட்டாசு போல் இருக்கின்றன… ஒரு கட்டத்தில் ஹீரோ தான் செய்வதெல்லாம் தவறு என்று உணர்ந்து திருந்த வேறு செய்கிறார்… அவர் ஏன் திருந்துகிறார் என்பதற்கான காரணமும் வழுவாக இல்லாமல் மிக மொண்ணையாக இருக்கிறது... அதைவிட அவர் ஏன் இந்தத் தொழிலை செய்கிறார் என்பதற்கான பின்கதையை கண்ணீர் வடிக்கவிடாமல் கடத்தியது மற்றும் ஹீரோ கூறும் விளக்க வசனங்கள் தான் படத்தில் மிக முக்கியமானவை…. “இந்த உலகத்துல எல்லாமே இருந்தும், உங்களுக்கு எதுவுமே இல்லங்கிற நிலைமைல வாழ்ந்திருக்கீங்களா…?” “குற்றவுணர்ச்சி இல்லாம பண்ற எதுவுமே தப்பில்லை…” “நாமெல்லா முதலாளி ஆக விரும்புற கம்யூனிஸ்ட்..” “நாளைக்கி சம்பாதிக்க முடியாதுன்னு நினைக்கிறவ தா சேத்து வைப்பான்…” “நான் யாரையும் ஏமாத்தல… ஏமாற தயாரா இருக்கிறவனுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தே….” ”ஒருத்தன ஏமாத்தனும்னா அவண்ட இரக்கத்தை எதிர்பார்க்கக் கூடாது.. அவனோட ஆசைய தூண்டி விடணும்…” இப்படி படத்தில் வரக்கூடிய முக்கியமான வசனங்களை மட்டும் பக்கம் பக்கமாக எழுதலாம்….


எப்போது ஹீரோவை வழக்கமான நாயகனைப் போல் திருந்துவதாக காட்டுகிறார்களோ அப்போதே படத்தில் இருந்த கொஞ்ச நஞ்ச சுவாரஸ்யமும் போய், படம் விழுந்து விடுகிறது… பணத்தை விட வாழ்க்கையில் அன்பு பெரிதுதான்… ஆனால் இது போன்ற தொழில் செய்பவர்கள் பெரும்பாலும் அது போன்ற மனநிலையை உணர்ந்ததே இல்லையே… என்னைப் பொறுத்தவரை ஹீரோ திருந்துகிறான் என்பதான தமிழ் சினிமாவின் சம்பிரதாய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல், ஹீரோவை போன்ற தொழில் செய்யும் அனைவருக்கும் இருக்கும் மனநிலை இந்த சமூகத்தால் உருவாக்கப் பட்டதுதான்… அதற்கு சமூகமும் ஒரு பொறுப்புதான் என்பதாக சமூகத்தின் மீதான கரும்புள்ளியை காட்டியிருந்தால், படம் வேறொரு தளத்தில், புதிய வண்ணத்தில் ஜொலித்திருக்கும் என்பது என் எண்ணம்…



படத்தின் நாயகன் பாலிவுட்டில் மிகப்பிரபலமான ஒளிப்பதிவாளரும் “நட்டு” அல்லது “நட்ராஜ்” என்று செல்லமாக அழைக்கப்படுபவருமான நடராஜன் சுப்ரமணியம்.. படத்தில் கதையைத் தவிர நடராஜ், மற்றும் நாயகி இஷாரா ஆகியோரின் நடிப்பும் சீன் ரோல்டனின் இசை, வெங்கடேசின் ஒளிப்பதிவி என எல்லாமே ஓகே ரகம் மட்டுமே…. இவைகளும் சிறப்பாக இருந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்று எண்ணுகிறேன்… இத்திரைப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் யாரென்றே தெரியவில்லை… யாரிடமாவது உதவி இயக்குநராக பணிபுரிந்தவரா, இல்லை குறும்படங்கள் எடுத்து அதன் மூலமாக திரைப்படம் இயக்க வந்தவரா என்கின்ற புள்ளிவிவரங்கள் ஏதும் தெரியவில்லை.. ஆனால் நலன் குமாரசாமிக்கு கதை பிடித்துப் போய் அவரது சிபாரிசின் கீழ் மனோபாலாவிடம் கதை சொல்லி ஓகே செய்திருக்கிறார்… வழக்கமான தமிழ்சினிமா மசாலா கதைகளில் சிக்காமல், வித்தியாசமான கதை பாணியை தேர்ந்தெடுத்ததற்கு வாழ்த்துக்கள்.. இவரிடம் எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது…. படத்தில் மேற்சொன்னது போல் சில குறைகள் இருப்பினும்.. கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம்தான்…

Friday 4 July 2014

அரிமா நம்பி:

ஏ.ஆர்.முருகதாஸின் பள்ளிப் பட்டறையில் இருந்து பாலபாடங்களைக் கற்றுக் கொண்டு வந்திருக்கும் உதவி இயக்குநர் ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் முதல்படம் அரிமா நம்பி.. இதன் ட்ரைலர் அழுத்தமில்லாத காட்சிகளைக் கொண்ட கோர்வையாய் இருந்ததும், பொண்ணு கண்ணு, கத்தி என்று மூன்றுக்கும் ஒரே மாதிரியான உணர்ச்சிகளைக் கொட்டி நடித்துச் சென்ற விக்ரம் பிரபுவை பார்க்க நேர்ந்ததும், படத்தின் மீது மிகப்பெரிய அபிப்பிராயம் ஏற்படவிடாமல் தடுத்துவிட்டது…. இருப்பினும் வேறொரு காரணத்துக்காக இத்திரைப்படத்தை முதல் நாளே பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.. ஆனால் ட்ரைலரில் இல்லாத ஒரு வேகத்தைக் திரைப்படத்தில் கொடுத்து அரிமா நம்பி அதன் மீதான நம்பிக்கையை காப்பாற்றிக் கொண்டது..


கதையென்று பார்த்தால் மிக ஸ்பெசலான கதை என்றெல்லாம் ஒன்றும் இல்லை.. வழக்கம் போல ஒரு சாதாரணனாக அல்லது நாயகியின் காதலனாக வலம் வரும் நாயகன், ஒரு அசாதாரணமான அதிகாரம் படைத்த ஒரு மனிதனை எதிர்த்து தன் காதலியை எப்படி மீட்டுக் கொண்டான் என்பது தான் கதை.. இங்கு ஸ்பெசலாக இருப்பது திரைக்கதை ட்ரீட்மெண்ட் தான்… பழக்கப்பட்ட பாதையிலேயே திரைக்கதை பயணித்தாலும், அதை சுவாரஸ்யமான நிமிடங்களாக மாற்றுவது, ஆங்காங்கே நாயகன் எடுக்கும் புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் தான்… ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லராக இருக்கலாமோ என்ற தோற்றத்துடன் ஆரம்ப நிமிடங்களில் பரிமளிக்கும் திரைப்படம் சில நிமிடங்கள் கழித்து தன்னை ஒரு ஆக்சன் த்ரில்லராக நிறுவிக் கொள்கிறது..

அர்ஜூனாக விக்ரம் பிரபு, அனாமிகாவாக ப்ரியா ஆனந்த்… இருவருக்கும் இடையேயான ஆரம்ப நிமிடங்களிலேயே இருவரும் ஈர்க்கப்பட்டு, தத்தம் செல்போன் நம்பர்களை மாற்றிக் கொள்ளும் பக்கா சினிமா க்ளிசேக்களை அதிக நேரங்களுக்கு கடத்தாமல், அதற்கு டைட்டில் கார்டிலேயே ஒரு எண்டிங்க் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது மட்டுமின்றி, தேவையற்ற அலுப்பு தோன்றுவதை ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்கிறது… அது தவிர்த்து அர்ஜூனாக வரும் விக்ரம் பிரபு, அருள்தாஸ் அண்ட் கோ-வை தொடர்ந்து சென்று அந்த வங்கியில் புரியும் எதிர்பாராத நடவடிக்கைகள், க்ளைமாக்ஸ் காட்சியின் போது போலீஸின் கவனத்தை திசை திருப்ப விக்ரம் பிரபு செய்கின்ற சில புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் என இவைதான் படத்தின் ஒட்டு மொத்தமான பலம் என்று நான் கருதுகிறேன்…

மேலும் சில நேரங்களே வந்து சென்றாலும், கான்ஸ்டேபிள் ஆறுமுகமாக வரும் எம்.எஸ்.பாஸ்கரின் அந்தக் கேரக்டர் பேக்கேஜ் ஆச்சரியம் அளிக்கக் கூடிய பேக்கேஜ்… தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பயன்பாடுகளை ஒரு குற்றவாளியின் தேடலின் போது, போலீஸாரும் அரசியல்வாதிகளும் எப்படி எல்லாம் உபயோகப்படுத்துகிறார்கள் என்பது தொடர்பான டீடெய்லிங்க் எல்லாம் திரைப்படத்தை இன்னும் சுவாரஸ்யமாக்குகின்றது.. ப்ரியா ஆனந்தின் அரைகுறை ஆடைகளில் தெரியும் அப்பழுக்கற்ற அழகும், அவரது கொஞ்சலான சிணுங்கல்களும் அவ்வபோது வந்து செல்லும் ரிலாக்சேஷன் பீரியட்ஸ்… அதிலும் ஒரு டின்னரிலேயே ஒரு பையனை எப்படி புரிந்து கொள்வது என்பதற்கு அவர் சொல்லும் விளக்கவுரையை பல இளைஞர்கள் இனி கடைபிடிக்கக் கூடும்…


இப்படி படத்தில் பாராட்டுவதற்கு நல்ல நல்ல விசயங்கள் சில இருந்தாலும், குறைகளும் அதற்கு ஈடுகொடுப்பது போல் இருக்கின்றது… அதில் மிக முக்கியமான மைனஸாக நான் நினைப்பது லாஜிக் மிஸ்டேக்குகள்… விக்ரம் பிரபு ஹீரோ என்பதாலேயே மிகச் சுலபமாக பல விசயங்களை சாதித்துக் கொள்வதைப் போல் பல இடங்களில், சப்-இன்ஸ்பெக்டரின் மரணம், ஒரு டிவி உரிமையாளரின் மரணம், அவரது உதவியாளரின் தற்கொலை இப்படி கண்டுகொள்ளாமல் விடப்படும் சம்பவங்களும், துப்பாக்கி சண்டைக்கு நடுவே, எந்தவித பதட்டமும் இல்லாமல் பலூன் பறக்கவிட்டுக் கொண்டு செல்லும் சிறுவர்களும், அந்த முக்கியமான வீடியோ பதிவை ஏன் வெளிவிடாமல் டிவி நிறுவனத்தினர் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான காரணம் இல்லாமல் இருப்பது, எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் இருக்கும் டிவி அதிபர், பஞ்சாயத்து தலைவரைப் போல வெறும் நான்கைந்து அடியாட்களை மட்டும் வைத்துக் கொண்டு வலம் வரும் உள்துறை மந்திரி, ஊர் முழுவதும் போலீஸ் இவர்கள் இருவரை தேடிக் கொண்டிருக்க.. இவர்கள் இருவரும் வெகு இயல்பாக வெளியே வலம் வருவது என ஏகத்துக்கு லாஜிக்குகள் உதைக்கின்றன..

இதுதவிர்த்து முதல் பாதியில் இருந்த வேகம், இதுதான் கதை என்று இரண்டாம் பாதியில் தெரிந்தவுடன் பாதியளவுக்கு குறைந்து விடுகிறது…. இது தவிர்த்து அப்பா இறந்து விட்டார் என்று தெரிந்த இரண்டே மணி நேரத்தில் வரும் டூயட் பாடல் மற்றும் பிற பாடல்கள் என எல்லாமே படத்துக்கு மிகப் பெரிய வேகத்தடை… அதுபோல இரண்டாம் பாதியின் நீளமும் சற்றே அதிகம்… அந்தக் க்ளைமாக்ஸ் இப்படித்தான் முடியப் போகிறது என்பது தெரிந்த பிறகும் படம் அடுத்தும் பத்து நிமிடங்களுக்கு நீடிப்பது எந்தவிதமான விளைவையும் ஏற்படுத்தாததோடு, இது போன்ற பல ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பான படங்கள் தமிழிலேயே டஜன் கணக்கில் இருப்பதால், இது புது விதமான ட்ரீட்மெண்ட் என்ற எண்ணத்தையும் அந்த காட்சியமைப்புகள் மாற்றிவிடுகிறது…


ஆர்.டி..ராஜசேகரின் கேமராவின் ஒளிச்சேர்க்கையில் ஒவ்வொரு ப்ரேமும் அத்தனை அழகு.. வெகு நாட்களுக்குப் பிறகு அவரது ஒளிவண்ணத்தை காண நேர்ந்தது ஒரு நல்ல அனுபவம்… இசை ட்ரம்ஸ் சிவமணி… இசையிலும் சரி, பிண்ணனியிலும் சரி ட்ரம்ஸ்களின் ஆதிக்கம் அதிகம்… அது சில இடங்களில் பொருந்திப் போனாலும், எல்லா இடங்களிலும் பொருந்தவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.. படத்தின் பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை இவைகளை விடவும் அந்த தீம் மியூசிக் இசை ஆக்ரமிப்பு செய்கிறது என்பதே உண்மை..


இது இயக்குநர் ஆனந்த் சங்கருக்கு முதல் படம்… முதல் படத்திலேயே மேக்கிங் மற்றும் திரைக்கதை இவற்றின் மூலம் தன்னுடைய குருவின் சிஷ்ய பிள்ளைகள் எளிதாக சோடை போய்விடமாட்டார்கள் என்பதை நிருபித்திருக்கிறார்… இருப்பினும் மேற்சொன்ன சில குறைகளை இனி வரும் காலங்களில் அவர் தவிர்த்தால், அவருடைய படங்கள் இதைவிட தரத்தில் இன்னும் உயர்ந்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை…. மொத்தத்தில் அரிமா நம்பி மிக அற்புதமான காண்பனுபவத்தைக் கொடுக்கவில்லை என்றாலும், அந்த இரண்டே கால் மணிநேரங்களில் பெரும்பாலும் நம்மை ஏமாற்றுவதில்லை என்பதால் அரிமா நம்பியைப் பார்க்க.. கண்டிப்பாக ஒரு முறை நம்பிப் போகலாம்…

Thursday 3 July 2014

அதிதி:

2007ல் ஆங்கிலத்தில் வெளியான Butterfly on a wheel என்ற திரைப்படத்தை மலையாளத்தில் “காக்டெய்ல்” என்ற பெயரில் அனுமதி பெற்றோ அல்லது அனுமதி பெறாமலோ படமாக எடுத்தார்கள்.. ஜெயசூர்யா, பகத் பாசில் நடிப்பில் வெளியான அந்தப் படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.. அதே திரைப்படத்தை இப்போது தமிழ்படுத்தியிருக்கிறார்கள்.. தமிழில் ஜெயசூர்யாவுக்குப் பதில் நிகேஷ்ராம், பகத் பாசிலுக்கு பதிலாக நந்தா.. இயக்கி இருப்பவர் “அழகிய தமிழ் மகன்” இயக்குநர் பரதன்… இப்படி ஒவ்வொரு மொழியாக படமாக்கப்பட்டுக் கொண்டே வருவதால், கண்டிப்பாக நல்ல கதையம்சம் உள்ள திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் திரைப்படத்தைப் பார்க்கப் போயிருந்தேன்… நம்பிக்கை வீண்போகவில்லை..


கதையின் கரு என்ன என்பது தான் படத்தின் மிகப்பெரிய ட்விஸ்டாக இருப்பதால் அதைப் பற்றி பேசமுடியாத சூழ்நிலை.. ஆனால் அதைப் பற்றி பேசாமல் படத்தின் நிறை குறைகளைப் பற்றிப் பேசுவதும் கடினம்.. இப்படிப் பட்ட சூழ்நிலை சமீபத்தில் எந்தப்படத்துக்கும் வந்ததில்லை.. சரி இப்படி தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.. நந்தா அனன்யா மற்றும் அவர்களது ஐந்து வயது குழந்தை என சந்தோசமாக சென்று கொண்டிருக்கிறது அவர்களது குடும்பச்சூழல்.. குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு நந்தா அனன்யா இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும் ஒரு பிரயாணத்தின் போது லிப்ட் கேட்டு அதே காரில் ஏறிய நிகேஷ்ராம், துப்பாக்கியை தலை மீது வைத்து உன் குழந்தை எங்களது கஸ்டடியில்.. இனி நான் சொல்வதை செய் என்கின்ற ரீதியில் நந்தா அனன்யா இருவரையும் அலைகழிக்க… அந்த அலைகழிப்பு எந்த எல்லை வரை சென்றது… அந்த அலைகழிப்புக்கு காரணம் என்ன என்பதெல்லாம் மீதிக்கதை..

படத்தில் நல்லக் கதை என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட கதை என்ற ஒன்று இருக்கிறது.. அது முதலாவது காட்சியிலேயே ஆரம்பித்துவிடுகிறது என்பதும் கூடுதல் சிறப்பு.. அது தவிர்த்து மிகச்சிறப்பான திரைக்கதை என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒரு விறுவிறுப்பான திரைக்கதை இருக்கிறது.. படம் தொடங்கியதில் இருந்து, ஏன்…? எதற்கு..? அடுத்து என்ன செய்யப் போகிறான் என்கின்ற ரீதியில் பார்வையாளர்களின் பல்ஸ் இறங்காமல் பார்த்துக் கொள்ளும் வகையிலான திரைக்கதை… ஆனால் இதை மிகச் சிறப்பான திரைக்கதை என்று சொல்ல முடியவில்லை.. ஏனென்றால் இது கதை போகின்ற போக்கில் கதாபாத்திரங்களை ஏமாற்றுவதோடு பார்வையாளர்களை சேர்ந்து ஏமாற்றும் திரைக்கதை… உங்களுக்கு இன்னும் புரியும்படி சொல்வது என்றால், ஒரு காட்சி முழுமையாக முடிவதற்கு முன்பே அதை கத்தரித்து விடுவார்கள்…. பின்பு அதே காட்சியை அங்கு என்ன நடந்தது தெரியுமா..? என்கின்ற ரீதியில் வேறொரு இடத்தில் வந்து ஒட்டுவார்கள்… இதனால் கதையில் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.. ஆனால் பார்வையாளர்களான நாம் ஏமாற்றப்பட்டிருப்போம்… அந்தக் காட்சியில் எதுவுமே நடக்கவில்லை என்று நாம் நம்பிவிட்டு அடுத்த காட்சிக்கு சென்றுவிடுவோம்… பின்னர் தான் நமக்குத் தெரியும் அங்கு நடந்தக் காட்சிகளை அவர்கள் நமக்குக் காட்டவில்லை என்று.. இந்த திரைக்கதை உத்தியை தவறான திரைக்கதை உத்தி என்று சொல்ல முடியாது… ஆனால் எனக்குப் பிடிக்காத ஒன்று…


உதாரணத்துக்கு பீட்ஸா திரைப்படத்தில் வரும் காட்சி நினைவு இருக்கிறதா..? பேய் பிடித்த ஓனரின் மகளை நினைத்துக் கொண்டே விஜய் சேதுபதி ஒரு திருப்பத்தில் தன் டூவிலரை திருப்புவார்…. காட்சி முடிந்துவிட்டதாக நினைத்து நாம் அடுத்த காட்சிக்கு சென்றுவிடுவோம்…. அடுத்த காட்சியில் அடிபட்ட காயங்களுடன் ஏதோ பிதற்றிக் கொண்டு விஜய் சேதுபதி உட்கார்ந்து இருப்பார்.. பின்னர் படம் முடிவதற்கு சற்று நேரம் முன்பு நாம் முடிந்துவிட்டதாக நினைத்த அதே காட்சி திரும்ப வரும்… திருப்பத்தில் விஜய் சேதுபதி கீழே விழுந்திருப்பார்.. அதைத் தொடர்ந்து பல சம்பவங்கள் நடந்திருக்கும்… ஆனால் பிற கதாபாத்திரங்கள் எப்படி ஏமாந்தார்களோ…? அதே போல பார்வையாளனும் ஏமாந்திருப்பான்.. இது திரைக்கதையில் ஒரு வகையான கத்தரி ஒட்டு வேலை.. மீண்டும் சொல்கிறேன்.. இது தவறான உத்தி என்பதல்ல…. மிகச்சிறந்த உத்தியாக எனக்குப்படாத முறை அவ்வளவே… ஆனால் அதை பீட்ஸாவில் கார்த்திக் சுப்புராஜ் செவ்வனே செய்திருப்பார்… பார்வையாளர்கள் அதை முடிந்தால் யூகித்துக் கொள்ளட்டும் என்கின்ற நோக்கிலொரு க்ளுவும் கொடுத்திருப்பார்… முடிந்தால் யோசித்துப் பாருங்கள்.. அல்லது பீட்ஸா பதிவை படித்துப் பாருங்கள்…

இந்த மாதிரியான திரைக்கதை உத்தியை மிக மோசமாக பயன்படுத்தி ஓரளவுக்கு வெற்றி பெற்றப் படத்துக்கு சமீபத்திய உதாரணம் “என்னமோ நடக்குது…” மிகக் கேவலமான கத்திரி ஒட்டு வேலைகள் அதில் நடந்திருக்கும்… இது தமிழ்படங்கள் என்று மட்டும் அல்ல… வெளிநாட்டு மொழித்திரைப்படங்களில் கூட இது போன்ற உத்திகளை பல படங்களில் காணலாம்.. ஏன் மிகவும் சிலாகித்துப் பேசப்பட்ட A Separation திரைப்படத்தில் கூட அந்த உத்தி இருக்கும்… அந்த வேலைக்காரப் பெண்மணி ரோட்டைக் கடக்கின்ற அந்தக் காட்சி… அந்தக் காட்சியிலேயே அவர் கார் மோதி கீழே விழுவதைக் காட்டமாட்டார்கள்.. அதைப் பின்னர் தான் விளக்குவார்கள்.. அது போலத்தான்…. அதைப் போன்ற ஒரு உத்தி இந்தத் திரைப்படத்திலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.. முடிந்தால் படம் பார்க்கும் போதே அதைக் கண்டுபிடித்துப் பாருங்கள்….

சரி அப்படியென்றால் மிகச்சிறந்த திரைக்கதை என்று நான் எதனைச் சொல்லுவேன் என்றால், எந்த இடத்திலும் பார்வையாளனை திட்டமிட்டு ஏமாற்றி, புதிதாக ஒரு விசயத்தை சொல்லாத திரைக்கதையை மிகச்சிறந்த திரைக்கதை என்பேன்… உதாரணத்துக்கு The Shawshang Redemption திரைப்படத்தின் திரைக்கதை… தமிழில் விருமாண்டியின் திரைக்கதை… பசுபதி சொல்லுவார்… “ஆளுக்கு முந்தி நைட்டோட நைட்டா அரிவாளத் தூக்கிட்டு வெட்டப் போனது அவன்ல..” என்று கமலை. அவர் சொன்னதும் உண்மை.. பசுபதியின் பார்வையில். ”நான் வெட்டுறதுக்குப் போல..” என்று கமல் சொல்லுவார்.. அதுவும் உண்மை.. கமலின் பார்வையில்.. என்னைப் பொறுத்தவரை திரைக்கதை இப்படித்தான் பார்வையாளனை ஏமாற்றாததாக இருக்க வேண்டும்… ஆனால் அப்படிப்பட்ட ஒரு திரைக்கதை இந்த திரைப்படத்தில் இல்லை என்பது ஒரு சிறிய குறை…


அதைத் தவிர்த்துப் பார்த்தால் படத்தின் கரு எதைப் பற்றியது என்பதை ஆடியன்ஸ் ஏற்றுக் கொள்ளும் வகையில் அவர்களை முதலிலேயே தயார் படுத்தாமல் விட்டிருப்பதும் ஒரு குறை… நாம் ஏதேதோ காரணங்களை எண்ணிக் கொண்டு இருப்போம்.. இவர்கள் புதிதாக ஒரு காரணத்தை வந்து வைப்பது போல் ஒரு எண்ணம் ஏற்படுவதையும் படம் பார்க்கும் போது தவிர்க்க முடியவில்லை.. நான் சிவப்பு மனிதன் திரைப்படத்தைப் போல… இத்திரைப்படத்தின் ஒரிஜினல் வடிவங்களான ஆங்கில மற்றும் மலையாள வடிவங்களை நான் பார்த்ததில்லை என்பதால், இத்திரைப்படத்துக்கும் அவற்றுக்கும் என்னென்ன ஒற்றுமை வேற்றுமை என்பதை என்னால் கண்டு கொள்ளமுடியவில்லை… ஆனால் படத்தின் மையக்கருத்தின் மீது ஒரு சின்ன நாகரீக அல்லது பரிணாம வளர்ச்சி இருப்பது போல் தமிழில் தெரிவது கொஞ்சம் சந்தோசமாக இருந்தாலும்.. கடைசிக் காட்சியில் அந்தப் பெண்ணின் நிலை என்னவானது என்பதை காட்சிப்படுத்தியிருக்கும் இடத்தில் மூலமாக இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்பதை யோசிக்கும் போது, இவர்களை எல்லாம் திருத்தவே முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டு, முன்னர் ஏற்பட்ட சந்தோசத்தை அப்படியே அது காணாமல் ஆக்கிவிடுகிறது… மேலும் அந்தக் க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு வசனம் வரும்… “கேவலம் இந்த விசயத்துக்காகவா இப்படி நடந்து கொண்டீர்கள்…” என்று, இந்த வசனத்தை பேசுகின்ற அதே கதாபாத்திரம் தான், மேற்சொன்ன அதே சாதாரணமான, அவரது மொழியில் சொல்வதென்றால், கேவலமான ஒரு விசயம் நடந்துவிட்டது என்பதை தெரிந்து கொண்டு இவ்வளவு பெரிய பழி வாங்கும் படலத்தை நடத்தியிருப்பார்… அப்படி இருக்கும் போது அதுயெப்படி பொருட்படுத்த முடியாத மிகக்கேவலமான விசயமாக மாறும் என்பது இயக்குநருக்கும் அந்தக் கதாபாத்திரத்துக்கும் தான் வெளிச்சம்…

இப்படி கதையைப் பற்றி கொஞ்சம் கூட பேசாமல், அதன் திரைக்கதையில் இருக்கின்ற குறைகளைப் பற்றியும், மையச் சாரத்தின் குறைகளைப் பற்றியும் பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது…. இவை தவிர்த்து நடிப்பு என்று பார்த்தால் வில்லனாக வரும் நிகேஷ் ராம் மற்றும் அனன்யா இவர்கள் இருவர் மட்டுமே ஸ்கோர் செய்கிறார்கள்.. நந்தா ம்ஹீம்… இன்னும் ரொம்பவே மெனக்கெட வேண்டும்… தம்பி ராமையாவின் கதாபாத்திரம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.. அவரின் சென்னை விசிட்டும் மெசெஜ்ஜும் பலரது அனுபவங்கள் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. அந்தப் பகுதி தான் கலகலப்புக்கும் கேரண்டி தருகிறது… படத்துக்கு கேமராவும் இசையும் மிகப்பெரிய பலவீனங்கள்… எதற்கெடுத்தாலும் இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டே இருக்கும் எஸ்.ஜெய்யின் கேமரா எரிச்சலையே தருகிறது… அது போல பரத்வாஜ், ரதீஷ் வேகா கூட்டணி இசையில் அந்த முதல் டூயட் பாடலைத் தவிர்த்திருக்கலாம்.. பிண்ணனி இசையும் ஒரு த்ரில்லருக்கான பிண்ணனி இசையின் வரையறைக்கு உட்பட்டதாக இல்லை…


மொத்தத்தில் அதிதி க்ளைமாக்ஸ் தவிர்த்து பல பேருக்கு பிடித்த படமாக இருக்கும்… கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்…. ஏமாற்றம் தராத விருந்தாளி தான் இந்த அதிதி…

Tuesday 1 July 2014

சைவம்:

இயக்குநர் விஜய்யின் தயாரிப்பிலும் இயக்கத்திலும் வந்திருக்கும் திரைப்படம்.. படத்தின் தலைப்பு மற்றும் அதன் போஸ்டர் டிசைனிங் இரண்டையும் கொண்டே பலரும் மொத்தக் கதையையும் யூகித்து இருந்தனர்.. அதற்கு கொஞ்சம் கூட ஏமாற்றம் வைக்காமல் நாம் என்ன நினைத்தோமோ அப்படியே இருக்கிறது இந்தத் திரைப்படம்… ஆர்யா, விக்ரம், விஜய் என மாஸ் ஹீரோக்களை வைத்து படம் எடுத்துக் கொண்டிருந்த இயக்குநர் விஜய், இந்தத் திரைப்படத்தை தொடங்கும் போதே இது எனக்காக நானே எடுக்கும் படம் என்று அறிவித்திருந்தார்… இப்படி ஒரு முயற்சி கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டியது தான்… ஆனால் அதற்காக மட்டுமே எந்த ஒரு திரைப்படமும் பாராட்டப்பட வேண்டிய தகுதியை பெற்றுவிடுகிறது என்று அர்த்தம் இல்லை.. அப்படித்தான் இந்த சைவமும்…



ஏற்கனவே சொன்னபடி, படத்தின் தலைப்பும் அதன் போஸ்டர் டிசைனிங் இரண்டுமே மொத்தக் கதையும் சொல்லிவிடுகின்றது.. ஆனால் ஒரு விதத்தில் பார்க்கப் போனால், அதுவும் கூட ஒரு திரைப்படத்தின் ஆக்கத்தில் முக்கியமான குறையாகப் பார்க்கப்பட வேண்டிய அம்சம்.. சமீபகாலமாக இதே தொனியில் வந்த இரண்டு படங்களாக நான் நினைவுகூற விரும்புவது தலைமுறைகள் மற்றும் பண்ணையாரும் பத்மினியும் என்ற இரண்டு திரைப்படங்களை.. இரண்டுமே மேலே சுட்டிக்காட்டிய அந்தக் குறைகளை தங்கள் ஆக்கத்தில் கொண்டிருந்தாலும், அதையும் மீறி அவை மனதைக் கவர்கின்ற படைப்பாக மாறியதற்கு மிகமிக முக்கியமான காரணமாக நான் நினைப்பது அந்தத் திரைப்படத்தின் காட்சிகளில் இருந்த உயிர்ப்பு… அந்த உயிர்ப்பு சைவம் திரைப்படத்தில் எந்தவொரு காட்சிகளிலும் இல்லாமல் போனதால் இந்த சைவச் சுவையை என்னால் ரசிக்க முடியவில்லை…

நாம் நினைத்த எல்லாமே திரைப்படத்தில் அப்படியே நடக்கிறது… மிகமிக அன்பான மரியாதையான குடும்பமாக இருக்கிறார்கள்… தமிழாக வரும் தெய்வத் திருமகள் சாரா, அந்த வீட்டில் வளர்க்கப்படும் பாப்பா என்ற அந்த சேவலின் மீது பிரியமாக இருக்கிறாள்… (எந்தக் காட்சி இதை விளக்கியது என்று கேட்கக் கூடாது…) அந்தச் சேவலை பழி கொடுக்க வேண்டிய தருணம் வருகிறது… மொத்தக் குடும்பமும் அந்தச் சேவலை பழி கொடுக்க தயார் நிலையில் இருக்க… சாரா மட்டும் அந்தச் சேவலை காப்பாற்ற எண்ணுகிறாள்… கடைசியில் காப்பாற்றியும் விடுகிறாள்… இறுதியில் தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படத்தை எடுத்திருப்பதாகச் சொல்லி முடிக்கிறார் இயக்குநர் விஜய்…



யதார்த்த சினிமாவை நோக்கி எங்களைத் திசை திருப்பிய இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு நன்றிகள் என்ற நன்றியறிவிப்பு அட்டவணையுடன் படத்தைத் தொடங்குகின்றனர்.. நல்ல விசயம்… ஆனால் யதார்த்தம் என்பது நம் பேச்சில் மட்டும் இருந்தால் போதாதே… படத்திலும் அந்த யதார்த்தம் இருக்க வேண்டுமே… படத்தில் வரும் வசனங்களில் “வாங்க” “உக்காருங்க..” ”நல்லாருக்கீங்களா…” ”எப்ப வந்தீங்க..” இப்படி வருகின்ற வசனங்களை தூக்கி விட்டாலே படத்தில் ஒரு பத்து நிமிடம் குறைந்துவிடும்… இப்படிப்பட்ட வசனங்களையும் காட்சிகளையும் வைப்பதுதான் யதார்த்தம் என்று இயக்குநர் விஜய் நினைத்திருந்தால் வீ ஆர் வெரி வெரி ஸாரி சார்…

ஈரானியக் குழந்தைத் திரைப்படங்கள் உலகம் எங்கும் உள்ள மக்கள் ரசிக்கும் படி வெளிவந்து கொண்டிருக்கிறது என்றால், அத்திரைப்படங்களில் குழந்தைகள் குழந்தைகளாகவே எந்தவித சமரசமும் இன்றி காட்டப்படுகிறார்கள்… இன்றும் உலகில் உள்ள எல்லா நாட்டு மக்களாலும் ரசிக்கப்படும், Children of hevan திரைப்படம் ஆகட்டும், The mirror திரைப்படம் ஆகட்டும், where is my friend home திரைப்படம் ஆகட்டும் அனைத்திலும் குழந்தைகள் வெறும் குழந்தைகள் மட்டுமே.. அவர்கள் நாயக நாயகி பிம்பங்களுக்குள் எப்போதுமே வந்ததில்லை… ஆனால் சைவம் திரைப்படத்திலோ  அந்தக் குழந்தை சாராவை இயக்குநர் குழந்தையாகக் காட்டாமல், ஒரு நாயக பிம்பத்துடன் தான் வளையவிடுகிறார்… அந்தக் குழந்தைக்கு நாயகியைக் காட்டுவதைப் போல் ஒரு ஓபனிங்க் ஷாட் வேறு.. இது போதாதென்று அந்தக் குழந்தை தப்பு செய்யாதே என்று மற்றக் குழந்தைகளுக்கு போதனை செய்கிறது… பெரியவர்கள் சண்டையிடும் போது அவர்களை சமாதானம் செய்கிறது…. பிறர் செய்த தவறை தான் செய்ததாகச் சொல்லி தண்டனையை ஏற்றுக் கொள்ளுகிறது… எட்டு வயதே நிரம்பிய அந்தக் குழந்தை, குழந்தையில்லாமல் கஷ்டப்படும் தம்பதியர் அவமானப்படாதபடி, அவர்களை பிறர் முன்னிலையில் அம்மா என்று கூப்பிட்டு அவர்கள் மனதைக் குளிரச் செய்கிறதாம்… என்னவொரு கற்பனா சக்தி…. இப்படி படம் நெடுக அந்தக் குழந்தை ஒரு மாஸ் ஹீரோ செய்யக்கூடிய எல்லாக் காரியங்களையும் செய்கிறது… இதுதான் குழந்தைகளுக்கான எதார்த்த சினிமா என்றால், இதை எப்படி ஏற்பது… மேலும் தெய்வத் திருமகளில் ரசித்த அளவுக்கு சாராவை சைவத்தில் ரசிக்க முடியவில்லை… இந்த இடைப்பட்ட காலங்களில் அந்த குழந்தமை அவரிடம் காணாமல் போயிருக்கிறது…


இதிலும் ஒரு நாலாந்தர காதல் என்கின்ற வஸ்து இல்லாமல் கதை சொல்ல முடியவில்லை போலும்… இங்கும் ஒரு காதல் ஜோடி… சொந்த பந்தங்கள் ஒன்றாகக் கூடிய இடத்தில் தங்கள் காதலை புதுப்பித்துக் கொள்ள அவர்கள் நடத்தும் முயற்சி.. இப்படி இன்னும் எத்தனை நாட்களுக்கு காதல் என்கின்ற பெயரைச் சொல்லியே இளசுகளை இவர்கள் ஏமாற்றப் போகிறார்கள் என்று தெரியவில்லை… கொஞ்சமேனும் ரசிக்க வைப்பது ஷ்ரவன் என்று சொல்லிக் கொண்டு வரும் அந்தக் குண்டுப் பையன் மட்டும் தான்… படம் நெடுக அவன் பேசும் இங்கிலீஷ்க்கு பயந்து போய், பெரியவர்கள் ஒவ்வொருவரும் பதறும் இடம் மட்டும் தான் கொடுத்த காசுக்கு கொஞ்சமேனும் கண்ணியம் சேர்க்கிறது…

படத்தின் நீளம், மேம்போக்கான காட்சிகள், சுவாரஸ்யமில்லாத தன்மை, பழகிய கதைக்களமே அந்நியமாகத் தென்படுவது என்று படத்துக்கு ஏகப்பட்ட மைனஸ்… எங்கள் பள்ளியில் எல்லாம் யாராவது சொந்தக்காரர்கள் இறந்து போனால் மட்டும் தான் வீட்டுக்கு செல்ல அனுமதிப்பார்கள்… ஆனால் இந்த சாராப் பொண்ணோ சேவல் காணாமல் போனால் உடனே வீட்டுக்கு வந்து விடுகிறது… இது என்னரகமான கதையாடலோ…??? இசையமைப்பாளர் ஜிவி வெகுநாட்களுக்குப் பிறகு பிண்ணனி இசையில் ஈர்க்கிறார்… அதுபோல் தான் பாடலிலும்…


அனுபவ ரீதியாக நம் வாழ்க்கையில் இருந்து ஒரு சம்பவத்தை திரைப்படமாக எடுக்கலாம் தான்.. ஆனால் அந்த அனுபவத்தை நம் அனுபவமாக மட்டும் அல்லாமல் எல்லாருக்குமான அனுபவமாக மாற்றுவது தான் திரைப்படத்தின் வெற்றி… அந்த வெற்றியை சைவம் பெறவில்லை… ஒரு அகதியின் வாழ்க்கையை அரசியல் பரம்பரையை சேர்ந்த ஒருவர் படமாக எடுத்தால் எப்படி இருக்கும்….??? அப்படித்தான் இருக்கிறது சைவமும்… இந்த சைவம் பார்த்ததால் ஏற்பட்ட கொலைவெறியை ஒரு சிக்கன் பிரியாணி தின்று தீர்த்துக் கொண்டேன்… நீங்கள் பார்க்கலாமா…? வேண்டாமா…? என்று கேட்டீர்கள் என்றால், பல வருடங்களாக இறைவனை நோக்கி தவம் இருப்பார்களே..!!! அந்த அளவுக்கு பொறுமை உங்களுக்கு இருந்தால், நீங்கள் கண்டிப்பாக பார்க்கலாம்… ஆனால் இறுதியில் வரம் கிடைக்குமா…? என்று எனக்குத் தெரியாது….