Monday 23 December 2013

தலைமுறைகள்:



தலைமுறைகள் தாண்டி வந்து கொண்டிருக்கும் மானுடத்தின் நீண்ட பயணத்தில் நாம் இழந்ததையும், பெற்றதையும் திரும்பிப் பார்க்கும் ஒரு வயோதிகனின் பார்வைதான் இந்த தலைமுறைகள்.. நின்று நிதானித்து மூச்சை நன்றாக உள்ளிழுத்து… ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு நம் வாழ்வில் எத்தனை நாட்கள் ஆகியிருக்கும்…. அப்படி ஒரு விசயம் நடந்திருந்தால் கூட அது நம் ஞாபகத்தில் தங்கியிருக்குமா என்பதும் சந்தேகமே.. இந்த வாழ்க்கையில் நாம் எதைத்தான் ஆற அமர அனுபவித்து கடந்து வருகிறோம்.. இயந்திரகதியாக ஓடிக் கொண்டு இருக்கும் நம் வாழ்க்கையைப் போலவே தான்.. நம் ரசனையும் மாறிவிட்டது… வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் ஒரு அவசரமும்.. ஒரு பரபரப்பும்… ஒரு சுவாரஸ்யமும்… ஒரு எதிர்பாராத முரண்களும், ஒரு வெற்றி தோல்வியும் இல்லாமல் கடப்பதென்பது அரிதாகவிட்ட இன்றைய காலச்சூழலில், நம் ரசனையும் திரைப்படத்தில் காணும் காட்சிப் படிமங்களில் அதையேத்தான் தேடுகிறது..  நாம் எல்லோருமே வாழ்க்கையை வேகமாக வாழ்ந்து கழித்துவிடும் ஒரு உத்வேகத்தில் ஓடிக் கொண்டே இருக்கிறோம்… ஒரு பத்து இருபது வருடங்களுக்கு முன்னால் நம் வாழ்க்கை இப்படித்தான் அவசர கோலமாக இருந்ததா..? என்கின்ற கேள்வியை நாம் நமக்கே கேட்டுக் கொள்வது மிகமிக முக்கியமான ஒன்றாக இந்த இடத்தில் எனக்குப்படுகிறது…



ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைவையோ.. ஒரு குயிலின் கூக்கூவையோ…. சலனமற்ற நதியின் அமைதியையோ… காற்றுத் துகள்கள் நாணல்களில் மோதி உண்டாக்கும் இசையையோ… வண்டுகளின் ரீங்காரத்தையோ…. சுட்டெரிக்கும் பாறையின் மேல் தன் உடல் சுருக்கி விரித்து அசைந்து செல்லும் நத்தையையோ… ரசிப்பதற்கான மனநிலையை இழந்துவிட்ட நம்மால் ஒளிக் கவிஞர் பாலுமகேந்திராவின் இந்தத் தலைமுறைகளை ரசிக்க முடியாது… அது இந்த தலைமுறைகள் என்னும் திரைப்படத்தின் குறையல்ல… நம்முடைய குறை… நாம் இன்றுவரை கடந்து வந்திருக்கும் நம் தலைமுறைகளின் குறை….

அவசரகதியாக கடந்து கொண்டிருக்கும் நம் வாழ்க்கையைப் போலவே.. திரையிலும் நமக்கு எல்லாமே அவசர அவசரமாக கடந்து செல்ல வேண்டும்.. அப்படியின்றி அதன் இயல்பான பொறுமையோடு நத்தை போல ஊர்ந்து செல்லும் ஜீவராசிகள் எல்லாமே நம் பொறுமையை சோதிப்பதாகத்தான் நமக்குப் படுகின்றன.. அப்படி இந்த திரைப்படத்தின் வயோதிகன் கதாபாத்திரமும் உங்களது பொறுமையை சோதித்திருந்தால் அதில் வியப்பேதுமில்லை…. அதே நேரத்தில் ஏதோ ஒரு காவேரிக் கரையில் தன் வாழ்நாளைக் கழிக்கின்ற ஒரு வயோதிகனின் யதார்த்தமான வாழ்க்கை இப்படிப்பட்ட காட்சிப் படிமங்களோடு தான் கடக்கின்றது என்பதிலும் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை….



நம் பட்டறிவுக்குத் தெரியாத எந்தவொரு புதுமையான விசயங்களையும் இத்திரைப்படம் நமக்கு உணர்த்திவிடுவதில்லை தான்… ஆனால் இந்த தலைமுறைகளின் மாற்றங்களை வாய்மொழியாக அல்லாமல், இத்திரைப்படம் மிக அழகாக ஆவணப்படுத்தி இருக்கிறது.. வேதம் ஓதி மாணிக்கவாசகரின் இறைவாழ்த்தை காலையில் பாடுவதையே தன் களப்பணியாக கொண்டு இயங்கும் ஒரு வயோதிகரின் வீட்டிற்குள்  கிறிஸ்துவப் பெண் மருமகளாக நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் இந்த தலைமுறையில் உருவாகி இருப்பதையும் அதே நேரத்தில் மாணிக்கவாசகரின் பாடல்களை பாராயணம் செய்யும் வயோதிகனுக்கு, தமிழே பேசத் தெரியாத, எழுதத் தெரியாத ஒரு பேரன் வளருவதற்கான அவலச்சுவை இந்த தலைமுறையில் தலைவிரித்தாடிக் கொண்டு இருப்பதையும் இத்திரைப்படம் ஆவணப்படுத்துகிறது…

தன் பேரப் பிள்ளைகளின் பேருக்குப் பின்னாலும் தங்கள் சாதிய அடையாளத்தை ஒட்ட வைக்கத் துடித்த, நம் சமூகத்தின் மரபில் இன்றைய நிலையில் சாதிய அடையாளத்தை அசிங்கமாக எண்ணக்கூடிய அளவிற்கு ஓரளவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதையும்.. கிராமப்புறங்களில் மருத்துவர்களின் தேவை இருப்பதையும், அதைப் புரிந்து கொண்டு சில மருத்துவர்கள் அங்கு சென்று பணியாற்றுவதற்கான மனமாற்றங்களைப் பெற்றிருப்பதையும் பறை சாற்றுகிறது…

இவைகளை எல்லாம் நாம் பெற்ற நன்மைகளாகக் கொண்டால், ஆறு என்பதையே என்னவென்று அறியாத அளவுக்கு நம் இளம் தலைமுறைகள் வளர்ந்து வருவதையும், ஆறு, கடல், குளம் போன்றவற்றையும் அம்மா, ஆடு போல புத்தகத்தைக் காட்டி கற்பிக்கும் சூழல் வருவதற்கான அபாய அறிகுறிகளையும்.. ”தமிழினி மெல்லச் சாகும்” என்ற வரிகளுக்கு ஏற்ப.. இளம் தலைமுறை தமிழைப் புறக்கணித்து, தமிழைக் கற்காமல் வளருவதையும், இயற்கைக்கும் மனிதனுக்குமான இடைவெளிகள் பெருகி வருவதையும், இன்றைய சிறார்கள் பெரியவர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பதைக் கூட அறியாத வண்ணம் வளருகிறார்கள் என்பதையும் இரைச்சலே இசையாக மாறி வரும் இன்றைய காலச்சூழலில், பறவைகள் எழுப்பும் இனிய இசைகளைக் கூட பறவைகளைப் போல் சிறைபிடித்தால் தான், இனி எதிர்காலத்தில் அவைகளைக் கேட்டு ரசிக்க முடியுமோ…? என்னும் ஐயப்பாட்டையும் கழிப்பிடம், குளிப்பிடம் என கட்டற்றுத் திரிந்த நம் முன்னோர்களை ஒப்பிடுகையில் நம் வாழ்க்கை நான்கு சுவர்களுக்கு நடுவே சிறைப்பட்டு இருப்பதையும் இத்திரைப்படம் பகடி செய்கிறது… இவைகளை  தலைமுறை மாற்றத்தால் நாம் இழந்த தரவுகளாக கொள்ளலாம்…



அமைதியான நீரோடை, சாளரங்களின் வழியே ஒளி வீசும் சூரியன், பேரனின் கைகளைப் பிடித்துக் கொண்டு காடுகளுக்கு மத்தியில் கரைந்து போகும் வயதானப் பெரியவர், தொட்டவுடன் சுருங்கும் தொட்டாச் சிணுங்கி, எனப் பார்த்துப் பார்த்து படம் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறது பாலுமகேந்திராவின் அழகுணர்ச்சியுடன் கூடிய ஒளிப்பதிவு… வயோதிகப் பெரியவராக நடித்திருக்கும் பாலுமகேந்திராவின் நடிப்பு உக்கிரமாக வெடிக்க வேண்டிய இடங்களில் உறுதியாகவும், உடைந்து உருக வேண்டிய இடங்களில் ஏனோ உருக்குலைந்தும் தெரிகிறது… தன் வலதுகையை முன்னால் ஆட்டி ஆட்டிப் பேசும் அந்த உடல்மொழியை சற்றே தவிர்த்து இருக்கலாம்… இளைஞராக வரும் சசிக்குமார் தாத்தாவைப் பற்றி எதுவும் பேசாமலே படத்தை முடித்திருக்கும் அந்த உத்தி எனக்குப் பிடித்திருந்தது..

மருமகளாக நடித்திருக்கும் ரம்யா சங்கர் மற்றும் இரண்டாம் தாரத்து மகளாக வரும் அந்த பெண்ணின் நடிப்பும், மகளாக வந்து பெண் குழந்தை பெற்றுக் கொள்ளும் மற்றொரு பெண்ணின் நடிப்பும் மிக இயல்பாக இருந்தது.. சிறுவன் மாஸ்டர் ஸ்ரீகாந்த் ஏனோ என்னைப் பெரிதாய் கவரவில்லை…

இளையராஜாவின் இசை மென்மையாக இதயத்தை பல இடங்களில் வருடுகிறது… குறை என்றுப் பார்த்தால் சில இடங்களில் பிரச்சார நெடி கொஞ்சம் அதிகமாக இருப்பது.. திரைப்படத்தை ஒரு புனைவாக காட்டிவிடுகிறது… மேலும் பல இடங்களில் “வா… உக்காரு…” இது போன்ற வசனங்கள் காட்சிகளின் வழியே விலக்கப்பட்டும் தேவையில்லாமல் வெளிப்பட்டு இருக்கிறது… பாம்பு கடித்த இளைஞன் மற்றும் அவனுக்காக கதறி அழும் அவனது தாய் என இருவரின் மிகையான நடிப்பும் ஒரு சில இடங்களில் பாலுமகேந்திராவின் மிகை நடிப்பும் எரிச்சலை தந்தது. அதுபோல படத்தின் முடிவும் ஒரு சம்பிரதாயமான முடிவு போல தோற்றம் கொள்ளச் செய்ததும் சிறு குறையே….

இப்படி இளம் தலைமுறையிடம் இருந்து தன் மதம் மற்றும் சாதியம் சார்ந்த பிடிவாதங்களை விடக் கற்றுக் கொள்ளும் பெரியவர், தனது பேரனிடம் ஆங்கிலமும் கற்றுக் கொள்கிறார்… அதே நேரத்தில் தன் பேரனுக்கு அன்பையும், பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்கின்ற பண்பையும், தமிழையும் கற்றுக் கொடுக்கும் பெரியவர்.. அந்த இளம் தலைமுறைகளிடம் ஒரு வேண்டுகோளும் வைக்கிறார்… அது “தாத்தாவையும் தமிழையும் மறந்திட கூடாது…” என்பதுதான்… நாமும் இன்றைய தலைமுறைக்கு வைக்க வேண்டிய மிக முக்கியமான வேண்டுகோளும் அதுதான்..



மொத்தத்தில் இந்த தலைமுறைகள் மற்ற வணிக மசாலா குப்பைகளை ஒப்பிடுகையில் எவ்வளவோ மேல்.. மேலும் இது ஒரு ஆரவாரமற்ற அமைதியான ஏரியின் வழியே நாம் கடந்து வந்த வாழ்க்கையை பரிசலில் சென்று பார்க்கும் ஒரு பயணம் போல… சுவாரஸ்யம் இல்லாவிட்டாலும் படத்தின் முடிவில் ஒரு மனநிறைவும் திருப்தியும் எனக்கு கிடைத்தது…. உங்களுக்கு அந்த மனநிறைவும் திருப்தியும் கிடைக்குமா…? கிடைக்காதா..? என்பது உங்கள் மனநிலையைப் பொறுத்தது….

No comments:

Post a Comment