Saturday 14 June 2014

பூவரசம் பீப்பீ:

இத்திரைப்படத்தை நான் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்ததற்கு நிறைய காரணங்கள் உண்டு.. அதில் முக்கியமான சில காரணங்களில் தலையாய காரணமாக நான் நினைப்பது இது ஒரு பெண் இயக்குநரின் படம் என்பதையே.. எழுத்துலகை ஒப்பிடுகையில் திரையுலகில் பெண் படைப்பாளிகளின் எண்ணிக்கை ஆரோக்கியமானதாக இல்லை.. விரல்விட்டு எண்ணுமளவுக்குத் தான் இருக்கிறது.. இது போன்ற இளம் பெண் படைப்பாளிகளை ஆதரிப்பது பெண் படைப்பாளிகளின் எண்ணிக்கை வளர்வதற்கு மறைமுகமாக உதவும் என்ற எண்ணம் இருந்தாலும் அது மட்டுமே பிரதானமான காரணம் அல்ல.. குழந்தைகளைப் பற்றிய படம் என்பதும்.. ஒரு பெண்ணியப் படைப்பாளியின் பார்வையில் குழந்தைகள் படம் என்பதும்.. இதன் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஒளிப்பதிவாளரான மனோஜ் பரமஹம்சா என்பதும் கூட சில முக்கியமான காரணங்கள் தான்… இதுதவிர்த்து படத்தின் டீசரும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது… (அது கண்டிப்பாக தியேட்டர்களில் ஒளிபரப்பான டீசர் அல்ல…)


திரையரங்கில் ஒளிபரப்பப்பட்ட ட்ரைலர் இத்திரைப்படத்தை கோலிசோடா போன்ற வணிக சினிமாக்களின் மற்றொரு வடிவம் என்பதைப் போல காட்சிபடுத்தியதும், படத்தின் மீது ஏற்கனவே இருந்த ஆர்வம் கொஞ்சம் மட்டுப்பட்டது உண்மைதான்.. ஆனால் முழுதிரைப்படமாக பார்த்த போது இதன் மீது நான் வைத்திருந்த பெருத்த நம்பிக்கையை திரைப்படம் ஓரளவுக்காவது காப்பாற்றிக் கொண்டதில் எனக்கு சந்தோசமே.. கதையின் மையம் என்று பார்த்தால், ஆறாம் வகுப்பில் முழு ஆண்டுத்தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் இருக்கும் மூன்று நண்பர்கள் ஒரு குற்றத்தை நேரில் பார்த்துவிடுகிறார்கள்.. அந்தக் குற்றவாளிகளை சட்டத்தின் கையில் சிக்க வைக்க அந்த சிறுவர்கள் மேற்கொள்ளும் முயற்சிதான் மொத்த கதையும்… இந்த மையக்கதையை என்னால் பெரிதாக சிலாகிக்க முடியவில்லை.. ஒப்புக்கு ஏற்றுக்கொள்ளலாம் என்கின்ற ரகம் மட்டும் தான்… ஆனால் இந்த மையத்தை நோக்கி கதை நகரும் போது, அந்த சிறுவர்களின் வாழ்வியல் அங்கங்களை சிறுசிறு அழகான மலராக அதனோடு சேர்ந்து கோர்த்திருப்பதுதான் என்னை கவர்ந்த அம்சம்..


இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான திரைப்படம் என்றோ..? அல்லது மிக அற்புதமான திரைக்கதையோட்டத்தை அது கொண்டிருக்கிறது என்றோ..? அல்லது இதுவரை பேசாத ஒரு பாடுபொருளை அது கொண்டிருக்கிறது என்றோ நான் சொல்லவரவில்லை… ஆனால் இது கண்டிப்பாக ஒரு மோசமான படைப்போ அல்லது வெறுப்பேற்றும் படைப்போ கிடையாது… ஒரு பெண் படைப்ப்பாளியிடம் இருந்து வந்திருக்கும் ஆரம்பகட்ட வரவேற்கத்தக்க முயற்சி அவ்வளவே… ஆனால் தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால், எல்லா ஆண்களுமே இந்தத் திரைப்படத்தை பாருங்கள் என்றே சொல்லுவேன்… (அப்படியென்றால் பெண் பார்க்கக்கூடாத படமா என்ற கேள்வியை கேட்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்..) ஏன் ஆண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றால், இந்தப் படத்தின் இயக்குநர் பெண் என்பதே என் பதில்..

ஒரு குழந்தை முதன்முறையாக பேசத் தொடங்கும் போது, எவ்வளவு ஆர்வமாக அதற்கு நாம் காதுகொடுக்கிறோம்… அந்தக் குழந்தைக்கு ஒவ்வொரு விசயமாக சொல்லிக்கொடுப்பதற்கு மட்டுமன்றி, அந்தக் குழந்தையின் புரிதலில் இந்த உலகம் எப்படி இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்வதற்கு தானே.. அந்தக் குழந்தைகளைப் போலத்தான், சில ஆண்டுகாலமாகத் தான் நம் நாட்டில் ஒரளவுக்கு பெண்கள் வெளிப்படையாக பேசத் தொடங்கி இருக்கின்றனர்.. அவர்களுக்கும் கற்றுக்கொடுக்கும் நோக்கில் நம் காதுகளை அவர்களிடம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஏனென்றால் அவர்கள் ஒன்றுமே அறியாத குழந்தைகளைப் போல இல்லை.. அவர்கள் இந்த உலகத்தையும் ஆண் என்னும் தனக்கு அப்பாற்பட்ட ஓர் உலகத்தையும் எப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆண்களாகிய நாம் தெரிந்துகொள்ளவே பெண்களின் படைப்புகளை பார்க்கவும் படிக்கவும் வேண்டும் என்பது என் தனிப்பட்டக் கருத்து..

”பெண் மனசு ஆழமுன்னு ஆம்பளைக்கு தெரியும்… அது பொம்பளைக்கும் தெரியும்… அந்த ஆழத்திலே என்னவுண்டு யாருக்குத்தா தெரியும்…” என்று பாடினாலும் நடிகர் விவேக்கைப் போல் “இந்தப் பொண்ணுங்க மனசப் புரிஞ்சிக்கவே முடியலையே..” என்று புலம்பினாலும் அதில் பெரும்பாலான மனிதர்களின் மனநிலையில் குற்றவாளியாக முன்னிறுத்தப்படுவது பெண் தான்… பெண் தான் நினைக்கின்ற விசயங்களை வெளிப்படையாக சொல்வதில்லை… ஒளிவுமறைவுடன் இருக்கிறாள் என்கின்ற ரீதியிலேயே அது இருக்கிறது… அவர்களை நாம் எப்போது பேச விட்டோம்… அல்லது புரிந்துகொள்ள முயன்றோம் என்று நாம் நம்மையே  கேள்வி கேட்டுக் கொள்ள தயாராக இல்லை.. ஆக நான் சொல்ல நினைப்பது, முதலில் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம்.. பின்பு குற்றம் சாட்டலாம் என்பதே.. சரி எப்படி புரிந்து கொள்வது.. நம் மரபு சார்ந்த அறங்களின் படி ஒரு ஆண் தன் வாழ்க்கையில் அதிகப்படியான பெண்களுடன் பழகுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகமிக குறைவு.. ஆண்களுக்கே அந்த வாய்ப்பு குறைவென்றால், பெண்களுக்கு கேட்கவே வேண்டாம்.. ஆனாலும் நம் சமூகத்தில் ஒரு பெண் ஆணைப் பற்றி புரிந்து கொள்கிறாள்… தெரிந்துகொள்கிறாள்.. எப்படி என்று கேட்டால் ஆண் பேசிக் கொண்டே இருக்கிறான்… அதுவும் பெண்களைப் பற்றி என்றால் வகை தொகை இல்லாமல் பேசிக் கொண்டே இருக்கிறான்… எழுதுகிறான்.. படம் எடுக்கிறான்… பெண்களுக்கு அறிவுரை சொல்லுகிறான்… போதிக்கிறான்… “அடங்கிப் போ, அளவுக்கு மீறி ஆசைப்பட்ட பெண் நன்றாக வாழ்ந்ததா.. சரித்திரமே இல்லை, ஆண்கள் அப்படி இப்படி இருக்கத்தான் செய்வார்கள், உலகம் முழுவதுமே கற்பழிப்பு நடக்கத்தான் செய்கிறது என்கிறான்.. இப்படிப் பேசப்பேச ஆணை பெண் புரிந்துகொள்கிறாள்…

இதுபோல ஒரு பெண் தான் என்ன நினைக்கிறாள் என்று அவள் பேசி நாம் கேட்டிருக்கிறோமா..? வெகு அரிதாகவே அது நிகழ்கிறது… இலக்கியங்களில் பேசுகிறார்கள்…. அம்பையின் ”சிறகொடிந்த பறவை”, ”அம்மா ஒரு கொலை செய்தாள்”, ”காட்டிலே ஒரு மான்” சூடாமணியின் ”நான்காவது ஆசிரமம்” என ஆங்காங்கே பேசுகிறார்கள்… இதைப் படித்தவர்கள் பெண்களின் உணர்வுகளை கொஞ்சமேனும் புரிந்து கொள்ளலாம்.. இலக்கியங்களில் பேசத் தொடங்கியவர்கள் இப்போது சினிமாவிலும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்… அவர்கள் பேசுவதை எல்லாம் அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.. அது விவாதத்துக்கு உரியது என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை… ஆனால் முதலில் அவர்கள் பேசட்டும்.. நாம் காதுகொடுத்து கேட்போம் என்பதே என் வாதம்… அதனால் தான் சொன்னேன்.. இது பெண் இயக்குநரின் திரைப்படம் கண்டிப்பாக ஆண்கள் பாருங்கள் என்று…

இத்திரைப்படத்தின் இயக்குநர் ஹலிதா சலீம். இவர் இயக்குநர் மிஷ்கின், சமுத்திரக்கனி, புஷ்கர் காயத்ரி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.. இத்திரைப்படத்தில் எனக்கு மிகப்பிடித்த அம்சம் என்பது வசனங்கள் தான்.. பெண்களுக்கு ஆண்களால் இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியான பாலியல் கொடுமை என்னும் குற்றத்தை மையமாகக் கொண்டே கதை பின்னப்பட்டு இருக்கிறது… இதை மையமாகக் கொண்டு மையக் கதாபாத்திரமான அந்த சிறுவர்கள் பேசும் ஒரு வசனம் வருகிறது… “ டவுசரு மாட்டும் போது எங்க அப்பத்தா சொல்லும்.. டே இது கல்யாண சாமாண்டா.. பாத்து பத்திரமா வச்சிக்கணும்ன்னு… இப்பத்தான தெரியுது கல்யாண சாமா கொல பண்றது வரையும் போகுதுன்னு…” என்பதாக அந்தச் சிறுவன் பேசுகிறான்.. இதுவொரு வசனம்..!!!!...??? இது உனக்கு பிடிக்கவேறு செய்கிறதா..? என்று நீங்கள் கேட்கும் முன்னர் மற்றொரு காட்சியையும் விளக்கிவிடுகிறேன்.. எனக்குத் தெரிந்து தமிழ்திரைப்படங்களில் இப்படி ஒரு காட்சி இதற்குமுன்னர் நான் பார்த்ததே இல்லை… அதுயென்னவென்றால் சிறுவன் ஒருவன் முதன்முதலாக தன் தூக்கத்தில் விந்துவெளியேறியதை உணரும் காட்சி… அதை உணரும் அவன் போர்வையுடன் வெளியே சென்று அதை துவைத்துவிட்டு வருகிறான்… வரும்வழியில் ஒரு பெண்ணுக்கு சடங்கு நடந்துகொண்டு இருக்கிறது என்பதான பகடி…

இதெல்லாம் ஏன் எனக்குப் பிடித்திருந்தது என்று சொல்லும் முன், இன்னும் இரண்டு  காட்சிகளை விளக்கிவிடுகிறேன்… அந்த மூன்று சிறுவர்களும் வயல் வரப்புகளில் நடந்தபடி செல்ல.. அங்கே விளையாடிக் கொண்டு இருக்கும் அவர்களை விட வயதில் இளையவளான ஒரு சிறுமி அவர்களைப் பார்த்துக் கேட்கிறாள்… “இப்பல்லா ஏன் எங்கூட விளையாட வரமாட்டேன்றீங்க…” என்று கேட்க அந்த சிறுவர்கள் பதில் சொல்லாமல் செல்ல.. மீண்டும் அந்த சிறுமி கேட்கிறாள்… “ஏன் நீங்கெல்லா வயசுக்கு வந்துட்டீங்களா…?” அவர்கள் வாயடைத்துப் போய் அமைதியாக நடக்க.. அடுத்த காட்சியில் தான் அந்த சிறுவன் வயதுக்கு வருகிறான்… மற்றொரு காட்சி இந்த மூன்று சிறுவர்களும் தங்களது சீனியர்களின் வீட்டுக்கு செல்ல.. அங்கு அவர்கள் நீலப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. அதைப் பார்த்து அதிர்ச்சியுடன் திரும்பும் இவர்கள் பேசும் வசனம்… “டே ஏண்டா எல்லாப் பசங்களும் வளர்ந்ததும் கெட்டுப் போயிடுறாங்க...” என்பதாக இருக்கிறது இந்த வசனம்…

இந்த நான்கு விசயங்களையுமே தேவையில்லாத திணிப்பு மாதிரி தெரிந்தாலும்.. இவை படத்தின் மையக்கதையோடு தொடர்பு உடையது தான்.. ஏனென்றால் மையக்கதை பாலியல் குற்றம் சார்ந்தது… அடுத்து நாம் பார்த்த நான்கு அம்சங்களுமே பாலியல் சார்ந்த அறிவு நம்மிடம் எப்படி இருக்கிறது என்பது தான்.. ஒரு ஆண் பருவம் அடைவதைப் பற்றி பேசுவதை தவறு பேசக் கூடாது என்று எண்ணும் நாம், அதே சூழலைக் கடக்கும் பெண்ணை ஊர் முன்னிறுத்தி அனைவரும் அறிவது போல் காட்சிப் பொருளாக்குவதன் முரணை எப்படி பொருள் கொள்வது… இப்படி ஆண்களை பொத்தி வைப்பது போல் ஊர் மேயவிடுவதும், பெண்ணை பொத்திவைப்பதாக எண்ணிக் கொண்டு காட்சிப் பொருளாக்குவதுமான வெறுப்பும் தான் ஒரு பெண்ணிடம் இருந்து காட்சியாக இப்படி வெளிப்பட்டிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.. ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால் ஆணிடம் சேரக்கூடாது என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்படுகிறாள்… அதனால் தான் ஒரு ஆண் தன்னுடன் விளையாட வராமல் மறுப்பதற்க்கும் அதுதான் காரணமாக இருக்குமோ என்று அவளுக்கு எண்ணத் தோன்றுகிறது..

மேலும் அந்த சிறுவன் பேசும் வசனமான “டே ஏண்டா எல்லாப் பசங்களும் வளர்ந்ததும் கெட்டுப் போயிடுறாங்க...” அதை ஒரு பெண்ணின் ஆண் சார்ந்த புரிதலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.. சிறுவயதில் தன்னோடு ஒன்றாகப் பழகிக் கொண்டு திரிந்த இவர்கள் நல்லவர்களாகத்தானே இருந்தார்கள்… இந்தக் குறிப்பிட்ட இடைவெளியில் ஏன் இப்படி இவர்கள் மாறிப்போனார்கள் என்ற பெண்ணின் மனநிலை சார்ந்த குழப்பமாகவோ…? அல்லது நாமும் இப்படி மாறிப்போய்விடுவோமா..? அப்படி மாறிவிடுவோம் என்றால் அது ஏன்..? என்பதான சிறுவர்களின் மனநிலையில் உள்ள குழப்பமாகத்தான் நான் அதைப் பார்க்கிறேன்.. இது தவிர்த்து கடைசியாக அந்த சிறுமி “உனக்கு என்னதா தெரியாது…?” என்ற கேள்விக்கு “என்னதா உனக்குத் தெரியாது” என்று சொல்கின்ற பதில் மொத்த ஆண் வர்க்கத்துக்குமான பெண்களின் பதிலாகவே தெரிகிறது..

மேலும் பொன்வண்டு விற்பது, பெண்களை பெண்களாக சிறுவர்கள் உணர்ந்து கொள்ளும் அந்தத் தருணம், நண்பனுடனான போட்டி, பிரிவு, இயலாமை என வாழ்க்கையின் பக்கங்களை காட்டும் இடங்களும் கூட இயல்பாகவே இருந்தன.. சிறுவர்மலரின் சிறுவர்களுக்கான நீதிநெறிக்கதைகளின் அனுபவமும் படத்தில் உண்டு.. எனக்குப் படத்தில் பிடிக்காத அம்சமே அந்தக் குழந்தைப் பருவக் காதல் தான்… ஆனால் அதையும் முடித்திருந்த விதம் எனக்கு நிறைவாகவே இருந்தது.. பூவரசம் பீப்பி என்ற தலைப்புக்கான ஜஸ்டிபிகேசன், சிறுவர்களை அசகசாயசூரர்களாக காட்டாமல் சிறுவர்களாக மட்டுமே காட்டி, அவர்கள் தங்கள் படிப்பறிவைப் பயன்படுத்தி வில்லன்களை மடக்குவதாக காட்டியிருப்பதும் ஒரு சின்ன ஆறுதல்… ஆனால் வில்லன்களின் பிண்ணனியில் பொட்டலம் மாற்றுவது, நட்சத்திர மீன் என வரிசையாக பல பிண்ணனிகளைக் கொடுக்காமல் ஏதேனும் ஒன்றிலேயே பயணித்திருந்தால் கதை இன்னும் வலுவாகியிருக்கும்… மேலும் குழந்தைகளுக்கான அறிமுகப்பாடலை தவிர்த்திருக்கலாம்.. ஆனால் வில்லன்களை மிகப்பலமான ஆட்களாக காட்டாமல், சாதாரணமான ஆட்களாக காட்டியிருந்ததும் பலம்…



ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா… ஈரம், விண்ணைத் தாண்டி வருவாயா என அவரது படங்களில் எல்லா ப்ரேமுமே அவ்வளவு அழகாக இருக்கும்.. இவரது ஒளிப்பதிவுக்காகவே பலமுறை பார்க்கின்ற காட்சிகள் உண்டு.. அது இந்தப் படத்துக்கும் பொருந்தும்.. மிகமிக அற்புதமான ஒளிப்பதிவு.. இசை அருள்தேவ்.. பாடல்களில் பெரிதாக இல்லை என்றாலும் பிண்ணனி இசையில் கவருகிறார்…. இன்னும் திரைப்படம் ஓடிக்கொண்டு இருக்கிறதா என்று தெரியவில்லை… அப்படி ஓடிக்கொண்டிருந்தால் கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள்.. இது உங்களை விரக்தியடையச் செய்யாது… சில விசயங்களை நோக்கி உங்கள் புரிதலைக் கோரி நிற்கும் ஒரு வரவேற்க வேண்டிய முயற்சிதான் இந்த பூவரசம் பீப்பீ…

No comments:

Post a Comment