Monday 16 September 2013

மோகமுள் – தி. ஜானகிராமன்:


பிரிவு          : நாவல்
ஆசிரியர்   : தி.ஜானகிராமன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்.

தமிழ் இலக்கியப் பெருவெளியில் ஒரு தனிப்பெரும் அடையாளமாக தைத்துக் கொண்டிருக்கிறது இந்த மோகமுள். நாவல் வெளிவந்த காலத்தில் வழக்கம்போல் நாவலின் மையத்தை நிந்தித்து ஏராளமான எதிர்ப்பலைகள் கிளம்பியது. இது தி.ஜாவுக்கு ஒன்றும் புதிதில்லை. அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் சமூகமும் மரபுகளும் காபந்து செய்து வைத்திருக்கும் மதிப்பீடுகளுக்கு எதிரானது. மேலும் அது விலக்கப்பட்டவர்களின் சார்பாக அவர்களின் மீதான கரிசனத்தை கோருவது. சமூகத்தின் அணுகுமுறையில் மீறலாகக் கருதப்படும் ஒன்றைத் தனது எழுத்தில் நியாயமானதாக நிறுவுகிறார். அவரது கண்ணோட்டத்தின்படி, மனித உறவுகள் நியதிகளுக்கும் ஆச்சாரங்களுக்கும் விதிகளுக்கும் ஒழுக்க நெறிகளுக்கும் கட்டுப்பட்டவை அல்ல.. அவை உணர்ச்சிகளுக்கும் சூழ்நிலைக்கும் கட்டுப்பட்டவை..

அப்படி நிந்திக்கும் படியான நாவலின் மையம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் உங்களுக்கு நாவலின் தலைப்பே அதை ஓரளவுக்கு உணர்த்தி இருக்கும்.. இருந்தாலும் அதை மேலோட்டமாக பார்த்து, ஒரு மூன்றாந்தர விரச காவியமாக அதை கண்ணெடுக்கும் அபாயம் இருப்பதால் அதைப்பற்றி சற்றே விரிவாகப் பேசுகிறேன்… இந்த நாவலை எந்த தளத்தில் வைத்துப் பேசுவது என்பதில் எனக்குப் பெரும்குழப்பமே நிலவியது. இதனை காமத்தின் அடுக்குகளில் அடுக்கிப் பேச மனம் ஏனோ ஒப்பவில்லை. ஏனென்றால் 660 பக்கங்களைக் கொண்ட மோகமுள்ளில் மோகத்தில் மூழ்கடிக்கும் பக்கங்கள் என்பது வெறும் ஆறேழு பக்கங்கள் மட்டுமே… அப்படியென்றால் இதை எந்த தளத்தில்தான் வைத்துப் பேசுவது, காமத்தின் தளத்திலா..? காதலின் தளத்திலா..? இசையின் தளத்திலா..? நட்பின் தளத்திலா..? பாசத்தின் தளத்திலா..? பெண்ணியத்தின் தளத்திலா..? இல்லை வாழ்க்கையின் தளத்திலா..? என்று கேட்டால் எல்லாத்தளத்திலும் என்று சொல்வதே இந்த இலக்கியப் பொக்கிஷத்துக்கு நாம் செலுத்துகின்ற மரியாதையாக இருக்கும்.. என்கின்ற எண்ணத்தில் அவ்வாறே இந்த மதிப்புரையை முன்னெடுக்கிறேன்..

நாவலின் மையத்தை சுருங்ககூறின் இப்படிக் கூறலாம்.. முதிராத இளைஞன் ஒருவனுக்கு ஒரு முதிர்கன்னியின் மீது ஏற்படுகின்ற ஈடுபாடுதான் (பாசம்+ஈர்ப்பு+காதல்+காமம்) நாவலின் மையம். அந்த இளைஞன் பாபு, முதிர் கன்னி யமுனா. யமுனா பாபுவை விட எட்டு ஆண்டுகள் வயதில் மூத்தவள். பாபு சிறுவனாக இருக்கும் போது அவனைத் தூக்கி இடுப்பில் இருத்திக் கொண்டு திரிந்தவள். சிறுவயதில் பாபுவுக்கு யமுனாவின் மீது இருந்த பாசமும் ஈர்ப்பும் பருவ வயதில் காதலாக மாறி எப்படி காமமாக முற்றி நிற்கிறது.. அதனால் அவன் வாழ்க்கையில் எப்படி அலைகழிக்கப்படுகிறான்..? யமுனா மீது தனக்கு இப்படி ஒரு எண்ணம் இருப்பதை அவன் எந்த தருணத்தில் தெரிந்து கொள்கிறான்…? யமுனா அதை எப்போது தெரிந்து கொள்கிறாள்..? அதற்கு அவள் ஆற்றும் எதிர்வினை என்ன? சமூகத்தின் பார்வையில் அது எப்படி தெரிந்தது..? என்பதுதான் நாவலின் மையமாக இருக்கின்ற சரடு.. பாபுவுக்கு இசை மீதான ஆர்வம், இசைக்கான ஒழுக்கத்தை இறுத்திக் கொள்ள தடம்புரள முடியாமல் தவிப்பது, ரங்கண்ணாவிடம் சேர்ந்து இசைபயிற்சி பெறுவது, ராஜம் பாபு இருவருக்குமான நட்பு, பாபுவின் தகப்பனார் வைத்தி பாபுவை ஒரு பண்டிதனாக்க மேற்கொள்ளும் முயற்சி, யமுனாவின் தாய் பார்வதி சுப்ரமணிய அய்யரை கலப்பு திருமணமாகவும் இரண்டாவது தாரமாகவும் கட்டிக் கொண்டதால் அது யமுனாவின் வாழ்க்கையில் எப்படி எதிரொலிக்கிறது.. ஆண்களையே நம்பி வாழ்க்கையை ஓட்டிய அன்றைய பெண்களின் இழிநிலை..? வயதான கிழவருக்கு வாழ்க்கைப்பட்டு வந்த தங்கம்மாவின் நிலை… போன்றவை அந்த மையச் சரடின் மீது தொடுக்கப்பட்ட மலர்களாக காட்சியளிக்கின்றன…

யமுனாவின் தாய் பார்வதியின் குடும்பத்தினர், தஞ்சையில் வீரசிவாஜியின் தம்பி சரபோஜி மன்னர் மராட்டியப் பேரரசை நிறுவிய போது மகாராஷ்டிராவில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள்.. பார்வதியின் குடும்பத்தினர் ஒரு இக்கட்டான சூழலில் பார்வதியை சுப்ரமணிய அய்யருக்கு இரண்டாம் தாரமாக அவரது விருப்பத்தின் படி திருமணம் செய்து கொடுக்க.. இந்த கலப்புத் திருமணமே யமுனாவின் திருமணத்துக்கு மிகப்பெரிய சிக்கலாகிறது.. இத்தனைக்கும் யமுனாவோ பாபுவின் எண்ணத்தின்படி தெய்வங்களுக்கு ஒப்பான ஆராதிக்கும் அழகை உடையவள்… ஆனால் அவளைக் கட்டிக் கொள்ள எந்த குடும்பஸ்தனும் தயாரில்லை… சிலர் வைத்துக் கொள்ளவும், இரண்டாம் தாரமாக கட்டிக் கொள்ளவும் கேட்டு வருகின்ற கொடுமைகளும் நடக்கிறது… கீழ்காணும் வரிகளே இந்த சம்பிரதாயங்களில் சலிப்புற்ற யமுனாவின் மனநிலைக்கு சான்று…

”ஆமா பாபு. கலியாணம் வருது எனக்கு.. ரயில் வண்டி மாதிரி ரொம்ப நீளம்.. பத்து வருஷமா ஓடுறதுன்னா நீள வண்டியாத்தான இருக்கணும்..?”

யமுனாவை ஒரு தெய்வப்பிறவியாக ஆராதிக்கும் பாபு, அவளை தன் மனைவி இறந்ததால் கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று கோயம்புத்தூரில் இருந்து கிளம்பி வருமொரு சாதாரண மனிதனைப் பார்த்ததும் கோபத்தில் கொந்தளிக்கிறான்.. யமுனா போன்ற தெய்வாம்ச அழகு கொண்ட பெண்களுக்கு திருமணம் எதற்கு என்றெல்லாம் யோசிக்கும் அவனது மனது, அப்படியே அவள் திருமணம் செய்தாலும், அவளது தெய்வாதீன அழகைப் போற்றி பூஜிக்கும் தன்னைப் போன்ற ஒருவன் தான் அவளுக்கு கணவனாக வர வேண்டும் என்று தனக்கு தானே சாதகமான ஒரு பதிலை தேடி சமாதானம் அடையும் தருணத்தில் தான் அவள் மீதான தன் மயக்கத்தை புரிந்து கொள்கிறான்..

இந்த இடம் நாவலில் ஒரு முக்கியமான இடம். உலக இலக்கியங்களின் பாதிப்புகள் உலகளவில் எல்லாவகை இலக்கியங்களிலும் தெரியத்தொடங்கிய காலகட்டம்.. இந்த நாவல் எழுதப்பட்ட காலகட்டம் 1956. சிக்மண்ட் ப்ராய்ட் போன்றோரின் பரபரப்பான கருத்துக்களை அதிதீவிரமாக விவாதித்த காலகட்டம்..  “குழந்தைப் பருவத்திலேயே காமத்தின் அடிப்படையிலேயே மனம் செயல்படுகிறது..” என்ற ப்ராய்டின் கருத்துக்களை எடுத்து ஆங்காங்கே கிழித்துக்கொண்டிருந்த காலகட்டம்… அதே கருத்து வேறொரு தொனியில் இங்கே நாவலில் ஊடாடுவதைக் காணலாம். நாவலில் சில இடங்களில் பிற கதாபாத்திரங்களை தெய்வமாக பிரகடனப்படுத்தும் காட்சிகள் வருகின்றன.. பாபு யமுனாவை தெய்வமாகப் பார்க்கிறான்… கிழவரின் மனைவி தங்கம்மாவோ ஒரு தருணத்தில் பாபுவை தெய்வமாகப் பார்க்கிறாள்.. இதற்கெல்லாம் உச்சமாக பாபுவின் நண்பன் ராஜமோ பார்க்கின்ற எல்லாப் பெண்களையும் தெய்வமாகப் பார்க்கிறான்… என் நண்பர்களில் சிலருக்கும் இந்த நோய் உண்டு(சில காலம் எனக்கும்..) ஆனால் அவர்கள் தெய்வமாக எண்ணும் பெண்களுக்கு திருமணம் என்று வரும்போது அனைவருமே பாபுவைப் போல் தான் நடந்து கொள்கிறார்கள்.. ஏன் ராஜம் கூட நாவலில் ஒரு கட்டத்தில் அப்படித்தான் நடந்து கொள்கிறான்…

இந்த குணாதிசயத்தின் மயங்கொலியில் இருக்கின்ற செய்தி என்னவென்பதை ராஜம் கதாபாத்திரம் மூலம் தி.ஜா விளக்குகிறார் என்றே நான் நம்புகிறேன்… ஒரு கட்டத்தில் தன் செயலை வெறுக்கும் பாபு, தன் நண்பனைப் போல் ஏன் பெண்களை தன்னால் தெய்வமாகப் பார்க்கமுடிவதில்லை யமுனாவை தான் தெய்வமாகப் பார்த்தாலும் தான் எதில் வேறுபடுகிறோம் என்று திகைக்கிறான்.. ராஜமும் யமுனாவின் மீதான எண்ணத்தை கைவிடும்படி பாபுவுக்கு அறிவுரை கூறுபவன், எந்த கணத்தில் தன் குடும்ப உறவினரின் பெண்ணைப் பார்த்த நான்கு நாட்களில் அவளுக்காக உருகத் தொடங்குகிறானோ.. அவளை ஆராதிக்கத் தொடங்குகிறானோ அப்போது பாபுவின் நிலையை புரிந்து கொண்டு அவனுக்கு ஆதரவாகப் பேசுகிறான்.. யமுனா விடயத்தில் விடாமல் முயற்சி செய்யச் சொல்லி வற்புறுத்துகிறான்….

”ஒருவரை தெய்வமாகப் பார்ப்பது என்றால் என்ன அர்த்தம்… “கடவுள் பேசவும் இல்லை.. பக்தியும் குறைவதும் இல்லை.. காதலி பேசவும் இல்லை..” என்று ஒன்றாம் தரம் படிக்கும் குழந்தை போல் யோசிக்காமல் சற்று, பட்டதாரி போல் யோசியுங்கள். ஒரு பெண்ணைப் பார்த்து ஆணோ, ஒரு ஆணைப் பார்த்து பெண்ணோ, “நீ எனக்கு கடவுள் மாதிரி, நான் உன்னை பூஜிக்கிறேன்..” என்றால் என்ன அர்த்தம்… நீ எனக்கு மட்டுமே கடவுள் என்று அர்த்தம்.. உன்னை பூஜிக்கின்ற தகுதி எனக்கு மட்டுமே உண்டு என்று அர்த்தம்… ஏனென்றால் நீ எனக்கு மட்டுமே கடவுளாகத் தெரிகிறாய்.. மற்றவர்களுக்கு மனித பிண்டமாக தெரிகிறாய் என்று அர்த்தம்.. நீ எனக்கு கடவுள் என்றால் நீதான் எனக்கு (எல்லாமே) என்று அர்த்தம்…” இதைத்தான் மிகமிக நுணுக்கமாக ப்ராய்டின் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு பாபு மற்றும் ராஜம் கதாபாத்திரத்தின் மூலமாக உணர்த்துகிறார்… என்று சில விமர்சகர்களும் குறிப்பிடுகிறார்கள்.. இதை இன்னும் தெளிவாக இறுதியில் யமுனாவின் வார்த்தைகள் உணர்த்துகின்றன… “வருஷக் கணக்காக, எத்தனை வருஷம், எட்டு வருஷமா.. இல்லை, விவரம் தெரிந்தது முதல் பையனாக இருந்தது முதல் தவிச்சதெல்லாம் இதற்குத்தானே… ம்…? என்று யமுனா கேட்கும் போது பாபு பதில் சொல்லாமல் இருக்கிறான்… அவளே பதிலும் சொல்லி முடிக்கிறாள்.. “இதற்குத்தான்..” என்று

இந்த முக்கியமான சம்பவத்துக்கு முன்பு பாபுவுக்கும் யமுனாவுக்குமான உரையாடல் அலாதியானது. மிகவும் கவித்துவமானது.. அதன்முதல் ஐந்து வரிகளைப் படித்தால் அது சொல்கின்ற அர்த்தம் வேறாக இருக்கும்… கடைசி வரியை யமுனா பேசும் போது அது கொடுக்கின்ற அர்த்தம் முற்றிலும் வேறாக இருக்கும்.. எல்லாம் இழந்த நிலையில் அம்மாவையும் பிரிந்து சென்னைக்கு தோல் உலர்ந்து மெலிந்து போய், பசியின் கொடுமையில் பீடிக்கப்பட்டு உதவிதேடி பாபுவைப் பார்க்க வருவாள் யமுனா.. அவளைக் கண்டு உருகும் பாபு அவளுக்கு ஒரு காப்பகத்தில் வேலை வாங்கிக் கொடுத்து அங்கேயே சேர்த்துவிடுவான்.. சில நாட்கள் கழித்து அவர்கள் சென்னை கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பார்கள்.. அந்த உரையாடல் முழுவதுமே மிக நுட்பமானது… அப்போது பாபு மீண்டும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தன் மனதை திறந்து காட்டுவான்.. இப்படி..

எனக்கு நீதான் வேணும்

சரி எடுத்துக்கோ…

அன்னிக்கி நான் கேட்டேனே..?

அப்ப எனக்கு மனசு இடங்கொடுக்கவில்லை.. இப்ப உயிரில்லாமல் கிடக்கும் போது போனால் போறது என்று தோன்றுகிறது..

உயிரில்லா பொருளையா என்னிடம் கொடுக்கிறாய்..

நீ உயிர் கொடேன்…

இதில் கடைசி வரியை அவள் கூறவில்லை என்றால், பாபு யமுனாவுக்கு தன் வாழ்நாளில் செய்த உபசரணைகளுக்காக அவள் தன்னையே ஒப்புவிக்கிறாள் என்ற தவறான எண்ணம் தோன்றும். ஆனால் இறுதியாக அவள் சொல்லும் ”நீ உயிர் கொடேன்” என்னும் அந்த வரிகள் தான் மொத்தமாக அந்த உரையாடலுக்கே உயிர் கொடுக்கின்றன… இந்த சமுதாயமும், சடங்குகளும், வீண் பேச்சுகளும், ஒழுக்கவிதிகளும் எல்லாம் சேர்த்து என் இளமையை என் கனவுகளை, என் ஆசைகளை வடியச் செய்து தலையெடுத்து தலையெடுத்து மறுபடி ஆடும் அவைகளை பிடித்து நசுக்கி, காலால் மிதித்து தேய்த்து உயிரில்லாமல் ஆக்கிவிட்டன… ஆனால் இந்த உயிரற்ற உடலுக்கு உன்னால் உயிர் கொடுக்கமுடியும் என்று நம்புகிறேன்.. அதனால்தான் அதை இப்போது உன்னிடம் ஒப்புக் கொடுக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்லும் ஆழமான வரிகள்.. இந்த வரிகளுக்கு ஏற்றார்ப் போல் பாபு அந்த உடலுக்கு உயிர் கொடுக்க.. அவளும் பழைய யமுனாவாக திரும்புவதும் நாவலில் நிகழ்கிறது..

காலில் முள் குத்தியவன் எப்படி நடப்பான்..  நடையில் பிடியில்லாமல் நொண்டிக் கொண்டுதானே..? மோகமுள் குத்தியவனும் (பாபு) தன் வாழ்க்கையில் அப்படித்தான் நடக்கிறான். தன் வாழ்க்கையை எதை நோக்கி திருப்புவது என்று தெரியாமல் குழம்புகிறான்.. அவன் மனம் செக்குமாடு போல் யமுனாவையே சுற்றிக் கொண்டு வருகிறது.. அவளைப் பார்ப்பதை தவிர்க்கிறான்.. அவளை மறக்க நினைக்கிறான்.. எதுவுமே அவனுக்கான வாழ்க்கையை சாத்தியப்படுத்துவதில்லை.. என்று அவன் அவளை அடைந்து, கடந்து வருகிறானா.. அன்றே அவனுக்கான வாழ்க்கை புரிபடுகிறது.. அதற்கும் காரணியாக யமுனாவே இருக்கிறாள்.. நாம் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையை மட்டுமே கொண்டு நாவலை புரிந்து கொள்ள முயல்வது கடினம்.. ஏனென்றால் நாம் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையில் முள் நம்மை குத்தி இருக்கலாம்.. குத்தாமலும் இருக்கலாம்.. ஏனென்றால் முள் குத்துவதை நாம் தீர்மானிக்க முடியாது அல்லவா…?

தி.ஜாவின் இலக்கிய ஆளுமைக்குச் சான்றாக அவர் கையாண்டிருக்கும் சில வரிகள்.. இங்கே அந்த சூழலுடன்
தங்கம்மாவை நினைத்து புலம்பும் பாபுவின் வரிகள்

இந்தப் பெண்களுக்கு எப்போது ரோஷம் வரப்போகிறது.. சிறையில் உட்கார்ந்து உட்கார்ந்து வலுவிலந்துவிட்டவர்கள்.. திறந்துவிட்டால் கூட திரும்ப கூண்டுக்குள்ளேயே வந்து அடைபட்டுக் கொள்வார்கள் போல…

பாபு யமுனாவை வைப்பாடியாக வைத்துக் கொள்ள ஒருவன் முன்வந்ததைக் கேட்டு நொந்து போய் வீட்டுக்கு நடக்கும் போது.. வரும் வரிகள்

இப்போது கோபம் கோபமாகத்தான் வருகிறது. யார் மீது கோபம்? கையாலாகாமல் கூண்டில் அடைப்பட்டிருக்கும் இந்தப் பெண்கள் மீதா..? வலை போட்டுப் போட்டு, பயமுறுத்தி பயமுறுத்தி ஒடுங்க அடிக்கும் பெரியவர்கள் மீதா..? சிறுமைப்பட்டதை எண்ணி விம்மிக் கண்ணீர் விட்ட பார்வதிபாய் மீதா..? இந்த அவமானத்தைச் சகித்துக்கொண்ட யமுனா மீதா? காறி காறிக் கண்ட இடத்தில் பஸ் ஸ்டாண்டில் துப்பிக் கொண்டிருந்த ஜனங்கள் மீதா..?

நாம் சுதந்திரம் கேட்கிறதில்ல அர்த்தமில்லை. நம் சொந்த வாழ்க்கையிலேயே சுதந்திரம்னா என்னன்னு நமக்குத் தெரியாமல் நாம் சுதந்திரம் வந்து என்ன பண்ணப் போறோம்? மொம்மனாட்டிகள் இறைஞ்சு பேசினா நமக்குப் பிடிக்க மாட்டேங்குது தனியாப்போனா பிடிக்க மாட்டேங்குது. நம்மைச் சுற்றி நாலு பக்கமும் பெரிசு பெரிசா சுவரைக் கட்டிக்கிண்டு நாம் சுதந்திரத்துக்கு ஆசைப்படறோம்..

பாகவதர் ரங்கண்ணா உலக நடப்பைப் பற்றி பேசும் இடம்

அவனவன் தன்னாலதான் முன்னுக்கு வரணும் இந்த உலகத்திலே. எல்லோரும் சோம்பேறியாக இருப்பதற்குப் பெரியவர்கள் வழிகாட்டமாட்டார்கள். இடம் பண்ணிவைக்க மாட்டார்கள்; முன்னேறுகிறதுக்கு வெளிச்சம் காண்பிப்பார்கள். அவ்வளவுதான். முன்னேறுகிறதும் பிந்தங்குகிறதும் நம் பொறுப்பு

பேசுறது கஸ்டமய்யா.. பாடறது எல்லாரும்தான் பண்றா. குயில் பாடறது. வானம்பாடி பாடறது. பாரத்வாஜம் பாடறது. திர்யக் ஜந்து பலது பாடறது. பேசறது மனுஷன் ஒருத்தந்தானே.. அப்ப பேசுறது பெரிசு இல்லியா, நீங்க சொல்லுங்கோ..

பாபுவின் மனதில் ஏற்பட்ட குழப்பத்தையும் மனச்சோர்வையும் காட்டும் வரிகள்

இரவின் நினைவுகளைக் கொணர்ந்து மனதை நாலு பக்கமும் நாய்களைப் போலப் பிடுங்கி இழுத்தது. நீரின் பீச்சல்களுக்கு நடுவில் எண்ணெய்க் கம்பத்தில் ஏறுகிறவனைப் போல விழுந்து விழுந்து மனம் மேலே ஏற முயன்று கொண்டிருந்தது..

இதுதவிர்த்து நாவலின் இலக்கியச்செறிவுக்காகவே இது பலமுறை வாசிப்பதற்கான தகுதியும் கொண்டு விளங்குகிறது. தி.ஜாவின் வர்ணனையில் கும்பகோணமும், தூக்காம்பாளையத் தெருவும், காவிரிக் கரையும் அப்படியே கண்முன் விரிகிறது.. காட்சிகளை விவரிக்கும் முறையும், மன உணர்வுகளைச் சொல்ல அவர் கையாளும் உருவகங்களும் பேரானந்தத்தைக் கொடுக்கும் வாசிப்பனுபவமாக உள்ளத்தில் இருந்து கொண்டே இருக்கிறது.. பாபு தங்கம்மாளுடனான கூடலுக்குப் பின்னர் காவிரி நதியைப் பார்க்கும் போது அது தன் உடல்மீதான அசுத்தத்துக்கு பயந்து தன்னை விட்டு விலகி ஓடுவது போன்ற பிரமையும், யமுனாவுக்கு கல்யாணம் நடக்காதோ என்று ஏங்கிக் கொண்டு இருக்கும் போது, கோவிலில் கருடன் எழுந்து பறப்பதைப் பார்க்க காத்துக் கொண்டு இருக்கும் கூட்டமும், யமுனா மற்றும் பாபுவுக்கு இடையேயான உரையாடல்களில் கவிழும் உண்மைத்தன்மையும், தங்கம்மாளின் கடிதத்தில் “உடலும் உயிரும் பெரும் பாரமாக அழுத்துவதாக சொல்லும் இடமும்..” சேர்ந்து ஒரு அற்புதமான காதல் கதையை படித்த நிறைவைத் தருகின்றன.. வெகுஜன மக்களுக்கு புரிவதுபோல் என்றால் நாவல் வடிவில் ஒரு விண்ணைத் தாண்டி வருவாயா.. என்றும் சொல்லலாம்..

மொத்தத்தில் இந்த மோகமுள் படித்தால்

முள் குத்தியவர்கள் வலியின் இன்பத்தை நுகருவார்கள்…
முள் குத்தாதவர்கள் வலியின் நோவை உணருவார்கள்…
..





No comments:

Post a Comment