Sunday 10 November 2013

ஆல் இன் ஆல் அழகுராஜா:

கதை தேர்வில் தொடர்ச்சியாக கோட்டைவிட்டு தோல்வியடைந்து வரும் கார்த்தியும், கதையே தேர்வு செய்யாமல் வெற்றியடைந்து வந்த N. ராஜேஷும் இணைந்து கோட்டைவிட்டு ஒரு மறக்கமுடியாத… இல்லை இல்லை… ஜீரணிக்கவே முடியாத ஒரு தோல்விப்படத்தை கொடுத்திருக்கிறார்கள். அதுதான் இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா. வெற்றி கண்டிப்பாக தேவைப்படும் சூழலில் இருக்கும் கார்த்தி, அவர் எந்தவிதமான இயக்குநர் என்று சற்றும் யோசிக்காமல் தொடர்ந்து மூன்று வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் என்ற ஒரே காரணத்துக்காக கண்மூடித்தனமாக ராஜேஷை நம்பியதற்கு தக்க சன்மானம் கிடைத்திருக்கிறது… கார்த்தியின் நடிப்பிலும் பல இடங்களில் ஒரே மாதிரியான பாவனைகள்… இதையெல்லாம் திருத்திக் கொண்டு அவர் விழித்துக் கொள்ளவில்லை என்றால்…? அவரது இடம் பறிபோவது நிச்சயம்…



ராஜேஷின் படங்களை வரிசையாக எடுத்துப் பார்த்தால் ஒரு உண்மை தெரியும்.. எதிலுமே கதை என்னும் வஸ்து பெயரளவுக்கு கூட இருக்காது.. நாயகன், நாயகி படத்துக்கு தேவை என்பதால் அவர்கள் இருப்பார்கள்.. சந்தானம் இருப்பார்.. சரக்கு இருக்கும்… இது போக காதல் இருக்கும்.. அதில் ஒரு பிரச்சனை இருக்கும்.. க்ளைமாக்சில் காதல் கடனே என்று கைகூடும்.. இப்படி அவர் எடுத்த மூன்று படங்களுமே ஏன் ஓடியது என்றே தெரியாமல் அப்படி ஒரு ஒட்டம் ஓடி அதிரிபுதிரியான ஹிட்டு.. அப்படி ஒரு ஹிட்டை நீங்கள்…… என் மக்களே… நீங்கள்….. கொடுத்ததுனால் தான் ”இவனுக என்ன அடிச்சாலும் தாங்குறானுகடா… நாம படங்குற பேர்ல என்ன கொடுத்தாலும் இவனுக பாப்பாய்ங்க..” என்ற முடிவுக்கு வந்துவிட்டார் போலும் இயக்குநர்… தைரியம் இருந்தால் போய் பார்த்துவிட்டு வந்து சொல்லுங்கள்…..

படத்தில் நாடோடிக் கலைஞராக சாட்டையைக் கொண்டு தன்னைத் தானே அடித்துக் கொண்டு அலையும் எம்.எஸ்.பாஸ்கர் பேசுவது போல் ஒரு வசனம் வரும்.. அவரிடம் தனது டிவிக்காக பேட்டி எடுக்கும் கார்த்தி கேட்பார்.. “நீங்க ஏன் இந்த கலையை தேர்ந்தெடுத்தீங்க…” அதற்கு எம்.எஸ். அந்த டிவி அறையைப் பார்த்துக் கொண்டே கார்த்தியிடம் சொல்வார், ” நீங்க எதுக்கு இந்த கலையை தேர்ந்தெடுத்தீங்களோ அதுக்குத்தா…” என்பார்.. “புரியலையே..” என்று சொல்லும் கார்த்தியைப் பார்த்து “எல்லா இந்த வயித்துப் புழைப்புக்குத்தா…” என்பார்… அதை பார்க்கும் போதே எனக்கு, நாம் ராஜேஷைப் பார்த்து இதே கேள்வியைக் கேட்க.. அவரும் இதே பதிலை நம்மிடம் சொல்வது போல் தோன்றியது…

இப்படி ஒரு உலகமகா காவியத்தைக் கொடுப்பதற்குத்தான் டீசர் என்ற பெயரில் அத்தனை பில்டப்பா… என்று நினைக்கும் போது ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது… டீசரைப் பார்த்து விசில் அடித்து, கைதட்டி ஆர்பரித்த அந்த விசிலடிச்சான் குஞ்சுகளும்.. நம் தமிழக குடி…மகன்களும் சேர்ந்து இந்தப் படத்தையும் வெற்றியடையச் செய்வார்கள் என்று நம்பி…. படம் எடுத்துவிட்டார் போல பாவம்…. ஆனால் ஒன்று இயக்குநர் ராஜேஷ் அவர்களே..! உங்கள் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைகாவியத்தை விட.. அந்த முகேஷ் விளம்பரம் ஆயிரம் மடங்கு மேலானது…. முகேஷை எப்படி கேலி செய்வது என்று யோசித்த தருணத்தில் கொஞ்சம் கதையையும் யோசித்து….. ஸாரி… ஸாரி… ஸாரி… அதுதா உங்களுக்கு தெரியாதே… உருப்படியா வேற எதாது காமெடியவாது யோசிச்சிருக்கலாம்… படம் தப்பிச்சிருக்கும்… ஒரு டவுட்டு சார்…. அந்த டீசர்ல உங்களை பேசக்கூட விடாம.. பின்னாடி ஒரு கூட்டமே உக்காந்து ரொம்பத் தீவிரமா டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்களே…. அதுவும் இந்த மகாகாவியத்தைப் படைக்கத்தானா…..!!!!!!!??????????? அய்யய்யோ… இப்ப நினைச்சாலே கண்ணக் கட்டுதே… சரக்கு இல்லாம நீங்க எடுத்த ஒரே படம் இது…. இதுவும் ஊத்திக்கிச்சி… இனி நீங்க எடுக்குற அடுத்தப் படத்துல தியேட்டரேல கப்புல மிதக்கும்….????

என் பொதுஜனமே… எனக்கும் இயக்குநருக்கும் எந்த முன்விரோதமும் இல்லை… ஆனால் நமக்கு நல்லதாக படுகின்ற சில விசயங்கள் அவருக்கு கெட்டதாகப்பட்டதால், அதை கேலி செய்யும் பொருளாக அவர் எடுத்துக் கொள்ளும் போது, அவருக்கு நல்லதாகவும் எனக்கு கெட்டதாகவும் படுகின்ற விசயங்களை அவரது பாணியிலேயே, அதே தர்க்கரீதியில் தான் நான் மேலே  கேலியும் கிண்டலும்.. செய்திருக்கிறேன்.. ஆனால் அவை அப்பட்டமான உண்மை என்பதையும் மறுப்பதற்கு இல்லை… தவிர்க்கமுடியாத மனநிலையில் சில விசயங்களை காட்டமாக சொல்ல வேண்டியதாகி விட்டது….


மொத்தத்தில் பத்து ரூபாய் டிக்கெட்டை முப்பத்தைந்து ரூபாய்க்கு ரிசர்வ் செய்துதான் இந்தப் படத்தைப் பார்த்தேன்… ஆனால் படம் அந்த பத்து ரூபாய்க்குக் கூட சமானம் இல்லை.. என்பதே வேதனையான உண்மை.. இதையும் மீறி படம் பார்க்க விரும்புபவர்களுக்கு நானே டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறேன்.. ஒரே ஒரு கண்டிஷன்… முழு படம் முடிந்தப் பிறகுதான் தியேட்டரை விட்டு வெளியே வர வேண்டும்…. நான் ரெடி… நீங்க…?

Saturday 9 November 2013

பாண்டிய நாடு:

யதார்த்தமான சினிமாக்களை கொடுக்கின்ற முயற்சியில் ஆங்காங்கே ஏற்பட்ட சில சறுக்கல்களைத் தவிர்த்து, தொடர்ச்சியாக கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் சுசீந்திரன். இந்தப் படத்திலும் அந்த கவன ஈர்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளார் என்பது மகிழ்ச்சியே.. யதார்த்தமான சினிமாவாக இருந்தாலும் அதை வணிகரீதியாக வெற்றி பெற வைக்கவும், கதாநாயக பிம்பங்களை நம்பி வரக்கூடிய சாதாரண பாமர மக்களையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயத்தினாலும் யதார்த்தத்தின் எல்லைக் கோடுகளை சில இடங்களில் பாண்டிய நாடு மீறி இருக்கிறது.. இருப்பினும் அத்தைகைய மீறல்கள் கதையையோ, நமது கவனத்தையோ சிதைத்து அயர்ச்சியைக் கொடுக்காமல், நம்மை ஆசுவாசப்படுத்தி அனுப்புவதே பாண்டிய நாட்டின் சிறப்பு..


கதையில் எந்தவிதமான புதுமையும் இல்லை. தமிழ் சினிமா இதுவரை தொடாத களமும் இல்லை. ஆனால் மற்ற வழக்கமான திரைப்படங்களில் இருந்து பாண்டிய நாடு எந்த இடத்தில் மாறுபடுகிறது என்றால், கதாநாயகர்களின் தோள்களிலேயே மொத்த திரைக்கதையும் தொங்கிக் கொண்டு இருக்காமல், நாயகன் விஷாலின் நண்பனாக வரும் விக்ராந்த், மற்றும் விஷாலின் தகப்பனாக வரும் இயக்குநர் பாரதிராஜா ஆகியோரையும் முன்னிலைப்படுத்தி அவர்களின் தோள்களிலும் பயணிப்பதில் தான் பாண்டிய நாடு ஒளி மங்கிய கற்களுக்கு இடையில் வைரமாக மின்னுகிறது.. வைரம் என்று உவமைப்படுத்துவதால் இது ஆஹா ஓஹோ என்று கொண்டாடப்பட்டு, ஒரு அற்புதமான கலைப் படைப்பாக அழியாமல் நம் மனதில் நிலைக்கும் போலும் என்று கற்பிதம் கொள்ள வேண்டாம்.. ஆனால் இளம் உதவி இயக்குநர்களுக்கு ஒரு சாதாரண கல்லை எப்படி பட்டை தீட்டுவது என்று பாடம் எடுத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன் என்பதாகக் கொள்ளலாம்.

சமரில் விஷாலின் நடிப்பைப் பார்த்து வெறுத்துப் போயிருந்த எனக்கு, இதில் விஷாலின் நடிப்பு ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கிறது.. பயந்த சுபாவம் கொண்டவராக, பதற்றமான சூழலில் திக்கித் திக்கிப் பேசுபவராக, தன் எதிரியை நேருக்கு நேர் நின்று புடைத்தெடுக்கும் நாயக பிம்பமாக இல்லாமல், பதுங்கி நின்று கொண்டு பாய முயலும் புதுவிதமான விஷாலைப் பார்க்க முடிகிறது. அவரது சுபாவத்துக்கு ஏற்றார் போல் அவரை பெப்பி ஓட்டவிட்டிருப்பது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு இன்னும் பலம் சேர்க்கிறது. எல்லா ப்ரேம்களிலும் முழுவதுமாக ஆக்ரமிக்க எண்ணாமல், கதையின் தேவை உணர்ந்து விக்ராந்துக்குப் பின்னால் பம்மிக் கொள்வதும், ஆக்ரோசமாய் வெடிக்காமல் அடக்கி வாசித்திருப்பதுமாக, தயாரிப்பாளர் விஷாலிடம் ஆரோக்கியமான மாற்றங்கள்… வாழ்த்துக்கள்..
விஷாலின் தந்தையாக இயக்குநர் பாரதிராஜா.. தன் மகனின் சாவுக்கு நியாயம் தேடி அலையும் ஒரு பாசக்கார தந்தையை நம் கண் முன் நிறுத்துகிறார். அடி வாங்கிவிட்டு வந்து நிற்கும் தன் இளைய மகனை சீண்டுவதும், சிம்மக்கல் ரவியிடம் அடி வாங்கிவிட்டு வந்து நிற்கும் தன் மூத்த மகனைக் கண்டு பொருமுவதும், அர்த்த ராத்திரியில் தன் நண்பன் வீட்டுக்குச் சென்று கூலிப்படையைப் பற்றி விசாரிப்பதுமாக இவருடைய கதாபாத்திரம் படத்திற்கு ஒரு புதுவண்ணத்தைக் கொடுக்கிறது என்றால் அது மிகையல்ல.. இயக்கத்தில் மட்டுமின்றி தான் நடிப்பிலும் இமையம் என்பதை அந்த க்ளைமாக்சில் விஷாலின் கைகளை பிடித்துக் கொண்டு அகமகிழும் அந்த ஒரு காட்சியிலேயே நிருபிக்கிறார்..


விஷாலின் நண்பனாக வரும் விக்ராந்த் சில படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும், மிகையான ஒப்பனைகள் இன்றி, மனதில் நிற்பது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை.. இது போன்ற கதையோடு தொடர்புடைய கதாபாத்திரங்களில் இவர் கவனம் செலுத்தலாம்.. விஷாலை முன்னால் விட்டு பின்னால் நடப்பதும், சண்டை என்று வந்ததும் முந்திக் கொண்டு முன்னால் நிற்பதுமாக நிறைவான கதாபாத்திரம்..

நாயகியாக லட்சுமிமேனன். வழக்கமாக நாயகிகள் செய்யும் அதே வேலைதான்.. நாயகனை காதலித்து கைப்பிடிக்கும் கதாபாத்திரம். ஸ்கூல் டீச்சராக பாந்தமான அழகுடன் வளைய வருகிறார். காரணமே இல்லாமல் காதலிக்கவில்லை என்றும், காரணமே இல்லாமல் கல்யாணம் செய்து கொள்வோமா என்றும் கேட்கும் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து இருக்கிறார்.. சூரிக்கு வழக்கம் போல் நாயகனின் காதலுக்கும் லட்சியத்துக்கும் உதவும் நண்பன் கதாபாத்திரம். மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் தவறிவிழும் அந்தப் பணப்பையை எடுத்துக் கொண்டு செல்லும் இடத்தில் மட்டும் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார்..


வசனம் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி. காதலர்களுக்கு இடையிலான உரையாடலில் இளமை ததும்புகிறது.. மகனின் சாவில் மர்மம் இருப்பதாக எண்ணி, கையெழுத்து இட மறுக்கும் பாரதிராஜாவிடம், அந்த படிவத்தைப் பிடிங்கி கையெழுத்திடும் ரவுடி சொல்லும் அந்த வசனம்.. நம் சட்டத்தின் இருட்டறைகளை வெளிப்படுத்துகிறது.. இமானின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் மனதை நிறைக்கிறது.. அதிலும் குறிப்பாக அந்த பைவ் பைவ் பாடலிலும், ஒத்தக்கடை ஒத்தக்கடை மச்சான் பாடலிலும் துள்ளல் இசை.

பாண்டிய நாட்டின் வெற்றிக்கு நடைமுறை நிகழ்வோடு தொடர்புடைய அந்த கதைக்களம் இன்னும் பலம் சேர்க்கிறது. க்ரானைட் குவாரி ஊழல்களின் புழுதிக் காற்று இன்னும் கண்களை கலங்க வைத்துக் கொண்டு இருக்கும் சூழலில் அதே சூட்டோடு மதுரை மாஃபியாக்களின் வாழ்க்கையை கிட்டதட்ட அச்சு அசலாகத் தொட்டுக் காட்ட முயன்றிருக்கும், அசாத்திய முயற்சிக்காகவும் இயக்குநரைப் பாராட்டலாம்… சில நிஜ பிம்பங்களின் நிழல்களாக வளைய வரும் சிம்மக்கல் ரவியும், ராஜாவும் சிலரது கண்களை உறுத்தக்கூடும்.. சிம்மக்கல் ரவியாக நடித்திருக்கும் அந்த நடிகரின் உடல்மொழி அபாரம்.. தன் குருவின் இடத்துக்கு தான் வந்தவுடன் அவரது உடையில் ஏற்படுகிற அந்த மாற்றம் அச்சு அசலாக அந்த தாதாவின் தோரனையை அவருக்கு கொடுத்துவிடுகிறது. அந்த குன்னூர் அட்டெம்ட்டின் போது சிம்மக்கல் ரவியின் தாண்டவம் மட்டுமே அந்தக் காட்சிக்கு உயிர்ப்பைத் தருகிறது..


பல படங்களில் பார்த்த அதே காட்சிகள் தான்… ஆனால் அதை காட்சிப்படுத்தும் விதத்தில் அந்த பழைய காட்சியே புதியதாக மாறிப் போகின்ற வித்தையை பாண்டிய நாட்டில் பார்க்கலாம்… உதாரணமாக விஷாலும், விக்ராந்தும், சூரியும் சேர்ந்து கொண்டு அந்த ரவுடியின் கையாளை கொலை செய்ய முயலும் காட்சியையும், பாரதிராஜா மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் தப்பிச் செல்லும் காட்சியையும், க்ளைமாக்ஸ் காட்சியையும் கூறலாம்.. திரைக்கதையில் ஆங்காங்கே இருக்கும் சுவாரஸ்யம் படத்துக்கு மிகப்பெரிய பலம்.. விக்ராந்தின் முடிவும், பாரதிராஜா மாட்டிக் கொள்வாரோ என்ற பதைப்பும், விஷாலும் வில்லனும் எங்கு சந்தித்துக் கொள்வார்கள் என்ற நிமிடங்களும் தான் திரைக்கதையின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கின்றன…


ஆனால் அந்த சினிமாத்தனமான முடிவுதான்… வழக்கம் போல் நம் மனதை எல்லாம் சுமூகமாக முடிந்துவிட்டதாக நம்ப வைத்து, களிப்பில் ஆழ்த்தி அதைப் பற்றி மீண்டும் யோசிக்கவே விடாமல், பிற வேளைகளில் நம்மை மூழ்கடித்து திரைப்படம் தரவேண்டிய அந்த தாக்கத்தை தராமல், அப்படி ஒரு திரைப்படம் பார்த்ததையே மறக்கச் செய்துவிடுகிறது.. இருப்பினும் நாம் கொடுக்கின்ற காசுக்கும், நம் களிப்பிற்காகவும் அவர்கள் அதிகமாகவே உழைத்திருக்கிறார்கள் என்பது உண்மை…

Sunday 3 November 2013

ஆரம்பம்:

இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் சர்வம் படத்திற்கு கிடைத்த தோல்வியும், அஜீத்தின் பில்லா-2 திரைப்படத்தின் தோல்வியும் சேர்ந்து, பில்லா-1ன் வணிகரீதியான வெற்றியை பின்னோக்கிப் பார்க்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க… அதுவே ”ஆரம்பம்” திரைப்படத்திற்கான அச்சாரம் ஆனது. அஜீத், நயன்தாரா, தாப்ஸியோடு நண்பர் என்கின்ற ரீதியில் ஆர்யாவின் கால்ஷீட்டும் சேர்ந்து கொள்ள படத்தின் ஸ்டார் வேல்யூவும் கூடிப் போனது. இதைத் தவிர்த்து, மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் பலியான போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரேவின் மரணத்துக்குப் பின் இருந்த மர்மத்தைக் கொண்டு ஒரு நல்ல ஒன் லைனும் கிடைத்துவிட்ட உற்சாகத்தில் களமிறங்கி இருக்கிறது இந்த டீம்.


2008 நவம்பர் 26ல் மும்பை தீவிரவாதிகள் தாக்குதலில் இருந்த அவிழ்க்கப்படாத பல மர்மங்களில், அன்றைய மகாராஷ்டிர அரசில் தீவிரவாத தடுப்புப் பிரிவின் தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரேவின் மறக்கமுடியாத மரணமும் ஒன்று. குண்டு துளைக்காத உடை அணிந்து தீவிரவாத கும்பலை தன் கைப் பிஸ்டலை மட்டுமே கேடயமாக நம்பி பிடிக்கப் போன இடத்தில், தீவிரவாதிகளின் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளில் இருந்து சீறிப் பாய்ந்த துப்பாக்கி குண்டுகள், அவரது குண்டு துளைக்காத உடையைத் துளைத்து, உடலையும் துளைத்தது.. அந்த நேரத்தில் கண்டிப்பாக ஒருவித விரக்தியுடன் தான் தன் மரணத்தை அவர் தழுவி இருப்பார்.. விழித்துக் கொண்ட மீடியாவும், அவரது மனைவியும் கர்கரேவின் மரணத்துக்கு காரணமான அந்த குண்டு துளைக்காத உடைப் பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அறிய முற்பட… வழக்கம் போல் அந்த உடை தொடர்பான கொள்முதலில் நடத்தப்பட்ட ஊழலை மறைத்து தன் மானத்தைக் காத்துக் கொண்டது நம் மத்திய அரசு. இந்த சம்பவத்தை கற்பனைக் கதை என்ற ஒப்புதலுடன் கதையாக்கி இருக்கிறார்கள்… அந்த சம்பவத்தை பரவலாக எல்லோரும் அறியும் வகையில் திரைப்படமாக்கிய நல்லெண்ணத்திற்காக இந்த டீமுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்…


ஆனால் மேற்சொன்ன அந்த ஒன்லைனையும், ஸ்டார் வேல்யூவையும் மட்டுமே நம்பி கதை செய்திருக்கிறார்களோ என்று படத்தின் பல காட்சிகளைக் காணும் போது எண்ணத் தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக அஜீத்தின் ப்ளாஷ்பேக்கை நயன் விவரிக்கும் காட்சியும், அதைக் கேட்டு ஆர்யா மனம் மாறுவதும் ஒளவையார் காலத்துப் பழசு. ஆர்யாவை எல்லா வலைதளங்களிலும் புகுந்து அதன் ரகசியத்தை திருடக் கூடிய, தொழில்நுட்ப திறமை வாய்ந்த ஒரு ஹேக்கர் என்ற செய்தியை நமக்கு கடத்த அவர்கள் கையாண்டிருக்கும் காட்சிகளும், தங்கள் எதிரிகளைக் கொல்வதில் இன்றளவும் மெத்தனம் காட்டி, அவர்களை தப்பவிட்டு, தங்களுக்கே வினை தேடிக் கொள்ளும் சராசரி தமிழ்சினிமா வில்லன்களும், தீவிரவாத தடுப்பு படையின் சாகசத்தைக் காட்டுவதற்காக ஒரு வெளிநாட்டுப் பயணியை தீவிரவாத பிடியில் இருந்து மீட்டுவரும் அந்தக் காட்சியையும், ஒன்றுமில்லாத காலி கண்ணாடி பாட்டிலை உருட்டிவிட்டு தீவிரவாதிகளின் கவனத்தைக் குலைத்து அவர்களை சுடும் காட்சியையும் பார்க்கும் போது, இவர்களின் கற்பனைவளம் ஒன்றுமில்லாத காலி பாட்டிலாகத்தான் பரிமளிக்கிறது.

சுபா இரட்டையர்களின் உதவியோடு எழுதப்பட்ட திரைக்கதையாக இருந்தாலும், ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். முன்னால் தீவிரவாத தடுப்புப் பிரிவின் தலைவராக இருந்தவரை, ஒரே லிப்டுக்குள் இருந்தும் கண்டுபிடிக்க முடியாமல் தேமே என்று நிற்கும் கிஷோரும், தீவிரவாத கும்பலை பிடிக்க சாதாரணமாக ஒரு நான்கைந்து போலீசாரைக் கூட்டிக் கொண்டு வரும் போலீசும், சர்வ சாதாரணமாக போலீஸ் ஆபிஸரைக் கொன்றுவிட்டு, துபாய்க்கு தப்பிச் செல்லும் காட்சியையும் பார்க்கும் போது போலீஸ் என்னதான் செய்கிறது என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடிவதில்லை. ஹேக்கராக வந்து, க்ளைமாக்ஸ் காட்சிகளில் இரு கரங்களிலும் துப்பாக்கி ஏந்தி ஒர் சூப்பர்மேன் ரேஞ்சுக்கு சண்டையிடும் ஆர்யாவும், எப்போது எதற்காக நயன் கிஷோருடன் இணைந்து க்ளைமாக்ஸ் காட்சியில் வருகிறார் என்பதையும், சகட்டுமேனிக்கு துப்பாக்கியை கையாளும் நயனையும் பார்க்கும் போது இனி லாஜிக்கே பார்க்கமாட்டோம் என்று சத்தியம் செய்து தப்பிக்கத் தோன்றுகிறது….


அநீதி இளைத்த அரசியல் வியாபாரிகளை பழி வாங்குவது தான் நாயகனின் நோக்கமாக இருந்தாலும் அதற்காக நாயகன் எடுத்து வைக்கும் அடிகள் ஒவ்வொன்றும் மிகமிக பலவீனமானவை.. எதிரிகளின் கட்டிடத்தைக் குண்டு வைத்து தகர்ப்பதும், சேட்டிலைட் மூலம் அவர்களது தொலைக்காட்சி சேனலின் அலைவரிசையை முடக்கி எதிரிகளின் தொழிலில் நஷ்டத்தை உண்டாக்குவதுமான காட்சிகள் அதற்கான வீரியத்தோடு இல்லை.. மேலும் அந்த நஷ்டத்தால் எதிரிகள் பாதிக்கப்படுவதான காட்சியுருவும் இல்லாமல் போவதால், நாயகன் பழி வாங்குகிறார் என்கின்ற ரீதியில் இல்லாமல், ஏதோ செயலாற்றுகிறார் என்கின்ற ரீதியில்தான் அவை  நம்மை கடந்து போகின்றன… தன் போலீஸ்கார நண்பனின் சாவுக்கு பழி வாங்க வரும் நாயகன் கொல்லும் போலீசாரின் எண்ணிக்கையோ எப்படியும் முப்பதை தொடும்.. மேலும் திரைக்கதையின் போக்கில் ஆர்யாவின் தேவை என்பது நயன், டாப்ஸி போன்ற கன்னிகளின் கவர்ச்சி படிமத்தின் அளவில் தான் இருப்பதால், அந்த கதாபாத்திரத்தின் பங்கேற்பு என்பது படத்தின் தோல்வியை தவிர்ப்பதற்கான முயற்சியாகத்தான் படுகிறது… அப்படியில்லை என்றால் அதன் தேவையை இன்னும் கொஞ்சம் வலியுறுத்தி இருக்கலாம்..

இப்படி பல ஓட்டைகள் இருந்தாலும்.. அதை உருப்படியான ஒரு சல்லடையாக மாற்றி திரைக்கதையை கொஞ்சமேனும் உயிர்ப்போடு வைத்திருப்பது அஜீத்தின் ஸ்கீரின் ப்ரெஸன்ஸ் மட்டுமே. நல்லவர்களாகவே நடித்துக் கொண்டு இருக்கும் தங்கள் பிம்பத்தை உடைக்கவே விரும்பாத பிற கதாநாயகர்களுக்கு மத்தியில் அஜித் சற்றே வித்தியாசமானவர். அது பல இடங்களில் அவரது பொதுவாழ்விலும் வெளிப்பட்டு இருக்கிறது.. சினிமாவிலும் அதற்கான ஆரம்பம் மங்காத்தாவில் அவர் நடித்த நெகடிவ்வான கதாபாத்திரம் மூலம் அமைந்தது. அந்த ஆரம்பமே இந்த ஆரம்பம் திரைப்படத்தின் ஆரம்ப காட்சிககளான மல்டிபிளக்ஸ் கட்டிடத்துக்கு குண்டு வைப்பது, ஒரு சிறு குழந்தையின் முதுகில் சூடான இஸ்திரிப் பெட்டியைக் கொண்டு தேய்த்து விடுவதாக மிரட்டுவது போன்ற எதிர்வினை காட்சிகளில் அஜீத்தின் கதாபாத்திரத்தை வழக்கமான நாயக கதாபாத்திரமாக எண்ணி பயணிக்காமல் நம்மை தடுத்து திரைக்கதைக்கு சற்று வலு சேர்க்கிறது. பச்சை குழந்தைகளுடனான இது போன்ற காட்சியில் நடிக்க இன்றைய கதாநாயகர்கள் யாருமே துணியமாட்டார்கள் என்பது நிச்சயம். ஆனால் அதற்கு திருஷ்டி வைத்தாற் போல் வருகிறது அஜீத்தின் ப்ளாஸ்பேக் காட்சிகள்…


 இவை தவிர்த்து ஆர்யாவும் டாப்ஸியும் நடிப்பில் சற்றே ஸ்கோர் செய்திருக்கின்றனர்… சமீபகாலமாக நடிப்பில் சொதப்பி வரும் ஆர்யா இதில் ஏதோ கொஞ்சம் நடித்திருக்கிறார். டாப்ஸிக்கு வழக்கமான தமிழ்சினிமாவின் லூஸுப் பெண் கதாபாத்திரம்.. ஆங்காங்கே மண்டியிட்டு தன் காதலைச் சொல்லும் ஆர்யாவை கொஞ்சிவிட்டு செல்லும் இடங்களிலும், கறாராக தன் காதலைச் சொல்ல வரும் ஆர்யாவைக் கண்டு மிரண்டு ஓடுவதும் அழகு. ராஜா ராணியில் நடிப்பில் ஆட்சி செலுத்திய நயனுக்கு, இதில் வழக்கமான நயன கதாபாத்திரம். மற்ற கதாபாத்திரங்களையும் ரசிகர்களையும் கிறங்கடிக்கும் வேலை மட்டுமே அவருக்கு… செவ்வனே செய்திருக்கிறார்..



இசை ரொம்பவே சுமார். பிண்ணனியிலும் சரி, பாடல்களிலும் சரி யுவன் ஏனோ ஈர்க்கவே இல்லை.. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கிறது.. மொத்தத்தில் முதல்பாதியில் இருக்கும் அஜீத்தின் சின்ன சின்ன மேனரிஸங்கள், திரைக்கதையின் சின்ன சின்ன சுவாரஸ்யங்களும், அவர்கள் எடுத்துக் கொண்ட கதைக்களம் இவையெல்லாம் சேர்ந்து ஒரு முறையாவது பார்ப்பதற்கான தகுதியை படத்திற்க்கு கொடுத்துவிடுகின்றன… அஜீத்தின் ரசிகர்களை வழக்கம் போல் பெரிதும் ஈர்க்கும்… பொதுவான ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவும் செய்யாது; அதே நேரத்தில் வதைக்கவும் செய்யாது என்பதே ஆரம்பத்தின் ஸ்பெசல் ட்ரீட்மெண்ட்..