Sunday 6 April 2014

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்:

தனது பிரத்யேகமான நகைச்சுவை பாணியால் அதிகமாக கவனிக்கப்பட்ட இயக்குநர் சிம்புத்தேவன். இம்சை அரசன் திரைப்படத்தை தவிர்த்து இவரது படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்காவிட்டாலும் கூட இவருக்கு என தனிப்பட்ட ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொடுத்தது. அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியிலான மிகப்பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் கூட கவனிக்கத்தக்கப் படங்களாக இருந்தன.. அந்த வரிசையில் சொல்லிக் கொள்ளும்படியான படமாக இந்த ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் இருக்குமா என்பது சந்தேகமே..


அறை எண் 305ல் கடவுள் என்ற திரைப்படம் BRUCE ALMIGHTY என்ற ஒரு ஆங்கில திரைப் படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.. கதை தழுவலாக இருந்தாலுமே அதை நம் தமிழ்சினிமா சமூகத்துக்கு ஏற்றபடி பலவிதமான மாற்று அம்சங்களோடு ரசிக்கத்தக்க வகையில் படமாக்கி இருப்பார்.. அதில் வரும் வசனங்களும் மிகச்சிறப்பான வரவேற்ப்பை பெற்றது.. அதே பாணியிலான மற்றொரு முயற்சியாக இப்போது எடுத்திருக்கும் திரைப்படம் தான் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்.. இத்திரைப்படத்தின் கதையும் திரைக்கதை உத்தியும் கூட மிகவும் புகழ்பெற்ற ஜெர்மானிய நாட்டுத் திரைப்படமான RUN LOLA RUN என்ற திரைப்படத்தின் தழுவல் தான்… ஆனால் பிரச்சனை என்னவென்றால், மிகவும் புகழ்பெற்ற ஆனால் தமிழ் ரசிகர்களால் ரசிக்கமுடியாத வேற்றுமொழிப் படங்களின் தரவரிசைப் பட்டியல் தயார் செய்தால், கண்டிப்பாக அதில் முதல் மூன்று இடங்களுக்குள் இந்த RUN LOLA RUN என்ற திரைப்படம் இருக்கும் என்பதுதான்.. அப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தின் கதையைத் தான் தழுவல் செய்து, தமிழ் கலாச்சார மரபுக்கு ஏற்றவாறு மும்மூர்த்தி கடவுள்களையும் கதைக்குள் கொண்டு வந்து, நம் தமிழ் ரசிகர்கள் ரசிக்கும் அளவுக்கு கதையில் சிலபல மாறுதல்கள் செய்து ஒரு பிரத்யேக முயற்சி எடுத்திருக்கிறார்… ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை…

ஏன்..? ஏனென்றால் கதைக்கரு அப்படி… நாம் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து செய்யத் தொடங்குகின்ற ஏதோ ஒரு செயலை ஒரு நிமிடம் தாமதமாக தொடங்குவதற்கும் இரண்டு நிமிடம் தாமதமாக தொடங்குவதற்கும் இடையேயான வித்தியாசங்களையும் அதனால் முடிவுகளில் ஏற்படும் மாற்றங்களையும் மூன்று பகுதிகளாக விளக்குகிறது திரைக்கதை… அருள்நிதி, பிந்துமாதவி, பக்ஸ் என்ற பகவதி இவர்கள் மூன்று பேர் தான் களவாணிகள்… அந்தக் கன்னி, இசபெல்லாவாக வரும் அர்ஷிதா ஷெட்டி… உதயம் NH-4 திரைப்படத்தின் நாயகி..

வழக்கம்போல் நாயகனும் நாயகியும் காதலர்கள்.. இவர்களின் காதல் விசயம் நாயகியின் பெற்றோருக்கு தெரியும் முன்பே மலேசிய தொழிலதிபரான அவரது தந்தை தன் மகளுக்கு வேறொரு இடத்தில் கல்யாணம் நிச்சயிக்கிறார்… நாயகியின் தந்தைக்கு தொழில்முறை எதிரியான மற்றொரு தொழிலதிபர் நாசர், நாயகிக்கு காதலன் இருப்பதை தெரிந்துகொண்டு, நாயகியின் தந்தைக்கு அவப்பெயர் ஏற்படுத்த நாயகியை கடத்தச் சொல்லி நாயகனை தூண்டி விடுவதோடு அதற்காக 30 இலட்சம் பணமும் கொடுப்பதாக வாக்களிக்கிறார்… அருள்நிதிக்கு இரண்டு நிர்ப்பந்தம்.. ஒன்று காதலியை காப்பாற்றுவது, இரண்டாவது ஹாஸ்பிட்டலில் இருக்கும் தன் தாயை காப்பாற்ற 8 இலட்ச ரூபாய் பணத்தை திரட்டுவது.. பிந்துமாதவிக்கு தன் தந்தையை கடனில் இருந்து காப்பாற்ற ஆறு இலட்ச ரூபாய் தேவை.. இதுபோல பக்ஸ்க்கும் ஏதோ ஒரு காரணத்துக்காக பணம் தேவை….


இவர்கள் நாயகியை கடத்த 8.59am மணிக்குத் தொடங்கி ஒருமுறையும், 9.00am மணிக்கு தொடங்கி ஒருமுறையும் 9.01am மணிக்குத் தொடங்கி ஒருமுறையும் என மூன்று முறை முயற்சிக்க… அந்தத் திட்டத்தின் முடிவு என்ன ஆனது என்பதை ஒரே மாதிரியான காட்சிக் கோர்ப்புகளோடு நாமும் மூன்று முறை கடந்து வருகிறோம்.. முதலில் 8.59 தொடங்குகின்ற முயற்சி தோல்வியில் முடிகிறது… பின்பு 9.00மணியில் தொடங்குகின்ற முயற்சி முழுக்க வெற்றி என்ற சொல்லமுடியாத சூழலில் முடிவடைகிறது… இறுதியாக 9.01மணியில் தொடங்குகின்ற முயற்சி எல்லாத் தரப்பிலும் சுமூகமாக முடிந்தாலும், சிம்புத் தேவன் பாணியில் 5 உயிர்பலி தவிர்க்க முடியாததாக ஆகிறது…

இது ஒரு பரிட்சார்த்த முறையிலாக திரை ஆர்வலர்களால் பரிசோதிக்கப்பட்ட ஒரு வகை திரைக்கதை உத்தி… ஆனால் இது ஆத்மார்த்தமாக ஏற்படுத்த வேண்டிய சில உணர்வுகளை ஏற்படுத்த தவறிவிடுவதால், இதில் வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் குறைவு.. இரண்டாம் விதமான கதை சொல்லல் 9.00 மணிக்கு தொடங்கும் போது காட்சிகளின் வழி காட்டப்பட்ட வாழ்க்கையின் மீதான நம்பகத்தன்மை குறைந்து, அதை வெறும் புனைவாக நாம் அணுகத் தொடங்கிவிடுவதால் அதன் சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது… மேலும் 9.01 மணிக்குத் தொடங்கும் மூன்றாம் விதமான கதை சொல்லல், ஏற்கனவே பார்த்த அதேமாதிரியான காட்சி அடுக்குகளை விளக்கிக் கொண்டு செல்ல முற்படும்போது, அதனோடு ஒன்ற முடிவதில்லை… மேலும் அது ஒருவிதமான எரிச்சலையும் ஏற்படுத்துவதோடு எந்தவிதமான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்த தவறிவிடுகிறது…


ஆனால் திரைக்கதை வடிவமாகவும், அதில் ஒரு வித்தியாசத்தை காட்டுவதற்காகவும் சின்ன சின்ன நுணுக்கமான விசயங்களிலும் கவனம் செலுத்தி இருக்கும் படக்குழுவினரின் உழைப்பை புறக்கணிப்பதும் எளிதல்ல.. அருள்நிதிக்கு இதுவொரு வித்தியாசமான முயற்சியாக இருக்கும்… நடிப்பில் வழக்கம் போல் பெரிதாக அவர் ஜொலிக்கவில்லை… கொஞ்சமேனும் நடிப்பில் கவர்வது பக்ஸ் மற்றும் சிறு வேடங்களில் வந்து செல்லும் அருள்தாஸ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, நரேன் மற்றும் அந்த இரண்டு நர்ஸ்கள் மட்டுமே… பிந்துமாதவிக்கு வழக்கத்துக்கு மாறான கதாபாத்திரம்… டூயட் இல்லை… காதல்மொழி பேச அவசியம் இல்லை… காட்சிகளின் தேவைக்கு ஏற்ப கண்களாலேயே உணர்வுகளை மட்டும் கடத்த வேண்டிய தேவை… சிறப்பாகவே செய்திருக்கிறார்… மையக்கதையை விட கிளைக்கதைகள் சிறப்பாக இருந்ததாக தோன்றுகிறது… அதுபோல ஆங்காங்கே இயக்குநருக்கே உரித்தான அரசியல் சார்ந்த பகடிகளும் அருமை…

பாடல்களே இல்லாத திரைப்படம்… இசை பிண்ணனிக்கு மட்டுமே… சூது கவ்வும் படத்தின் சாயல் பல இடங்களில் தெரிந்தது… எஸ்.ஆர்.கதிரின் கேமரா கைவண்ணத்தில் காட்சிகளும் அதன் ஒளிவண்ணங்களும் துல்லியம்.. இயக்குநரை புதிய முயற்சி என்றெல்லாம் பாராட்டமுடியாது.. தமிழுக்கு வேண்டுமென்றால் இது புதியதாக இருக்கலாம்.. தமிழ் திரைப்பட உலகுக்கு சற்றே வித்தியாசமான முயற்சி… ஆனால் திரைப்படத்தை முழுமையாக காண வேண்டும் என்றால்.. பொறுமை அவசியம்… நீங்கள் பொறுமையானவர்கள் என்றால் ஒருமுறை முயற்சித்துப் பார்க்கலாம்….

2 comments:

  1. அடேயப்பா... இந்தப் படத்துக்கு இப்படியெல்லாம் பொறுமையாகவும் வேற்றுமொழிப்படங்களை ஒப்பிட்டும் எழுத நம்மால முடியாது சாமி! (அதுக்கு வேற்றுமொழிப்படங்களைப் பார்க்கும் அறிவும் இருக்கணுமில்ல.. நமக்குத்தான் லோக்கல் அறிவே கிடையாதே!) ஆனா நா எழுதுனத விட நீங்க எழுதியிருக்கிறது விளக்கமாகவும், தெளிவாவும் இருக்குங்கறத நா ஒத்துக்கிறேன்யா ஒத்துக்கிறேன். உண்மையச் சொல்றது எப்பவுமே ஒரு பாதுகாப்புத்தானே?) என் விமர்சனக் கவிதயப் படிக்கிற தெகிரியம் இருந்தா வாங்க - http://valarumkavithai.blogspot.in/2014/04/blog-post_5.html நன்றிங்க.

    ReplyDelete
  2. தொழில்முறை அடிப்படையில் வேற்றுமொழிப் படங்களையும் பார்க்க வேண்டிய அவசியமும் தேவையும் இருப்பதால், நாங்கள் பார்க்கிறோம்... அவ்வளவுதான் அய்யா.. உங்கள் விமரிசனக் கவிதையை படித்தேன் அய்யா... மிகச் சிறப்பாக இருந்தது.. வாழ்த்துக்களும் நன்றியும்..

    ReplyDelete