Friday 30 August 2013

தங்கமீன்கள்:

”கற்றது தமிழ்” தந்த ராமின் இரண்டாம் படைப்பு. அக்டோபர் 7, 2007ல் வெளியானது கற்றது தமிழ். 5 ஆண்டுகளும் பத்து மாதங்களுக்கும் அடுத்து வெளிவந்திருக்கிறது அவரது இரண்டாவது படம். இத்தனை ஆண்டுகால காத்திருப்புக்கு பின் இப்படியொரு அற்புதமான படம் அவரால் உருவாக்க முடியும் என்றால், அதற்காக 5 ஆண்டுகள் அல்ல தமிழ் சினிமா 10 ஆண்டுகள் கூட காத்திருக்கலாம். ஆனால் இந்த நீண்ட இடைவெளிக்கு எளிதில் திருப்தியடையாத அவரது கதைதேடல் மட்டுமே காரணமல்ல.. இங்கு தமிழ் சினிமா சமூகத்தில் நிலவும் வியாபாரச் சூழலும் தான் என்பது வெகு சிலரே அறிந்த உண்மை.. படம் வெளிவரும்வரை இந்த படைப்பாளி எவ்வளவு மனவருத்தம் அடைந்திருப்பார்… ஆனால் அவர் பட்ட கஷ்டம் வீணாகவில்லை.. ஏனென்றால் தங்கமீன்கள் தமிழ் சினிமா சரித்திரத்தில் அழியாத இடம் பிடித்துவிட்டது….



ஒரு நல்ல திரைப்படம் என்பது  “திரைப்படம் ஆரம்பிக்கும் முதலாவது காட்சியிலேயே பார்வையாளனை கதைக்குள் இழுத்துவிட வேண்டும். படம் திரையில் முடிந்துவிட்டாலும், அது தொடர்ந்து பார்வையாளன் மனதில் ஒரு காட்சியாக ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். அது ஒரு சீரிய விவாதத்துக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்க வேண்டும்” இப்படி எத்தனையோ அளவுகோல்கள் சொல்லப்படுவது உண்டு. இப்படி தமிழ்சினிமா பெரும்பாலும் தவறவிடும் இந்த அளவுகோல்களில் பெரும்பாலானவற்றை அழகாகப் பூர்த்தி செய்து தனித்து நிற்கிறது இந்த ”தங்க மீன்கள்”

பதின்ம வயது நிரம்பாத, 8 முதல் 10 வயது நிரம்பிய செல்ல மகள் செல்லம்மாவுக்கும் தகப்பன் கல்யாணிக்கும் இடையிலான பாசப்பிணைப்புகளோடு, பள்ளி செல்லும் குழந்தைகளின் இன்றைய கஷ்டங்களையும் இலவச இணைப்பாக சொல்லி நீந்துகிறது தங்கமீன்கள். மேலும் மாணவர்களை ஆண்டுப் பரிட்சையில் தேர்ச்சியடையச் செய்வதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டு இயந்திரகதியில் இயங்குவதால், குழந்தைகளிடையே அன்புப் பரிட்சையில் தேறாமல் தேங்கி நிற்கும் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்துகிறது இந்த தங்கமீன்கள்...

கதையென்னவென்று கேட்டால் முந்தைய பத்தியில் சொல்லிய நான்கு வரிகளையே மீண்டும் சொல்லலாம். அதை மீண்டும் ஒருமுறை படிப்பதற்கு உங்களுக்கு அயர்ச்சியாக இருக்கலாம்.. ஆனால் படம் பார்க்கும் போது உங்களுக்கு எந்த இடத்திலும் அந்த அயர்ச்சி ஏற்படாது என்பதற்கு நான் கேரண்டி.. கதையின் பிரதான நோக்கம் என்னவென்று எதைச் சொல்வது என்பதில் எனக்கு குழப்பம் உள்ளது. ஏனென்றால் நாயகன் நாயகி காதல் வெற்றி பெறுமா…? நாயகன் நாயகியை கண்டுபிடித்துவிடுவானா..? நாயகன் வில்லனை ஜெயித்துவிடுவானா..? நாயகன் வில்லனை கொன்றுவிடுவானா..? நாயகன் நாட்டுமக்களுக்கு நல்லது செய்துவிடுவானா..? கொலைகாரனை போலீஸ் கண்டுபிடித்துவிடுமா..? இப்படி பல பிரதான நோக்கங்களைக் கொண்டு இருக்கும் தமிழ் சினிமாவின் கட்டுப்பெட்டிக்குள் அடங்க மறுத்து துள்ளிக்குதிக்கிறது இந்த தங்க மீன்கள்..

ஆனால் இன்னும் ஆழ்ந்து சிந்தித்து இந்த திரைப்படத்தின் மையகருவை கண்டறிய முயன்றால் அதுவும் “காதல்” என்று வந்து நிற்பது ஒரு முரண். ஆனால் இந்த முரணும் எங்கே முரண்படுகிறது என்றால், காதல் என்றாலே நாம் தப்பிதமாக கற்று, கற்பித்துக் கொண்டிருக்கும் ஆண் பெண் இருவருக்குமான அடிப்படை காதலை தாண்டி, பள்ளியில் சராசரிக்கும் குறைவான அளவில் படிப்பதால், ஆசிரியர்களாலும், ஆசிரியர் மூலம் பிற குழந்தைகளாலும் கேலி செய்யப்படும் தன் மகளை மீட்டெடுக்க தகப்பன் மகள் மீது காட்டும் காதல்…, சிறுவயதிலேயே ஒழுங்காக படிக்காமல் காதல் திருமணம் செய்து கொண்டு, ஒழுங்கான வேலையின்றி தனக்கும் தகப்பனாகி இன்னும் அவரது தகப்பனின் நிழலிலேயே அண்டி வாழ்ந்து கொண்டிருப்பதால், பலரால் பல இடங்களில் பரிகாசப்பட்டு ஸ்கூல் பீஸ் கட்டும் பணத்திற்கு கூட கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கும் தன் தகப்பன் மீது 8 வயது மகள் காட்டும் காதல்… தன் குழந்தையையும் கணவனையும் எண்ணி மனைவி காட்டும் காதல், தன் பேரக்குழந்தை மற்றும் மகனின் மீது பெற்றோர் காட்டும் காதல், தங்கள் மாணவர்களிடம் அரிதாக ஆசிரியர் காட்டும் காதல் என அணுஅணுவாக காட்சிக்கு காட்சி அன்பு என்று மட்டுமே சொல்லத் தகுந்த காதலினால் நிரம்பி வழிகின்ற இடங்களில் தான்… அதுதான் பிற சாதாரண மீன்களுக்கும்(காதலுக்கும்) இந்த தங்கமீன்களுக்கும் உள்ள வித்தியாசம்..


கல்யாணியாக நடித்திருக்கும் ராம் மிகுந்த பாராட்டுக்குரியவர். பாராட்டு அவரது கதை மற்றும் இயக்கத்திற்காக மட்டுமல்ல.. நடிப்பிற்காகவும் தான்… அந்த கல்யாணி கதாபாத்திரத்தில் படம் பார்த்ததற்குப் பிறகு வேறு யாரையும் நினைத்துப் பார்ப்பது சற்று கடினமாகத்தான் இருக்கிறது.. இருப்பினும் ராம் நீங்கள் சற்று சேரன் ஸ்டைலில் அடிக்கடி ”சொல்லுடா” என்று சொல்வதையும் மாறி மாறி கண்ணங்களில் அடித்துக் கொண்டு அழுவதையும் தவிர்த்திருக்கலாம்.. செல்லம்மாவாக நடித்திருக்கும் அந்த சிறுமி “பேபி சாதனா”வை எத்தனை பாராட்டினாலும் தகும்.. படத்தின் ஆரம்பக் காட்சியில் அந்த தங்க மீன் குளத்தில், தங்கமீனைப் பார்க்க குளத்தில் இறங்கும் போதே நம் மனதில் இறங்கிவிடுகிறார்… அதிலும் ஒன்ணு, ரெண்டு என்று கத்திக் கொண்டே மூன்று சுற்று சுற்றி அந்த தங்கமீனை காணாமல் வாடும் போது…. வாவ்… சத்தியாமாக அந்தப் பெண் நடித்ததாகவே தெரியவில்லை…. அதிலும் அவர் சிரிக்கும் போது அந்த ஓட்டைப் பற்களின் ஊடாக தெற்றிக் கொண்டு தெரியும் அந்த ஈறுகள்.. அவருக்கு அத்தனை அழகு…..! மேலும் செல்லம்மாவோடு ஒட்டிக் கொண்டு வந்து எவிட்டாவின் கதை கேட்கும் அந்த சிறுமி நித்யஸ்ரீயாக வரும் “சஞ்சனா”வின் நடிப்பும் க்ளாஸ்… நோட் பண்ணுங்க ஹீரோஸ் குட்டீஸ் எல்லாம் அவ்ளோ சூப்பரா நடிக்குதுங்க.. அதிலும் நித்யஸ்ரீ அழுது கொண்டு இருக்கும் போது, செல்லம்மா என்னவென்று கேட்க, “நான் நாளைக்கு சாகப் போறேன்..” என்று சொல்லும் நித்யஸ்ரீயிடம்  “ஏன் நாளைக்கு..” என்று கேட்கும் செல்லம்மாவுக்கு நித்யஸ்ரீ சொல்லும் பதில் இருக்கிறதே…. சூப்பர்…….ப்ப்.. அது என்னவென்பதை தியேட்டர்லயே பாத்துக்கோங்க….

வடிவாக நடித்திருக்கும் செல்லம்மாவின் அம்மா செல்லி கிஷோர், ராமின் அப்பாவாக வரும் பூ ராமு, அம்மா ரோகிணி மற்றும் எவிட்டா மிஸ்சாக வரும் பத்மபிரியா எல்லோருமே அற்புதமாக நடித்திருப்பதில் இயக்குநரின் அடையாளமும், நடிகர்களின் அபரிமிதமான உழைப்பும் தெரிகிறது.. மொத்தமே நான்கைந்து பிரதானமான கதாபாத்திரங்களைக் கொண்டு இயங்கும் தமிழ்படங்களைப் பார்த்து வெகுநாட்களாகிவிட்டது… தென் கொரிய இயக்குநர் கிம்கி டுக்கின் படங்களில் நீர்நிலைகள் கண்டிப்பாக இருக்கும்.. அது போல் நம் இயக்குநர் ராமையும் அந்த தமிழ் புலி பதுங்கி இருக்கும் மலைகளையும் தண்டவாளங்களையும், பிரிக்கவே முடியாது போல் தோன்றுகிறது.. இதிலும் ரயிலும் தண்டவாளமும், அந்த ஏழு மலைகளும் ஆஜர்… ஆனால் அதுவும் படத்துக்கு வலுசேர்க்கிறது என்பதே உண்மை…


தமிழின் மிகத் தரமான ஒரு பத்து சிறுகதைகளை எடுத்து ஒரு திரைப்படமாக கோர்த்தால் எப்படி இருக்கும்… அதிலும் குறிப்பாக சிறு குழந்தைகளின் உளவியல் சார்ந்த உலகங்களை பற்றிய கதைகளை… அப்படித்தான் இருக்கிறது இந்த தங்கமீன்கள்… அவ்வளவு ஆழமாக… அவ்வளவு அழகாக…. சில இடங்களில் எனக்கு சில சிறுகதைகள் ஞாபகம் வந்தன… அம்பையின் “அம்மா ஒரு கொலை செய்தாள்…” கு.அழகிரிசாமியின் ”ராஜா வந்திருக்கிறார்..” இப்படி ஆங்காங்கே சில கதைகள்…


குறையென சொல்ல வேண்டுமென்றால், முதல்பாதியில் கதையானது ஒரு முழுக்கதையை விவரித்துச் செல்லும் போக்கு இல்லாமல், குட்டி குட்டி எபிசோடுகளை தொகுத்தது போல் காட்சி தருவதுதான்… செல்லம்மா குழந்தையின் தேடலான அந்த “வோடஃபோன் டாக்கும்” அதை தேடிச் செல்லும் கல்யாணி(ராம்)யின் பயணமும் இரண்டாம் பாதியில் தான் தொடங்குகின்றது… என்பது தான் குறை… உதாரணமாக “தி சில்ட்ரன் ஆப் ஹெவன்” என்னும் ஈரானிய மொழிப்படத்தில் அந்த இரண்டு சிறுகுழந்தைகளின் தேடல் ஒரு ஜோடி செருப்புகளாகத்தான் இருக்கும்… புதியவொன்றை வாங்கித் தரும் வசதி இல்லாத குடும்பம் என்பதை அறிந்து பிள்ளைகள் தங்களுக்குள் சமாளித்துக் கொண்டிருக்கும்.. கதையும் அந்த செருப்பு தைக்கப்படும் காட்சியில் தான் தொடங்கும்.. ஆனால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த வரையறையும் இல்லை என்பதாலும், அவை குட்டி குட்டி எபிசோடுகளாக இருந்தாலும், அழகான, ஆழமான கருத்தாக்கம் மிக்க காட்சிகளாக இருப்பதால் பார்வையாளன் சோர்வடைவதில்லை.. மேலும் க்ளைமாக்ஸ் காட்சியிலும் கூட அந்த குளத்திலேயே படத்தை முடித்து இருக்கலாம்… என்பது என் கருத்து…. இதைதவிர்த்து பெரிதாக குறை சொல்ல எதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை…. முடியாது…

இப்படி ஒரு தரமான ஒளிப்பதிவை கடைசியாகப் பார்த்தது ஆங்க் லீயின் “லைஃப் ஆப் பை” திரைப்படத்தில் தான்… அற்புதமான லைட்டிங்க்ஸ், அற்புதமான ஒளிப்பதிவு…. எந்தவொரு ப்ரேமும் வீணாகவே இல்லை… அத்தனை அழகாக காட்சியோடு சேர்ந்து அன்பையும் அழுகையையும் கொட்டுகிறது ஒளிப்பதிவு… ஒளிப்பதிவாளர் “அரபிந்து சாரா..” பெண் என்கின்ற பட்சத்தில் அவருக்கு கூடுதலான வாழ்த்துக்களும் பாராட்டுகளும்…

இசை யுவன்சங்கர் ராஜா.. “ஆனந்த யாழை மீட்டுகின்றாள்..” கேட்கும் போதே கண்ணீர் சுரக்கிறது… அதுமட்டுமின்றி கண்டிப்பாக பல காட்சிகளில் இவர் தருகின்ற அற்புதமான பிண்ணனி இசையால் தங்கமீன்கள் வேறொரு தளத்தை சென்றடைந்திருக்கிறது என்பது மிகையில்லா உண்மை… இந்த ஆண்டின் சென்சேஷ்னல் ஹிட் லிஸ்டில் கண்டிப்பாக “ஆனந்த யாழ்” இருக்கும்.. இன்னும் பல வருடங்களுக்கு பிண்ணனி இசையில் அசைக்க முடியாதவொரு இடத்தில் யுவன் இருப்பார்…


கதையை ராமும், ஸ்ரீசங்கரகோமதி ராமும் சேர்ந்து எழுதி இருக்கிறார்கள்.. பாலு மகேந்திராவின் பட்டறையால் தமிழ் சினிமா தலைநிமிர்கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிருபணமாகி இருக்கிறது.. வசனங்கள் மிகமிக அருமை.. நாயின் மீது கல்லை எறியும் கணவனைப் பார்த்து மனைவி நாயை அடிக்காதீங்க.. என்று சொல்லும் போது “என் கோபத்துக்கு வேற யாரத்தா நான் அடிக்க…” என்று சொல்லும் போதும்.. “நான் அவள குழந்தையாத்தான உட்டுட்டு போனே.. அந்தக் குழந்தைய நா வர்றதுக்கு முன்னாடி கொன்னுட்டீங்களே..” “பணம் இல்லாதது பிரச்சனையில்லங்க.. பணம் இருக்கிற இடத்துல பணம் இல்லாம இருக்கிறதுதா பிரச்சன…” இப்படி எல்லா வசனங்களுமே அழுத்தமானவை.. அதிலும் குறிப்பாக குயிலின் கூடு பற்றிய கருத்தாக்கம் சிம்ப்ளி சூப்பர்… இதுபோன்ற எண்ணமுடிச்சுகள் இலக்கியவாசிப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியம் போலும்… முதன்முதலாக ஆசிரியர்களை கேவலமாக ஆபாசமாக அசிங்கப்படுத்தாமல், அவர்கள் தரப்பு தவறுகளை அழகாக சுட்டிக்காட்டி, அதே நேரத்தில் எல்லா ஆசிரியர்களும் அப்படி இல்லை.. என்பதையும் காட்டி ஆசிரியர்களை உண்மையில் ஆசிரியர்களாக காட்டிய தமிழ்படம் இதுவாகத்தான் இருக்கும்.. படித்த இலக்கிய ஆர்வம் கொண்ட இதுபோன்ற இயக்குநர்களுக்குத்தான் ஆசிரியர்களின் அருமை தெரியும் போலும்.. அதற்காகவும் தனிப்பட்ட வாழ்த்துக்கள் இயக்குநருக்கு…


நீங்கள் உங்கள் குழந்தையை காதலிக்கீறீர்களா…? உங்கள் குழந்தை உங்களை காதலிக்கிறதா…? உங்களது காதலை நீங்கள் ஆழப்படுத்த, அதிகரிக்க விரும்புகிறீர்களா….? கண்டிப்பாக இந்த தங்கமீன்களை சென்று பாருங்கள்… அப்பாக்கள் மீது மகளுக்கும், மகள்கள் மீது அப்பாக்களுக்கும், இருவர் மீதும் அம்மாக்களுக்கும் காதல் அதிகரிக்கும்.. ஆனால் தயவுசெய்து திருட்டு விசிடியில் பார்க்காமல் தியேட்டரில் சென்று பாருங்கள்… இது போன்ற தரமான படங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது நம் கடமை என்பதற்காக மட்டுமல்ல… இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தகப்பனின் குழந்தையும், ”வோடஃபோன் டாக்” போல ஏதோவொன்றுக்காக தங்கள் தகப்பனின் வருகையை எண்ணிக் காத்திருக்கக் கூடும்… என்பதாலும் தான்…


இந்த தங்கமீன்கள் நிச்சயமாக நம்மை தூண்டில் போட்டு இழுக்கும்…

Sunday 25 August 2013

ஆதலால் காதல் செய்வீர்:

எல்லோரது கவனத்தையும் பரவலாக ஈர்த்திருக்கும் படம். ராஜபாட்டையின் வீழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் தன்னை நிருபித்துக் கொள்ள கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். இதிலும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விசயம் என்னவென்றால் இதன் மூலக்கதை லெனின் பாரதி என்பவரது. அதனை வெற்றிக்கான திரைக்கதையாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர்.. இவரது ராஜபாட்டைக்கு முந்தையபடமான “அழகர்சாமியின் குதிரை” யும் பாஸ்கர்சக்தி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது.. இதுபோன்று நாவலில் இருந்தும், பிறரது கதைகளிலிருந்தும் திரைப்படம் எடுக்க இயக்குநர்கள் முன்வருவது இன்றைய திரைச்சூழலுக்கு ஆரோக்கியமான விசயம். அதற்காக தனிப்பட்ட முறையிலும் இயக்குநருக்கு சில பாராட்டுக்கள்…



கதையின் களம், இன்றைய நவநாகரீக காதலை அடிப்படையாகக் கொண்டது. படத்தின் தலைப்பே ஒரு சின்ன எரிச்சலை ஏற்படுத்தியதால், “காதலும் காதல் சார்ந்த இடத்திற்காகவும் தாரைவார்க்கப்பட்டு இருக்கும் தமிழ்சினிமாவில் காதலிக்க கற்றுக் கொடுக்க வந்திருக்கும் இன்னொரு படம் என்ற எண்ணத்துடன் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி ஒருவித எரிச்சல் கலந்த மனநிலையுடன் தான் படத்தை அணுகினேன்.. எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல முதல்பாதி முழுவதும் காதலும், அந்தக் காதலை தன் காதலியிடம் இருந்து பிடுங்குவதற்கு பிரயத்தனப்படும் காதலனின் அமெச்சூர்தனமான நடவடிக்கைகளும், நாயகனுக்கு காதல் டிப்ஸ்களை இனாமாக அள்ளிக் கொடுப்பதற்கு என்றே அவதாரம் எடுக்கும் தமிழ்சினிமா நாயக நண்பர்களையும் தவிர.. சொல்லிக் கொள்ளும்படி முதல்பாதி முழுவதும் எதுவுமே இல்லை… இயல்பான இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை என்று பலரும் மெச்சிக் கொண்டாலும், அது வணிகத்திற்கான மொண்ணையான கச்சாப் பொருளாக மட்டுமே காட்சியளிக்கிறதே ஒழிய, வாழ்க்கையென்பது அதில் அறவே இல்லை என்பதே என் எண்ணம்..மொத்தத்தில் முதல்பாதியில் என்னைக் கவர்ந்த காட்சிகள் இரண்டே இரண்டுதான்… “நெட்டில் எத்தன ஓட்ட இருக்கும்…” என்று கேள்வி கேட்டு தன் நண்பனை வெறுப்பேத்தும் காட்சி, காதலியின் வீட்டில் தனித்திருக்கும் காதலர்கள் மாட்டிக் கொள்ளும் சூழல் வந்தவுடன், தன்னை கொரியர் பாயாக நாயகன் காட்டிக் கொண்டு, அந்த சூழலின் அபாயத்தைத் தவிர்க்கும் காட்சி..” இந்த இரண்டு மட்டுமே தான்…

ஆனால் இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் கதை இயல்பாக யதார்த்தத்தின் பாதையில் தன்னை நகர்த்தத் தொடங்கியவுடன் தான் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிந்தது… அதிலும் படத்திற்கு அந்த க்ளைமாக்ஸ் மிகப்பெரிய பலம்.. அந்த முடிவுக்கு பதிலாக வேறு எந்த கோணத்திலாவது க்ளைமாக்ஸை யோசித்து வேறுவிதமான முடிவை கொடுத்திருந்தால், கண்டிப்பாக அது ராஜபாட்டையைவிட மிகப்பெரிய தோல்வியை தழுவியிருக்கும் என்பது உறுதி. அதிலும் குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ் பாடலும், அதன் பிண்ணனி இசையும், காட்சிகளின் கோர்ப்பும், அதில் நடித்திருக்கும் அந்த குட்டிச் சிறுவனின் ஆகச்சிறந்த நடிப்பும் படத்தைப் பற்றிய கணிப்பை அப்படியே மாற்றிவிடுகிறது..


ஸ்வேதாவாக நடித்திருக்கும் மனீஷா யாதவுக்கு வழக்கு எண் திரைப்படத்திற்க்கு பிறகும் கனமான கதைக்களம் கொண்ட கதாபாத்திரம் அமைந்தது அவருக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.. தன் நண்பியிடம் இருந்து தன் காதலை மறைக்கும் போதும், காதலால் ஏற்பட்ட களங்கத்தை தன் தாயிடம் இருந்து மறைக்க முயலும் போதும் சிறப்பான நடிப்பு… கார்த்திக்காக வரும் சந்தோஷ் ரமேஷ்க்கு கனமான கேரக்டர்தான் என்றாலும் நடிப்புக்கான போட்டியில் மனீஷாவிடம் பிந்தங்குகிறார். மனீஷாவின் தந்தையாக வரும் ஜெயப்பிரகாஷ் வழக்கம்போல் தன் நடிப்புத் திறனை நிருபிக்கிறார். தன் மகளின் நிலையை எண்ணி, எதுவுமே பேசமுடியாத நிலையில் குலுங்கி குலுங்கி அழுது கொண்டே அந்த இடத்தைவிட்டு வெளியேறும் காட்சியில் அசத்தலான நடிப்பு.

யுவனின் இசையைவிட பிண்ணனி இசை அட்டகாசம்.. ஆண்டனியின் துல்லியமான எடிட்டிங்கும், சூர்யாவின் உறுத்தாத ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலம்.. ஒரு சிறுகதைக்கான ஆழமான முடிவைக் கொண்டு இருக்கும் “ஆதலால் காதல் செய்வீர்” அதே சிறுகதையின் நடையியல் அழகைக் கொண்டு இராமல், முதல்பாதியில் சம்பிரதாய தமிழ்சினிமாவைப் போல் பத்தில் பதினொன்றாக பரிதாபமாக காட்சி அளிப்பது அதன் மிகப்பெரிய குறை.. மேலும் எனது அனுபவத்தில் எனக்கு முதல் பாதி கொஞ்சம்கூட பிடிக்காமல் இருந்து, இரண்டாம் பாதி சொல்லிக் கொள்ளும்படி அமைந்த ஒரே திரைப்படம் ஆதலால் காதல் செய்வீர் மட்டுமே..



ஆதலால் காதல் செய்வீர் முன் வைக்கும் ஒரு முக்கியமான விசயம்.. பால்ய பருவத்தில் நடக்கும் உடலுறவு சார்ந்தது… அதை தவறான முறையில் அணுகும் இரு பாலினருக்கும் அதை பரீட்சார்த்த முறையில் ஆய்ந்து பார்க்கும் ஒரு ஆர்வம் மட்டுமே மேலோங்கி இருக்கிறது.. அதனால் எதிர்படும் விளைவுகளை எதிர்நோக்கும் திராணி இல்லாமலும், அது தொடர்பான புரிதல் இல்லாமலும், எதிர்பாலின இச்சைகளை காதல் என்று கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டும் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர் என்பதை திண்மையாக உணர்த்துகிறது.. பெரும்பாலான ஊடகங்களும், வலைதளங்களும், பெற்றோர்களுக்கும், இளைஞர்களுக்கும் இது அவசியமான படம் என்பதை வலியுறுத்துகின்றன.. உண்மைதான்.. ஆனால் நான் சொல்ல விளைவது என்னவென்றால், இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு சூரியனையே மறைத்துவிட்டதாக கற்பிதம் கொண்டு ஏமாறாமல், பிள்ளைகளின் கண்களில் இருந்து இதுசார்ந்த விசயங்களை மறைத்து அவர்களைப் பாதுகாக்க முற்படும் முட்டாள்தனத்தைவிட.. அவர்களுக்கு இந்த விசயங்களை பக்குவமாக உணர்த்தி அவர்கள் பால்யவயது பருவத்தை பாதுகாப்பாக கடந்துவர துணைபுரிவதே பெற்றோரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும் என்பதே…

Monday 12 August 2013

The Conjuring:

ஜேம்ஸ் வான் இயக்கத்தில் வெளிவந்து சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருக்கும் படம் “THE CONJURING”. வழக்கமான பேய் படத்திற்கான பார்முலாவில் இருந்து சற்றும் விலகாத அதே கதை மற்றும் கள பிண்ணனியைக் கொண்டு வந்திருந்தாலும், படத்தில் சில காட்சிகளில் இருக்கும் பெர்பக்‌ஷன், அனைத்து கதாபாத்திரங்களின் மிகையில்லாத வெகு யதார்த்தமான நடிப்பு, மிகமிக முக்கியமாக அந்த திரைக்கதையோடு பொருந்திய மிக அற்புதமான பிண்ணனி இசை இவையோடு சத்யம் போன்ற மிகச் சிறந்த திரையரங்குகளின் ஸ்பீக்கர் சிஸ்டம் இவையெல்லாம் சேர்ந்து ஒரு அற்புதமான காண்பனுபவத்தை சாத்தியப்படுத்தி இருக்கின்றன.


Lorraine warren, Ed warren தம்பதிகள் சூப்பர் நேச்சுரல் சக்தி என்று சொல்லப்படும் அமானுஷ்ய சக்தியால் நடைபெறும் சம்பவங்களை ஆராய்ந்து பேய் துரத்தும் நிபுணர்கள். இவர்களிடம் இருந்து கதை தொடங்குகிறது.. இவர்கள் ஒரு அரங்கத்தில் குழுமி இருக்கும் பார்வையாளர்களிடம் தங்கள் அனுபவத்தில் கிடைத்த வீடியோ ஆதாரங்களை திரையிட்டு, அந்த அனுபவத்தில் என்ன பிரச்சனை இருந்தது, அதை அவர்கள் எப்படி தீர்த்தனர் என்பதை விளக்குகின்றனர். அதன் இறுதியில் பார்வையாளர்கள் அந்த தீயசக்தி புகுந்த பொம்மை எங்குள்ளது என்று கேள்வியெழுப்ப.. அது பத்திரமாக ஒரு இடத்தில் இருப்பதாக சொல்லி முடிக்க.. அடுத்த காட்சியில் அந்த பொம்மையை Ed தனது வீட்டில் தங்களது ஆராய்ச்சிகளில் இருந்து கிடைத்த பொருட்கள் வைக்கும் பிரத்யேக அறையில் வைத்து பூட்டுகிறான்.


இப்போது அடுத்த கதை தொடங்குகிறது. இப்படி இவர்கள் பல அனுபவங்களை கடந்து வந்திருந்தாலும் இவர்களால் மறக்கமுடியாத ஒரு அனுபவம் உண்டு என்ற வரிகள் திரையில் ஓட… The Conjuring என்ற டைட்டில் அற்புதமான பிண்ணனி இசையுடன் ஓட தொடங்குகிறது. Carrolyn parren மற்றும் Rodger parren தம்பதியினர் தங்கள் ஐந்து பெண் குழந்தைகளுடன் தாங்கள் வங்கியிடம் இருந்து புதிதாகப் பெற்ற வீட்டுக்கு குடியேற.. அவர்களின் வளர்ப்பு நாய் மட்டும் உள்ளே வர தயங்கி வாசலிலே நின்று குரைக்கத் தொடங்குகிறது… வீட்டை ஒதுங்கச் செய்யும் போது மறைவிடத்துக்குப் பின்னர் கீழே இருக்கும் அறையை கண்டு Parren தம்பதியினர் மகிழ்ச்சி கொள்கின்றனர். நாய் மட்டும் வெளியே நின்று குரைத்துக் கொண்டே இருக்க.. இரவில் அனைவரும் தூங்கச் செல்கின்றனர். காலையில் எழுந்துப் பார்த்தால் Carrolyn Parrenனின் உடம்பில் தடிப்புகள் போன்று ஏதோ வெடித்திருக்க.. நாயும் இறந்திருக்கிறது… அவர்கள் பின்பு செய்தது என்ன…? என்பதை வெண் திரையில் கண்டு மகிழுங்கள்..


படத்தில் ஐந்து பெண் பிள்ளைகளும் கண்ணா மூச்சி விளையாடுவார்கள்… ஒளிந்து இருப்பவர்களை கண்டுபிடிக்க வருபவளுக்கு க்ளு கொடுப்பது போல் ஒளிந்திருப்பவர்கள் கைதட்ட வேண்டும்… அப்படி மூன்று முறை கைதட்டுவதற்குள் கண்டுபிடித்துவிட வேண்டும். அந்த சிறுமி First Clab என்று சொல்லியவுடன் அரங்கமே கைதட்டுகிறது.. அந்த அளவுக்கு ஆடியன்ஸ் ரசித்துப் பார்க்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பேய் வரும் போது ஆடியன்ஸிடம் இருந்து கேட்கும் அலறலும் ஆரவாரமுமே ஒரு வித்தியாசமான அனுபவம்.. அதற்காகவே இன்னொரு முறை பார்க்கலாம்.. இதில் ஜோடியாக வருபவர்கள் எல்லாம் பேய் வருவதை சாக்காக சொல்லிக் கொண்டு ஒருவரை ஒருவர் கட்டிக் கொள்கின்றனர்… இப்படி ஒருவித திடுக்கிடும் கூத்தும் கும்மாளமுமாக படம் பார்த்து முடித்து வெளியே வரும் போதுதான்.. சுற்றிலும் பரவி இருக்கும் இருண்மையை கண்டவுடன் ஒருவித பயம் அடிவயிற்றை கவ்வுகிறது…



இதுதவிர ஆங்காங்கே வரும் சில காட்சி நகைச்சுவையும், வசன நகைச்சுவையும் பிற பேய் படங்களில் காணாதது.. ”April” என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அந்த சிறுமி அத்தனை அழகு… இப்படி படத்தைப் பார்ப்பதற்கு பல பாசிட்டிவான காரணங்கள் இருந்தாலும், ஒரே ஒரு நெகடிவ்வான காரணம்.. நீங்கள் இளகுவான மனம் படைத்தவரா…? வீட்டில் சில நாட்களுக்கு தனித்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறதா..? அப்படியென்றால் நீங்கள் இந்த படத்தை தவிர்த்துவிடுவது நல்லது.. ஏனென்றால் இந்த திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும் எதுவுமே மீள் நினைவுக்கு வராத படம் இல்லை.. இது உங்கள் நினைவில் இருந்து மீள்வதற்கு பல நாட்கள் பிடிக்கும்…..

ஐந்து ஐந்து ஐந்து:

வெகுநாட்களுக்குப் பிறகு பூ சசியின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம். தலைவாவின் ரீலிஸ் தள்ளிப் போனதன் புண்ணியத்தில், சில குறைந்த முதலீட்டுப் படங்களை சீக்கிரம் கொண்டு வரும் முயற்சிகள் நடந்து கொண்டு இருக்க, அந்த சூட்டோடு அவசரமாக களமிறக்கப்பட்டிருக்கிறது இந்த 555. ட்ரெய்லரைப் பார்த்த போது சசி வழக்கத்திற்கு மாறாக தன் மென்மையான “பூ”ப்போன்ற கதை சொல்லும் பாணியில் இருந்து விலகி ஆக்சன் டைப்பை கையில் எடுத்து மிரட்டி இருந்ததால் சற்று மிரண்டு போயிருந்தேன். ஆனால் படம் பார்த்தவுடன் சசி அவர் மீது இருந்த நம்பிக்கையை காப்பாற்றிக் கொண்டார் என்று உள்ளூர சந்தோசமாகவே இருந்தது.


படத்தின் ஆரம்பத்தில் விபத்துக்குள்ளாகும் காரில் இருந்து ரத்தமும் சதையுமாக மீட்கப்படுகிறார் பரத். ஆறு மாதங்களுக்குப் பிறகு எழுந்து நடமாடத் தொடங்கும் பரத், தனிமையிலேயே தன் பொழுதைக் கழிக்கிறார். தனிமை போரடிக்கும் சமயங்களில் தானும் தன் காதலியும் சேர்ந்து எடுத்த போட்டோவையும், வீடியோவையும் தேய்ந்து போகும் அளவுக்கு பார்த்துக் கொண்டிருக்க… ஒருநாள் அந்த போட்டோவில் தன் காதலிக்கு பதில் தன் அண்ணன் கோபி(சந்தானம்)யும், வீடியோ எந்த பதிவும் இன்றி எம்டியாகவும் இருப்பதைக் கண்டு அண்ணனை தாக்க, அவரது அண்ணன் சந்தானமும் மனோதத்துவ நிபுணரும், பரத்தை “இல்லாத ஒரு காதலியை இருப்பதாக நீ எண்ணிக் கொண்டு இருக்கிறாய்...” என்று குற்றம் சாட்ட, மேலும் குழம்பிப் போகும் பரத்தின் வாழ்க்கையில் உண்மையில் நடந்தது என்ன…? என்பது 555யின் பரபரப்பான மீதிக் கதை.

அரவிந்தாக பரத். வெகு நாட்களுக்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படி ஒரு படம். உணர்ந்து நடித்திருக்கிறார். தனக்கு மனோநிலை பாதிக்கப்பட்டதாக எண்ணிக் கலங்கும் போதும், தன்னைச் சுற்றி ஏதோ சூழ்ச்சி நடக்கிறதோ என்று சந்தேகம் கொள்ளும் போதும் இயல்பான நடிப்பு. இது போக அந்த ”எய்ட் பேக்ஸ்” உடம்பை முறுக்கிக் கொண்டு எதிரிகளை துவம்சம் செய்யும் போது ஆக்ரோசமான நடிப்பு. உடம்பில் ஆங்காங்கே தெரியும் சில கட்ஸ்களை பார்க்கும் போதே அந்த உடலமைப்பைக் கொண்டு வர அவர் பட்ட அரும்பாடு தெரிகிறது.. ஆனால் இந்த திரைக்கதைக்கு அந்த உடலமைப்பு தேவையா என்று கேட்டால்…? பதில் இல்லைதான்.. அதுசரி கஜினியில் சிக்ஸ் பேக்ஸ்க்கு என்ன தேவை இருந்தது…? அதனால் அதை டீலில் விடுவது ஒன்றும் பெருத்த குற்றமில்லை..


லியானாவாக மிர்த்திகா. மற்றொரு கேரள வரவு. ஆனால் வந்ததென்னவோ யு.எஸ் ரிட்டனாக. க்யூட்டாக இருக்கிறார். பல இடங்களில் இவர் வெளிப்படுத்தும் முகபாவனைகள் வசீகரிக்கின்றன. பல தமிழ் திரைப்படங்களில் பார்த்த ஜெனிலியா கதாபாத்திரம் தான் என்றாலும், இந்த லியானா என்ற கேரக்டர் உண்மையா..? இல்லை கற்பனையா..? என்ற மையகதையோடு ஒட்டிய கதாநாயகி பாத்திரம் என்பதால் நடிப்பை வெளிப்படுத்த ஏராளமான வாய்ப்பு. அதை அவர் தவறவிடவில்லை என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக தன் காதலன் பரத்திடம் ஏதோ ஒரு அதிசய சக்தி உள்ளது என்று கடைசி வரை நம்புவதும், டிவியைப் பார்த்து ஆன், ஆப் சொல்லி குழந்தைத்தனமாக மகிழ்வதும், தான் பல்பம் தின்பதை தன் காதலன் கண்டுபிடித்தவுடன் வேறு யார்ட்டயும் சொல்லாதே என்று கெஞ்சும் போதும் கவனிக்கத்தக்க நடிப்பு. ஆனாலும் ஒரு ரவுண்ட் வருவாரா என்று சொல்வது சந்தேகமே.. ஏனென்றால் பிற நாயகர்கள் எதிர்பார்க்கும் சில அம்சங்கள் இல்லையோ என்றே எண்ண தோன்றுகிறது….


சந்தானத்திற்கு வழக்கமான காமெடி நண்பன் கதாபாத்திரத்தில் இருந்து காமெடி அண்ணன் கதாபாத்திரம். தம்பி ஆக்ஸிடெண்ட் ஆகி மருத்துவமனையில் அட்மிட் ஆகி, மனநிலை சிதைந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றும் இறுக்கமான சூழலிலும் தலைவர் முகத்தில் எந்த ரியாக்சனும் இல்லை.. அதே நக்கல் பாணி வசனங்கள் மட்டுமே ஆங்காங்கே கை கொடுக்கிறது.. “யார்டா இவன் வாலிபாலுக்கு வாய் வரைஞ்ச மாதிரி..” ”என்னது பல்பம் சாப்பிடுறாளா.. அய்யய்யோ நா ஜெனிலியான்னு நினைச்சே.. அது அஞ்சலி பாப்பாவா…” “நீ லவ்வ சொல்லவே வேணாம்.. கனடா போறேன்னு சொல்லு.. அவளே உன்ன லவ் பண்றேன்னு சொல்லிருவா…” என த்ரில்லர் வகை திரைக்கதையில் ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்டும் வழக்கமான வேலைதான்….


இசை சைமன் என்ற புதியவர். ஓரிரு பாடல்கள் கேட்க பரவாயில்லை.. ஆனால் பிண்ணனி இசையில் ஸ்கோர் செய்ய பல இடங்கள் இருந்தும் ஏனோ கோட்டை விட்டிருக்கிறார். சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவில் விழியிலே பாடலில் வரும் சில புதிரான ஷாட்டுகள் கவனம் ஈர்க்கின்றது. ஆங்காங்கே வரும் ஆக்சன் செக்கீயன்ஸ் காட்சிகள் பட்டவர்த்தனமாக அவை சிஜி செய்யப்பட்டவை என்பதை அங்கீகரிப்பதால், அந்தக் காட்சிக்கு கிடைக்க வேண்டிய பாதிப்புகள் எதுவுமே இல்லாமல் அவை வெகு சாதாரணமாகவே கடக்கிறது.. அதிலும் குறிப்பாக அந்த ஓபனிங் கார் ஆக்ஸ்டெண்ட் காட்சி…


இயக்குநர் சசி, பூ படத்தின் மூலம் கிடைக்காத வணிகரீதியிலான வெற்றியை இந்த 555 மூலம் சாத்தியப்படுத்தி இருக்கிறார். காதல் எபிசோடுகள் ஒவ்வொன்றும் கவிதை.. பல்பம் சாப்பிடும் கதாநாயகி, செங்கல் போன்ற செல்போன், அபூர்வ சக்தி, கேபிள் டிவி ஆப்ரேட்டர் என சின்ன சின்ன ஒன்லைனரை வைத்துக் கொண்டு மிக அழகாக கதை பின்னியிருக்கிறார். அதிலும் குறிப்பாக அந்த ரெஸ்டோரண்டில் வைத்து பரத் தன் எதிரி யார் என்பதைக் கண்டுபிடிக்கும் காட்சி அட்டகாசம்.. இதை தவிர்த்து குறை என்று பார்த்தால், படம் சில இடங்களில் கஜினியையும், சமரையும் நினைவுபடுத்துவதை தவிர்க்கமுடியவில்லை. முதல் பதினைந்து நிமிட படம் நம் பொறுமை சோதிக்கிறது. மேலும் படத்தில் வில்லன் கேரக்டர் மிகப்பெரிய மைனஸ்.. நன்கு பரிச்சயமான வேறொரு நபரை பயன்படுத்தி இருக்கலாம்.. இதுவரை சசி தன் திரைக்கதையில் வில்லனையே பயன்படுத்தியது இல்லை என்பதால் இந்தக் குறையையும் மன்னிக்கலாம்.. வில்லன் ஹீரோவை பழிவாங்கும் காரணத்திற்காக டிஸ்கஸனில் அதிக நாட்கள் விவாதித்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.. ஆனால் அந்தக் காரணம் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம்… போலீஸ் என்பது வழக்கமான தமிழ்சினிமா போலீசாகவே இதிலும் கையாளப்பட்டிருப்பது, கத்துவதில் மட்டுமே தன் வன்மத்தை வெளிப்படுத்தும் வில்லன், அவரது முகத்தைக் காட்டாமலே அவருக்கு கொடுக்கப்படும் பில்டப் என வழக்கமான பல காட்சிகளும் உண்டு. மேலும் முதல் காட்சியில் பரத் விபத்திலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இருக்கும் நிலையில் ஏன் காரணமே இல்லாமல் அவரை பழைய விஷயங்களை ஆக்ரோசத்துடன் தோண்டும் மனநிலைக்கு தள்ள வேண்டும்… வில்லன் எதிர்பார்த்த வெற்றி அப்போதே கிடைக்கத் தொடங்கிவிட்டதே…? இப்படி ஆங்காங்கே திரைக்கதையில் சின்ன சின்ன மிஸ்டேக்ஸ்…


இருப்பினும் வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு கவித்துவமான காதல் கதையை சற்று விறுவிறுப்பான திரைக்கதையுடன் பார்த்ததில் இந்த ஐந்து ஐந்து ஐந்து திருப்தி அளிக்கிறது…

Thursday 8 August 2013

உடையுமோ குடியரசு…?:

29வது மாநிலமாக “தெலுங்கானா” என்றொரு மாநிலத்தை தற்போதைய ஆந்திர தேசத்தில் இருந்து பிரித்து, தனிமாநிலமாக அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் பிண்ணனியில் உள்ள பிற்போக்குத்தனமான அரசியலைப் பற்றியும், தனி மாநிலமாக பிரிக்கவேண்டியதன் தேவை குறித்தும், தேவையின்மை குறித்தும், இந்த அறிவிப்பை வழிமொழிந்து வரவேற்பவர்களின் சிந்தனை மட்டத்தைக் குறித்தும் என் அறிவுக்கு எட்டியவற்றை இங்கு பகிர்வதன் மூலம், அது ஒரு நல்ல விவாதத்துக்கு வழிகோலும் என்ற எண்ணத்தில் தான் இதை பதிவேற்றுகிறேன். இங்கு முன்வைக்கப்படும் தகவல்கள், தீர்வுகள் போன்றவற்றில் இருக்கின்ற சீர்மையற்ற கருத்துக்கள், ஒவ்வாமைகள்  தொடர்பான விவாதத்துக்கு விருப்பமுள்ளோரை வரவேற்று வழிவிடுகிறேன்…


தெலுங்கானா தனி மாநிலமாக பிரிவது நல்லது என்பதற்கு முன்வைக்கப்படும் காரணங்கள், 1) ஆந்திரத்தின் பிற பகுதிகளைப் போல் தெலுங்கானா பகுதிகளும் அங்கு வாழும் மக்களும் பொருளாதார நிலையிலோ அடிப்படை வசதிகளிலோ எந்தவிதத்திலும் வளர்ச்சியடையவில்லை. அவர்களுக்கான வாய்ப்புகள் புறக்கணிக்கப்படுவதால் அவர்கள் பின்தங்கிய நிலையிலேயே வாழ்கிறார்கள். 2) தெலுங்கானா இந்தியா சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் வரையிலும் கூட ஆந்திர பிரதேசத்துடன் சேராமல் தனியாகவே இருந்தது. அதனால் இது பல ஆண்டுகால கோரிக்கை.. 3) தெலுங்கானா பகுதியில் வாழ்கின்ற மக்கள் ஆந்திரப் பிரதேசத்துடன் சேர்ந்து இருக்க விரும்பவில்லை.. தனியாக செல்வதையே விரும்புகிறார்கள்.. 4) உஸ்தானியா பல்கலைக்கழக மாணவர்கள் முதற்கொண்டு அனைத்து மாணவர்களும் ஒற்றுமையாக போராடி வருகிறார்கள்.. அவர்களும் வேலைவாய்ப்பு ரீதியில் முன்னேற்றம் காண தனி தெலுங்கானாவையே விரும்புகிறார்கள்..

இப்படி இன்னும் பல காரணங்கள் உண்டு. இருப்பினும் மேற்சொன்ன காரணங்கள் மட்டுமே மிக முக்கியமான காரணங்கள். எனவே அதை மட்டும் விவாதப் பொருளாக்குவோம்.. அதற்கு முன்பு கொஞ்சம் தெலுங்கானாவின் வரலாறு….

தெலுங்கானா பகுதியை தவிர்த்து ஆந்திரத்தின் பிறபகுதிகள் எல்லாம் ஒருங்கிணைந்த சென்னைபட்டிணத்தின் ஆளுகைக்கு கீழேதான் இருந்தது. ஆனால் இன்றைய தெலுங்கானா பகுதியானது, இன்னும் சில மராட்டிய பகுதிகளையும் கர்நாடகப் பகுதியையும் சேர்த்து ஹைதராபாத் சமஸ்தானம் என்னும் பெயரில் நிஜாம் ஆளுகைக்கு கீழ் இருந்தது. அப்படியென்றால் நிஜாம் ஆட்சியை வெள்ளையர் கண்டுகொள்ளவில்லையா..? என்று கேள்வி எழும்.. ஆம் அவர்கள் கண்டுகொள்ளவில்லைதான்.. ஏனென்றால் அந்த நிஜாம் மன்னர் ஆங்கிலேயர்கள் கட்டச் சொன்ன வரிப்பணத்தை எந்தவித மறுப்பும் இன்றி கட்டிவந்தது தான் காரணம். அதனால் நிஜாம் ஆட்சிக்கு உட்பட்ட எல்லைகளில் அவர்கள் ஆட்சி அதிகாரங்களில் தலையிடாமல் வெறும் வரிப்பணத்தை மட்டும் கப்பமாக வாங்கிக் கொண்டு நிஜாமை அவரது தலைமையின் கீழ் ஆட்சி செய்ய அனுமதித்தனர்.

அவர் தன் ஆளுகைக்கு உட்பட்ட வறிய மக்களை கசக்கிப் பிழிந்து, அவர்கள் மீது அதிகமான வரிச்சுமை விதித்து மக்கள் பணத்தைப் பிடுங்கி, ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டி தன் வாழ்க்கையை மிகவும் சுகபோகமாக ஓட்டி வந்தார். அந்த காலகட்டத்திலேயே அவர் முதல் இருபது பணக்காரர்களுள் ஒருவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு முக்கியமான அம்சம் அவரது ஆட்சியின் கீழ் வாழ்ந்த அதிகபடியான மக்கள் தெலுங்கு பேசும் மக்களாக இருந்தாலும், மன்னர் முஸ்லீம் என்பதால் ஆட்சி மொழியாக இருந்தது உருது மொழி. இதனால் உருது பேசத் தெரிந்த மராட்டிய மக்களே நிஜாம் அரசின் அரசாங்கப் பணிகளை அலங்கரித்தனர்.. மேலும் பள்ளிக்கூடங்களிலும் ஆட்சிமொழி உருது, ஆங்கிலமும் அங்கு கற்றுக் கொடுக்கப்படவில்லை என்பதால் தெலுங்கு பேசும் மக்கள் கல்விகற்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.. படிப்பறிவு இன்மையாலும், அரசாங்கப் பணிகளில் இல்லாமல் வெறும் விவசாயம் மட்டுமே செய்துவந்ததாலும், ஜமீந்தாரி முறையின் கொடுமையாலும் அவர்களது வாழ்க்கைதரம் பெரிதாக ஒன்றும் உயரவே இல்லை..

அதே நேரத்தில் ஆங்கில ஆளுகையின் கீழ் இருந்த ராயல்சீமா, ஆந்திரத்தின் பிற பகுதிகளில் வசித்துவந்த மக்களுக்கு ஆங்கிலேயரின் வாயிலாக ஜமீந்தாரி முறை ஒழிக்கப்பட்டதால் எந்தவிதமான வரி நிர்பந்தமும் இன்றி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியுற்றனர். சாதிய அடுக்குகள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் புறக்கணிக்கப்பட்டதால் ஓரளவுக்கு தாழ்த்தப்பட்ட மக்களும் ஆங்கில அறிவைப் பெற்றும், அரசாங்கப் பணிகளிலும் ஓரளவுக்கு பங்கு கொண்டு தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொண்டனர். இப்படி இருக்கையில் தான் 1946ம் ஆண்டு தெலுங்கானா பகுதிகளில் கம்யூனிஸ்டு கட்சிகளின் பிரச்சாரத்தால் முதன்முதலாக ஒரு மக்கள்படை தோற்றுவிக்கப்பட்டு அது நிஜாமின் ராணுவத்தை எதிர்த்துப் போராடி 300க்கும் மேற்பட்ட கிராமங்களை மீட்டு, மக்களே ஆட்சி செய்யத் தொடங்கினர். சுதந்திரப் போராட்டத்தின் விளைவாக, ஆங்கிலேயர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சுதந்திரம் தருவதாக அறிவித்து நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

அப்போதும் வரியை ஒழுங்காக கட்டிவந்த நிஜாம் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளைப் போன்ற சிற்சில பகுதிகள் இந்தியாவுடன் இணைவதும் இணையாமல் இருப்பதும் அவரவர் விருப்பம் என்று கூறியே வெளியேறினார்கள். அதில் சில பகுதிகள் தாமாக முன்வந்து இந்தியாவுடன் இணைந்து கொண்டது. நிஜாம் கட்டுப்பாட்டின் ஹைதராபாத் சமஸ்தான தெலுங்கானாவில் இன்னும் சில பகுதிகளில் மன்னர் ஆட்சியே நடந்துவந்தது.. அப்போதும் மக்கள் தீராத துன்பத்தில் வாழ்ந்துவந்தனர்… அப்போதுதான் ஏற்கனவே மக்கள் புரட்சியால் கதிகலங்கிப் போய் இருந்த நிஜாம் தன் நிலப்பரப்பை பாகிஸ்தான் ஆட்சிக்கு கீழ் கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் காய்களை நகர்த்த தொடங்க.. இதைக் கவனித்த ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரசித்திப் பெற்ற “போலோ” ஆப்ரேசன் மூலம் இந்திய ராணுவத்தைப் பயன்படுத்தி நிஜாம் அரசை பணியச் செய்து வெற்றி கொண்டார். இருப்பினும் மக்கள் புரட்சிப்படை இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போரிடவே இந்திய அரசாங்கம் திணறியது. அப்போது கம்யூனிஸ்டு கட்சியினர் எடுத்த ஒரு தவறான நிலைப்பாட்டால் மக்கள் தங்கள் போராட்டத்தை விடுத்து இந்தியாவுடன் இணைய சம்மதித்தார்கள்.. அப்போது அது ஹைதராபாத் மாநிலம் என்று அழைக்கப்பட்டது. இதனிடையே, சென்னை மாகாணத்தைப் பிரித்து ஆந்திரா தனிமாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தெலுங்கு பேசும் மக்களிடையே வலுப்பெற்றது. தெலுங்கு பேசும் மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில், ஆந்திரா என்ற தனிமாநிலத்தை உருவாக்கி அதற்கு சென்னையை தலைநகராக அறிவிக்க வலியுறுத்தி பொட்டி ஸ்ரீராமலு என்பவர் அக்டோபர் 19ம் தேதி 1952ம் வருடம் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து 63ம் நாள் உயிர்விட 1952 டிசம்பர் 15ல் அவரது இறுதி ஊர்வலத்தின் போது சென்னை மவுண்ட் ரோட்டில் பெரிய கலவரம் வெடித்தது. தெலுங்கு பேசும் பகுதிகளான ராயல் சீமா கடலோர ஆந்திர மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதன் விளைவாக 1953ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி குர்நூலை தலைநகராகக் கொண்டு தனி ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது.

அப்போதும் தெலுங்கானா பகுதி ஹைதராபாத் மாநிலமாகவே இயங்கி வந்தது. 1956 நவம்பர் 1ல் மொழிவாரி மாநிலங்களாக இந்தியா பிரிக்கப்பட்ட போது ஏற்கனவே தெலுங்கு பேசும் மக்கள் வாழ்ந்துவந்த ஆந்திரப் பகுதியுடன் தெலுங்கானாவை இணைத்தார் நேரு. ஆனால் தெலுங்கானாவைத் தவிர்த்து பார்த்தால் ராயல்சீமா, கடலோர ஆந்திர மக்கள் அப்போதே கல்வியறிவிலும் பொருளாதாரத்திலும் மேம்பட்டு இருந்ததால் இருவருக்கும் இடையே ஒரு வேறுபாடு சமமாக வளரத் தொடங்கியது.. அப்போதே தெலுங்கானா எப்படி தனியாக இருந்ததோ அதே போல் அதை தனிமாநிலமாக பிரிக்க வேண்டும் என்று சிலர் போராட்டம் நடத்தத் தொடங்கினர்… இப்படித்தான் தெலுங்கானா தனி மாநிலத்திற்கான முதல் போராட்டம் தொடங்கியது…. இதுதான் தெலுங்கானாவின் சுருக்கமான வரலாறு.

இப்போது மீண்டும் மேற்கூரிய நான்கு காரணங்களுக்கு வருவோம். தெலுங்கானாப் பகுதி மக்கள் பொருளாதார நிலையில் வளர்ச்சி அடையாமல் பின்தங்கி உள்ளனர் என்பது முழுமுதற்காரணம். இது கண்டிப்பாக வருந்தத்தக்க ஒன்று. ஆனால் சற்று கூர்ந்து பார்த்தால் தனி தெலுங்கானா மாநிலமாக பிரிவதற்காக போராடிய போராட்டங்களுள் பாதியளவுக்கு கூட தங்களது பொருளாதாரம் பின்தங்கி உள்ளது. அரசு எங்கள் பகுதி மக்களின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதனை முன்னிருத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டதாக எனக்கு நினைவு இல்லை.. ஆக இங்கு பொருளாதார நிலையில் தன்னிறைவு இல்லை என்பதைக் காட்டிலும் தனித் தெலுங்கான என்பது தான் இவர்களது பிரதானக் குறிக்கோள் என்பது தெள்ளத் தெளிவாகிறது. இதனை அரசியல் சாயம் பூசி சந்தேகக் கண் கொண்டு பார்க்காமல் தவிர்த்துவிட முடியாது.

அடுத்து தெலுங்கானா இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் கூட பல ஆண்டுகளுக்கு தனி மாநிலமாகவும் தனி ராஜ்ஜியமாகவும் விளங்கியது என்ற காரணம். ஆம் உண்மைதான். மறுக்கவில்லை.. தெலுங்கானா மட்டும்தான் அப்படி இருந்ததா.. வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இந்தியாவுக்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்ட போது அதன் நிலப்பரப்பில் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் சுயராஜ்ஜியத்துடன் விளங்கியவைதான். அதற்காக அந்த 500 ராஜ்ஜியங்களையும் தனித்தனியாக பிரித்துவிட முடியுமா…? அதனால் மேற்சொன்னக் காரணத்தைக் கணக்கில் கொள்ள முடியாது…

மூன்றாவதாகச் சொல்லப்படும் காரணம், தெலுங்கானா பகுதியில் வாழும் மக்கள் தனித்திருக்கவே,  தனி மாநிலமாக பிரியவே விரும்புகிறார்கள் என்ற காரணம்… இது ஒரு முக்கியமான உளவியல் சார்ந்த காரணம்.. இதனை வெகு கவனமாக அணுக வேண்டிய தார்மீக கடமை நம் எல்லாருக்கும் உண்டு. நான் பெங்களூருவில் பணியாற்றிய காலத்தில் ஆந்திர தேசத்தில் இருந்து எனக்கு ஒரு நெருக்கமான நண்பன் அறிமுகமானான். அவனோடு உரையாடும் போது, அவன் விளையாட்டாக, ஆனால் அவனது உள்மனதில் இருந்து கூறிய ஒரு வார்த்தை “WE DON’T HAVE VERY GOOD NEIGHBOUR’S” அதாவது எங்களுக்கு (ஆந்திர மக்களுக்கு) ஒரு மிகச் சிறந்த அண்டை வீட்டுக்காரன் (தமிழன், கன்னடன்,மராட்டியன் மற்றும் ஒரியன்) இல்லவே இல்லை என்றான். சற்று யோசித்துப் பார்த்தால் புரியும். இது கண்டிப்பாக ஒரு ஆந்திர பிரஜையின் எண்ணமாக மட்டும் இல்லை. இதையேதான் ஒவ்வொரு மாநிலத்தாரும் அண்டை மாநிலத்தவரைப் பார்த்துக் கூறிக் கொண்டே இருக்கிறோம்.. இந்த ஒவ்வாமை எப்படி நமக்குள் விதை விட்டு விருட்சமாக மாறியது. இதனை தூண்டிவிட்டு வளர்த்தெடுத்த அயோக்கியர்கள் யார்…? மனிதத்தன்மையை மறக்கடித்து இப்படி ஒரு மாநோய்க்கு நம்மை நாமே எப்படி பலிகொடுக்கும் மந்தநிலைக்கு மனித இனம் எப்போது யாரால் தள்ளப்பட்டது…?

இதைத்தான் நாம் சற்று உளவியல் ரீதியாக அணுக வேண்டியுள்ளது.. அப்படி என்ன வெறுப்பு ஒவ்வொரு அண்டை மாநிலத்தவன் மீதும்…? அவன் நம் எதிரி.. நம் போட்டியாளன் என்பதாலா..? எதில் அவன் நம் போட்டியாளன் என்று நம்மை நாமே கேட்டுக் கொண்டால் நம் மனதிற்குள்ளே பதில் வரும் எல்லாவற்றிலும் தானென்று…! வேலை பங்கீட்டில், உணவு பங்கீட்டில், நீர் பங்கீட்டில், நிலப் பங்கீட்டில், பொருளாதாரப் பங்கீட்டில், பெண் பங்கீட்டில்…. இப்படி எத்தனையோ பங்கீடுகளில் அவன் நம் போட்டியாளன்…? இன்னும் சற்று ஆழமாக யோசித்துப் பாருங்கள்.. அண்டை மாநிலத்தவனை மட்டும் தான் நாம் விரோதிக்கிறோமா…? தமிழகத்தில் உள்ள அனைவரையுமே நாம் நேசிக்கிறோமா…? அதுவும் இல்லையே…? நீங்கள் உங்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் கூறுங்கள்…? உங்களுக்கு பிடித்த மாநிலம் உங்கள் மாநிலம் தான்.. உங்களுக்கு பிடித்த ஊர் உங்கள் ஊர்தான்… உங்களுக்கு பிடித்த தெரு உங்கள் தெரு தான்…. உங்களுக்கு பிடித்த வீடு உங்கள் வீடுதான்.. உங்களுக்கு பிடித்த நபர் “நீங்கள்” தான் நீங்கள்…. நீங்கள் மட்டும் தான்…… இப்படி நாம் எதிலெல்லாம் எங்கள் எங்கள் என்று கூறிக் கொண்டு அலைகிறோமோ… அதன் அகச்சிந்தையில் அசிங்கமாய் ஒழிந்து கொண்டு இருப்பது நான்.. நான்… நான்.. என்னும் அகந்தை மட்டுமே தான்…

நமக்கு உடன் பிறந்தோரும் போட்டியாளன் தான்.. பக்கத்து வீட்டுக்காரனும் போட்டியாளன் தான்… பக்கத்து தெருக்காரன், பக்கத்து ஊர்க்காரன், பக்கத்து மாவட்டத்துக்காரன், பக்கத்து மாநிலத்துக்காரன், பக்கத்து நாட்டுக்காரன் என எல்லோருமே போட்டியாளன் தான்.. நமக்கு நான் என்பது மிகமிகமுக்கியம்… பிரிந்து இருக்க விரும்புகிறார்கள்.. எனவே பிரித்து விடுவோம் என்று சொன்னால்… இங்கு ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியாக அல்லவா பிரிக்க வேண்டும்… அதைத்தானே நாம் அப்பட்டமாக விரும்புகிறோம்….? பிரிக்க வேண்டும் என்று குரம் கொடுப்பவர்களே..? பிரித்து விடலாமா…? ஒவ்வொரு மனிதனையுமே தனித்தனியாக…? நிச்சயமாக அவன் அதைத்தான் விரும்புகிறான்…?

ஒவ்வொரு மனிதனும் தனித்தே இருக்க விரும்புகிறான் என்றால் தனித்தே இருந்துவிடலாமே…? அதில் என்ன மோசம் வந்துவிடும் என்ற கேள்வி எழும்.. ஆனால் அதில் மோசம் வந்துவிடத்தான் செய்யும்… தனிமை சில நேரங்களில் மனிதனுக்கு நல்லதுதான்… ஆனால் பல நேரங்களில் தனிமை மனிதனுக்கு தான் ஒரு விலங்கென்பதை உணர்த்திவிடும்… விலங்கினச் சிந்தனைகளை வீறு கொண்டு எழச்செய்துவிடும் தனிமை… இதனால் தான் பழங்காலத்தில் நாம் குழுமி வாழும் இனக்கூட்டங்களாக வாழ்க்கை முறையை மாற்றத் தொடங்கினோம்… மீண்டும் தனிமைப்படுத்துவதென்பது நம்மை பூர்வ ஜென்மங்களுக்கு இட்டுச் செல்லும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை.. எனவே தனிமை ஆபத்தானது… அதிலும் சமூகத்தின் தனிமை பேராபத்து… எப்படி தனி மனிதனின் தனிமை பிற மனிதனின் மீது தன் வஞ்சத்தை உமிழுமோ…! அது போல் ஒரு சமூகத்தின் தனிமையும் பிற சமூகத்தின் மீது வஞ்சத்தையும் வெறுப்பையும் உமிழ்ந்து கொண்டே இருக்கும்…. இங்கு நம்மைப் பிரித்துக் கொள்ள நமக்கு சாதி, மதம், இனம், மொழி, ஊர், தெரு, நிறம் என ஆயிரம் காரணங்கள் உண்டு.. ஆனால் சேர்ந்திருக்க ”இந்திய குடியரசு” என்ற ஒற்றைக் காரணம் மட்டும் இருப்பது அவலம்தான்… அதனால் தான் சொல்கிறேன் பிரிவினை வேண்டாம் என்று…

நான்காவதாக அவர்கள் சொல்கின்ற காரணம், மாணவர்களும் தனித்தெலுங்கானவை விரும்புகிறார்கள்.. உணர்ச்சிப் பெருக்குடன் போராட்டத்தில் பங்கு பெறுகிறார்கள் என்பது… எழுத்தாளர் ஜெயமோகன் அவரது பல பதிவுகளில் குறிப்பிடும் ஒரு விஷயம் மாணவர்களையும் இளைஞர்களையும் பற்றியது… மிதமிஞ்சிய வன்முறை செயல்களையும், போராட்டங்களையுமே வீர்மாக எண்ணுகிறார்கள் இன்றைய மாணவர்கள் என்பது.. அதை எனக்கு முழுவதுமாக புரிய வைத்த தருணம் தெலுங்கானா போராட்டக் களம். இளம் வயதில் அந்த சூடான ரத்தத்துக்கு யோசிக்கும் திராணி என்பது சத்தியமாக இருக்காது.. அவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட்டுவிடுவார்கள்… அவர்களை இந்த பாழும் அரசியல்வாதிகள் தங்களுக்கு ஏற்றார் போல் வளைத்துக் கொள்கிறார்கள்..
இந்த மாணவர்கள் எதை வெற்றி என்று எண்ணிக் கொண்டு எக்காளம் இடுகிறார்களோ, அதற்குப் பின்னர் ஒளிந்திருக்கும் தோல்வியை அவர்களது கண்கள் தரிசிப்பதை சிலர் தடுக்கிறார்கள்… தனித் தெலுங்கானாவாக பிரிப்பதனையே தங்களுக்கு சம உரிமை கிடைத்ததாக எண்ணி வெற்றி எக்காளம் இடும் இவர்கள், சேர்ந்து இருக்கும் போதே தங்கள் உரிமைக்காக ஏன் இப்படி போராடவில்லை… சேர்ந்திருந்து எதையுமே சாதிக்க முடியாததை இவர்கள் தங்கள் தோல்வி என்று அறிந்திருப்பார்களா…. எல்லாமே உயரப் போகிறது.. முதலமைச்சரின் எண்ணிக்கை, அமைச்சரின் எண்ணிக்கை, எம்.எல்.ஏ மற்றும் வட்டச் செயலார்களின் எண்ணிக்கை…. இந்த அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை திட்டம் வெற்றி தான்… மாணவர்களுக்கு என்ன உயரும்…? கல்வி கட்டணத்தைத் தவிர…? பொறுத்திருந்து பார்ப்போம்…

ஆங்காங்கே இன்னும் சில கூக்குரல்களும் கேட்கத் தொடங்கிவிட்டன… மகாராஷ்டிராவை விதர்பாவாகப் பிரிப்பது, வங்கத்தை கூர்க்காலாந்தாகப் பிரிப்பது, தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிப்பது எனப் பல… கூக்குரல்கள்.. தெலுங்கானாப் பகுதிகளில் ஜெகன் மோகன் ரெட்டியின் வாக்கு வங்கியை சரியச் செய்யும் எண்ணத்துடன் காய் நகர்த்திய காங்கிரஸ் தான் வெற்றி பெற்றதாக எண்ணி கட்சிக்கும் நாட்டுக்கும் தோண்டிவிட்டது ஒரு சவக்குழி…

இந்தப் பிரிவினை செய்திகளைப் படித்துக் கொண்டு இருக்கும் போது எப்போதோ படித்த கவிக்கோ அப்துல் ரகுமானின் “கோடுகள்” என்னும் கவிதை நினைவுக்கு வந்தது… அந்த கவிதை வரிகள் இந்த ரணத்தை இன்னும் ஆழமாய் உணர்த்தும் என்பதால் அந்த கவிதையில் இருந்து சில வரிகள்….

நாம்
கோடுகள் கிழிப்பவர்கள்
கோடுகளால் கிழிக்கப்படுபவர்கள்

கத்தியின் கீரலைப் போல்
நாம் கிழிக்கின்ற கோடுகளிலிருந்து
கசிகிறது ரத்தம்….

ஒவ்வொருவரைச் சுற்றிலும் இருக்கிறது
ஒரு
இலக்குமணக் கோடு..
ஆனால்
அந்தக் கோட்டுக்கு அப்பால்தான்
இராமனும் இருக்கிறான்….
இராவணனும் இருக்கிறான்…
என்பதை நாம் மறந்துவிடுகிறோம்……