Wednesday 30 April 2014

வாயை மூடி பேசவும்:

’காதலில் சொதப்புவது எப்படி’ என்ற திரைப்படத்தைக் கொடுத்த இயக்குநர் பாலாஜி மோகனின் இரண்டாவது படம் இந்த வாயை மூடிப் பேசவும்.. தொடர் பணி சூழலால் புத்தகங்கள் படிப்பது, திரைப்படங்கள் பார்ப்பது, ஏன்..? தினசரி செய்தித்தாள் படிப்பது கூட குறைந்துவிட்டது.. கிம் கியின் வரிசை, எஸ்.ராவின் இலக்கிய முகாம் இப்படி எழுதத் தொடங்கிய பல விசயங்கள் பாதியிலேயே நிற்கிறதே என்ற மனத்தாங்கல் வேறு விடாமல் இம்சிக்கிறது… நேற்று கிடைத்த சொற்ப நேர இடைவெளியில் எப்படியோ சரிக்கட்டி இரண்டு படங்களைப் பார்த்தாகிவிட்டது… அதில் ஒன்று இந்த வாயை மூடிப் பேசவும் திரைப்படம்.. இந்த திரைப்படத்தை நான் பார்க்க திட்டமிட்டதற்கு காரணம் கண்டிப்பாக இயக்குநர் பாலாஜி மோகன் அல்ல… ஏனென்றால் அவரது முந்தைய படைப்பில் எனக்கு பெரிதாக ஒட்டுதல் இல்லை.. அதையும் மீறி இந்தப் படத்தைப் பார்க்க மிக முக்கியமான காரணம் படத்தின் தலைப்பு… அர்த்தம் பொதிந்த கனமான தலைப்பாகவே அது எனக்குத் தெரிந்தது…


இந்த தலைப்பை கேட்டால் என்ன தோன்றுகிறது… ”அதிகமாக பேசாதீர்கள்.. பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள்..” அல்லது ”வாயை மூடியும் பேசமுடியும்” ”உங்களுடைய பேச்சால் எத்தனை பேரின் வாழ்க்கை வறண்டு போகிறது… அதனால் வாயை மூடிப் பேசுங்கள்…” “டே.. பேச்சக் குறைடா…” இப்படி இந்த தலைப்பைக் கேட்டால், தேவையில்லாத பேச்சுக்களால் ஏற்படும் பிரச்சனைகள் என பேசுவது தொடர்பாக ஏற்படும் பல பிரச்சனைகளைச் சுற்றி நமக்கு எண்ணங்கள் ஓடும்.. ஆனால் இயக்குநருக்கு ஒரு வித்தியாசமான எண்ணம் தோன்றி இருக்கிறது… அதாவது ஒரு நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவு இடுகிறது… அந்த உத்தரவு என்னவென்றால் “அந்த குறிப்பிட்ட ஊரில் உள்ள யாரும் வாயைத் திறந்து பேசக் கூடாது… அப்படியானால் எண்ணங்களை பரிமாற்றம் செய்ய, சைகை மூலமாக வாயை மூடி பேசலாமா என்று கேட்டால்..? அதற்கு தடையில்லை.. நீங்கள் பேசிக்கொள்ளலாம்… ஆனால் வாயைத் திறந்து மட்டும் பேசக்கூடாது” என்பதே அந்த உத்தரவு.. இப்படி ஒரு வித்தியாசமான அல்லது விபரீதமான கற்பனை இயக்குநருக்கு வந்திருக்கிறது… இந்த அதிஅற்புதமான புனைவு சார்ந்த கற்பனைக்காக மட்டும் இயக்குநருக்கு ஒரு கூடை வாழ்த்துக்களை இப்போது உடனடியாக பார்சல் செய்வோம்…

தலைப்புக்கு ஏற்றபடி உண்மையிலேயே கனமான கற்பனை தான்… சரி இப்போது இயக்குநரின் அந்தக் கற்பனையை கடன் வாங்கி நம் கற்பனையாக வைத்துக் கொள்வோம்.. படிப்பதை நிறுத்திவிட்டு ஒரு ஐந்து நிமிடம் யோசிப்போம்… எதற்காக அரசாங்கம் அப்படி ஒரு உத்தரவைப் போடுகிறது..? இதற்குப் பிண்ணனியில் என்னென்ன காரணங்கள் இருக்கலாம்..? நாமாக காரணங்களை ஒரு கதையாக அடுக்கலாமா..? ம்ம்ம்… ஒருவேளை மக்கள் அதிகமாகப் பேசுவதால் புரட்சிகரமான கருத்துக்கள் பரவி அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்யலாம் என்ற பயத்தால், அப்படி ஒரு உத்தரவைப் போட்டு இருக்கலாம்… அல்லது இரு வேறு தாய்மொழி பேசக்கூடிய மக்கள் அந்நகரில் சரிக்கு சமமாக இருந்து என் மொழி பெரிதா…? உன் மொழி பெரிதா..? என்று ஓயாமல் சண்டை போட்டுக் கொண்டிருக்க.. அந்த சண்டையை நிறுத்த வழிதெரியாத அரசு, உலகின் தேசிய  மொழியான சைகை மொழியை மட்டும் அவர்கள் பேசட்டும் என்று மேற்சொன்ன உத்தரவை இட்டிருக்கலாம்.. அல்லது சரியாக கமிஸன் கொடுக்காத செல்போன் கம்பெனிகளின் வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்த இப்படி ஒரு உத்தரவைப் போட்டிருக்கலாம்..  அல்லது ஒரு சர்வாதிகாரி தன் ஆணவத்தால் அப்படி ஒரு உத்தரவைப் போட்டிருக்கலாம்… இப்படி நமக்கு சில கற்பனைகள் தோன்றும்… ஆனால் இங்கும் இயக்குநருக்கு வித்தியாசமான மற்றொரு கற்பனை… கூடுதலாக இன்னும் ஒரு ஐந்து நிமிடம் யோசித்து இருந்தால் நீங்களும் கூட அந்த கற்பனையை கண்டெடுத்தும் இருக்கலாம்… கை நழுவவிட்டும் இருக்கலாம்… இயக்குநருக்கு வந்த அந்த கற்பனை என்னவென்றால், “மக்கள் பேசுவதால் ஒருவித தொற்றுநோய் பரவி பேசும் சக்தியை இழந்து உயிரிழப்பு ஏற்படுகிறது…” என்பதே அந்தக் கற்பனை..

இதுவும் உண்மையிலேயே ஒரு அட்டகாசமான கற்பனை தான்… சரி.. இப்போது இந்தக் கற்பனையையும் கடன் வாங்குங்கள்.. இதன் பிண்ணனியில் என்னென்ன காரணங்கள் இருக்கலாம் என்று கதையாக அடுக்க முயலுங்கள்.. ம்ம்.. ஏதேனும் மருந்து கம்பெனி கொள்ளை லாபம் பார்க்க.. இப்படி ஒரு புதிய நோயைப் பரப்பி இருக்கலாம்.. அல்லது வழக்கம் போல் வெளிநாட்டு சதியாக இருக்கலாம்.. சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஏற்பட்ட பிரச்சனையாக இருக்கலாம்.. உணவு பழக்கத்தில் ஏற்பட்ட மாறுபாட்டால் ஏற்பட்ட பிரச்சனையாக இருக்கலாம்… அந்த நகரத்தில் ஒரு விண்கல் விழுந்து அதனால் ஏற்பட்ட பிரச்சனையாக இருக்கலாம்… மரபணு மாற்றப்பட்ட காய்கறிகளை பயன்படுத்தியதால் இருக்கலாம்.. இப்படி நமக்கும் எத்தனையோ கற்பனைகள் தோன்றும்… நம் கற்பனைகள் இருக்கட்டும்… இயக்குநருக்கு என்ன கற்பனை தோன்றியது.. படத்தில் என்ன காட்டி இருக்கிறார் என்று கேட்கிறீர்களா…? அவர் பேராசை பெரு நஷ்டம் என்பதை உணர்ந்தவர் போலும்.. அதிகமாக கற்பனை வர வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படாமல் மேற்சொன்ன அந்த இரண்டு அட்டகாசமான கற்பனைகளிலேயே திருப்திபட்டுக் கொண்டார்… என்றே தெரிகிறது… படத்தைப் பார்த்துக் கொண்டே அந்த நோய் ஏன் வந்தது என்று ஆராய்ந்தால், எத்தனையோ புதுசு புதுசா நோய் வருதுல்ல பாஸ்… அதுமாதிரி தான்… கதைக்கும் புதுசா இருந்துச்சி.. வச்சிக்கிட்டோம்… என்று அசால்ட்டாக சொல்லி நகருவதைப் போல் தான் திரைக்கதை இருக்கிறது..

சரி.. அரசாங்கத்திடமிருந்து பேசக் கூடாது என்று உத்தரவு… பேசினால் உயிர் போய்விடும்.. இப்படிப்பட்ட சூழலில் ஒரு கதையில் என்னவெல்லாம் செய்யலாம்.. இதுவரை பேசி வந்த மக்கள் இனி பேசக்கூடாது என்பதை எப்படி எடுத்துக் கொள்கின்றனர் என்று காட்டலாம்.. அல்லது மொழி இல்லாமல் இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை என்று அழுத்தமாக காட்டி இருக்கலாம்.. வாய் பேச முடியாதவனின் உணர்வுகளைக் காட்டியிருக்கலாம்.. பேசப் பழகும் குழந்தையைப் பற்றி பேசி இருக்கலாம்.. பேசாமல் இருப்பதால் ஏற்படும் நன்மைகளைக் காட்டியிருக்கலாம்.. பேச வேண்டிய கட்டாயம் இருப்பதை காட்டியிருக்கலாம்.. பேசுவதையே தொழிலாகக் கொண்டவர்களின் உலகத்தைக் காட்டியிருக்கலாம்… சைகை மொழியில் உள்ள சிக்கலைக் காட்டி இருக்கலாம்… மீண்டும் பேசுவதற்காக ஏங்கும் மக்களின் ஏக்கத்தைக் காட்டி இருக்கலாம்.. இப்படி எத்தனையோ விசயங்களை காட்டி இருக்கலாம்.. இவர்கள் என்ன காட்டியிருக்கிறார்கள் தெரியுமா..? அதையும் பார்ப்போம்..

அரவிந்த் ஆக வரும் நாயகன் துல்கர் சல்மானுக்கு பேச்சு சாமர்த்தியத்தால் பொருட்களை விற்கும் சேல்ஸ்மேன் வேலை.. அந்த பேச்சு சாமர்த்தியம் தனக்கு இருப்பதை உணர்ந்த இவர் பண்பலை வானொலியில் ஒரு ஆர்.ஜெ –வாகவும் முயற்சிக்கிறார்… அஞ்சனாவாக வரும் நாயகி நஸ்ரியாவுக்கு பெண் டாக்டர் கதாபாத்திரம்.. பிறர் அதிகமாக பேசுவதால் தான் எல்லாருக்குமே பிரச்சனை என்று எண்ணும் கதாபாத்திரம்… தன் சிற்றன்னையாக வரும் மதுபாலாவை தன் தாயாக ஏற்றுக்கொள்ள முடியாமல் மறுத்து, அவளிடம் பேசுவதை வெகுவாக தவிர்த்து தன் வீட்டுக்குள் தான் விரும்பியபடி நடக்கும் அஞ்சனா, தன் காதலனிடம் அல்லது கணவனாக வரப்போகிறவனிடம் மட்டும் அடிமையைப் போல் நடந்து கொள்ளும் ஒரு குழப்பமான கதாபாத்திரம்… தன் தந்தையிடம் தான் விரும்பியபடிதான் நடந்து கொள்வேன் என்று பேசும் இந்தக் கதாபாத்திரம், தன் வருங்காலக் கணவனிடம் மட்டும் ஏனோ அதைச் சொல்லாமல், அடிமையைப் போல் வளைய வருகிறார்..


இந்த இரண்டு பிரதான கதாபாத்திரங்கள் தவிர்த்து, தனக்கு ஆர்வம் ஓவியம் வரைவதில் தான், படிப்பதில் இல்லை என்பதை தன் தாயிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் சிறுவன் கதாபாத்திரம்.. எழுத்தாளரான தான் குடும்ப வாழ்வுக்கு வந்துவிட்டாலும் தொடர்ந்து எழுத விரும்புகிறேன் என்பதை தன் கணவனிடம் தெரிவிக்க முடியாமல் திணறும் மதுபாலாவின் கதாபாத்திரம்.. பெற்ற மகன் ஓடிப் போய் கல்யாணம் செய்து கொண்டதால், எல்லோரிடமும் வெறுப்புடன் நடந்து கொள்ளும் வினுச்சக்கரவர்த்தியின் கதாபாத்திரம், என்ன பேசுவது என்றே தெரியாமல் ஏதாவது பேசி பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் சுகாதாரத்துறை அமைச்சர் பாண்டியராஜனின் கதாபாத்திரம், நடிகர் பூமேஷாக வரும் ஜான்விஜய் கதாபாத்திரம், அவர் தன் படத்தில் குடிகாரர்களை அசிங்கப்படுத்திவிட்டார் என்று அவரது படத்தை தடை செய்ய போராடும் தமிழ்நாடு குடிகாரர் சங்க தலைவராக வரும் ரோபோ சங்கர் கதாபாத்திரம், பூமேஷின் ரசிகராக வரும் ரமேஷ் கதாபாத்திரம், பிரைம் டிவியில் செய்திவாசிப்பாளராக வரும் இயக்குநர் பாலாஜி மோகனின் கதாபாத்திரம் என்று ஒரு மெகா சீரியல் அளவுக்கு ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்..

இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்க.. அதே நேரத்தில் ஊருக்குள் தொற்றுநோய் பரவுகிறது. இறுதிக்காட்சி நெருங்க நெருங்க ஒவ்வொருவருக்கும் பிரச்சனை தீர்ந்து போகிறது… இந்த பிரச்சனை தீர்ந்து போவதற்கு, இந்த தொற்றுநோய் வந்ததும் அரசாங்கம் சட்டம் போட்டதும் தடையாக இருந்ததா..? இல்லை உதவியாக இருந்ததா…? என்பது இயக்குநருக்கே வெளிச்சம்… இந்த நோய்க்கும், அரசாங்கம் சட்டம் போட்டதற்க்கும் இவர்களுக்கு இருக்கின்ற பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை.. இதில் நாயகன், பேசிவிட்டால் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்ற நிலைப்பாடு உடையவன், நாயகியோ பேசுவதால் தான் பிரச்சனையே என்ற நிலைப்பாடு உடையவள், நடுவே வரும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் பேச்சு மொழி தேவையே இல்லை என்பது போன்ற கருத்தை வேறு தூவிச் செல்கிறார்கள்.. படத்தின் தலைப்போ வாயை மூடிப் பேசவும்… ஆக இவர்கள் என்னதான் சொல்ல வருகிறார்கள்..?


இதில் பேசியே எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு காண நினைக்கும் நாயகன், தன் ஆசிரமத்தை மீட்க வினுச்சக்கரவர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தி தோற்கிறான்… நடிகர் பூமேஷை எதிர்க்கும் குடிகார சங்கத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி தோற்கிறான்.. இப்படி அவன் தோற்றுக் கொண்டே இருக்க கடைசி காட்சியில் நாயகி சொல்கிறாள்.. “நீ சொன்னதுதா சரி.. நீ ஜெயிச்சிட்ட..” இப்படி நம்மை குழப்பியடிக்கும் காட்சிகள் திரைக்கதையில் ஏகத்துக்கு உண்டு. இதுபோதாதென்று இயக்குநர் வேறு இரண்டு காட்சிக்கு ஒரு முறை செய்தி வாசிக்கிறேன் என்கின்ற பெயரில் காமெடி செய்வதாக எண்ணிக் கொண்டு நம்மை மேலும் வெறுப்பேற்றுகிறார்…

இப்படி ஒரு நல்ல ஐடியாவை மட்டும் பிடித்துவிட்டு, முழுக்கதையையும் முடித்துவிட்டதாக திருப்திபட்டுக் கொண்டு படப்பிடிப்புக்கு கிளம்பிவிடும் இயக்குநர்களின் பட்டியல் தமிழ் சினிமாவில் வரவர நீண்டு கொண்டே செல்கிறது… இப்படி ஒரு நல்ல ஐடியாவை பிடித்துவிட்டு, அதனை முழுக்கதையாக செதுக்குவதற்கான உழைப்பை அந்தக் கதைக்கு கொடுக்காமல், தங்களுக்கு தாங்களே திருப்திபட்டுக் கொண்டு, கதையை முழுமையடைய விடாமல் சிதைத்து விடுகின்றனர்.. இதன் மையக் கதையைக் காட்டிலும் கிளைக் கதையாக வரும் சில கதைகள் ஈரமும் ஈர்ப்புமுள்ளதுமாக இருக்கிறது.. இப்படி முழுமை பெறாத கதை, ஏராளமான கிளைக்கதைகள், குழப்பமான கதை மையம், தெளிவில்லாத நோக்கம் என ஏக குறைகளைக் கொண்டிருக்கிறது இந்த வாயை மூடிப் பேசவும்… இருப்பினும் அந்த வித்தியாசமான கதைக்களனும் அந்த புதிய கற்பனையும் தான் படத்தைக் கொஞ்சமேனும் காப்பாற்றுகின்றன… படத்தைத் தான்… நம்மை அல்ல… அதுபோல் ஆங்காங்கே வரும் வசனங்களில் சில நன்றாக இருந்தன… அதில் குறிப்பாக நாயகனிடம் அந்த ஆசிரமத் தலைவி கூறும் கீழ்க்கண்ட வசனம்.. “இந்த உலகத்துல இருக்குற எல்லாரும் உன்னோட உதவிய நம்பித்தான் வாழ்றாங்கங்கிற முட்டாள்தனமான எண்ணத்த முதல்ல விடு…” அதுபோல வசனமே இல்லாமல் கடந்து செல்லும் அந்த பதினைந்து நிமிடப் படமும் ஒரு நல்ல முயற்சி.. அதற்காகவும் பிரத்யேக பாராட்டுக்கள்..

மம்முட்டியின் மகனான துல்கர் சல்மானுக்கு நடிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.. மிகச் சரளமாக நடிப்பு வருகிறது.. எக்ஸ்பிரஸன்களும் அழகாகவே வருகிறது… நிச்சயமாக தமிழிலும் நல்ல எதிர்காலம்… வழக்கத்துக்கு மாறாக அதிகம் பேசாத, முக சேஷ்டைகள் காட்டாத நஸ்ரியா… இருந்தாலும் குறை சொல்ல முடியாத அழகு.. இவர்களை அடுத்து படத்தில் அதிகமாக கவர்பவர் ரோபோ சங்கர் தான்… அந்தக் கிளைக்கதையே படத்துக்கு தேவை அற்றது என்றாலும் கூட அவரது பாடிலாங்குவேஜ் தான் படத்தை சில இடங்களிலாவது காப்பாற்றுகிறது.. இசையமைப்பாளர் சீன் ரோல்டன் என்னும் ராகவேந்திர ராஜா ராவ் தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல வரவு… இசையும் பிண்ணனியும் பல இடங்களில் கவனிப்பை கோரி நிற்கிறது.. வாழ்த்துக்கள்…


மொத்தத்தில் இந்த வாயை மூடிப் பேசவும் திரைப்படம் ஒரு புதிய ஆனால் முழுமைபெறாத, முழு செறிவுடன் எடுக்கப்படாத ஒரு முயற்சி… அந்த புதிய கதைக்களனுக்காகவும், அந்த அற்புதமான அதீத கற்பனைக்காகவும் ஒரே ஒரு முறை பார்க்கலாம்… இடையிடையே உங்கள் பொறுமையை சீண்டிப் பார்ப்பது போல் பல காட்சிகள் வரும்… அதை பொறுமையோடு கடக்க கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்…

Thursday 24 April 2014

QUEEN:

ஆனந்த கூச்சலுடன் ஒரு திரைப்படம் பார்த்து வெகுகாலம் ஆகிவிட்டது.. அப்படி ஒரு ஏக்கத்தை சமீபத்தில் தீர்த்து வைத்திருக்கும் படம் விகாஷ் பாஹலின் இயக்கத்திலும் அனுராக் காஷ்யப்பின் தயாரிப்பிலும் வெளிவந்து கங்கணா-வின் அற்புதமான நடிப்பால் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் குயின் திரைப்படம்.. இத்திரைப்படம் ஒரு பெண்ணியச் சிந்தனையிலான திரைப்படம் என்கின்ற கருத்தை எந்தப் புள்ளியிலுமே மறுக்க இயலாது என்றாலும், இதை முழுக்க முழுக்க அப்படியே எடுத்துக் கொள்ள எனக்கு மனமில்லை.. பரந்துபட்ட இந்த வாழ்க்கையில் தனித்து விடப்படும் ஒவ்வொரு ஜீவராசிகளும், தனித்து விடப்படும் அந்த தருணத்தில், அந்த விநாடிகளில் எதிர்கொள்ளும் கேள்வி அவர்கள் இல்லாமல் நான் எப்படி வாழப் போகிறேன்.. நான் என்ன செய்யப் போகிறேன் என்பதே..? அவர்களுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தையும் வாழ்வதில் இருக்கும் அதிஅற்புதமான அனுபவத்தையும் இனிக்க இனிக்க காட்சிக்கு காட்சி கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றது குயின் திரைப்படம்.


மிகமிக சாதாரணமான ஒரு கதை… எந்த சுவாரஸ்யமும் இல்லாத ஒரு திரைக்கதை… படம் தொடங்கி பத்து நிமிடத்திலேயே அதன் முடிவு என்ன என்பதும் மிகத் தெளிவாக பலருக்கு புரிந்துவிடும்.. அப்படி இருந்தும் ஒரு திரைப்படம் எப்படி நம்மை ஈர்க்கிறது என்றால், அதற்கு காரணம் அதில் இருக்கின்ற அப்பழுக்கற்ற வாழ்க்கை.. ஒப்பனை இல்லாத உணர்வுகள்.. அது ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் விதைக்கும் தன்னம்பிக்கை.. இப்படி நிறைய நிறைய காரணங்கள் இருக்கின்றன இத்திரைப்படம் நம்மை ஈர்ப்பதற்க்கு.. இதுவொரு இந்தி வட்டார மொழியைப் பேசும் இந்திய மொழித் திரைப்படம் என்பதால், இத்திரைப்படம் பேச எத்தனிக்கும் விடயங்களின் பரிணாமத்தை இந்திய மரபு சார்ந்தே அணுக வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.. அப்படித்தான் நாம் அதை அணுகவும் போகிறோம்..


கதையின் நாயகி ராணி. ஒரு சராசரியான மத்திய நடுத்தர வர்க்கத்தை சார்ந்த  பெண்.. இரண்டொரு நாளில் தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணைப் பார்க்க ஹோட்டலுக்குச் செல்லும் போதும் கூட காவலாக தன் தம்பியை துணைக்கு அழைத்துச் செல்பவள்.. தன் தாய் தந்தையரின் எதிரிலும் கூட ஒரு ஆணுடன் பேச கூச்சப்படும் வெட்கப்படும் ஒரு சராசரி இந்தியப் பெண் அவள்.. அவளது தந்தையின் நண்பர் மகன் இவளைப் பார்த்து மயங்கி, காதலிக்கத் தொடங்கி அது கல்யாணத்தில் வந்து நிற்கும் போது, அவளது கிராமத்து பாணியிலான உடையலங்காரம், பேச்சு, நாகரீகம் போன்றவை தான் வாழ நினைக்கும் பகட்டான வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது என்றும் அதை தான் காலங்கடந்து உணர்ந்து கொண்டதாகவும் சொல்லும் அவளது காதலன் விஜய் திருமணத்தை நிறுத்திவிடுகிறான்.. அவள் தன் பெற்றோரின் நிலைக்காக கெஞ்சிக் கேட்டும், தன் நிலையைச் சொல்லி மன்றாடியும் கூட அவன் மனம் மாறவில்லை.. திருமணம் நிற்கிறது.. ஒரு அறைக்குள் சென்று பூட்டிக் கொள்ளும் ராணி தான் எதிர்ப்பட வேண்டிய கேள்விகளுக்கும் கரிசனைகளுக்கும் அனுதாபங்களுக்கும் பயந்தே அங்கிருந்து எங்காவது ஓடிவிட எண்ணுகிறாள்.. தன் காதலனுடன் திருமணத்துக்குப் பிறகு பாரீஸ் மற்றும் ஆம்ஸ்டர்டாம் செல்வதற்காக எடுக்கப்பட்ட விசா மற்றும் பயணச்சீட்டை எடுத்துக் கொண்டு தனியாகவே பாரீஸ் கிளம்புகிறாள்.. முதலில் தயங்கும் அவளது பெற்றோரும் மனதை திடப்படுத்திக் கொண்டு அவளை அனுப்பி வைக்க… அவள் பாரீஸ் மற்றும் ஆம்ஸ்டர்டாம் பயணத்தின் மூலம் பெற்றுக் கொண்டு திரும்பும் அனுபவங்கள் அவளை எப்படி ஒரு முதிர்ச்சியான பெண்ணாக மாற்றுகிறது என்பது தான் மீதிக்கதை..

ஆக… ஒரு சராசரி இந்தியப் பெண்ணின் மீது இந்தியாவின் சமூக அறநிலைய கட்டுமானங்கள் அடுக்கி வைத்திருக்கும் கட்டுப்பாடுகள் ஒரு பெண்ணை எந்த அளவுக்கு தன்னம்பிக்கை குலைந்தவளாக, ஒரு ஆண் இல்லாமல் தன்னால் வாழவே முடியாது என்கின்ற அளவுக்கு நிலைகுலைந்தவளாக மாற்றி வைத்திருக்கிறது என்பதும், மறைமுகமாக ஆதரிக்கப்பட்டு வரும் ஆணாதிக்க சிந்தனைகளையும் இத்திரைப்படம் கேலி செய்கிறது.. எந்தவொரு சூழலிலும் தனித்து வாழமுடியாத ஜீவனாகவே பெண்கள் பிம்பமாக்கப்படுவதன் அரசியலும், ஒரு ஆணை நம்பியே பெண் வாழ வேண்டும் என்கின்ற ரீதியில் கண்ணுக்கு புலப்படாத வண்ணம் கட்டமைக்கப்பட்டுள்ள கன்னிகளும், அதை மீறி வாழ முற்படும் ஒரு பெண்ணின் மீது துவேஷம் கொண்டு சேற்றை வாரி இறைக்க காத்துக் கொண்டிருக்கும் சேவகர்களையும் எண்ணிப் பார்க்காமல் சில காட்சிகளை நம்மால் கடக்க இயலாது.. தன் பயணத்தின் போது ராணி பார்க்கின்ற ஒவ்வொரு பெண்களின் கதாபாத்திர சித்தரிப்பும் மிகுந்த சிரத்தையோடு உருவாக்கப்பட்டு இருக்கிறது..

பாரிஸ் விமானத்தில் ஏறிவிட்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் கங்கணாவின் கண்களில் தெரியும் முதல் நம்பிக்கை கீற்று எதுவென்றால், வெகு இயல்பாக சுதந்திரமாக அந்தரத்தில் பறந்து கொண்டிருக்கும் போதும் அதற்கான எந்த பயமும் இன்றி ஒய்யாரமாக தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் அந்த இரண்டு விமானப் பணிப் பெண்களைப் பார்க்கும் போது, கங்கணாவிற்குள் ஏற்படும் அந்த பிரமிப்பான தருணங்கள் தான்.. அந்த தருணங்கள் தான் பாரீஸ் நகருக்குள் தன் கைப்பையை திருடனிடம் இருந்து காப்பாற்ற முயலும் தைரியத்தை அவளுக்கு கொஞ்சமேனும் கொடுக்கிறது.. அடுத்ததாக அவளுக்குள் நம்பிக்கையை வளர்ப்பவர் விஜயலட்சுமியாக வந்து செல்லும் லிசா ஹெய்டன்.. இந்தியத் தந்தைக்கும் ப்ரான்ஸ் தாய்க்கும் பிறந்த பெண்ணாக வரும் இக்கதாபாத்திரம் ராணி தங்கி இருக்கும் ஹோட்டலில் பணிப்பெண் வேலை செய்யும் கதாபாத்திரம்.. இவளுக்கு ஒரு குழந்தை உண்டு… ஆனால் கணவன் கிடையாது… தனக்கான தேவைகளை தானே பூர்த்தி செய்து கொண்டு, யாரையும் நம்பி இராமல் தன்னிச்சையாக இயங்கும் கதாபாத்திரம்.. இவள் ராணியிடம் உடை சார்ந்தும் மனம் சார்ந்தும் ஏற்படுத்துகின்ற மாற்றங்கள் ஏராளம்… ராணியின் பாஸ்போட்டை தன் சாமர்த்தியத்தால் மீட்டுத் தரும் விஜயலட்சுமியின் நட்பு கிடைத்த நம்பிக்கையில் தான், மீண்டும் உடனடியாக இந்தியா செல்லும் தன் முடிவை ஒத்திப் போடுகிறாள் ராணி… அதுபோல விஜயலட்சுமியின் நண்பியாக வரும் பெண்ணின் கதாபாத்திரமும் அதே வடிவ தோரணையுடன் தான் சித்தரிக்கப்பட்டு இருக்கும்..


அடுத்ததாக ஆம்ஸ்டர்டாம் விடுதியில் தங்கும் போது ஜப்பானிய நாட்டைச் சேர்ந்த டாகா, ரஸ்ய நாட்டைச் சேர்ந்த அலெக்சாந்தர், ப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டிம் ஆகியோர்களுடன் ஒரே அறையில் தங்கவேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு… முதலில் அந்த அறையில் தங்கும் அவள் அவர்களைக் கண்டு பயப்படுவதும்.. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்புறவும்.. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் வெவ்வேறு விதமாக வந்து செல்லும் பிரச்சனைகளையும் கண்டு வாழ்க்கையின் வடிவத்தை புரிந்து கொள்ள முற்படும் தருணங்களாக அந்தக் காட்சிகள் கடந்து செல்லும்.. மேலும் இத்தாலிய உணவு விடுதி நடத்தும் ஒருவருடன் ராணிக்கு ஏற்படும் மோதலும், அந்த மோதலின் முடிவில் உணவுக் கண்காட்சியில் இந்திய உணவுகளை சமைத்துக் காட்ட அவளை அவர் அழைப்பதும், அங்கு அவள் கொல்கத்தாவில் பிரசித்திப் பெற்ற கோல்கொம்பா என்ற பானிப்பூரி வகையை சமைத்துக் காட்டி வாடிக்கையாளர்களை கவர்வதும்.. அதற்காக அவளுக்கு கிடைக்கும் பாராட்டுகளும் பரிசுகளும் அவளது தன்னம்பிக்கையை அடுத்த படிக்கு நகர்த்துகின்றன.. மேலும் அங்கு ராணிக்கு அவளது விருப்பத்தின் பேரில் கிடைக்கும் முதல் முத்த அனுபவமும் அற்புதமான கலாச்சார மீறல்.. இப்படி பேரில் மட்டுமே ராணியாக இருக்கும் அவள், தன் வாழ்க்கையை வாழும் நுட்பத்திலும் ஒரு ராணியாக மாறி நிற்பதாக அத்திரைப்படம் ஒரு புள்ளியில் முடிவடைகிறது…

இப்படி ஒவ்வொரு படிநிலையிலும் வாழ்க்கையின் மீதான வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தேவையான தன்னம்பிக்கை மீதான நம்பிக்கை அவளுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது… மேலும் ஒரு புள்ளியில், அவள் தான் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டிய உணர்வுகளை வெளிப்படுத்தாமல் பூட்டிக் கொள்ள வேண்டிய சராசரி இந்தியப் பெண் என்கின்ற மனநிலையில் இருந்து மாறி, ஆண் பெண் என்கின்ற பாகுபாடுகளைக் கடந்து தன்னையும் இவ்வுலகின் ஒரு ஜீவராசியாக, சந்தோசமாக வாழப் பிறந்த ஜீவராசியாக மாற்றிக் கொள்ளும் தருணம் அதி அற்புதமானது… தன்னை தேடி ஆம்ஸ்டர்டாம் வரை வந்த விஜயிடம் உனக்கான பதிலை இந்தியாவில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு, பிரிந்து செல்ல இருக்கும் தன் நண்பர்களைக் காண துள்ளலுடன் ஓடிச் செல்லும் ராணியின் அந்த ஓட்டத்தில் வெளிப்படுகிறது அத்தனை அதிஅற்புதமான தருணங்களும்..


நாமும் இதுபோன்ற எத்தனையோ பெண் கதாபாத்திரங்கள் வீறுகொண்டு எழும் திரைப்படங்களை… போலித்தனமான புனைவு பிம்பங்களுடன் பார்த்திருப்போம்.. அவர்களும் தங்களது மீதி வாழ்க்கையை ஒருவிதமான ஆங்காரமான ஆவேசமான இறுக்கமான மனநிலையுடன் கழிப்பதாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.. அப்படி இல்லாமல் தன்னையும் தன் வாழ்க்கையையும் புரிந்து கொண்டு மிக இயல்பாக, யதார்த்தத்துடன் தன் வாழ்க்கையை வாழத் துணியும் இந்த ராணி கதாபாத்திரம் நமக்குப் புதியதே.. அதுபோல பெரும்பாலும் நம் திரைப்படங்கள் காட்டுகின்ற அன்பு என்பது மிகைப்படுத்தப்பட்ட அன்பையே காட்சிப்படுத்துகின்றன.. அந்த அன்பு இல்லாமல் தன்னால் வாழவே முடியாது என்கின்ற மனோநிலைக்கு எதிர் கதாபாத்திரத்தை தள்ளுவதாகவும் பல நேரங்களில் அந்த அன்பு இருக்கிறது.. என்னுடைய கேள்வி எல்லாம் அப்படி ஒருவனுடைய தன்னம்பிக்கையை குலைத்து தான் இல்லாமல் அவன் வாழவே முடியாது என்கின்ற நிலைக்குத் தள்ளுகின்ற உணர்வு எப்படி அன்பாக இருக்க முடியும்…? என்பதே.. அதே கேள்வியைத் தான் இந்த திரைப்படமும் வேறொரு கோணத்தில் அணுகுகிறது…

இக்கதையில் உரையாடல் பகுதியிலும் சில காட்சிகளுக்கான விவாதங்களிலும் கூட கங்கனாவின் பங்களிப்பு இருப்பதாகத் தெரிகிறது.. ஒரு மிகச் சிறந்த நடிப்புத் திறமையுள்ள நடிகையாக இருந்தும், அவரது பின்புலம் சாதாரணமான நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தது என்ற ஒரே காரணத்தாலேயே பாலிவுட் வட்டாரத்தில் பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டும் கண்டுகொள்ளப் படாமலும் விடப்பட்டும் வரும் நடிகை என்பதால் தன்னுடைய சுய அனுபவத்தில் இருந்தே இவர் பல விசயங்களை எடுத்தாண்டிருக்க வாய்ப்புள்ளது… அவரது சுய அனுபவமாக இருந்தாலும் அதுவே இங்கிருக்கும் எல்லாப் பெண்களுக்கும் பொருந்திப்போவதாக இருப்பதும் நம் கலாச்சாரச் சிறப்பு.. சிலருக்கு வேறொரு பார்வையில் பார்க்கும் போது இந்த க்யூன் திரைப்படம் பெரிதாக எதையுமே முன் வைக்காமல், பாலியல் சுதந்திரத்தை மட்டுமே பேசுவதாக தோற்றம் தருவதற்க்கும் வாய்ப்பு உண்டு.. ஆனால் அதற்கான என்னுடைய பதில் என்னவென்றால், “பெண்களின் மீதாக விதிக்கப்படும் பலவிதமான கட்டுப்பாடுகளுக்குப் பிண்ணனியில் மறைமுகமாக இருப்பது அந்த பாலியல் சார்ந்த சுதந்திரம் தான் என்பதால், அதையே நாம் ஒன்றுமில்லாத மிகச் சாதாரண ஒரு விசயம் என்று சித்தரித்துவிட்டால், அதைப் பாதுகாப்பதாக நினைத்துக் கொண்டு நாம் விதிக்கின்ற கட்டுப்பாடுகள் எல்லாம் தேவையே இல்லாதது என்று விளங்கிவிடுமே என்ற பார்வையில்தான் அதை அணுக வேண்டியிருக்கிறது..


“Fashion” என்ற இந்தி திரைப்படத்தில் நடித்த பெண்ணா..? இவள் என்று மிகுந்த ஆச்சரியம் ஏற்படுகிறது… அந்தத் திரைப்படத்தில் ஏற்ற கதாபாத்திரத்துக்கு அப்படியே முற்றிலும் எதிரான ஒரு கதாபாத்திரம்.. அதையும் அப்படியே உள்வாங்கி எப்படி இவ்வளவு கச்சிதமாக வெளிக்காட்ட முடிகிறது என்ற எண்ணம் காட்சிக்கு காட்சி மேலோங்கிக் கொண்டே இருக்கிறது.. ராணியும் விஜயலட்சுமியும் ஒரு பாரில் குடித்துவிட்டு ஆடும் ஆட்டங்களும், அந்த இடத்தில் தன் உணர்ச்சி பொங்கி வெடித்து வெதும்பி அழும் ராணியின் உடல்மொழியும் வெகு சிறப்பு.. மேலும் தன் நண்பர்களுடன் செக்ஸ் டாய்ஸ் விற்கும் கடைக்குள் சென்றுவிட்டு அது என்ன பொருள் என்று தெரியாமலேயே எனக்கு ஒன்று என் தாத்தாவிற்கு ஒன்று, என் தம்பிக்கு ஒன்று என ஒவ்வொன்றாக பர்சேஷ் செய்யும் ராணியின் குழந்தைத்தனத்தில் வெளிப்படும் குணாதிசயம் வெகு அழகு… தன்னிடம் முதன்முதலில் முத்தம் கேட்கும் ஒரு ஆணிடம் முத்தம் கொடுக்க தயாராகும் முன் கங்கணாவின் அஷ்டகோணலான முக மாற்றங்கள் அத்தனையும் ஒவ்வொரு அழகு… மிகமிக சாதாரணமான காட்சிகளைக் கூட தன் தனித்துவமான நடிப்பால் மிளிரச் செய்யும் நுட்பம் இந்தப் பெண்ணுக்கு கைவந்திருக்கிறது… படம் இவ்வளவு தத்ரூபமாக வந்திருக்கிறது என்றால், அது முழுக்க முழுக்க கங்கணா ரணாவத் என்னும் இந்த அழகியின் குறை சொல்லவே முடியாத அந்த நடிப்பால் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது.. அமித் திரிவேதியின் அற்புதமான இசையும் பிண்ணனி இசையும் படத்துக்கு மிகப்பெரிய பலம்... அதுபோலத்தான் சில இடங்களில் வருகின்ற வசனங்களும்.. காட்சிகளின் தத்ரூபத்திற்காக படக் குழுவினர் ராணி கதாபாத்திரத்தின் ஆடைகள் மற்றும் ஒப்பனைகளில் காட்டிய வித்தியாசமும் மிகத் துல்லியமாக வேறுபாட்டைக் கொடுக்கிறது.. விகாஷ் பாஹல், கங்கணா, அனுராக், அமித் திரிவேதியின் கூட்டணி ஒரு அற்புதமான திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்கள்...

வாழ்க்கையில் எது மிகமிக முக்கியம் நண்பர்களே..!!!! அன்பு, நட்பு, காதல், அம்மா, நண்பன், காதலி இப்படி எத்தனையோ நாம் சொல்லலாம்.. இப்படி எத்தனையோ நாம் சொல்லலாம்… ஆனால் அவை எல்லாமே ஏதோவொரு உணர்ச்சிமிகுந்த மனநிலையில் நாம் சொல்வதாக இருக்கும்… அந்த பதில்கள் எல்லாமே உணர்ச்சி மனநிலைக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும்… ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும்… வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் எல்லா தருணங்களிலும் மிகமிக முக்கியமானது ”வாழ்வது மட்டுமே….” அதைவிட வாழ்க்கையில் மிகமிக முக்கியமானதாக எனக்கு வேறெதுவுமே தெரியவில்லை நண்பர்களே… அதையே தான் இத்திரைப்படமும் பேசுகிறது… நீங்கள் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம்.. ஏதோ ஒரு தருணத்தில், ஏதோவொரு காரணத்துக்காக உங்கள் உலகத்தையே நீங்கள் சுருக்கிக் கொண்டு இருந்திருக்கலாம்… அப்படி நீங்கள் சிந்திக்காமல் உங்கள் வாழ்க்கையை சுருக்கிக் கொண்டதாலயே, நீங்கள் நினைத்த உலகம் இன்று உங்கள் வாழ்க்கையின் சுவாசத்தை இறுக்கிக் கொண்டு இருக்கலாம்… உங்களுக்கு நீங்களே போட்டுக் கொண்ட அந்த கட்டுகளை அறுத்துக் கொண்டு, அறுக்கமுடியாத கட்டுகளை உடைத்துக் கொண்டு உங்கள் உலகத்தை விட்டு வெளியே வாருங்கள்.. நாம் நினைத்ததை விட இந்த உலகம் பிரமாண்டமானதாக இருக்கிறது…. உங்கள் வாழ்க்கையை ஒரு இராஜாவாகவோ ஒரு இராணியாகவோ வாழ முற்படுங்கள்…. அப்படி வாழ உங்களுக்குத் தெரியாது என்றால், கவலையை விடுங்கள்… இத்திரைப்படத்தைப் பாருங்கள்… அது அப்படி வாழ்வதற்கான ஆரம்பகட்ட வாழ்க்கைமுறையை உங்களுக்கு கற்றுக் கொடுக்கும்… அதிலிருந்து நீங்களே பல விடயங்களை கற்றுக் கொள்வீர்கள்.. உங்களுடைய வாழ்க்கையும் ஒரு இராணியின் வாழ்க்கையைப் போல் ஒரு இராஜாவின் வாழ்க்கையைப் போல் அமைய வாழ்த்துக்கள்….

Friday 11 April 2014

நான் சிகப்பு மனிதன்:

தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர் போன்ற திரைப்படங்களைக் கொடுத்த இயக்குநர் திரு அவர்களின் மூன்றாவது படம் இந்த நான் சிகப்பு மனிதன்.. ஒரு வணிகநோக்கோடு எடுக்கப்படும் கமர்ஸியல் திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தின் முதல் பாதியும்.. எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தின் இரண்டாம் பாதியும் மிகச்சிறப்பான சமீபத்திய உதாரணங்கள்..


பொதுவாகவே பார்வையாளர்களால் யூகிக்கமுடியாத சம்பவங்களால் தொகுக்கப்பட்ட திரைக்கதை மிகச்சிறப்பான திரைக்கதை என்ற எண்ணம் எல்லோருக்கும் உண்டு… அதை முழுக்க தவறான கருத்து என்று சொல்லிவிடவும் முடியாது.. ஆனால் பிரச்சனை என்னவென்றால் இயக்குநர் சொல்ல வருகின்ற அந்த யூகிக்க முடியாத சம்பங்கள், மக்கள் யூகித்து வைத்திருக்கும் சம்பவங்களை விட கண்டிப்பாக மேம்பட்டதாக இருக்க வேண்டும்.. அப்படி இல்லாத பட்சத்தில் அது பார்வையாளர்களை வசீகரிக்காது.. நான் சிகப்பு மனிதன் திரைப்படத்துக்கு நேர்ந்திருப்பதும் அதுவே தான்.. இரண்டாம் பாதியில் நாம் கொஞ்சம் கூட எதிர்பாராத திசையை நோக்கி கதை பயணிக்கிறது.. நிமிடங்களுக்கு நிமிடம் திருப்பங்களால் நிறைந்து இருக்கிறது திரைக்கதை.. ஆனால் அந்த திருப்பங்களும் ட்விஸ்டுகளும் நமக்கு ஆச்சரியத்தையோ ஆனந்தத்தையோ கொடுக்காமல் அதிர்ச்சியையும் அருவெறுப்பையும் கொடுப்பது தான் இத்திரைப்படத்தின் மிகமிக முக்கியமான குறை..

Narcolipsy என்பது ஒருவிதமான தூக்கத்துடன் தொடர்புடைய உடற்கூறியல் குறைபாடு.. இந்த நோய் பொதுவாக இலட்சத்தில் ஒருவருக்கு இருக்குமாம்.. இந்த நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் அளவுக்கு அதிகமான துக்கம், சந்தோசம், கோபம், பயம், அதிர்ச்சி, அழுகை, ஆசை இப்படி எந்தவகையான உணர்ச்சி மேலோங்கினாலும் உடனடியாக தூக்கத்துக்கு சென்றுவிடுவர்.. அவர்களாக மீண்டும் எழுந்தால் தான் உண்டு.. ஆனால் அந்த தூக்கத்தின் போதும் மூளை விழித்திருப்பதால் தங்களைச் சுற்றி நடக்கின்ற உரையாடல் மற்றும் சத்தங்கள் அவர்களுக்கு கேட்டுக் கொண்டே இருக்கும்.. இந்த நோய்தான் படத்தின் ஹைலைட்டான விசயம்…

சிறுவயதிலேயே விஷால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்… அவருக்கு காதலி கிடைப்பதோ கல்யாணம் ஆவதோ மிகப்பெரிய பிரச்சனை.. ஏனென்றால் ஒரு பெண் அவரது கையை தொட்டாலே ஏற்படும் உணர்ச்சி பிளம்புகள் கூட அவரை உறக்கத்துக்கு ஆட்படுத்திவிடும்.. இப்படி இருக்க ஒரு பெண்ணுடன் எப்படி அவரால் உடலுறவு கொள்ளமுடியும்.. எனவே அவருக்கு திருமணம் தள்ளிப் போகிறது.. இருப்பினும் ஒரு கட்டத்தில் நாயகியுடன் ஏற்படும் நட்புறவு அவர்கள் இருவருக்குமிடையேயான திருமணத்துக்கான சாத்தியக் கூறுகளை உண்டாக்குகிறது… அப்போது நடக்கின்ற ஒரு சம்பவம் இருவரது வாழ்க்கையையும் புரட்டிப் போட.. அந்த சம்பவத்துக்கு காரணமான நபர்களை பழிவாங்க துடித்து உறங்கத் தொடங்கி விடுகிறார் விஷால்.. இப்படி ஒரு நோயை வைத்துக் கொண்டு அவர் அவர்களை பழிவாங்கினாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை..


அவர்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் ஒரு சம்பவம்.. ஏற்கனவே நாயகனுக்கு இருக்கின்ற நோய்.. அதை மீறி அவர் அவர்களைப் பழிவாங்கினாரா..? இல்லையா..? இப்படி எல்லாமே சுவாரஸ்யமான தொகுப்புகள்.. இதில் எதிலுமே பிரச்சனை இல்லை.. பிரச்சனை எங்கு என்றால், அவர்கள் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட ஒரு சம்பவம் என்று சொன்னேனே… அந்த சம்பவம் எதற்காக அரங்கேறியது என்பதில் தான்… அதன் பிண்ணனியில் தான் பிரச்சனையே உள்ளது.. ஒரு திரைப்படத்துக்கு மிக முக்கியமான விசயங்கள் கதை திரைக்கதை என்ற இரண்டாக இருந்தாலும், அந்தக் கதை எதைப் பற்றியது என்பதை, பார்வையாளர்கள் புரிந்து கொள்வதைப் போல், முதல் அரைமணி நேரத்துக்குள் அதற்கான காட்சிகளை வைத்து அவர்களை தயார் செய்வதும் மிகமிக முக்கியமானது…

இப்போது நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தை விட்டுவிட்டு, விசித்திரமான நோய்களை பிரதானமாகக் கொண்டு ஏற்கனவே வெளிவந்த முக்கியமான மற்ற இரண்டு படங்களைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.. அந்நியன் மற்றும் கஜினி. இரண்டிலுமே நாயகர்கள் விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டு  இருப்பார்கள்.. இரண்டிலுமே கதையின் மையம் அந்த விசித்திரமான நோய் அல்ல.. அந்நியனில் சக மனிதர்களின் ஒழுங்கின்மை அல்லது அலட்சியத்தால் சிறு வயதிலேயே பாதிக்கப்படும் ஒரு சிறுவனுக்கு ஏற்படுகின்ற பிரச்சனை தான் மையம்… ஒழுங்கின்மையை அவன் வெறுக்கிறான் என்பது படத்தின் முதல் காட்சியிலேயே தொடங்கிவிடும்.. எடுத்த பொருட்களை எடுத்த இடத்தில் வைப்பது, விதிமுறைகளை சாலையில் செல்லும் போது சரியாக கடைபிடிப்பது.. இப்படி குறைந்தது நான்கு முதல் ஐந்துவிதமான ஒழுங்கின்மையை வெறுக்கும் காட்சிகள் வரிசையாக காட்டப்பட்டு இருக்கும்.. இறுதியாக நாயகன் இப்படி இருப்பதற்கு காரணமும் ஒரு மனிதனின் அலட்சியம் அல்லது ஒழுங்கின்மைதான் என்று மையத்தை விளக்கும் போது அதை பார்வையாளன் முழுமனதுடன் ஏற்றுக் கொள்வான்…

கஜினியிலும் நாயகன் தான் அந்த விசித்திரமான நோயால் தாக்கப்பட்டு இருப்பான்.. ஆனால் கதையின் மையம்.. நாயகன் அல்ல நாயகி.. நாயகிக்கு ஏற்பட்ட கொடூரத்துக்கு பதிலடி கொடுக்க நினைப்பான் நாயகன்.. ஆனால் நான் சிகப்பு மனிதனில் வருவதைப் போலவே நாயகனுக்கு அவனது நோய் இடையூறாக இருக்கும்… ஆனால் படத்தின் மையம் நாயகிக்கு எதனால் அந்த கொடூர சம்பவம் நேர்ந்தது என்பது.. எதனால் அது நேர்ந்தது என்றால் பிறருக்கு உதவ முற்பட்ட போது… படத்தின் ஆரம்பத்திலேயே நமக்கு நாயகியின் பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட குணாதிசயம் சிலபல காட்சிகளால் காட்டப்பட்டு இருக்கும்… அதனோடு தொடர்புபடுத்தியே பிரச்சனையும் ஏற்படும் போது கதை பார்வையாளர்களை வெகுவாக உள்ளிழுத்துக் கொள்ளும்… நான் சிகப்பு மனிதன் சறுக்குவது இந்தப் புள்ளியில் தான்…

படத்தில் Narcolipsy என்னும் அந்த நோய்க்கான குணாதிசயங்கள் காட்சிப்படுத்தப் பட்டிருக்குமே தவிர கதாபாத்திரத்துக்கான குணாதிசயங்கள் காட்சிப்படுத்தப்படவே இல்லை… அதுபோல் படத்தில் மையமாக நிகழும் அந்த சம்பவத்தை பார்வையாளர்கள் முதலிலேயே உள்வாங்கிக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகளும் திரைக்கதையில் இல்லவே இல்லை.. அதுவும் இல்லாமல் இயக்குநர் திரு தெரிந்து செய்கிறாரா..? இல்லை தெரியாமல் செய்கிறாரா என்று தெரியவில்லை.. தீராத விளையாட்டுப் பிள்ளை திரைப்படத்தில் முழுத் தவறும் நாயகனின் மீது இருக்க… நாயகன் படம் முழுக்க நாயகிகளை பழி வாங்கும் நடவடிக்கைகளையும் வெற்றி கொள்ளும் செயல்களையும் செய்து கொண்டே இருப்பான்… நாயகனின் கதாபாத்திரம் நம்மிடையே சாகடிக்கப்பட்டு அந்த கதாபாத்திரத்தின் மீது நமக்கு கொலைவெறியே வந்து கொண்டு இருக்கும்.. இயக்குநர் கொஞ்சம் கூட அதைப் புரிந்து கொள்ளாமல் கதையை நகர்த்திக் கொண்டே சென்று கொண்டு இருப்பார்.. அதே போலத்தான் இங்கும்…

நாயகியான லட்சுமி மேனனுக்கு ஏன் அந்த கொடூரம் நிகழ்கிறது என்பதற்கான பின்கதையாக சொல்லப்படும் அந்த ப்ளாஷ்பேக் சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது எனக்கு நாயகன் மீதுதான் தவறு இருப்பது போல் படுகிறது.. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் மீது மற்றொருவன் தனது தனிப்பட்ட கருத்தாக்கங்களை திணிப்பதும், ஒழுக்கம், கற்பு போன்ற பழமையான கருத்தாக்கங்களின்  வளமையின் படி ஆணை விட்டுவிட்டு பெண்ணை மட்டுமே குற்றம் சாட்டுவதுமான கலாச்சார கல்லெறிகள் எல்லாம் இத்திரைப்படத்தில் கண்ணாடி வீட்டுக்குள் கல்லெறிவதைப் போல் ஆகிவிட்டது… மேலும் கடைசி காட்சியில் நண்பன் சுந்தர் இறக்கும் முன் கேட்கின்ற கேள்விகள் எல்லாம் நாயக கதாபாத்திரத்தையே சிதைத்துவிடுவதால் அந்த கதாபாத்திரத்தின் பழிவாங்கும் உணர்வு நம்மை களிப்படையச் செய்யாமல் காயப்படுத்தவே செய்கிறது..

ஆனாலும் முதல் பாதியில் வரும் சில காட்சி அமைப்புகள் எல்லாம் மிகச் சிறப்பானவை… குறிப்பாக Narcolipsy என்னும் அந்த நோய் தொடர்பான குணாதிசங்கள் எல்லாமே.. இந்திரனாக வரும் நாயகன் விஷாலுக்கு இருக்கும் அந்தப் பத்து ஆசைகள், அதிலேயே காதலையும் கொண்டு சென்ற விதம்… எப்போதாவது நீ தூங்காமல் இருப்பாயா..? என்று நாயகி நாயகனைக் கேட்டு அதற்கு இருவரும் விடை கண்டுபிடித்து அதை பரிசோதனை செய்து பார்க்கும் இடம்.. டூவிலரில் பெல்ட் அணிந்து பயணிப்பது.. மயில்சாமியுடன் வரும் அந்தக் காமெடி காட்சி என சில காட்சிகள் மிகச் சிறந்த மசாலா திரைப்படத்திற்கான காட்சிக் கோர்ப்புகளாகத்தான் இருந்தன.. அதுபோல வசனங்களும் அருமை.. பத்து கேள்வியை கேட்டு எப்புடிங்க ஒருத்தன பத்தி தெரிஞ்சிக்க முடியும்.. என்ற கேள்விக்கு அவன் சொன்ன பத்து பதில வச்சி.. அவனப் பத்தி நூறு கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியும் என்று சொல்லும் லட்சுமியின் பதில்.. என வசனங்கள் பல இடங்களில் நன்றாகவே இருந்தது…


லட்சுமி மேனன், விஷால், சுந்தர் ராம், இனியா என எல்லோருக்குமே நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரங்கள்… நடிப்பில் குறை சொல்லமுடியவில்லை.. சிறப்பாகவே இருக்கிறது… வழக்கமான தாய் கதாபாத்திரத்தில் வந்து போகும் சரண்யாவும் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்.. பாடல்கள் படத்துக்கு மற்றொரு முக்கியமான மைனஸ்.. ஒரு பாடல் கூட மனதில் நிற்கவில்லை.. பிண்ணனி இசையும் பரவாயில்லை ரகம் தான்… இசை ஜி.வி.பிரகாஷ்.. ஒளிப்பதிவு பிரமிப்பாக இருந்தது… ஒரு பாலைவன பாடல் காட்சியில் மரச் சட்டகங்களுக்கு ஊடாக அவர் வைத்திருந்த ஒவ்வொரு ப்ரேமும் ரம்மியமாக இருந்தது.. ஒளிப்பதிவு ரிச்சர்ட்டு. என். நாதன்.

இயக்குநர் திரு.. நல்ல வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் இயக்குநர்.. ஆனால் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை தன் திரைக்கதையில் திணித்து வைப்பதாலும், மிகச் சின்ன சின்ன விசயங்களில் கதையில் தவறு இளைத்துவிடுவதாலும் அவர் எதிர்பார்க்கின்ற ஒரு வெற்றி அவருக்கு இன்றைய தினம் வரை கிடைக்காமல் இருக்கிறது.. ஆக மொத்தத்தில் நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தை நீங்கள் பாருங்கள்… முதல் பாதி உங்களுக்கு மிகச்சிறப்பான எண்டர்டெயினராக இருக்கும்… ஆனால் இரண்டாம் பாதி அப்படி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகமிக குறைவு..



Sunday 6 April 2014

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்:

தனது பிரத்யேகமான நகைச்சுவை பாணியால் அதிகமாக கவனிக்கப்பட்ட இயக்குநர் சிம்புத்தேவன். இம்சை அரசன் திரைப்படத்தை தவிர்த்து இவரது படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்காவிட்டாலும் கூட இவருக்கு என தனிப்பட்ட ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொடுத்தது. அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியிலான மிகப்பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் கூட கவனிக்கத்தக்கப் படங்களாக இருந்தன.. அந்த வரிசையில் சொல்லிக் கொள்ளும்படியான படமாக இந்த ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் இருக்குமா என்பது சந்தேகமே..


அறை எண் 305ல் கடவுள் என்ற திரைப்படம் BRUCE ALMIGHTY என்ற ஒரு ஆங்கில திரைப் படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.. கதை தழுவலாக இருந்தாலுமே அதை நம் தமிழ்சினிமா சமூகத்துக்கு ஏற்றபடி பலவிதமான மாற்று அம்சங்களோடு ரசிக்கத்தக்க வகையில் படமாக்கி இருப்பார்.. அதில் வரும் வசனங்களும் மிகச்சிறப்பான வரவேற்ப்பை பெற்றது.. அதே பாணியிலான மற்றொரு முயற்சியாக இப்போது எடுத்திருக்கும் திரைப்படம் தான் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்.. இத்திரைப்படத்தின் கதையும் திரைக்கதை உத்தியும் கூட மிகவும் புகழ்பெற்ற ஜெர்மானிய நாட்டுத் திரைப்படமான RUN LOLA RUN என்ற திரைப்படத்தின் தழுவல் தான்… ஆனால் பிரச்சனை என்னவென்றால், மிகவும் புகழ்பெற்ற ஆனால் தமிழ் ரசிகர்களால் ரசிக்கமுடியாத வேற்றுமொழிப் படங்களின் தரவரிசைப் பட்டியல் தயார் செய்தால், கண்டிப்பாக அதில் முதல் மூன்று இடங்களுக்குள் இந்த RUN LOLA RUN என்ற திரைப்படம் இருக்கும் என்பதுதான்.. அப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தின் கதையைத் தான் தழுவல் செய்து, தமிழ் கலாச்சார மரபுக்கு ஏற்றவாறு மும்மூர்த்தி கடவுள்களையும் கதைக்குள் கொண்டு வந்து, நம் தமிழ் ரசிகர்கள் ரசிக்கும் அளவுக்கு கதையில் சிலபல மாறுதல்கள் செய்து ஒரு பிரத்யேக முயற்சி எடுத்திருக்கிறார்… ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை…

ஏன்..? ஏனென்றால் கதைக்கரு அப்படி… நாம் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து செய்யத் தொடங்குகின்ற ஏதோ ஒரு செயலை ஒரு நிமிடம் தாமதமாக தொடங்குவதற்கும் இரண்டு நிமிடம் தாமதமாக தொடங்குவதற்கும் இடையேயான வித்தியாசங்களையும் அதனால் முடிவுகளில் ஏற்படும் மாற்றங்களையும் மூன்று பகுதிகளாக விளக்குகிறது திரைக்கதை… அருள்நிதி, பிந்துமாதவி, பக்ஸ் என்ற பகவதி இவர்கள் மூன்று பேர் தான் களவாணிகள்… அந்தக் கன்னி, இசபெல்லாவாக வரும் அர்ஷிதா ஷெட்டி… உதயம் NH-4 திரைப்படத்தின் நாயகி..

வழக்கம்போல் நாயகனும் நாயகியும் காதலர்கள்.. இவர்களின் காதல் விசயம் நாயகியின் பெற்றோருக்கு தெரியும் முன்பே மலேசிய தொழிலதிபரான அவரது தந்தை தன் மகளுக்கு வேறொரு இடத்தில் கல்யாணம் நிச்சயிக்கிறார்… நாயகியின் தந்தைக்கு தொழில்முறை எதிரியான மற்றொரு தொழிலதிபர் நாசர், நாயகிக்கு காதலன் இருப்பதை தெரிந்துகொண்டு, நாயகியின் தந்தைக்கு அவப்பெயர் ஏற்படுத்த நாயகியை கடத்தச் சொல்லி நாயகனை தூண்டி விடுவதோடு அதற்காக 30 இலட்சம் பணமும் கொடுப்பதாக வாக்களிக்கிறார்… அருள்நிதிக்கு இரண்டு நிர்ப்பந்தம்.. ஒன்று காதலியை காப்பாற்றுவது, இரண்டாவது ஹாஸ்பிட்டலில் இருக்கும் தன் தாயை காப்பாற்ற 8 இலட்ச ரூபாய் பணத்தை திரட்டுவது.. பிந்துமாதவிக்கு தன் தந்தையை கடனில் இருந்து காப்பாற்ற ஆறு இலட்ச ரூபாய் தேவை.. இதுபோல பக்ஸ்க்கும் ஏதோ ஒரு காரணத்துக்காக பணம் தேவை….


இவர்கள் நாயகியை கடத்த 8.59am மணிக்குத் தொடங்கி ஒருமுறையும், 9.00am மணிக்கு தொடங்கி ஒருமுறையும் 9.01am மணிக்குத் தொடங்கி ஒருமுறையும் என மூன்று முறை முயற்சிக்க… அந்தத் திட்டத்தின் முடிவு என்ன ஆனது என்பதை ஒரே மாதிரியான காட்சிக் கோர்ப்புகளோடு நாமும் மூன்று முறை கடந்து வருகிறோம்.. முதலில் 8.59 தொடங்குகின்ற முயற்சி தோல்வியில் முடிகிறது… பின்பு 9.00மணியில் தொடங்குகின்ற முயற்சி முழுக்க வெற்றி என்ற சொல்லமுடியாத சூழலில் முடிவடைகிறது… இறுதியாக 9.01மணியில் தொடங்குகின்ற முயற்சி எல்லாத் தரப்பிலும் சுமூகமாக முடிந்தாலும், சிம்புத் தேவன் பாணியில் 5 உயிர்பலி தவிர்க்க முடியாததாக ஆகிறது…

இது ஒரு பரிட்சார்த்த முறையிலாக திரை ஆர்வலர்களால் பரிசோதிக்கப்பட்ட ஒரு வகை திரைக்கதை உத்தி… ஆனால் இது ஆத்மார்த்தமாக ஏற்படுத்த வேண்டிய சில உணர்வுகளை ஏற்படுத்த தவறிவிடுவதால், இதில் வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் குறைவு.. இரண்டாம் விதமான கதை சொல்லல் 9.00 மணிக்கு தொடங்கும் போது காட்சிகளின் வழி காட்டப்பட்ட வாழ்க்கையின் மீதான நம்பகத்தன்மை குறைந்து, அதை வெறும் புனைவாக நாம் அணுகத் தொடங்கிவிடுவதால் அதன் சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது… மேலும் 9.01 மணிக்குத் தொடங்கும் மூன்றாம் விதமான கதை சொல்லல், ஏற்கனவே பார்த்த அதேமாதிரியான காட்சி அடுக்குகளை விளக்கிக் கொண்டு செல்ல முற்படும்போது, அதனோடு ஒன்ற முடிவதில்லை… மேலும் அது ஒருவிதமான எரிச்சலையும் ஏற்படுத்துவதோடு எந்தவிதமான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்த தவறிவிடுகிறது…


ஆனால் திரைக்கதை வடிவமாகவும், அதில் ஒரு வித்தியாசத்தை காட்டுவதற்காகவும் சின்ன சின்ன நுணுக்கமான விசயங்களிலும் கவனம் செலுத்தி இருக்கும் படக்குழுவினரின் உழைப்பை புறக்கணிப்பதும் எளிதல்ல.. அருள்நிதிக்கு இதுவொரு வித்தியாசமான முயற்சியாக இருக்கும்… நடிப்பில் வழக்கம் போல் பெரிதாக அவர் ஜொலிக்கவில்லை… கொஞ்சமேனும் நடிப்பில் கவர்வது பக்ஸ் மற்றும் சிறு வேடங்களில் வந்து செல்லும் அருள்தாஸ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, நரேன் மற்றும் அந்த இரண்டு நர்ஸ்கள் மட்டுமே… பிந்துமாதவிக்கு வழக்கத்துக்கு மாறான கதாபாத்திரம்… டூயட் இல்லை… காதல்மொழி பேச அவசியம் இல்லை… காட்சிகளின் தேவைக்கு ஏற்ப கண்களாலேயே உணர்வுகளை மட்டும் கடத்த வேண்டிய தேவை… சிறப்பாகவே செய்திருக்கிறார்… மையக்கதையை விட கிளைக்கதைகள் சிறப்பாக இருந்ததாக தோன்றுகிறது… அதுபோல ஆங்காங்கே இயக்குநருக்கே உரித்தான அரசியல் சார்ந்த பகடிகளும் அருமை…

பாடல்களே இல்லாத திரைப்படம்… இசை பிண்ணனிக்கு மட்டுமே… சூது கவ்வும் படத்தின் சாயல் பல இடங்களில் தெரிந்தது… எஸ்.ஆர்.கதிரின் கேமரா கைவண்ணத்தில் காட்சிகளும் அதன் ஒளிவண்ணங்களும் துல்லியம்.. இயக்குநரை புதிய முயற்சி என்றெல்லாம் பாராட்டமுடியாது.. தமிழுக்கு வேண்டுமென்றால் இது புதியதாக இருக்கலாம்.. தமிழ் திரைப்பட உலகுக்கு சற்றே வித்தியாசமான முயற்சி… ஆனால் திரைப்படத்தை முழுமையாக காண வேண்டும் என்றால்.. பொறுமை அவசியம்… நீங்கள் பொறுமையானவர்கள் என்றால் ஒருமுறை முயற்சித்துப் பார்க்கலாம்….

Saturday 5 April 2014

மான் கராத்தே:

என் நண்பன் ஒருவன் அவனது ஆறு வயது குழந்தைக்கு இரவு நேரங்களில் தூங்க வைக்க கதை சொல்வதில் இருக்கின்ற சிக்கலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.. அவன் சொல்கின்ற சில அசுவாரஸ்யமான கதைகள் பெரும்பாலும் அவனது குழந்தைக்கு பிடிப்பதில்லையாம்.. தினமொரு கதை என்கின்ற ரீதியில் புதிதுபுதிதாக சொல்வதற்கு இவனது கற்பனை கங்கையும் கைகொடுக்க வில்லையாம்… அதனால் தான் இப்போது தீவிரமாக குழந்தைக் கதைகளைப் படித்துக் கொண்டிருக்கிறான்… அவனிடம் நான் ஒரு கதையை சிபாரிசு செய்து, அவனது குழந்தைக்கு கூறச் சொன்னேன்.. அவனும் கதையைத் தொடங்கினான்… இப்படி


“அப்பாவ மாதிரியே கம்ப்யூட்டர் இஞ்சினியராக இருக்குற நாலு ப்ரெண்ட்ஸ் இந்தியால இருக்கிற ஒரு காட்டுக்கு பிக்னிக் போறாங்க… அங்கு ஒரு சித்தர் இருக்க, அவர்ட்ட வரம் கேக்குறாங்க… யாராவது ஒருத்தரோட வரத்த மட்டுந்தா நிறைவேத்துவேன்னு அவரு சொல்றாரு.. அப்ப அந்த நாலு ப்ரெண்ட்ஸ்ல இருக்குற ஒரு சேட்டைக்காரப் பையனுக்கு சித்தர் மேல நம்பிக்க இல்ல… அவர சோதிக்கிறதுக்காக நாலு மாசத்துக்கு அப்புறம் வர்ற ஆயுதபூஜைக்கு அடுத்த நாள் வரக்கூடிய தினத்தந்தி பேப்பர் வேணும்னு கேக்குகிறான்…?”

”பேப்பர்தானப்பா கேக்குறாங்க..? இதுல என்ன சோதிக்கிறாங்க…?”

”இல்லம்மா.. ஆயூதபூஜைக்கு லீவு விடுறதால, அடுத்த நா தினத்தந்தி பேப்பர் வராதும்மா…”

”அப்ப பேப்பர சித்தர் குடுக்கலையாப்பா…?”

”இல்லம்மா… அவருதா.. சித்தர்ல.. அதனால பேப்பர வரவச்சிக்குடுத்துட்டு மறைஞ்சிடுறாரு… ஆனா அந்த பேப்பர்ல.. அவுங்க வேல பாக்குற கம்பெனிய மூடப் போறதா நீயூஸ் வந்திருக்கு… அதனால எல்லாருக்கும் வேல போயிடுமேன்னு பயப்படுறாங்க…”

”அச்சச்சோ…!! நீயும் கம்ப்யூட்டர் இஞ்சினியர்தான… உன் கம்பெனியவும் மூடிட்டா..? உனக்கும் அதுமாதிரி வேல போயிடுமாப்பா…?”

”குறுக்க கேள்வி கேக்கக்கூடாதும்மா…? கதைய கேளு… “ஆனா அவுங்க அத நம்பள… காட்டுல இருந்து கிளம்பி ஊருக்கு போய்டுறாங்க… அங்க போனா உண்மைலயே அவுங்களுக்கு வேல போயிடுது.. அதுமட்டுமில்லாம அந்த பேப்பர்ல சொன்ன தேதிலலெல்லா, மழை பெய்யுற அறிகுறியே இல்லாம இருந்தாலும், பேப்பர்ல சொன்னமாதிரியே ஆலங்கட்டி மழையெல்லா பெய்யுது…. இன்னொரு நீயூஸ்ல இவுங்க நாலு பேரோட பேரும் வந்திருக்கு… அதுல இந்த நாலு பேரோட உதவியால பீட்டர்ங்கிற ஆள் குத்துச்சண்ட போட்டியில பட்டம் ஜெயிச்சதோட, இரண்டு கோடி ரூபா பரிசும் வின் பண்றதா போட்டுருக்கு…? இவுங்களுக்கு பயங்கர ஷாக்… பீட்டர் யாருன்னே இவுங்களுக்கு தெரியாது… பீட்டர் யாருன்னு பாக்கப் போனா அவன் குத்துச்சண்டைனா என்னென்னே.. தெரியாத ஒரு ஆளு…!!!!”

”அவரு என்ன டாடி பண்ணிட்டு இருக்காரு….?”

”அவரு.. அவரு… டான்ஸ் ஆடிட்டு இருக்காரும்மா….”

”இல்லப்பா… அவுங்கெல்லா இஞ்சினியர்ல…. இவரு அதுமாதிரி என்ன வேல பாக்குறாரு….?”

”இரும்மா.. குறுக்க குறுக்க பேசக்கூடாது… அப்பாக்கு கத மறந்துரும்…. எங்க வுட்டே…”

”டான்ஸ் ஆடிட்டு இருந்தாரு…”

”ம்ம்ம்.. இருந்தாரா… அவரப் புடிச்சி எப்புடியாது பாக்ஸரா மாத்த முயற்சி பண்றாங்க….”

”ஏன்ப்பா…?”

”அப்பத்தான அவரு ஜெயிப்பாரு…”

”பேப்பர்லதா வந்திருக்குல… அப்ப அவரு கண்டிப்பா ஜெயிப்பாருல்ல…”
”ஆனா அவருதா பாக்ஸர் இல்லயே… அவர பாக்ஸர் ஆக்குனா தான அவரு ஜெயிப்பாரு… இரண்டு கோடி ரூபா கிடைக்கும்…”
”இவுங்க எதுவும் செய்யாம, மழ மட்டும் அதுவா பெஞ்சதுல்ல.. அப்ப இதுவும் அதுவா நடக்குமுல்ல.. அவுங்க ஏ கஷ்டப்படுறாங்க…”
”சீ… சும்மா… நொய்நொய்ன்னு….. அமைதியா கேளு… அப்பா கதைய மறந்துருவே…”

”சரி… அப்புறம்…”.

”அப்புறம்…. ஆ… அவரு லவ் பண்ணாரு….”


”லவ் பண்ணாரா…? ஏன் பாக்ஸர் ஆகாம லவ் பண்றாரு….?”

”ஏன்…. ம்ம்ம்.. ஆஆஆ.. ஏன்னா அந்த பீட்டர் அவரு லவ் பண்ற அக்கா இருக்காங்கல்ல… அவுங்க நல்லா வெள்ள வெளேர்ன்னு இருக்காங்களா… அதனால லவ் பண்றாரு… லவ் பண்ணா… அந்த அக்காவுக்கு இந்த பீட்டர பிடிக்கவே இல்ல… பீட்டரு அந்த அக்கா பின்னாடியே சுத்திட்டு இருக்காரு.. ”

”அவருக்கு வேற வேலயே கிடையாதா.. டாடி…?”

”இருக்கும்மா.. அதெல்லா பண்ணிட்டே… இதயும் பண்ணிட்டு இருக்காரு.. ஆனா பாக்ஸர் ஆகுறதுக்கு ப்ராக்டீஸ்க்கு மட்டும் போல… இதப்பாத்த அந்த நாலு ப்ரெண்ட்ஸும் இவனுக்கு லவ் சக்சஸ் ஆனாதா இவன் ப்ராக்டீஸ்க்கு வருவான்னுட்டு… அவனுக்கு ஹெல்ப் பண்ண… அந்த அக்காவுக்கும் பீட்டர் மேல லவ் வந்துருது….”
”பாக்ஸிங்க் மேட்ச் எப்பப்பா வரும்…?”

”வரும்மா… பொறுமையா கதைய கேளு…”

”சரி… அந்த அக்காவுக்கு ஏன் லவ் வந்துச்சி….”


”ம்ம்ம்… அதுவந்து அந்த அக்கா பைக் ரிப்பேராகி இருந்தப்ப… பீட்டருதா மெக்கானிக்கு கூட்டு வந்து சரி பண்ணி குடுத்தாரா… அதான்…. லவ் வந்திருச்சி…”

”அப்ப.. ஹெல்ப் பண்ணா லவ் வருமாப்பா…..”

”அது எப்டிம்மா வரும்.. இது கதை.. சரியா… லவ் வந்துருச்சா… அந்த அக்காவோட அப்பா என்ன சொன்னாரு… தெரியுமா…? பத்து திருக்குறள் சொன்னாத்தா என் பொண்ண கல்யாணம் பண்ணிக்குடுப்பேன்னு சொன்னாரு…”

”எங்க க்ளாஸ்ல எல்லாருக்கும் பத்து திருக்குறள் தெரியும்ப்பா…. ஆனா அந்த அக்காவோட அப்பா ஏன் இவ்ளோ ஈஸியா கொஸ்டீன் கேக்காரு….”

”ம்ம்ம்.. ஏன்னா அவரு தமிழ் வாத்தியாரு…”

”தமிழ் வாத்தியாருன்னா.. ஈஸியாத்தா கேள்வி கேப்பாங்களாப்பா….”

”ஆமாம்மா… அப்புறம் பீட்டருக்கு திருக்குறள் தெரியாதா… அதனால அந்த நாலு ப்ரெண்ட்ஸும் ஹெல்ப் பண்றாங்க….”

”அய்யய்யோ…!!! அவருக்கு திருக்குறளே தெரியாதாப்பா… அவருக்கு என்ன தெரியும்ணு அந்த அக்கா லவ் பண்றாங்க…?”

”அதெல்லா…. எனக்குத் தெரியாதுமா… லவ் பண்றாங்க அவ்ளோதா…”

”நீயும் பத்து திருக்குறள் சொன்னா என்ன கல்யாணம் பண்ணிக் குடுத்திருவியாப்பா…?”

”இது கதம்மா….”

”போப்பா.. அன்னைக்கி மட்டும் கதைல வந்தது மாதிரி பொய் சொல்லக்கூடாதுன்னு சொன்ன… இப்ப மட்டும் இது கதைங்கிற… அப்ப கதல உள்ளபடி நா பண்ணவா… வேணாமா…”

”போனவாரம் சொன்ன கதப்படி பண்ணனும்… இந்த கதப்படி கூடாது… சரியா… சரி.. இப்ப இவரு மேட்ச்ல கலந்துக்கப் போறாரு…. அங்க இன்னொரு பீட்டர் இருக்காரு…. அவரு பெரிய பாக்சரு…. ஏகப்பட்ட சாம்பியன்சிப் ஜெயிச்சவரு… இப்ப இந்த நாலு ப்ரெண்ட்சுக்கும் குழப்பம்… பேப்பர்ல போட்டுருந்த பீட்டரு… இந்த பீட்டரா… அந்தப் பீட்டரான்னு….”

”முத சொன்ன பீட்டர்தாம்ப்பா…”

”எப்டி…?”

”ஆமா அவருக்கு தா பாக்ஸிங்னா என்னென்னே தெரியாது…. அவரு ஜெயிக்கதா ஹெல்ப் வேணும்…. இவருதா ஏற்கனவே நிறைய ஜெயிச்சார்ல.. இவருக்கு எதுக்கு அவுங்களோட ஹெல்ப்….”

”ஆமால்ல… சரி… ஆனா அவுங்களுக்கு குழப்பம்… ஏன்னா… அவுங்க உன்ன மாதிரி பிரில்லியண்ட் கிடையாது பாரு…. இவுங்களுக்கு இப்டி குழப்பம் இருக்கும் போதே… இவுங்களோட பீட்டரு…. லீக் போட்டிலெல்லா ஜெயிச்சி பைனல் வந்திருறாரு….”

”அவருக்குதா பாக்ஸிங் தெரியாதே…? அவரு ப்ராக்டீசும் போல… பின்ன எப்டி…?”

”அது அப்டிதாம்மா… பைனல் வந்திருறாரு…. வந்தா எதுக்க மோத வேண்டிய இன்னொரு ஆளு அந்த பீட்டரு…. அந்த பீட்டரு… நம்ம பீட்டர்ட்ட போட்டிக்கு முன்னாடியே என்ன சொல்றாரு தெரியுமா…? போட்டி நடக்குற ரிங்குல உன்ன அடிச்சே நா கொன்னுடுறேங்கிறாரு… பயந்து போன நம்ம பீட்டரு.. நா பாக்ஸர் கிடையாது…. என் லவ்வர்ட்ட நல்ல பேரு வாங்கிறதுக்கா… அப்டி நடிச்சே… இந்த ஒரு போட்டில என்ன ஜெயிக்கவிடுங்கன்னு கேக்குறாரு…. அவரு முடியாதுன்னு சொல்லிடுறாரு… பைனல் மேட்ச்ல அந்தப் பீட்டர நம்ம பீட்டரு அடிஅடின்னு அடிச்சிட்டு நா உனக்கு விட்டுத்தாரே… நீ உன் லவ்வர எனக்கு விட்டுத்தாரீயான்னு கேக்குறாரு… உடனே நம்ம பீட்டருக்கு கோபம் வந்து அடிஅடின்னு அந்த பீட்டர அடிச்சி ஜெயிச்சிடுறாரு…. எப்டி கத….”

க்க்க்க்குர்… குர்கொர்…கொர்….கொர்…..க்க்கொர்…..

”ஓ… தூங்கிட்டியாடா… செல்லம்….”

இப்படி, குழந்தைகளிடம் சொல்வதற்குக்கூட கதைகள் இல்லாத அளவுக்கு நம் வாழ்க்கை நம்மிடம் கற்பனை வறட்சியை உண்டாக்கி இருக்கிறது… ஏன் என்று யோசித்தால், ஒருவேளை குழந்தைகளுக்கு சொல்லவேண்டிய கதைகள் எல்லாம் பெரியவர்களுக்கான கதைகளாக மாறி பிறழ்சுழற்சி அடைந்துவிட்டது தான் காரணமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.. மேற்சொன்னபடி குழந்தையை ஈர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் கூட இல்லாத ஒரு கதையாடல், மூத்தகுடிகளின் களிப்பிற்கான கதைக்களனாக மாறிநிற்கும் முரண்நகை காலத்தின் கொடுமை…

அதுசரி… இந்த மான் கராத்தேக்கும் முந்தைய பத்திகளுக்கும் என்ன சம்பந்தம்…? இருக்கிறது… முன்பே சொன்னேன் அல்லவா… குழந்தைகளுக்கான இரவுநேர தூக்க கதைகள் எல்லாம் பெரியவர்களுக்கான கதைகளாக மாறிவிட்டது என்று, அதற்கான சமீபத்திய உதாரணம் தான் இந்த மான் கராத்தே.. தமிழ் பேரினத்தின் ஆறிலிருந்து அறுபது வரையுள்ள பெருங்குழந்தைகளை எல்லாம் அற்ப தூக்கத்திலேயே ஆழ்ந்திருக்கச் செய்யும் அற்புதமான ஆவணப் படைப்பு தான் இந்த ”மான் கராத்தே..” ஏன் இவ்வளவு காட்டமான வார்த்தை ஜோடைனைகள்…? என்றால், என்ன செய்ய, காட்டத்தை காட்டாமல் இருக்க முடியவில்லை… திரைப்படங்கள் கேளிக்கையின், நகைச்சுவையின் பொழுதுபோக்கின் ஒரு வடிகாலாக இருப்பது பெரும்பிழையா என்று கேட்டால்…? இல்லை கண்டிப்பாக இல்லை என்பதே என் பதில்.. ஆனால் நம் வாழ்க்கையின் கேளிக்கை மற்றும் நகைச்சுவையின் வடிகாலாக திரைப்படம் மட்டுமே இருக்கின்றது என்பது தான் பெரும் பிழை.. திரைப்படம், அரசியல் இந்த இரண்டுமே நம் சமூகத்தின் சமகால மக்களின் அறியாமையை பயன்படுத்தி காசு பார்க்கும் பொருளாக மாறிவிட்டது.. என்ன செய்ய..?

மேலே என் நண்பன் தன் மகளுக்கு சொன்ன கதைதான்… இம்மிகூட பிசகாமல் மான் கராத்தேவின் கதை… என்ன நடந்தாலும் “ஏன்” என்று கேட்டுப் பழகு… என்று சொன்ன பெரியாரின் வழி வந்த நம் தமிழ் சமூகம் தான் இன்று “அது இது எது” என்று எதைப் பற்றியும் கேள்வி கேட்காமல் சிவகார்த்திகேயனின் சிரிப்பலைகளில் சிக்கி சீரழிந்து போக தயாராக காத்துக் கொண்டிருக்கிறது… 24 மணி நேரமும் திறந்திருக்கும் படி ஒரு டாஸ்மாக் கடை கேட்கும் அவரது விண்ணப்ப பாடலுக்கு விண்ணதிர கரகோஷம் கொடுக்கிறது…. பெண்களை ஆண்களுக்கேயான தனியுடைமை சொத்துக்கள்… அவர்களை இன்னொருவன் உன்னிடம் இருந்து கவர்ந்து கொள்ள முயன்றால், மட்டும் உன் கண்ணியம் தளர்த்தி, நீ கோபம் காட்டு, கொலை செய்… இளைஞனான உனக்கு காதலில் ஜெயிப்பதை தவிர வேறு எண்ணம் இருக்கவே கூடாது, பெண்கள் காதலை கலட்டிவிட பொய் சொல்பவர்கள், ஆண்கள் பொய் சொல்லியாவது காதல் கைகூட முயற்சிப்பவர்கள் என்கின்ற ரீதியில் இவர்கள் தொன்றுதொட்டு தூவி வரும் நஞ்சுக்கு மான் கராத்தே மயிலிறகு வீசுகிறது…. முதல்பாதியாவது ஏதாவது ஒப்பேத்துகிறார்கள்…. இரண்டாம் பாதியின் இழுவை இந்தியன் ரயில்வே தண்டவாளத்தை விட நீள…ம்.

கதையின் கரு என்று பார்த்தால், மிகவும் சுவாரஸ்யமான ஒரு கதைக்கரு… ஆனால் அதையும் வழக்கமான காதல் சாயம் பூசி, ஹீரோயிச வேசம் இட்டு கருக்கலைப்பு செய்துவிட்டார்கள்… நான் கூட முதல் பத்து நிமிடங்களில், கதைவேறு ஏ.ஆர்.முருகதாஸின் கதை என்பதாலும், ஐடி நிறுவனங்கள் மூடப்படுவதால் வேலை இழக்கும் இளைஞர்களிடம் இருந்து கதை தொடங்குவதாலும், உலகமயமாக்களின் அழிவைச் சொல்லும் படமோ என்று அதீதமாக உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்… உணர்ச்சிவசப்படுதல் குற்றத்தின் ஆரம்பம் தானே… அதற்கான தண்டனையையும் அனுபவித்தேன்…

தனிப்பட்ட நபர்களின் உழைப்பு என்று பார்த்தால், சிவகார்த்திகேயன், ஹன்சிகா, இசையமைப்பாளர் அனிரூத் மற்றும் ஒளிப்பதிவாளர் சுகுமார் இவர்களின் உழைப்பைப் பற்றி நிச்சயம் சொல்லலாம்…. சிவகார்த்திகேயன் நடனங்களில் காட்டும் அங்க அசைவுகளும், வேகமும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது… அதுபோலத்தான் அவரது வழக்கமான பாடி லாங்க்வேஜ் மேனரிசங்களும், ஆனால் உருக்கமான நடிப்பு என்பது மனிதருக்குள் இன்னும் உருப்பெறவே இல்லை என்பதற்கு இவர் வில்லனின் காலில் விழுந்து அழும் அந்த காட்சியே சாட்சி… மனிதர் கதாபாத்திரத்துக்கு மட்டும் தேவையான பீட்டரிசங்களை கடைபிடித்து, தனிப்பட்ட மனிதருக்கான பீட்டரிசங்களை கைவிடுவது அவரது வளர்ச்சிக்கு நலம் பயக்கும்…. ஐந்தாவது படத்திலேயே ஓபனிங்க் சாங்க் என வேறு தளத்தை நோக்கி நகல முற்படுவது தெரிகிறது… ஹன்சிகாவின் முகத்தில் ஏக தெளிச்சி… பாடல்களிலும் இந்த அம்மணி காட்டும் முக குறிப்புணர்ச்சிகள் வசீகரிக்கின்றது… அனிருத்தின் இசையில் பாடல்கள் எல்லாமே தாளம் போடவைக்கின்றன…. இளைய சமுதாயத்தின் இதயத்துடிப்பை அறிந்த இசையமைப்பாளர்.. ஆனால் பிண்ணனி இசையில் இரைச்சல் தான் அதிகம்…. மைனா சுகுமாரின் கேமரா பிண்ணனியில் எல்லாமே கதையின் காட்சியை கெடுத்துவிடாத அழகு.. அதுபோல் சதீசின் காமெடிகள் கொஞ்சம் புத்துணர்ச்சி தருகிறது…

மொத்தத்தில் இந்த மான் கராத்தே, கேள்வி கேட்கவோ யோசிக்கவோ திராணியில்லாத, அல்லது அதுபோன்ற ஆபாசங்களை அடியோடு வெறுக்கின்ற ஆறிலிருந்து அறுபது வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கான கூத்து….