Friday 27 September 2013

ராஜா ராணி:

இயக்குநர் சங்கர் அவர்களின் அபிமான உதவி இயக்குநராக இருந்த அட்லியிடம் இருந்து வந்திருக்கும் முதல் திரைப்படம் இந்த ராஜா ராணி. டீசரிலேயே பக்காவாக முழுக்கதையையும் இயக்குநர் சொல்லிவிட்டார் என்றாலும் உங்களுக்காக ஒருமுறை.. காதல் தோல்வியின் முடிவில் விருப்பமில்லாத இரண்டு பேர், திருமணம் செய்து சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயம் வருகிறது. கல்யாணம் முடிந்த முதல்நாளே அவர்களுக்குள் முட்டிக் கொள்ள.. அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பது மீதிக்கதை..


மொத்தப்படத்திலேயே சுவாரஸ்யமான பகுதி என்றால் அது ஜெய்- நயன் காதல் எபிசோட் பகுதி தான். முருகதாஸ் புரொடக்‌ஷனிலும் ஏனோ ஏர்வாய்ஸ் கம்பெனியை விட மாட்டேன் என்கிறார்கள். ஏர்வாய்ஸ் கம்பெனி ஓனர் சூர்யாவுக்கும் அசினுக்குமான காதல் நினைவிருக்கிறதா..? அதை நினைவுபடுத்துவது போன்ற அதே சூட்டிகைத்தனம் நிறைந்த காதல் பகுதி.. கஸ்டமர் கேர் சர்வீசில் புதிதாக பணியில் சேர்ந்திருக்கும் சூர்யாவான ஜெய் ஒரு பிரச்சனையின் முடிவில் நயனை நீ ஆம்பிளையா இருந்தா நேர்ல வா..? என்று பயந்தவாறே கேட்டுவிட்டு போனைக் கட் செய்யும் இடத்தில் ஜெய்யின் நடிப்பு உண்மையாகவே அட்டகாசம்… ”இந்த சேவைக்கு உங்களது மதிப்பெண்..” என்று அவரிடமே கேட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளும் போதும் அநாயசமாக சிரிக்க வைக்கிறார். அவருடைய ஹஸ்கி வாய்ஸ் அந்த கேரக்டரையே உயிர்ப்பிக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. அந்த காட்சிக்கே முத்தாரம் இட்டது போல் CEO வாக வரும் மனோபாலாவிடம் கஸ்டமர் சர்வீஸ் கேட்டு அவரது வாயை அடைக்கும் இடம் படு காமெடி. ஜெய் எனக்குத் தெரிந்து நன்றாக நடித்திருக்கும் படம் இதுதான். அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் “போடா…” என்று ஆர்யாவை திட்டிவிட்டு செல்லும் போது காட்டும் பாடிலாங்க்வேஸ் ஆவ்சம். ஆனால் அவரது நடிப்பைத் தூக்கி சாப்பிடுவது போல் நயனின் நடிப்பு.. பிக்ஸ் வந்து தரையில் விழுந்து கண்கள் மேல் நோக்கி குத்திட்ட நிலையில் கைகளைப் போட்டு தரையில் அடிக்கின்ற இடத்தில் க்ளாஸ் ஆக்டிங். அது தவிர்த்து காருக்குள் இருந்து கொண்டே அழுத நிலையில் தன் தகப்பனிடம் மன்னிப்பு கேட்கும் இடம், ஆர்யாவை வெறுப்பேற்றும் இடத்தில் அவரது மேனரிசம், தன் தந்தையை அழைத்து “நீ சேவ் பண்ணிக்க.. நான் கல்யாணம் பண்ணிக்கிறே…” என்று கண்கலங்கும் இடம் என எல்லா இடங்களிலும் ஏ ஒன் ஆக்டிங்க்.. கங்க்ராட்ஸ்… நடிப்பைத் தவிர்த்து வேறு காரணங்களுக்காகவே அவரை பயன்படுத்தும் தமிழ்சினிமா கண்டிக்கத்தக்கது…


இதற்கு திருஷ்டி வைத்தாற் போல் உப்பு சப்பு இல்லாத, அதே குடி, கும்மாளம் கூத்தடங்கிய ஆர்யா சந்தானம் போர்ஷன். காற்றடைத்த பலூன் போல ஒன்றுமில்லாத காட்சிகளை அடுக்கி, ஜஸ்ட் லைக் தெட் திரைக்கதையை நகர்த்தி இருக்கும் அந்த இடம் பலவீனம். அதைக் கொஞ்சமேனும் உயிர்போடு வைத்திருப்பது நஸ்ரியாவின் சின்ன சின்ன க்யூட் எக்ஸ்பிரசனும் முக வசீகரமும்தான்… தெலுங்கின் ஆரவாரமான குத்துப்பாடலுக்கு அம்சமாக ஆடிக் கொண்டே அறிமுகம் ஆகும் அவர், ஹலோ பிரதர் என்று ஆர்யாவை அழைத்து வெறுப்பேற்றி, “பொறுக்கியாடா…? நீ என்று வெடித்து சிதறி, “எங்க அம்மா மடில நான் படுத்ததே கிடையாது.. படுத்துக்கவா…”என்று மடியில் படுத்து மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறார் இந்த அழகி. ஆர்யா நடிப்பில் இன்னும் பல படிநிலைகளை கடந்து வர வேண்டுமோ என்று தோன்றுகிறது… பல இடங்களில் முகத்திலும் சரி குரலிலும் சரி ஒரே மாதிரியான எக்ஸ்பிரசன்.. ஒரே மாதிரியான டயலாக் டெலிவரி… மாற்றிக்கொள்ளவில்லை என்றால், அவரது இடம் பறிபோவது உறுதி..


சந்தானத்தின் அதே ட்ரேட் மார்க் டைமிங் காமெடி சில இடங்களில் கை கொடுக்கிறது. அதிலும் குறிப்பாக அந்த ப்ளாஸ்பேக் காட்சிகளில் சற்று அதிகமாகவே சிரிக்க வைக்கிறார்.. நான் கடவுள் ராஜேந்திரனுக்கு உண்மையாகவே ஒரு வித்தியாசமான கதாபாத்திரம்.. நிறைவாக செய்திருக்கிறார்.. இது தவிர்த்து வழக்கத்துக்கு மாறாக மிக அமைதியான அற்புதமான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார் சத்தியராஜ். தன் மகளை டார்லிங் என்று அவர் அழைப்பதும், நயன் அவரைப் பதிலுக்கு டார்லிங்க் என அழைப்பதும் தங்கள் சோகத்தை மறைத்துக் கொண்டு அவர்களை சந்தோசப்படுத்த நினைப்பதுமாக அந்த தகப்பன் – மகள் உறவு ஸ்கெட்சே செம்ம சார்ப்…


ஜி.வி பிரகாஷின் இசை பாடல்களைவிட பிண்ணனியில் சிறப்பாக இருந்ததாக உணர்கிறேன்.. ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு ஆரம்பத்தில் அந்த சர்ச் திருமணத்தில் தொடங்கி, SHOPPER STOP, CITY CENTER டபுள் பெட்ரூம் அபார்ட்மெண்ட் என எல்லா இடங்களையும் துடைத்து வைத்த பளிங்கு போல் காட்டி ஒரு காஸ்ட்லியான லுக்கை எல்லாவிதமான ப்ரேமுக்கும் கொடுத்திருக்கிறது… சில இடங்களில் அந்த பளீச்னஸ் குறையாகத் தெரிந்தாலும் நைஸ் வொர்க்… ஆண்டனியின் ஒளிப்பதிவு வழக்கம் போல் துல்லியம்.. அதிலும் குறிப்பாக அந்த ஆக்சிடெண்ட் சீனைச் சொல்லலாம்… ஸ்மார்ட் வொர்க்… வாழ்த்துக்கள்..

இப்படி பாராட்ட பல விசயங்கள் இருந்தாலும் ஆங்காங்கே சில குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதில் முக்கியமான ஒன்றாக எனக்குப்படுவது காதல் தான் படத்தின் மைய ஆதாரம் என்று ஆனப்பின்னர் அதை இன்னும் சற்று உயிர்ப்போடு சொல்லி இருக்கலாம்… வழக்கமான காமெடி கலாட்டா வகை காதலாக இருப்பதால், அதற்குள் வலுவாக இருந்திருக்க வேண்டிய வாழ்க்கை என்னும் விசயம் இல்லாமல் போனது பெருங்குறை.. அதுபோல் திருமணம் முடிந்த கையோடு அவர்கள் மாறிமாறி ஒருவர் மீது ஒருவர் வெறுப்பை உமிழ்வதென்பது யதேச்சையானதாக இல்லை.. அவர்கள் பட்டும் படாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் போது வெறுப்பு வருவதற்கான ஆரம்ப நிகழ்வாக ஏதேனும் ஒன்றை காட்டி இருக்கலாம்… அல்லது பெரும்பாலானோர் வாழ்க்கையில் நிகழும் காதலனை கணவனோடு ஒப்பிட்டு பார்க்கும் மனநிலையைக்கூட கையாண்டு இருக்கலாம்… அதைவிடுத்து படத்தில் வரும் அந்த முதல் 15 நிமிட காட்சிகள் வெறுப்பையே ஏற்படுத்துகின்றன.. மேலும் இரண்டு காதல் ஜோடிகளுமே காதலிக்கும் போதே திருமணம் செய்து கொள்ளும் இடத்திலும், “நமக்கு பிடிச்சவுங்க போய்டாங்கங்கிறதால நாமளும் கூட போணும்னு இல்ல.. நம்ம வாழ்க்கை நமக்குப் பிடிச்ச மாதிரி மாறும்..” என்று சொல்கின்ற வசனம் நூல் பிடித்தாற் போல் எல்லா கதாபாத்திரமும் ஸ்ருதி மாறாமல் ஒப்பிக்கும் இடத்திலும் அங்கு கதாபாத்திரத்தை மீறி இயக்குநரே கண்ணுக்குத் தெரிகிறார்.. மேலும் ஆர்யாவின் குடும்பத்தை அவரது இரண்டாவது கல்யாணத்தின் போதாவது ஒப்புக்காக காட்டி இருக்கலாம்.. திருப்பங்கள் இல்லாத சுவாரஸ்யமில்லாத திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்தி, குடி கூத்து போன்றவற்றை நியாயப்படுத்துவது போல் வழுவாமல் பிடித்துக் கொண்டு வரும் பிடியை பல இடங்களில் தளர்த்தி இருக்கலாம். “காதல் தோல்விக்குப் பின்பும் காதலும் உண்டு வாழ்க்கையும் உண்டு..” என்னும் ராஜா ராணி திரைப்படம் சொல்ல வரும் இதே கருத்தை வெளிப்படையாக சொல்லாத இன்னொரு திரைப்படமான “விண்ணைத் தாண்டி வருவாயா..”வில் ஒரு யதார்த்தமான வாழ்க்கை அச்சு அசலாக இருக்கும்… ஒரு வாழ்வியல் இருக்கும்.. அதுவே அந்தப் படத்துக்கான கனத்தையும் கொடுக்கும்… ஆனால் அந்த யதார்த்தமான வாழ்க்கையும் வாழ்வியலும் இல்லாததால் படத்தில் வரும் பெரும்பாலான வளவளப்பான ப்ரேம்களைப் போல, திரைப்படமும் மனதில் எளிதில் வழுக்கிக் கொண்டு போகிறது…

இருப்பினும் இந்த காலகட்டத்தில் THERE IS A LOVE AFTER LOVE FAILURE, THERE IS A LIFE AFTER LOVE FAILURE என்னும் கனமான, யதார்த்தமான வரிகளை கதைக்களமாக எடுத்துக் கொண்டு அதை இன்றைய தலைமுறை மனதில் பதிய வைக்க முயன்ற அந்த முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்… நயன் கூட சொல்லி இருந்தார் “எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகத்திறமையான இயக்குநர்… அட்லி” என்று… ஏனென்றால் அவரது வாழ்க்கைக்கும் அர்த்தம் கொடுக்கும் அற்புதமான வரிகளல்லவா… நம்மால் அந்த அளவுக்குப் பாராட்ட முடியாது என்றாலும், கண்டிப்பாக மறுதலிக்க முடியாத புறந்தள்ள முடியாத ஒரு நல்ல படைப்புதான் ராஜா ராணி என்றும், கவனிக்கத்தக்க, ஒரு முக்கியமான வரவுதான் இயக்குநர் அட்லி என்றும் பாராட்டலாம்….


Thursday 26 September 2013

The Shawshank Redemption:

குற்றங்கள் பெருகிவரும் சூழலில் அதற்கான தண்டனைகளைப் பற்றி சூடான விவாதங்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் இன்றைய காலச்சூழலில், இந்த திரைப்படத்தைக் காண நேர்ந்தது எதிர்பாராத நிகழ்வாக இருக்கலாம். ஆனால், இந்த The shawshank Redemption எனக்குள் ஏற்படுத்தியுள்ள கேள்விகளை அகழ்வாராய்ச்சி செய்யும் போது நிகழ்வு எதிர்பாராததாகவே இருந்தாலும், மிகமிக அவசியமான ஒரு நிகழ்வாகவே எனக்குப்படுகிறது. 1994ல் ஹங்கேரிய பிறப்பும் அமெரிக்க வாழ்கையும் கொண்ட Frank Darabond என்ற இயக்குநரால் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தைப் பார்த்தால் உங்களுக்கும் அதேவிதமான கேள்விகள் எழுவதை தவிர்க்க இயலாது.


Stephen King என்ற எழுத்தாளரால் Rita Hayworth and Shawshank Redemption  என்ற பெயரில் எழுதப்பட்ட நாவல்தான் Frank Darabond அவர்களால் திரைப்படமாக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவில் maine என்னும் மாகாணத்தில் உள்ள Shawshank என்னும் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை Andy Dufresne என்னும் தனிமனிதனின் வாழ்க்கையின் ஊடாக திரைப்படம் சொல்லிச் செல்கிறது..


Andy Dufresne (டிம் ராபின்ஸ்) என்னும் வங்கி மேலாளன் தன் மனைவியையும் அவளது காதலனையும் சுட்டுக் கொன்ற குற்றத்துக்காக, பரோலில் கூட வெளியே வர முடியாத இரட்டை ஆயுள்தண்டனை அனுபவிக்கும் குற்றவாளி. ஆனால் அவனுக்கோ தான் குற்றம் செய்யவில்லை என்ற எண்ணம்.. இருப்பினும் தான் குடிபோதையில் இருந்ததாலும், சாட்சிகள் எல்லாம் அவனுக்கு எதிராக இருந்ததாலும் தண்டனை விதிக்கப்பட்டு Shawshank சிறைச்சாலைக்கு அனுப்பப்படுகிறான். அங்கு அவனுக்கு பல விசித்திரமான அனுபவங்கள் கிடைக்கின்றன. இருப்பினும் அங்கு 20 வருடங்களாக தண்டனை அனுபவித்தும் பரோல் மறுக்கப்படும் கைதியான Red (மோர்கன் ஃப்ரிமேன்) உடன் அவனுக்கு நட்பு ஏற்படுகிறது.. இந்த இரு மனிதர்களின் நட்பின் ஊடாக கைதிகள் சிறைக்குள் வரும் போதும், சிறையில் இருக்கும் போதும், சிறையை விட்டுச் செல்லும் போதும் அவர்களது மனநிலை எப்படி இருக்கிறது என்பதை மிகமிக துல்லியமாக விளக்குகிறது இந்த திரைப்படம். இது தவிர்த்து Andy என்னும் தனிமனிதனின் வாழ்க்கையிலும் எதிர்பார்க்க முடியாத பல திருப்பங்கள் நடக்கின்றன.. அதைப் பற்றிப் பேசப் போனால் அது படம் பார்க்கும் உங்களுக்கான சுவாரஸ்யத்தைக் கெடுத்துவிடும் என்பதால் அதை இங்கு தவிர்க்கிறேன்…


திரைப்படத்தின் மையமாக நான் பார்க்கின்ற விசயங்கள் இரண்டு. ஒன்று வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை விதைக்கும் தருணங்கள். இரண்டாவது வாழ்க்கையின் மீதான அவநம்பிக்கையை விதைக்கும் தருணங்கள்… இந்தப் பதிவினை நான் நம்பிக்கையின் பின்புலத்தில் முடிக்க விரும்புவதால் முதலில் அவநம்பிக்கையை விதைக்கின்ற தருணங்கள் கடந்து போகின்ற இடங்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்…

பெரும்பாலும் வாழ்க்கையின் மீதான அவநம்பிக்கையை, தனிமனிதன் தன் வாழ்க்கையின் மீது தானாகவே விதைத்துக் கொள்வதில்லை.. ஏதோ ஒரு காரணத்தால் நண்பர்களாளோ, எதிரிகளாளோ, சமூகத்தாலோ அல்லது சில நேரங்களில் அரசாங்கத்தாலோ விதைத்துக் கொள்ள தூண்டப்படுகிறான்.. அல்லது விதைத்துக் கொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுகிறான்… பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கையில் இதுதான் நடைமுறை. இதேதான் இந்த திரைப்படத்திலும் நடக்கிறது… அந்த அவநம்பிக்கையை விதைத்துக் கொள்கின்ற கதாபாத்திரத்துக்கு உதாரணமாக படத்தில் வருகின்ற பெரும்பாலான கதாபாத்திரத்தைக் கூறலாம். ஆனால் அதில் எனக்கு மிகமிக முக்கியமாகத் தோன்றும் இரண்டு கதாபாத்திரங்களைப் பற்றி பேச விழைகிறேன்.


அதில் முதல் கதாபாத்திரம் Brooke என்னும் பெரியவர். தான் செய்த குற்றத்துக்கு தண்டனையாக 50 ஆண்டுகால வாழ்க்கையை ஜெயிலில் கழித்தவர். அவரது உலகமே அந்த Shawshank சிறைச்சாலையாக சுருங்கிப் போய்விடுகிறது. சற்றுப் படித்தவர் என்பதற்காக அவருக்கு அங்கு கொடுக்கப்பட்ட பணி நூலக மேற்பார்வை. அந்தப் பணியை மிகமிக சந்தோசமாக செய்து கொண்டு தன் வாழ்க்கையை கழிக்கும் அவர் பறவைக் கூட்டில் இருந்து கீழே விழுந்த ஒரு காக்கை குஞ்சை தன் பாக்கெட்டில் வைத்து உணவளித்து வளர்த்து வருகிறார். அது பறக்கின்ற நிலைக்கு வந்த பின்னரும் அவருடனே ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது… அப்படிப்பட்ட சூழலில் அவருக்கு விடுதலை கிடைத்துவிட்டதாக சக கைதி ஒருவன் சேதி கொண்டு வருகிறான்… அவனை அந்த வயதானப் பெரியவர் என்ன செய்கிறார் தெரியுமா….? கண்ணீர் மல்க அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே கட்டி அணைத்து அவனது இரு கன்னங்களிலும் மாறிமாறி முத்தமழை பொழிவது இல்லை… மாறாக அவனை ஒரு கத்தியைக் கொண்டு கொலை செய்ய முயல்கிறார்….! ஏன்……????


இங்குதான் இந்த திரைப்படம் எனக்குள் எழுப்பும் முதலாவது கேள்வி எழும்புகிறது…? நாம் எதனை விடுதலை என்று கூறிக் கொள்கிறோம்…? 50 வருடமாக தனக்கான ஒரு உலகத்தை சிறைச்சாலைக்கு உள்ளாகவாக சிருஷ்டித்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனை, பறவைக் கூட்டில் இருந்து தவறிக் கீழே விழுந்த ஒரு பறவைக் குஞ்சை காப்பாற்றப் பரிதவிக்கும் ஒரு பாசமுள்ள வயோதிகனை.. அவனது கூட்டில் இருந்து பிய்த்து, 50 ஆண்டுகளில் அசுர வேகத்தில் வளர்ந்து, பூமியை விட வேகமாக சுழலப் பழகிக் கொண்ட இந்த உலக மக்கள் நடுவே  உலவ விடுவதைத்தான் நாம் விடுதலை…. சுதந்திரம் என்று கூறிக் கொண்டு இருக்கிறோமா..?

இந்த திரைப்படம் எனக்குள் எழுப்பும் இரண்டாவது கேள்வியும் இங்குதான் எழும்புகிறது… இந்த உலகத்தில் நாம் ஒருவனை தவறு செய்தவனாக எண்ணிக் கொண்டு, அவனுக்கு நாம் தண்டனை தர முனையும் போது அவனை அனுப்புவதற்கு இந்த உலகத்தில் பல சிறைச்சாலைகள் இருக்கின்றன.. ஆனால் தண்டனை முடிந்து வெளியே வரும் போது நம் பாணியில் சொல்லப் போனால் விடுதலை அடைந்து வரும் அவனுக்கு இந்த பரந்த உலகத்தில் வாழ்வதற்கு எங்கு இடம் இருக்கிறது..? தண்டனை தரும் போது வரவேற்று ஏற்றுக் கொள்ளும் சிறைச்சாலையைப் போல் விடுதலையானவனை விருப்பமுடன் ஏற்றுக்கொள்ளும் இடமும் இந்த உலகத்தில் இருக்கிறதா…?

இது தவிர்த்து இன்னொரு விசயமும் தலையாயதாகப்படுகிறது. கணிப்பொறி கால்குலேட்டர் கண்டுபிடிப்புகளுக்கு முன்னர் நாம் போடுகின்ற வட்டிக் கணக்குகளில் மனித தவறுகள் அதாவது Human errors என்பதற்கு கண்டிப்பாக இடமிருக்கும். இன்றும் நம்மிடம் வட்டிக் கணக்குகளுக்கு உதவும் கணிப்பொறி மட்டும்தானே உள்ளது. வாழ்க்கைக் கணக்குக்கு உதவும் கணிப்பொறிகள் இல்லையே..? இந்த வாழ்க்கைக்கணக்குகளில் மனித தவறுகளுக்கு இடமிருப்பதை நாம் ஏன் பொருட்படுத்துவதே இல்லை. சுருங்கக் கூறினால், நாம் தீர விசாரித்து நீதியாக தண்டனை வழங்கிய வழக்குகளில் மனித தவறுகள் இருந்து, அதனால் ஒரு மனிதனின் மொத்த வாழ்க்கையுமே பறிபோனால் அதற்கு யார் பொறுப்பு…? இந்த இடத்தில் தான் நாம் தவறென்றும், தண்டனை என்றும், விடுதலை என்றும் கூறிக் கொண்டு இருக்கும் நீதி தேவதையின் நியாயத் தீர்ப்பு தராசுகளில் பல ஊற்றுக் கண்கள் இருப்பதை உணர தலைப்பட முடியும்..


கதைக்கு வருவோம்… விடுதலை கிடைத்த Brooke தன்னிடம் வளர்ந்த காக்கையை அதற்கான புது உலகத்துக்குள் பறக்கவிட்டு விட்டு, தன்னுடைய புது உலகத்துக்குள் காலடி எடுத்து வைக்கிறார்… ஆனால் அந்த காக்கையைப் போல் அவருக்கொன்றும் இளவயதில்லையே..? அவரால் அதிஅவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தோடு ஒட்ட முடிவதில்லை.. சக கைதியை கொன்றுவிட்டு சிறைக்குள்ளேயே இருக்க நினைத்ததைப் போல் வெளியிலும் யாரையாவது கொன்றுவிட்டு மீண்டும் ஜெயிலுக்குப் போய் விடுவோமா என்று எண்ணுகிறார்… அதற்கு அவரது மனம் இடம் கொடுக்காததால் வேறுவழியின்றி இறுதியில் தன்னையே கொன்று கொல்கிறார்… இப்படி அவரது எதிர்காலத்தின் மீதான அவநம்பிக்கையை அவருக்கு விதைத்தது யார்…?

இதில் இரண்டாவது கதாபாத்திரமாக நான் பேச நினைப்பது Red (மோர்கன் ஃப்ரீமேன்) கதாபாத்திரத்தை. மோர்கனும் ஒரு கட்டத்தில் பரோலில் வெளி வரும்போது அவரும் இதே போன்ற ஒரு பிரச்சனையை சந்திக்கிறார். அவரும் மறுபடி ஒரு கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போய்விடுவோமா என்றுகூட எண்ணுகிறார்... இந்த இடத்தில் தான் ஒருமுறை ஜெயிலுக்குப் போனவர்கள் மறுபடி மறுபடி ஜெயிலுக்குப் போவது, தவறுகளைத் திருத்திக் கொள்ளாததாலா…? அல்லது வெளி உலகத்தோடு ஒன்றி வாழமுடியாத, வாழ்க்கை மீதான அவநம்பிக்கையினாலா என்ற சந்தேக முரண் எழும்புகிறது… அவரும் கூட ஒரு கட்டத்தில் தன் வாழ்க்கையை வாழ முடியாத இயலாமையால், அவநம்பிக்கையால் தற்கொலை எண்ணத்தை எடுக்கும் போதும், அவருக்கு நம்பிக்கையை விதைப்பது நண்பன் Andyன் வார்த்தைகள் மட்டுமே…

ஆம்… வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை விதைக்கும் கதாபாத்திரமாக நாயகன் Andyன் கதாபாத்திரம். அது நம் எல்லோருக்குமே ஒரு பாடம். நாமும் வாழ்நாளில் எத்தனையோ இடங்களில் நம்பிக்கை தளர்ந்து போய் அடுத்து என்ன செய்வது என்று யோசித்திருப்போம்..? நம் எல்லோருக்குமே Andy சொல்கின்ற பாலபாடம் அந்த நம்பிக்கையை மீண்டும் கையில் எடுங்கள் என்பதைத்தான்… மேற்சொன்னதுபோல் நம் வாழ்க்கையில் அவநம்பிக்கையை விதைக்க போட்டி போட்டுக் கொண்டு பலர் வரலாம்… ஆனால் நம்பிக்கையை விதைக்க எண்ணினால் அது நம்மேல் உண்மையான அக்கறை கொண்ட ஒருவரால் அல்லது நம்மால் மட்டுமே முடியும் என்பதை உணர்த்தும் கதாபாத்திரம்.. எந்த இடத்திலுமே தன் மீது கொண்ட நம்பிக்கையை அந்த கதாபாத்திரம் இழப்பதே இல்லை… ஓரினச் சேர்க்கையாளர்கள் சிறையில் அவனை துன்புறுத்தும் போதும், வார்டன் கடுமையாக நடந்து கொள்ளும் போதும், தனக்கான எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டதாக, இரண்டு மாத காலங்களுக்கு இருட்டறையில் அவனை அடைக்கும் போது உணரும் போதும் அவன் அந்த நம்பிக்கையை இழப்பதில்லை… லைப்ரரியை விரிவாக்க உதவி வேண்டி தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் கடிதம் எழுதுவதும், தன் விடுதலைக்காக தொடர்ச்சியாக 19 ஆண்டுகள் இடைவிடாமல் போராடும் போதும் அவனுக்கு இருக்கும் ஒரே பிடிப்பு அந்த நம்பிக்கை மட்டுமே..


இவை தவிர்த்து நடிப்பு என்று பார்க்கும் போது டிம் ராபின்ஸன், மோர்கன் ஃப்ரிமேன் இருவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.. தாமஸ் நீயுட்டனின் அற்புதமானப் பிண்ணனி இசை பல இடங்களில் உணர்வுகளைக் கடத்தும் அற்புதமான ஒரு மீடியமாக இருக்கிறது. டேராபாண்டின் இயக்கமும்  ரோஜர் டெக்கின்ஸின் ஒளிப்பதிவும் ஒரு வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்த ஒரு திருப்தியை ஏற்படுத்தும் நேர்த்தி உடையவையாக விளங்குகிறது.


ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் இழக்காத சொத்தாக வைத்திருக்க வேண்டிய நம்பிக்கையையும், கைதிகளின் பிரச்சனைகளையும் ஒருசேரப் பேசி, கைதிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய தண்டனை மற்றும் விடுதலை போன்ற பிரச்சனைகளை கேள்விக்குள்ளாக்கி விவாதிக்கத் தூண்டும் இந்த திரைப்படத்தைப் பற்றி எழுதும் போது, I SAW THE DEVIL போன்ற திரைப்படங்களில் வரும் கொடூரக் குற்றவாளிகளை என்ன செய்வது என்ற எண்ணமும் எழாமல் இல்லை… இருப்பினும் இந்த விசயங்கள் விவாதிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை… I SAW THE DEVIL தொடர்பான விவாதங்களை அடுத்த பதிவில் பேசலாம்…


வாழ்க்கையின் நம்பிக்கையை இழக்கும் எந்த தருணத்திலும் தைரியமாக இந்தப் படத்தைப் பார்க்கலாம்… Andyக்கு வந்த ஒரு மோசமான சூழலை விட ஒரு மோசமான சூழல் நமக்கு வரப்போவதில்லை என்பது நிச்சயம்… எனவே படம் முடியும் போது நாம் தொலைத்திருந்த நம்பிக்கையை கண்டிப்பாக மீட்டெடுக்கலாம்.. ஆனால் அதற்கு கொஞ்சம் பொறுமையும் முக்கியம்.. ஏனென்றால் The Shawshank Redemption உங்களை எல்லா இடத்திலும் குதூகலிக்கச் செய்யும் ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் அல்ல.. சற்று பொறுமையோடு பார்க்க வேண்டிய வாழ்க்கை…. சித்திரம்…

Tuesday 24 September 2013

We bought a zoo

ஒரு உண்மைச் சம்பவம் நாவலாக எழுதப்பட்டு, அந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் WE BOUGHT A ZOO. தங்களது நிம்மதிக்காக, சந்தோசத்திற்காக மக்கள் கூட்டத்தில் இருந்து விலகி, ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு வீட்டில் குடியிருக்கச் செல்லும் ஒரு குடும்பத்தின் தலைவனும், அதன் உறுப்பினர்களும் எப்படி அந்த ஊரின் ஒட்டுமொத்த மக்களையும் சந்தோசப்படுத்தும் காரணிகளாக மாறி நிற்கின்றனர் என்பதை இத்திரைப்படம் அற்புதமாகப் பேசுகிறது..


Benjamin Mee ஆக நடித்திருக்கும் Matt Damon அந்த குடும்பத்தின் தலைவன். 6 மாத காலத்துக்கு முன் நிகழ்ந்த தன் மனைவியின் மரணத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறான் Benjamin. அவன் மட்டுமல்ல அவனது 14 வயது மகனும், 7 வயது மகளும் கூட அந்த ஈடுசெய்ய இயலாத இழப்பால் கவலை கொண்டு இருக்கின்றனர்.. அதிலும் குறிப்பாக அவனது மகன் Dylon மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டவனாக இருக்கிறான்… அவனது ஓவியங்கள் அனைத்தும், தலையறுந்து தொங்கும் ஒரு மனிதனின் ஓலமாகவும், முகம் புதைத்து அழும் ஒரு மனிதனின் கதறலாகவும், சூரிய ஒளி இல்லாத இருண்ட உலகில் அவலநிலையில் வாழும் ஒரு மனிதனாகவும் அவனது மனநிலையை விளக்கும் பிரதிநிதிகளாகவே விளங்குகின்றன.. Benjamin Meeக்கோ சுற்றி இருப்பவர்கள் அவன் மீது காட்டும் கழிவிரக்கமே மிகப்பெரும் துயரமாக இருக்கிறது.. அவனது மகள் Rosieக்கோ வேறுமாதிரியான பிரச்சனை.. அண்டை வீட்டாரின் சந்தோசமான கூச்சல்கள் அவளையும் பாதிக்கிறது… Dylon சில ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கையால் பள்ளியிலிருந்து விலக்கப்படுகிறான்.. வேறு வழி இல்லாமல் அந்தக் குடும்பம் அந்த ஊரைவிட்டு மக்களை விட்டு வெகு தொலைவு செல்ல முடிவு செய்கிறது… அவர்களது வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சி எப்படி திரும்புகிறது என்பதை மிகமிக அழகாக விளக்குகிறது இத்திரைப்படம்.

இப்படி புதுவீடு தேடிச் செல்லும் பென்ஞமினும் ரோஸியும் பார்வையிடும் எல்லா வீடுகளிலும் சலிப்புற்று இருக்கும் போது, ரோஸி பத்திரிக்கையில் வந்த மற்றொரு வீட்டைக் காட்டுகிறாள். அந்த வீட்டைப் பார்வையிட்ட இருவருக்கும் வீடு மிகவும் பிடித்துப் போக, அப்பொழுதுதான் அந்த வீட்டை வாங்குவதில் உள்ள சிக்கல் புரிய வருகிறது. அந்த வீட்டை வாங்க முனைபவர்கள் அதை ஒட்டி இரண்டாட்டுகளுக்கு முன்பு வரை செயல்பட்டு வந்து, தற்பொழுது பணநெருக்கடியால் மூடப்பட்டு இருக்கும் மிருகக்காட்சி சாலையையும், அதில் உள்ள மிருகங்களையும், அதில் பணியாற்றும் ஊழியர்களையும் சேர்த்துப் பராமரிக்க வேண்டும் என்பதே அது. அந்த நிபந்தனையை எண்ணி பெஞ்சமின் பின்வாங்க நினைக்கும் சூழலில், ரோஸியோ அங்கிருக்கும் மயிலுக்கு உணவு கொடுக்கத் தொடங்கி உறவு கொண்டாடத் துவங்குகிறாள்… அவளது சந்தோசத்துக்கு விலையாக அந்த வீட்டை வாங்கத் துணிகிறான் பெஞ்சமின்.. அதில் Dylonக்கோ விருப்பமில்லை. தன் நண்பர்களையும், தன் அன்னை இருந்த வீட்டையும் விட்டுப் பிரிய மனமின்றி வெறுப்பை உமிழ்கிறான். இருப்பினும் அந்த வீட்டையும் சூவையும் விலைக்கு வாங்கும் பெஞ்சமின், மிருககாட்சி சாலையை பராமரிக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து எப்படி மீண்டான் என்பதை மீதிக் கதை விளக்குகிறது…


இதில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணாதிசங்களை விளக்கி இருக்கின்ற விதம் மிக அருமை. இப்படிப்பட்ட சூழலில் ஒரு மனிதன் எப்படி ZOOவை வாங்கத் துணிவான் என்ற கேள்வி எழும்… ஆனால் படத்தின் துவக்கத்தில் Dylon தன் தந்தையைப் பற்றி கூறும் காட்சிகள் அதற்கான பதிலாக அமைகின்றன… இப்படித் தொடங்குகிறது தந்தையைப் பற்றிய அவனது அறிமுகம்.. என் தந்தை ஒரு எழுத்தாளர், அதையும் மீறி அவர் ஒரு சாகசவிரும்பி… அதற்கு ஏற்றார் போல் பெஞ்சமின் தேனீக்கள் தன்னைக் கடிக்காமல் இருக்க ஒரு ஆடையை அணிந்து கொண்டு நிற்க.. அவனைச் சுற்றி பத்தாயிரத்துக்கும் அதிகமான தேனீக்கள் கொத்திக் கொண்டிருக்கும். அடுத்த காட்சியில் தீவிரவாதிகளை பேட்டி எடுத்துக் கொண்டு இருப்பான். அடுத்த காட்சியில் மிக மோசமான புயலில் மினி ப்ளைட்டை ஓட்டி அந்த தருணங்களை ரசித்துக் கொண்டு இருப்பான்…. Dylonனின் வார்த்தைகள் இப்படி முடியும்… “But he never preper for this..” தன் மனைவி இறந்த காரணத்தால் குழந்தைகளை பள்ளிக்கு கிளப்பும் பணியைச் செய்து கொண்டிருப்பான்… இப்படிப்பட்ட ஒரு மனிதன் ZOOவை வாங்குவதில் ஆச்சரியம் இல்லைதானே..


அதுபோல படத்தின் டைட்டில் வரும்போது அதற்கு ஏற்றார் போல் சிறுமி ரோஸி தன் காலில் கலைமான் உருவம் தாங்கிய ஒரு காலணி (சூ-zoo)யை அணிந்தவாறு ஓடிவருவாள்… அவள் காலணிகளுக்கு அருகிலேயே டைட்டில் இடம் பெறும் “WE BOUGHT A ZOO” என்று. அந்த இடத்திலேயே அவளுக்கு விலங்குகளிடம் உள்ள நாட்டம் புரிந்துவிடும்… மேலும் தன் தாயின் இழப்பை படத்தில் முதன் முதலாக பேசுபவனாக இருப்பது Dylon தான்… ஏனென்றால் அதிகமாக பாதிக்கப்பட்டவன் என்கின்ற ரீதியில் அதை இயக்குநர் அமைத்திருப்பார். மேலும் Dylon தன் தாயின் போட்டோவை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அழுகின்ற இடமும், பெஞ்சமின் தன் லேப்டாப்பில் தன் மனைவியின் படத்தைப் பார்த்து கண்ணீர் விடும் இடமும், ஓர் ஒருமைத்தன்மை கொண்டு இருக்கும், இருவருமே ஒரேமாதிரியான குணநலன் கொண்டவர்கள் என்பதை சொல்லாமல் சொல்வது போல்… மேலும் இதற்கு இன்னுமொரு உதாரணமாக இருவரது காதலும் வெற்றியடையும் இடங்களையும் மேற்கோடிடலாம்.. இருவருமே அந்த இருபது விநாடி தைரியத்தை நம்பியே தங்களது காதலை வெளிப்படுத்தி இருப்பார்கள்…


மேலும் திரைக்கதை உத்தி என்று பார்க்கும் போது பெஞ்சமின் மனைவி கேத்தரினின் அந்த வுல்லன் ஆடையின் பயணம் திரைக்கதையில் முக்கியமானது. அது போல் கேத்தரின் தொடர்பான நினைவுகளை, ப்ளாஸ்பேக்யை ஆடியன்ஸ்க்கு கன்வே செய்யும் இடமும் மிகமிக கவித்துவமானது.. அதுபோல் படத்தில் இரண்டு மரணங்கள் நிகழ்கின்றன. ஒன்று கேத்தரினின் மரணம்.. மற்றொன்று SCAR எனப்படும் அந்த புலியின் மரணம்.. இந்த இரண்டுமே நேரடியாகக் காட்டப்படுவதில்லை… ஏனென்றால் படத்தின் மையம் சந்தோசத்தை மீட்டெடுப்பதாக இருப்பதால், அதை காரணத்தோடே தவிர்த்திருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.. மேலும் கேத்தரின் இழப்பால் பாதிக்கப்படும் Dylon புலியின் மரணம் நெருங்குகின்ற தறுவாயில் தன்னையும் தன் சந்தோசத்தையும் மீட்டுக் கொள்கிறான்… மேலும் ஒரு கட்டத்தில் தன் சந்தோசத்தை மகிழ்ச்சியை அடுத்தவரிடம் தேடுபவராக, யாசிப்பவராக இருக்கின்ற கதாபாத்திரங்கள் எல்லாமே ஒரு கட்டத்தில் மற்றவருக்கு சந்தோசத்தைக் கொடுப்பவர்களாக மாறி நிற்கிறார்கள். அதிலும் குறிப்பாக Dylon தன் சந்தோசத்திற்காக தன் நண்பர்களை தேடுகிறான்.. இறுதியில் அவன் லில்லிக்கு சந்தோசத்தைக் கொடுப்பவனாகவும், தன் சந்தோசத்தை மீட்டெடுப்பவனாகவும் மாறி நிற்கிறான்.. அவன் தன் மகிழ்ச்சிக்காக தன் நண்பர்களைப் பின்னர் தேடுவதும் இல்லை… அதுபோல் பெஞ்சமினும் தான் மனைவியுடன் உலாவிய இடங்களுக்கே செல்ல தயங்கியவன், இறுதியில் தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு, தன் மனைவியை முதன்முதலாக சந்தித்த இடத்துக்கே செல்லும் துணிவைப் பெறுகிறான். மேலும் அவனுக்கு கெல்லியுடனான புது உறவும் கிடைக்கிறது. இப்படி எத்தனையோ உண்மைகளை பூடகமாக பேசுகிறது…



பல இடங்களில் வசனங்கள் தத்துவார்த்தமானவை. அதிலும் சில இடங்கள் குறிப்பாக… சிறுமி ரோஸி தன் அண்டைவீட்டாரின் சந்தோசத்தைப் பற்றி குற்றம் சாட்டும் இடம்.. “THEIR HAPPY IS TOO LOUD” பெஞ்சமின் தன் மகன் Dylonயிடம் லில்லியைப் பற்றி விசாரித்துவிட்டு அவனுக்கு தைரியம் சொல்லும் இடம்.. “WE JUST NEED 20 SECONDS INSANE COURAGE MAN” மேலும் தந்தைக்கும் மகனுக்குமான வாக்குவாதத்தின் போது Dylon சொல்லுவான்… “DON’T BUSH YOUR DREAMS ON ME..” அதற்கு பெஞ்சமின் பதிலுரைப்பான்.. “I WILL… I WILL…, BECAUSE THE DREAM IS TOO GOOD MAN..”

நம் தமிழ் திரைப்படங்களில் சில பாராட்டு விழாக்களில் கூறுவார்கள்.. அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று… ஆனால் அது பெரும்பாலும் மிகையான பாராட்டாகவே இருக்கும்.. ஆனால் இந்த திரைப்படத்தைக் காணும் போது அந்த வரிகளின் உண்மைத்தன்மையை உணர்ந்து கொள்ள முடியும்.. ஏனென்றால் படத்தில் வரும் எந்த ஒரு கதாபாத்திரம் நடித்திருக்கிறார்கள் என்று சொல்லவே முடியாது… உண்மையில் அவர்கள் வாழ்ந்திருந்தால் இப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள் என்று சொல்வதிலும் எந்த மிகையும் இருக்காது… இது போன்ற திரைப்படங்களைப் பார்க்கும் போது நாம் நடிப்பில் கடந்து செல்ல வேண்டிய தூரம் மிகமிக அதிகம் என்னும் கசப்பான உண்மையை கடந்துவர வேண்டியிருக்கிறது…. அதிலும் குறிப்பாக அந்த சிறுமி ரோஸியின் நடிப்பு… ப்ரெட்டில் ஜாம் தடவிக் கொண்டே தன் தந்தையுடன் பேசும் போதும்.. காரில் வீடு தேடிச் செல்லும் போது தன் தந்தையின் கேள்விக்கு ரியாக்ட் செய்யும் இடங்களைப் பார்த்தாலே போதும் நடிப்பு என்பது என்ன என்று தெரிந்து கொள்ள….

மொத்தத்தில் சந்தோசமான தருணங்களையும், சந்தோசத்தையும் மீட்டெடுப்பதற்கும் அசை போடுவதற்கும், சந்தேகமேயின்றி நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் இந்த WE BOUGHT A ZOO என்னும் திரைப்படத்தை….



Sunday 22 September 2013

6 மெழுகுவர்த்திகள்:

குழந்தைக் கடத்தலின் பிண்ணனியில் சென்னை, நகரி, வாராங்கல், மும்பை, புனே, கல்கத்தா என வலை போல விரியும் நெட்வொர்க்கை பறவை கோணத்தில் இருந்து காட்ட முயற்சித்து இருக்கிறது இந்த 6 மெழுகுவர்த்திகள். மகிழ்ச்சியான தன் வாழ்நாளின் ஒரு ரம்மியமான மாலை பொழுதில் சென்னை கடற்கரையில் தங்கள் மகனைத் தொலைக்கிறார்கள் ஷியாம் – பூனம் கவுர் தம்பதியினர். ஒரு குறிப்பிட்ட மணி நேர தேடலுக்குப் பின்பு அவன் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற முடிவுக்கு வரும் போலீஸ்துறை, தாங்கள் குழந்தையை தேடுவதை நிறுத்திக் கொண்டு, பெற்ற தகப்பனையே குழந்தையை தேட அனுப்பும் அவலத்தில் சூடு பிடித்து சென்னை, நகரி எனப் பயணிக்கிறது திரைக்கதை… தேடிச் செல்லும் தகப்பனுக்கு தன் மகன் கிடைத்தானா…? என்பது அதிரவைக்கும் க்ளைமாக்ஸ்..


ராம்-லிசி தம்பதிகளாக ஷியாம் மற்றும் பூனம்கவுர். ராம் தன் தொழிலுக்காக தன் உடலை எந்த அளவுக்கு வருத்திக்கொள்வார் என்பதற்கு இந்தப் படம் ஒரு சான்று. தன் ஆறுவயது மகன் விருப்பப்படும் எல்லாவற்றையும் செய்துதர விரும்பும் ஒரு பாசமுள்ள தந்தையாக ஷியாமின் கதாபாத்திரம். தன் மகனைத் தேடி அலையும் போதும், 6 மாத தேடலின் முடிவிலும் மகன் கிடைக்காத போது, தன் மனைவியே தேடுவதை நிறுத்திவிட்டு வீட்டுக்கு வா என்று அழைப்பதை பிடிவாதமாக மறுக்கும் இடத்தில் அந்த கேரக்டர் மிளிர்கிறது. ”நீங்க சொல்ற சாமி, கடவுள், சட்டம், போலீஸ் இது எதுவுமே என் மகனுக்குத் தெரியாது… அவனுக்குத் தெரிந்ததெல்லாம் இந்த அப்பாதா…” என்று மகனைத் தேடிச் செல்லும் முன்பு அவர் வைக்கின்ற ஜஸ்டிபிகேசன் டச் பெர்ஃபெக்ட்..

அழகான ஓரளவுக்காவது நடிக்கத் தெரிந்த நடிகையாக இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காத நடிகைகளில் பூனம்-கவுர் குறிப்பிடத்தகுந்தவர். 6 வயது சிறுவனுக்கு அம்மாவாக, அவனைத் தொலைத்து விட்டு பிச்சைக்காரனின் காலில் விழுந்து கதறும் இடத்தைவிட.. கணவனையும் தான் இழந்து விடுவேனோ என்ற பதட்டத்தில், “உனக்குக் குழந்தைதான வேணும் ராம்… இன்னொன்னு பெத்துனாலும் தாரேன்.. வீட்டுக்கு வந்துரு ராம்..” என்று வெடித்து கதறும் போது மிகையில்லாத அற்புதமான நடிப்பு.. குடும்பபாங்காக நடித்த நடிகையை திரைக்கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை தொடரும் அபரிமிதமான இறுக்கம் காரணமாகவோ என்னவோ, அரை குறை ஆடைகளில், லோ ஆங்கிளில் பல இடங்களில் அலையவிட்டிருக்கிறார் இயக்குநர்..


திவாகரை மீண்டும் தேடிச் செல்லும் போது அவன் இருக்கின்ற இடத்தைக் கண்டுபிடிக்க, ஷியாம் பயன்படுத்தும் டெக்னிக், சிறுவனின் பிறந்தநாளின் போது காட்டப்படும் வீடியோ கிளிப்ங்கிஸ், நகரியில் அவன் தன் குழந்தையை கடத்தியவன் என்பதைக் கண்டுகொள்ளும் இடம், மனைவியை சாந்தப்படுத்த போனில் பேசுவதை விடுத்து, அவளுக்கு கடிதம் எழுதும் இடம், இவைகளை தவிர்த்து தலைப்புக்கான ஜஸ்டிபிகேசன் என பல விசயங்கள் எக்ஸலண்ட்..

இருப்பினும் குழந்தையை கடத்திச் செல்லும் கும்பல் இவர்கள்தான் என்பது தெரிந்தும் அவர்களுக்கு எதிராக செயலாற்றாமல் இருக்கும் போலீஸ்துறை, ஏன் செயலாற்றாமல் இருக்கிறது என்பதை இன்னும் ஆழமாக அலசி இருக்கலாம்.. குழந்தையை இழந்த பெற்றோர் போலீஸின் இதுபோன்ற நடவடிக்கைகளைப் பார்த்து கொஞ்சமேனும் அதிர்ச்சி காட்ட வேண்டுமே அதுவும் இல்லவே இல்லை.. திரைக்கதையின் சுவாரஸ்யத்துக்கு உதவும் என்ற எண்ணத்துடன் சேர்க்கப்பட்டு இருக்கும் ராம்-லிசி தம்பதிக்கு பீச்சில் உதவ வரும் மனிதன் கதாபாத்திரம் சுவாரஸ்யமானதாக இருந்தாலும் அது நம்பகத்தன்மை இழந்த ஒன்றாகவே காட்சியளிக்கிறது… இப்படி ஒரு அழுத்தமான கதைக் களத்தை எடுத்துக் கொண்டு, அதன் பிண்ணனியில் யார் இருக்கிறார்கள், அவர்களை தடுப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது..? என்பதை தெளிவாகச் சொல்லாததாலும், கல்கத்தாவில் அந்த கும்பலை ராம் எப்படி கண்டுகொள்கிறான் என்பதை ஜம்ப் காட்சிகளாக அமைத்திருக்கும் இடத்திலும் தான் திரைக்கதை தேங்கிவிடுகிறது..


முகவரி, தொட்டிஜெயா, நேபாளி போன்ற படங்களைக் கொடுத்த இயக்குநர் வி.இசட். துரை அவர்களின் படம் தான் இந்த 6 மெழுகுவர்த்திகள். தவறான கதாபாத்திர தேர்வு ஒரு படத்தின் வெற்றியை எப்படி பாதிக்கும் என்பதற்கு இந்த திரைப்படம் ஒரு சான்று… ஷியாம் கடினமாக உழைத்திருக்கிறார்… தன் உடலை வருத்தி மெனக்கெட்டிருக்கிறார் என்று வேண்டுமென்றால் சொல்லலாம். ஆனால் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றோ அவரது நடிப்பு மிக இயல்பாக இருந்தது என்றோ சொல்வதற்கு இது போன்ற திரைக்கதையில் கூட இடமில்லாமல் போனது மிகப்பெரிய குறை… மனிதர் வாழ்நாளில் ஒரு முறைகூட அழுதிருக்க மாட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது… ஆழமான அழுத்தமான பாதிப்புகளை பார்வையாளனுக்கு கடத்த வேண்டிய காட்சிகளில் கூட இவரது வெகு சுமாரான நடிப்பு, அந்த உணர்வை கடத்தாமல் தடுக்கும் பெரும் தடைக்கல்லாக மாறிவிடுகிறது….

இது ஷியாமின் குறையல்ல.. இயக்குநரின் குறை என்றே தோன்றுகிறது.. ஏனென்றால் ஷியாம் மட்டுமல்ல.. படத்தில் பெரும்பாலான கதாபாத்திரங்கள், உதாரணமாக உதவ வரும் அந்நிய மனிதர், அந்த கார் டிரைவர், பாய் கதாபாத்திரம், தாதாக்கள், ராம்-லிசியின் நண்பர்களாக வரும் தம்பதியினர் என எல்லாருமே அப்படித்தான் நடித்திருக்கின்றனர்… விதிவிலக்கு பூனம்-கவுர் (அதுவும் சில இடங்களில்) மட்டுமே. அதிலும் கொல்லப்பட்டு கிடக்கும் சிறுவனைப் பார்த்து ஷியாம் அழும் போதும், ஒரு சிறுமியை காப்பாற்ற முடியாத கையறு நிலையில் இருந்து கதறும் போதும் மிகமிக சுமாரான நடிப்பு…. இதைவிட உள்ளம் கொள்ளை போகுமே மற்றும் 12 பி படத்தில் கூட இவரது நடிப்பு இதைவிட பெட்டராக இருந்ததாக நினைவு. நல்ல கதையை எழுதிவிட்டால் மட்டும் வெற்றி சாத்தியப்பட்டு விடாது… அதை நல்ல படைப்பாக பார்வையாளனுக்கு கொண்டு சேர்க்கும் போதுதான் அது சாத்தியப்படும் என்பதை இயக்குநர் உணர்ந்திருப்பார்… என்றே நம்புகிறேன்..


வசனன் ஜெயமோகன். ஆனால் அவருடைய எழுத்தின் வீச்சு ஓரிரு இடங்களைத் தவிர்த்து எந்த இடத்திலும் இல்லை. கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவும் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் கூட சுமார் ரகங்களாகவே உள்ளது.. நம்மை ஆட்கொள்ளும் படியான ஒளிப்பதிவாகவோ பிண்ணனி இசையாகவோ அது இல்லை என்பதும் படத்திற்கான ஆகப்பெரிய குறை..

மொத்தத்தில் குழந்தையை பெற்ற பெற்றோர்களின் உள்ளத்தில் ஒரு பயம் கலந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாலும், நாம் எவ்வளவு பாதுகாப்பற்ற சமூகத்தில் வாழ்கிறோம் என்பதை கோடிட்டு காட்டுவதாலும், குழந்தை கடத்தலின் பிண்ணனியில் உள்ள வலை போன்ற நெட்வொர்க்கை நம் கண்களுக்கு பரிச்சயம் ஆக்கியதாலும், இயக்குநர் மற்றும் நடிகரின் கடின உழைப்பு மற்றும் தேடலாலும் மட்டுமே கண்டிப்பாக ஒரு முறை பார்ப்பதற்கான தகுதியைப் பெற்றுவிடுகிறது இந்த 6 மெழுகுவர்த்திகள்…


Tuesday 17 September 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம்:

தமிழ் சினிமாவின் வியாபாரத்திற்கு தற்போதைய நிலையில் அதிக அளவில் ஊட்டம் கொடுத்துக் கொண்டிருக்கும் படம். வசூல் பட்டையை கிளப்புவதாக விநியோகஸ்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க, ஆடியன்ஸும் கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக வந்த குவிந்து கொண்டிருப்பதைப் பார்த்து மிகுந்த ஆர்வமாக அப்படியென்னதான் இந்தப் படத்தில் புதுமையாக இருக்கிறது என்றுதான் பார்ப்போமே என்று தியேட்டரில் சென்று பார்த்தால், சலித்தெடுத்த அதே பழைய கதை, அதில் சற்றே சுவாரஸ்யமான ஆனால் முழுக்க முழுக்க நம்பகத்தன்மையே இல்லாத ஒரு திரைக்கதை, அதில் அது இது எது வில் சிவகார்த்திகேயனின் டைமிங்க் காமெடிகளுக்கு நடுவே வந்து சிலர் கதை சொல்வதைப் போல் இங்கும் கதை சொல்கிறார்கள். கடைசியில் பெற்றவர்கள் எல்லாரும் நல்லவங்கதா… ஊர்ல நாலு பேர் தப்பா பேசுவாங்கன்னு பயந்துதா.. காதல எதுக்குறாங்கன்னு.. கருத்து சொல்லி முடிக்கிறாங்க…. இப்படி எந்தவிதத்திலும் புதுமையாக இல்லாத ஒரு திரைப்படத்தை ஆகா ஓஹோ என்று கொண்டாடி வசூல் மழை பொழியச் செய்யும் இந்த ஆடியன்ஸை பார்ப்பதுதான் நம் நாட்டில் புதுமை போலும்..


சிவணாண்டி என்று ஊர் பெரியவராக சத்தியராஜ், மூன்று பெண்களைப் பெத்திட்டு கவலைப்படாம சிரிக்கிறாயே… ஏதாது பொண்ணு காதலிச்சி ஓடிப் போயிருச்சின்னா.. என்னய்யா பண்ணுவே..? என்று கேட்டதற்காகவே அவனின் காதை அறுத்துவிடும் இவருக்கு, எம்.ஏ எம்.பில் படித்துவிட்டு, வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைத் தொடங்கி, அங்கு காதல் பணி ஆற்றிக் கொண்டிருக்கும் பொறுப்புமிக்க போஸ் பாண்டி என்னும் சிறியவர் சிலபல காதல் தோல்விகளுக்குப் பிறகு தனது பெண்ணை காதலித்து ஓடிப் போகும் தருணத்தில் அவர்களை சிரித்துக் கொண்டே சேர்த்து வைக்கும் படு சீரியஸான கதாபாத்திரம், அவரது மனமாறுதலுக்கு காரணம், ”கிணத்துக்குள்ள விழுந்த பசுமாட்டையே காப்பாத்திட்ட… இந்த பசுமாட்ட(திவ்யா) காப்பாத்த மாட்டியா” என்பதுதான்..


வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவராக, ஊர் சிறியவர் போஸ் பாண்டியாக சிவகார்த்திகேயன். இவர் ஏன் எம்.ஏ எம்.பில் படித்தார்..? தெரியாது, ஏன் வேலைக்கு போகவில்லை…? தெரியாது ஏன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் தொடங்குகிறார்..? தெரியாது. போலீஸ்காரர், ஊரில் ஆற்று மண் கடத்துபவர்கள், ஊர் பெரியவர் என எல்லோரையும் பிரச்சனையில் மாட்டிவிடும் இவரை ஏன் எவரும் கண்டு கொள்வதே இல்லை..? தெரியாது.. இப்படி பல தெரியாதுகளுக்கு இடையில் தெரிவது இவரது வழக்கமான அக்மார்க் டைமிங்க் காமெடி மட்டுமே… இப்படி பல தெரியாதுகளுக்கு இடையில் இவரது காமெடி மட்டும் எப்படி தெரிகிறது… ஏனென்றால் இது காமெடிப் படம்தானே… எதிர்நீச்சலில் வருவதைப் போல் இதிலும் டீச்சரை காதலிப்பவர், டீச்சர் கிடைக்கவில்லை என்றதும் டீச்சருக்கு லவ் லெட்டர் கொடுத்தனுப்பிய ஸ்டூடண்டையே கரெக்ட் செய்துவிடுகிறார்…. அந்தக் காதலுக்குத் தான் சிவணாண்டி பிரச்சனை செய்ய.. பசுமாட்டைக் காப்பாற்றி படத்துக்கு சுபம் போடுகிறார்கள்…

சிவகார்த்திகேயனை மட்டுமே வைத்து காமெடி செய்து கொண்டிருந்தால் இது திரைப்படமா இல்லை…? அதுஇது எது? அரிஹிரி அசெம்பளி, லொள்ளு சபா, அல்லது ஆதித்யா சேனலின் காமெடி டைமா என்று ஆடியன்ஸ்க்கு குழப்பம் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் புரோட்டா சூரியும் வந்து ஆங்காங்கே காமெடி கரகம் ஆடுகிறார்… ஆனால் நடிப்பு என்று பார்க்கும் போது சிவாவும் சரி சூரியும் சரி பல படிகள் முன்னேறி வருகிறார்கள் என்பதை கண்டிப்பாக ஒத்துக்கொள்ள வேண்டும்… ஆனால் என்ன இவர்கள் அடிக்கின்ற காமெடி எல்லாம் அடுத்த சீன் வந்தவுடன் மறந்து போவதுதான் மகாகொடுமை….


சில காட்சிகளில் வந்து போகும் பிந்துமாதவியும் சரி, சேலை, தாவணி, ஸ்கூல் யூனிபார்ம் என விதவிதமாக வந்து போகும் திவ்யாவும் சரி அத்தனை அழகு. திவ்யா படிப்பின் மீது உள்ள காதலால், கல்யாணத்தையே வெறுக்கின்றவர், தன் கல்யாணத்தை நிறுத்தி தான் படிக்க காரணமாக இருப்பவன் இந்த போஸ் பாண்டி தான் என்பதை அறிந்து அவரைக் காதலித்து அடுத்த வருடமே படிப்புக்கு முழுக்கு போட்டு கல்யாணம் செய்து கொள்ளும் கண்ணியமான கதாபாத்திரம். அதுசரி, கணவர்தான் எம்.ஏ எம்.பில் அல்லவா அவரிடமே பாடம் படிக்கலாம் என்று நினைத்திருப்பார் போலும்.. திவ்யாவின் அப்பா சிவணாண்டியாக சத்யராஜ் தன் வழக்கமான நடிப்புப் பாணியில் இருந்து விலகி வித்தியாசம் காட்டி இருக்கிறார்… தன் மகன் போஸ் பாண்டி காதல் தோல்வியால் கஷ்டப்படும் போது காசு கொடுத்து “சரக்கடிடா மவனே, மறந்துடும்..” என்று பாசம் பொழியும் அப்பாவாக யார் கண்ணன். வாழ்த்துக்கள்…


படத்தில் கவனிக்க வேண்டிய விசயம் என்றால், காதலுக்கு தூது போன பெண்ணையே கடைசியில் கரெக்ட் செய்யும் அந்த ஒன் லைன்னர், அது ஏதோ சொந்த அனுபவமாக இருக்குமோ என்ற ஐயப்பாடும் உண்டு. அது தவிர்த்துப் பார்த்தால் சூரியின் அப்பாவாக வரும் அந்த பூசாரி மந்திரவாதியின் நடிப்பு..

பாலசுப்ரமணியத்தின் கேமரா வழக்கம் போல் தேவையானது மிகக்கச்சிதமாக செய்திருக்கிறது. இமானின் இசையில் “ஊதா கலரு ரிப்பனுக்கும்” எதிர்பார்த்ததைப் போல் “இந்த பொண்ணுங்களே இப்படித்தான்..” பாடலுக்கும் தியேட்டர் குலுங்குகிறது. இயக்குநர் பொன்ராம் அவர்களுக்கு இது முதல்படம். தமிழ்சினிமாவின் எதிர்காலத்தைப் பற்றி வருத்தப்படாத இயக்குநர் சங்கத்தில் இருந்து வந்திருப்பார் போலும்… அப்படி பொத்தாம் பொதுவாகவும் சொல்லிவிட முடியாது.. முதல் படம் எடுப்பதென்பது இங்கு தலைகீழாக நடப்பதற்குச் சமம்.. எத்தனை சமரசங்கள் செய்தாரோ..? இவரது இரண்டாவது படத்திலாவது இந்த வருத்தப்படாத இயக்குநர் சங்கத்தில் இருந்து வெளியே வந்துவிடுவார் என்று நம்புவோமாக…


மொத்தத்தில் பார்த்தால் பெற்றோர்களைவிட காதலர்களுக்கே, அதிலும் குறிப்பாக காதலனே அதிக பொறுப்புணர்ச்சியுடனும், கவனமுடனும் நடந்து கொள்கிறானோ என்று எண்ணத் தோன்றுகிறது. பின்ன என்னங்க…? ஏது நாம் ஆதலால் காதல் செய்வீர் படத்துக்கு தன் காதலியை அழைத்துச் சென்றால் அவள் உஷாராகிவிடுவாளோ என்று காதலனும், இது காதலை கொச்சை படுத்துகிறது………..!!! என்று ஒட்டுமொத்த காதலரும் ஆதலால் காதல் செய்வீரை புறக்கணித்து கண்ணியம் காக்கும் போது, பொறுக்கிகளை காதலிப்பது எப்படி என்று பாடம் எடுத்து, ஓடிப் போவதற்கும் சொல்லிக்கொடுக்கும் இது போன்ற படங்களுக்கு தங்கள் பிள்ளைகளை கூட்டம் கூட்டமாக அழைத்துச் செல்லும் பெற்றோரின் பொறுப்புணர்ச்சியை என்னவென்று சொல்வது….?

காமெடி படம் எடுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை.. அதற்காக படத்தில் வரும் எல்லோரையுமே காமெடியாக காட்டினால் எப்படி..? நம் வாழ்விலும் காமெடியான தருணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.. ஆனால் அவை எதுவுமே உங்களது காமெடிப் படம் போல் இல்லையே என்பதுதான் எனது வருத்தம். மொத்தத்தில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்சில் பிரகாஷ்ராஜ் சிரிப்பதைப் போல் சிரிக்க மட்டும் வேண்டும் என்று எண்ணுபவர்கள் இந்தப் படத்துக்கு செல்லலாம்… ஆனால் என்னைக் கேட்டால் அதற்கு பதிலாக காமெடி டைம் பார்க்கலாமென்றே பரிந்துரைப்பேன்… என் பரிந்துரையை யார் கேட்கப் போகிறீர்கள்.. அதனால்தான் எல்லோரும் படம் பார்த்தப்பின்பு எழுதுகிறேன் இந்தப் பதிவை…


Monday 16 September 2013

மோகமுள் – தி. ஜானகிராமன்:


பிரிவு          : நாவல்
ஆசிரியர்   : தி.ஜானகிராமன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்.

தமிழ் இலக்கியப் பெருவெளியில் ஒரு தனிப்பெரும் அடையாளமாக தைத்துக் கொண்டிருக்கிறது இந்த மோகமுள். நாவல் வெளிவந்த காலத்தில் வழக்கம்போல் நாவலின் மையத்தை நிந்தித்து ஏராளமான எதிர்ப்பலைகள் கிளம்பியது. இது தி.ஜாவுக்கு ஒன்றும் புதிதில்லை. அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் சமூகமும் மரபுகளும் காபந்து செய்து வைத்திருக்கும் மதிப்பீடுகளுக்கு எதிரானது. மேலும் அது விலக்கப்பட்டவர்களின் சார்பாக அவர்களின் மீதான கரிசனத்தை கோருவது. சமூகத்தின் அணுகுமுறையில் மீறலாகக் கருதப்படும் ஒன்றைத் தனது எழுத்தில் நியாயமானதாக நிறுவுகிறார். அவரது கண்ணோட்டத்தின்படி, மனித உறவுகள் நியதிகளுக்கும் ஆச்சாரங்களுக்கும் விதிகளுக்கும் ஒழுக்க நெறிகளுக்கும் கட்டுப்பட்டவை அல்ல.. அவை உணர்ச்சிகளுக்கும் சூழ்நிலைக்கும் கட்டுப்பட்டவை..

அப்படி நிந்திக்கும் படியான நாவலின் மையம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் உங்களுக்கு நாவலின் தலைப்பே அதை ஓரளவுக்கு உணர்த்தி இருக்கும்.. இருந்தாலும் அதை மேலோட்டமாக பார்த்து, ஒரு மூன்றாந்தர விரச காவியமாக அதை கண்ணெடுக்கும் அபாயம் இருப்பதால் அதைப்பற்றி சற்றே விரிவாகப் பேசுகிறேன்… இந்த நாவலை எந்த தளத்தில் வைத்துப் பேசுவது என்பதில் எனக்குப் பெரும்குழப்பமே நிலவியது. இதனை காமத்தின் அடுக்குகளில் அடுக்கிப் பேச மனம் ஏனோ ஒப்பவில்லை. ஏனென்றால் 660 பக்கங்களைக் கொண்ட மோகமுள்ளில் மோகத்தில் மூழ்கடிக்கும் பக்கங்கள் என்பது வெறும் ஆறேழு பக்கங்கள் மட்டுமே… அப்படியென்றால் இதை எந்த தளத்தில்தான் வைத்துப் பேசுவது, காமத்தின் தளத்திலா..? காதலின் தளத்திலா..? இசையின் தளத்திலா..? நட்பின் தளத்திலா..? பாசத்தின் தளத்திலா..? பெண்ணியத்தின் தளத்திலா..? இல்லை வாழ்க்கையின் தளத்திலா..? என்று கேட்டால் எல்லாத்தளத்திலும் என்று சொல்வதே இந்த இலக்கியப் பொக்கிஷத்துக்கு நாம் செலுத்துகின்ற மரியாதையாக இருக்கும்.. என்கின்ற எண்ணத்தில் அவ்வாறே இந்த மதிப்புரையை முன்னெடுக்கிறேன்..

நாவலின் மையத்தை சுருங்ககூறின் இப்படிக் கூறலாம்.. முதிராத இளைஞன் ஒருவனுக்கு ஒரு முதிர்கன்னியின் மீது ஏற்படுகின்ற ஈடுபாடுதான் (பாசம்+ஈர்ப்பு+காதல்+காமம்) நாவலின் மையம். அந்த இளைஞன் பாபு, முதிர் கன்னி யமுனா. யமுனா பாபுவை விட எட்டு ஆண்டுகள் வயதில் மூத்தவள். பாபு சிறுவனாக இருக்கும் போது அவனைத் தூக்கி இடுப்பில் இருத்திக் கொண்டு திரிந்தவள். சிறுவயதில் பாபுவுக்கு யமுனாவின் மீது இருந்த பாசமும் ஈர்ப்பும் பருவ வயதில் காதலாக மாறி எப்படி காமமாக முற்றி நிற்கிறது.. அதனால் அவன் வாழ்க்கையில் எப்படி அலைகழிக்கப்படுகிறான்..? யமுனா மீது தனக்கு இப்படி ஒரு எண்ணம் இருப்பதை அவன் எந்த தருணத்தில் தெரிந்து கொள்கிறான்…? யமுனா அதை எப்போது தெரிந்து கொள்கிறாள்..? அதற்கு அவள் ஆற்றும் எதிர்வினை என்ன? சமூகத்தின் பார்வையில் அது எப்படி தெரிந்தது..? என்பதுதான் நாவலின் மையமாக இருக்கின்ற சரடு.. பாபுவுக்கு இசை மீதான ஆர்வம், இசைக்கான ஒழுக்கத்தை இறுத்திக் கொள்ள தடம்புரள முடியாமல் தவிப்பது, ரங்கண்ணாவிடம் சேர்ந்து இசைபயிற்சி பெறுவது, ராஜம் பாபு இருவருக்குமான நட்பு, பாபுவின் தகப்பனார் வைத்தி பாபுவை ஒரு பண்டிதனாக்க மேற்கொள்ளும் முயற்சி, யமுனாவின் தாய் பார்வதி சுப்ரமணிய அய்யரை கலப்பு திருமணமாகவும் இரண்டாவது தாரமாகவும் கட்டிக் கொண்டதால் அது யமுனாவின் வாழ்க்கையில் எப்படி எதிரொலிக்கிறது.. ஆண்களையே நம்பி வாழ்க்கையை ஓட்டிய அன்றைய பெண்களின் இழிநிலை..? வயதான கிழவருக்கு வாழ்க்கைப்பட்டு வந்த தங்கம்மாவின் நிலை… போன்றவை அந்த மையச் சரடின் மீது தொடுக்கப்பட்ட மலர்களாக காட்சியளிக்கின்றன…

யமுனாவின் தாய் பார்வதியின் குடும்பத்தினர், தஞ்சையில் வீரசிவாஜியின் தம்பி சரபோஜி மன்னர் மராட்டியப் பேரரசை நிறுவிய போது மகாராஷ்டிராவில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள்.. பார்வதியின் குடும்பத்தினர் ஒரு இக்கட்டான சூழலில் பார்வதியை சுப்ரமணிய அய்யருக்கு இரண்டாம் தாரமாக அவரது விருப்பத்தின் படி திருமணம் செய்து கொடுக்க.. இந்த கலப்புத் திருமணமே யமுனாவின் திருமணத்துக்கு மிகப்பெரிய சிக்கலாகிறது.. இத்தனைக்கும் யமுனாவோ பாபுவின் எண்ணத்தின்படி தெய்வங்களுக்கு ஒப்பான ஆராதிக்கும் அழகை உடையவள்… ஆனால் அவளைக் கட்டிக் கொள்ள எந்த குடும்பஸ்தனும் தயாரில்லை… சிலர் வைத்துக் கொள்ளவும், இரண்டாம் தாரமாக கட்டிக் கொள்ளவும் கேட்டு வருகின்ற கொடுமைகளும் நடக்கிறது… கீழ்காணும் வரிகளே இந்த சம்பிரதாயங்களில் சலிப்புற்ற யமுனாவின் மனநிலைக்கு சான்று…

”ஆமா பாபு. கலியாணம் வருது எனக்கு.. ரயில் வண்டி மாதிரி ரொம்ப நீளம்.. பத்து வருஷமா ஓடுறதுன்னா நீள வண்டியாத்தான இருக்கணும்..?”

யமுனாவை ஒரு தெய்வப்பிறவியாக ஆராதிக்கும் பாபு, அவளை தன் மனைவி இறந்ததால் கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று கோயம்புத்தூரில் இருந்து கிளம்பி வருமொரு சாதாரண மனிதனைப் பார்த்ததும் கோபத்தில் கொந்தளிக்கிறான்.. யமுனா போன்ற தெய்வாம்ச அழகு கொண்ட பெண்களுக்கு திருமணம் எதற்கு என்றெல்லாம் யோசிக்கும் அவனது மனது, அப்படியே அவள் திருமணம் செய்தாலும், அவளது தெய்வாதீன அழகைப் போற்றி பூஜிக்கும் தன்னைப் போன்ற ஒருவன் தான் அவளுக்கு கணவனாக வர வேண்டும் என்று தனக்கு தானே சாதகமான ஒரு பதிலை தேடி சமாதானம் அடையும் தருணத்தில் தான் அவள் மீதான தன் மயக்கத்தை புரிந்து கொள்கிறான்..

இந்த இடம் நாவலில் ஒரு முக்கியமான இடம். உலக இலக்கியங்களின் பாதிப்புகள் உலகளவில் எல்லாவகை இலக்கியங்களிலும் தெரியத்தொடங்கிய காலகட்டம்.. இந்த நாவல் எழுதப்பட்ட காலகட்டம் 1956. சிக்மண்ட் ப்ராய்ட் போன்றோரின் பரபரப்பான கருத்துக்களை அதிதீவிரமாக விவாதித்த காலகட்டம்..  “குழந்தைப் பருவத்திலேயே காமத்தின் அடிப்படையிலேயே மனம் செயல்படுகிறது..” என்ற ப்ராய்டின் கருத்துக்களை எடுத்து ஆங்காங்கே கிழித்துக்கொண்டிருந்த காலகட்டம்… அதே கருத்து வேறொரு தொனியில் இங்கே நாவலில் ஊடாடுவதைக் காணலாம். நாவலில் சில இடங்களில் பிற கதாபாத்திரங்களை தெய்வமாக பிரகடனப்படுத்தும் காட்சிகள் வருகின்றன.. பாபு யமுனாவை தெய்வமாகப் பார்க்கிறான்… கிழவரின் மனைவி தங்கம்மாவோ ஒரு தருணத்தில் பாபுவை தெய்வமாகப் பார்க்கிறாள்.. இதற்கெல்லாம் உச்சமாக பாபுவின் நண்பன் ராஜமோ பார்க்கின்ற எல்லாப் பெண்களையும் தெய்வமாகப் பார்க்கிறான்… என் நண்பர்களில் சிலருக்கும் இந்த நோய் உண்டு(சில காலம் எனக்கும்..) ஆனால் அவர்கள் தெய்வமாக எண்ணும் பெண்களுக்கு திருமணம் என்று வரும்போது அனைவருமே பாபுவைப் போல் தான் நடந்து கொள்கிறார்கள்.. ஏன் ராஜம் கூட நாவலில் ஒரு கட்டத்தில் அப்படித்தான் நடந்து கொள்கிறான்…

இந்த குணாதிசயத்தின் மயங்கொலியில் இருக்கின்ற செய்தி என்னவென்பதை ராஜம் கதாபாத்திரம் மூலம் தி.ஜா விளக்குகிறார் என்றே நான் நம்புகிறேன்… ஒரு கட்டத்தில் தன் செயலை வெறுக்கும் பாபு, தன் நண்பனைப் போல் ஏன் பெண்களை தன்னால் தெய்வமாகப் பார்க்கமுடிவதில்லை யமுனாவை தான் தெய்வமாகப் பார்த்தாலும் தான் எதில் வேறுபடுகிறோம் என்று திகைக்கிறான்.. ராஜமும் யமுனாவின் மீதான எண்ணத்தை கைவிடும்படி பாபுவுக்கு அறிவுரை கூறுபவன், எந்த கணத்தில் தன் குடும்ப உறவினரின் பெண்ணைப் பார்த்த நான்கு நாட்களில் அவளுக்காக உருகத் தொடங்குகிறானோ.. அவளை ஆராதிக்கத் தொடங்குகிறானோ அப்போது பாபுவின் நிலையை புரிந்து கொண்டு அவனுக்கு ஆதரவாகப் பேசுகிறான்.. யமுனா விடயத்தில் விடாமல் முயற்சி செய்யச் சொல்லி வற்புறுத்துகிறான்….

”ஒருவரை தெய்வமாகப் பார்ப்பது என்றால் என்ன அர்த்தம்… “கடவுள் பேசவும் இல்லை.. பக்தியும் குறைவதும் இல்லை.. காதலி பேசவும் இல்லை..” என்று ஒன்றாம் தரம் படிக்கும் குழந்தை போல் யோசிக்காமல் சற்று, பட்டதாரி போல் யோசியுங்கள். ஒரு பெண்ணைப் பார்த்து ஆணோ, ஒரு ஆணைப் பார்த்து பெண்ணோ, “நீ எனக்கு கடவுள் மாதிரி, நான் உன்னை பூஜிக்கிறேன்..” என்றால் என்ன அர்த்தம்… நீ எனக்கு மட்டுமே கடவுள் என்று அர்த்தம்.. உன்னை பூஜிக்கின்ற தகுதி எனக்கு மட்டுமே உண்டு என்று அர்த்தம்… ஏனென்றால் நீ எனக்கு மட்டுமே கடவுளாகத் தெரிகிறாய்.. மற்றவர்களுக்கு மனித பிண்டமாக தெரிகிறாய் என்று அர்த்தம்.. நீ எனக்கு கடவுள் என்றால் நீதான் எனக்கு (எல்லாமே) என்று அர்த்தம்…” இதைத்தான் மிகமிக நுணுக்கமாக ப்ராய்டின் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு பாபு மற்றும் ராஜம் கதாபாத்திரத்தின் மூலமாக உணர்த்துகிறார்… என்று சில விமர்சகர்களும் குறிப்பிடுகிறார்கள்.. இதை இன்னும் தெளிவாக இறுதியில் யமுனாவின் வார்த்தைகள் உணர்த்துகின்றன… “வருஷக் கணக்காக, எத்தனை வருஷம், எட்டு வருஷமா.. இல்லை, விவரம் தெரிந்தது முதல் பையனாக இருந்தது முதல் தவிச்சதெல்லாம் இதற்குத்தானே… ம்…? என்று யமுனா கேட்கும் போது பாபு பதில் சொல்லாமல் இருக்கிறான்… அவளே பதிலும் சொல்லி முடிக்கிறாள்.. “இதற்குத்தான்..” என்று

இந்த முக்கியமான சம்பவத்துக்கு முன்பு பாபுவுக்கும் யமுனாவுக்குமான உரையாடல் அலாதியானது. மிகவும் கவித்துவமானது.. அதன்முதல் ஐந்து வரிகளைப் படித்தால் அது சொல்கின்ற அர்த்தம் வேறாக இருக்கும்… கடைசி வரியை யமுனா பேசும் போது அது கொடுக்கின்ற அர்த்தம் முற்றிலும் வேறாக இருக்கும்.. எல்லாம் இழந்த நிலையில் அம்மாவையும் பிரிந்து சென்னைக்கு தோல் உலர்ந்து மெலிந்து போய், பசியின் கொடுமையில் பீடிக்கப்பட்டு உதவிதேடி பாபுவைப் பார்க்க வருவாள் யமுனா.. அவளைக் கண்டு உருகும் பாபு அவளுக்கு ஒரு காப்பகத்தில் வேலை வாங்கிக் கொடுத்து அங்கேயே சேர்த்துவிடுவான்.. சில நாட்கள் கழித்து அவர்கள் சென்னை கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பார்கள்.. அந்த உரையாடல் முழுவதுமே மிக நுட்பமானது… அப்போது பாபு மீண்டும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தன் மனதை திறந்து காட்டுவான்.. இப்படி..

எனக்கு நீதான் வேணும்

சரி எடுத்துக்கோ…

அன்னிக்கி நான் கேட்டேனே..?

அப்ப எனக்கு மனசு இடங்கொடுக்கவில்லை.. இப்ப உயிரில்லாமல் கிடக்கும் போது போனால் போறது என்று தோன்றுகிறது..

உயிரில்லா பொருளையா என்னிடம் கொடுக்கிறாய்..

நீ உயிர் கொடேன்…

இதில் கடைசி வரியை அவள் கூறவில்லை என்றால், பாபு யமுனாவுக்கு தன் வாழ்நாளில் செய்த உபசரணைகளுக்காக அவள் தன்னையே ஒப்புவிக்கிறாள் என்ற தவறான எண்ணம் தோன்றும். ஆனால் இறுதியாக அவள் சொல்லும் ”நீ உயிர் கொடேன்” என்னும் அந்த வரிகள் தான் மொத்தமாக அந்த உரையாடலுக்கே உயிர் கொடுக்கின்றன… இந்த சமுதாயமும், சடங்குகளும், வீண் பேச்சுகளும், ஒழுக்கவிதிகளும் எல்லாம் சேர்த்து என் இளமையை என் கனவுகளை, என் ஆசைகளை வடியச் செய்து தலையெடுத்து தலையெடுத்து மறுபடி ஆடும் அவைகளை பிடித்து நசுக்கி, காலால் மிதித்து தேய்த்து உயிரில்லாமல் ஆக்கிவிட்டன… ஆனால் இந்த உயிரற்ற உடலுக்கு உன்னால் உயிர் கொடுக்கமுடியும் என்று நம்புகிறேன்.. அதனால்தான் அதை இப்போது உன்னிடம் ஒப்புக் கொடுக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்லும் ஆழமான வரிகள்.. இந்த வரிகளுக்கு ஏற்றார்ப் போல் பாபு அந்த உடலுக்கு உயிர் கொடுக்க.. அவளும் பழைய யமுனாவாக திரும்புவதும் நாவலில் நிகழ்கிறது..

காலில் முள் குத்தியவன் எப்படி நடப்பான்..  நடையில் பிடியில்லாமல் நொண்டிக் கொண்டுதானே..? மோகமுள் குத்தியவனும் (பாபு) தன் வாழ்க்கையில் அப்படித்தான் நடக்கிறான். தன் வாழ்க்கையை எதை நோக்கி திருப்புவது என்று தெரியாமல் குழம்புகிறான்.. அவன் மனம் செக்குமாடு போல் யமுனாவையே சுற்றிக் கொண்டு வருகிறது.. அவளைப் பார்ப்பதை தவிர்க்கிறான்.. அவளை மறக்க நினைக்கிறான்.. எதுவுமே அவனுக்கான வாழ்க்கையை சாத்தியப்படுத்துவதில்லை.. என்று அவன் அவளை அடைந்து, கடந்து வருகிறானா.. அன்றே அவனுக்கான வாழ்க்கை புரிபடுகிறது.. அதற்கும் காரணியாக யமுனாவே இருக்கிறாள்.. நாம் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையை மட்டுமே கொண்டு நாவலை புரிந்து கொள்ள முயல்வது கடினம்.. ஏனென்றால் நாம் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையில் முள் நம்மை குத்தி இருக்கலாம்.. குத்தாமலும் இருக்கலாம்.. ஏனென்றால் முள் குத்துவதை நாம் தீர்மானிக்க முடியாது அல்லவா…?

தி.ஜாவின் இலக்கிய ஆளுமைக்குச் சான்றாக அவர் கையாண்டிருக்கும் சில வரிகள்.. இங்கே அந்த சூழலுடன்
தங்கம்மாவை நினைத்து புலம்பும் பாபுவின் வரிகள்

இந்தப் பெண்களுக்கு எப்போது ரோஷம் வரப்போகிறது.. சிறையில் உட்கார்ந்து உட்கார்ந்து வலுவிலந்துவிட்டவர்கள்.. திறந்துவிட்டால் கூட திரும்ப கூண்டுக்குள்ளேயே வந்து அடைபட்டுக் கொள்வார்கள் போல…

பாபு யமுனாவை வைப்பாடியாக வைத்துக் கொள்ள ஒருவன் முன்வந்ததைக் கேட்டு நொந்து போய் வீட்டுக்கு நடக்கும் போது.. வரும் வரிகள்

இப்போது கோபம் கோபமாகத்தான் வருகிறது. யார் மீது கோபம்? கையாலாகாமல் கூண்டில் அடைப்பட்டிருக்கும் இந்தப் பெண்கள் மீதா..? வலை போட்டுப் போட்டு, பயமுறுத்தி பயமுறுத்தி ஒடுங்க அடிக்கும் பெரியவர்கள் மீதா..? சிறுமைப்பட்டதை எண்ணி விம்மிக் கண்ணீர் விட்ட பார்வதிபாய் மீதா..? இந்த அவமானத்தைச் சகித்துக்கொண்ட யமுனா மீதா? காறி காறிக் கண்ட இடத்தில் பஸ் ஸ்டாண்டில் துப்பிக் கொண்டிருந்த ஜனங்கள் மீதா..?

நாம் சுதந்திரம் கேட்கிறதில்ல அர்த்தமில்லை. நம் சொந்த வாழ்க்கையிலேயே சுதந்திரம்னா என்னன்னு நமக்குத் தெரியாமல் நாம் சுதந்திரம் வந்து என்ன பண்ணப் போறோம்? மொம்மனாட்டிகள் இறைஞ்சு பேசினா நமக்குப் பிடிக்க மாட்டேங்குது தனியாப்போனா பிடிக்க மாட்டேங்குது. நம்மைச் சுற்றி நாலு பக்கமும் பெரிசு பெரிசா சுவரைக் கட்டிக்கிண்டு நாம் சுதந்திரத்துக்கு ஆசைப்படறோம்..

பாகவதர் ரங்கண்ணா உலக நடப்பைப் பற்றி பேசும் இடம்

அவனவன் தன்னாலதான் முன்னுக்கு வரணும் இந்த உலகத்திலே. எல்லோரும் சோம்பேறியாக இருப்பதற்குப் பெரியவர்கள் வழிகாட்டமாட்டார்கள். இடம் பண்ணிவைக்க மாட்டார்கள்; முன்னேறுகிறதுக்கு வெளிச்சம் காண்பிப்பார்கள். அவ்வளவுதான். முன்னேறுகிறதும் பிந்தங்குகிறதும் நம் பொறுப்பு

பேசுறது கஸ்டமய்யா.. பாடறது எல்லாரும்தான் பண்றா. குயில் பாடறது. வானம்பாடி பாடறது. பாரத்வாஜம் பாடறது. திர்யக் ஜந்து பலது பாடறது. பேசறது மனுஷன் ஒருத்தந்தானே.. அப்ப பேசுறது பெரிசு இல்லியா, நீங்க சொல்லுங்கோ..

பாபுவின் மனதில் ஏற்பட்ட குழப்பத்தையும் மனச்சோர்வையும் காட்டும் வரிகள்

இரவின் நினைவுகளைக் கொணர்ந்து மனதை நாலு பக்கமும் நாய்களைப் போலப் பிடுங்கி இழுத்தது. நீரின் பீச்சல்களுக்கு நடுவில் எண்ணெய்க் கம்பத்தில் ஏறுகிறவனைப் போல விழுந்து விழுந்து மனம் மேலே ஏற முயன்று கொண்டிருந்தது..

இதுதவிர்த்து நாவலின் இலக்கியச்செறிவுக்காகவே இது பலமுறை வாசிப்பதற்கான தகுதியும் கொண்டு விளங்குகிறது. தி.ஜாவின் வர்ணனையில் கும்பகோணமும், தூக்காம்பாளையத் தெருவும், காவிரிக் கரையும் அப்படியே கண்முன் விரிகிறது.. காட்சிகளை விவரிக்கும் முறையும், மன உணர்வுகளைச் சொல்ல அவர் கையாளும் உருவகங்களும் பேரானந்தத்தைக் கொடுக்கும் வாசிப்பனுபவமாக உள்ளத்தில் இருந்து கொண்டே இருக்கிறது.. பாபு தங்கம்மாளுடனான கூடலுக்குப் பின்னர் காவிரி நதியைப் பார்க்கும் போது அது தன் உடல்மீதான அசுத்தத்துக்கு பயந்து தன்னை விட்டு விலகி ஓடுவது போன்ற பிரமையும், யமுனாவுக்கு கல்யாணம் நடக்காதோ என்று ஏங்கிக் கொண்டு இருக்கும் போது, கோவிலில் கருடன் எழுந்து பறப்பதைப் பார்க்க காத்துக் கொண்டு இருக்கும் கூட்டமும், யமுனா மற்றும் பாபுவுக்கு இடையேயான உரையாடல்களில் கவிழும் உண்மைத்தன்மையும், தங்கம்மாளின் கடிதத்தில் “உடலும் உயிரும் பெரும் பாரமாக அழுத்துவதாக சொல்லும் இடமும்..” சேர்ந்து ஒரு அற்புதமான காதல் கதையை படித்த நிறைவைத் தருகின்றன.. வெகுஜன மக்களுக்கு புரிவதுபோல் என்றால் நாவல் வடிவில் ஒரு விண்ணைத் தாண்டி வருவாயா.. என்றும் சொல்லலாம்..

மொத்தத்தில் இந்த மோகமுள் படித்தால்

முள் குத்தியவர்கள் வலியின் இன்பத்தை நுகருவார்கள்…
முள் குத்தாதவர்கள் வலியின் நோவை உணருவார்கள்…
..





Sunday 15 September 2013

மூடர்கூடம்:

சிம்புத்தேவன், பசங்க பாண்டிராஜ் இருவரிடமும் உதவி இயக்குநராக இருந்த நவீன் என்பவரின் முதல் படம். படம் வெளிவருவதற்கு முன்பாகவே சினிமா வட்டாரத்தில் அதிகமாகப் பேசப்பட்டு ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த படம். அந்த எதிர்பார்ப்பை சினிமாதுறையினர் இடையே அது காப்பாற்றிக் கொண்டது என்றே சொல்ல வேண்டும். படத்தின் டைட்டில் கார்டில் சிம்புத்தேவன் மற்றும் பாண்டிராஜை குறிப்பாக உணர்த்திய நவீன், தனக்கு இன்ஸ்பிரேசனாக இருந்த மேற்கத்திய இயக்குநர்கள் என்று பொத்தாம் பொதுவாக கூறிவிட்டு சென்றாலும், குவாண்டின் டொரோண்டினோ, கோயன் பிரதர்ஸ், கேய் ரிச்சி, ஆகியோரின் பாதிப்பில் சினிமாவுக்கு வந்தவர்தான் நவீன் என்பது மூடர்கூடம் படத்தின் சில காட்சியமைப்புகளைப் பார்க்கும் போதே கணிக்கமுடிகிறது..


முதல் படம் என்பதால் இவரும் இன்றைய தமிழ்சினிமாவின் ஆச்சார்ய இலக்கணத்தின்படி, காமெடி என்ற பெயரில் நாளிதழ்களில் வரும் கடிஜோக்ஸை எல்லாம் ஒன்றாக சேர்த்துக் கட்டி, அதில் வலுக்கட்டாயமாக ஒரு ஒன்லைனரை திணித்து, அதை கதை என்று சொல்லிக் கொண்டு, நானும் ஒரு காமெடிப்படம் எடுத்து கல்லா கட்டிவிட்டேன் என்று மார் தட்டிக் கொள்ளாமல் பிடிவாதத்துடன் தனித்துவமாக நின்றதற்காகவே நவீனுக்கு தனிப்பட்ட பாராட்டுக்கள்…

ப்ளாக் க்யூமர் என்று சொல்லப்படும் சீரியஸான காட்சிகளில் சிதறி வழியும் நகைச்சுவைத் தன்மை கொண்ட படைப்புகளின் பட்டியலில் ஆரண்ய காண்டம், சூது கவ்வும் படங்களைத் தொடர்ந்து தற்போதைய வருகை இந்த மூடர்கூடம். சமுதாயத்தால் பல்வேறுவிதமாக பாதிக்கப்பட்ட நான்கு பேர் சேர்ந்து ஒரு வீட்டைக் கொள்ளையடிக்க முயலுகிறார்கள்… அந்தக் கொள்ளை வெற்றியடைந்ததா..? இல்லையா…? என்பதே மூடர்கூடத்தின் ஒருவரிக் கதை..


திருடச் செல்லும் நால்வராக செண்ட்ராயன், நவீன், குபேரன், மற்றும் வெள்ளையன். திருடப் போகும் வீட்டில் வசிப்பவர்களாக ஜெயப்பிரகாஷ், அனுபமா, ஓவியா, குட்டிப் பெண் மற்றுமொரு குட்டிப் பையன்.. நவீனாக நவீனே நடித்திருக்கிறார். கவனிக்கப்பட வேண்டிய நடிப்பு. திருடச் செல்லும் நால்வருமே முட்டாள்கள் என்று சொல்லிக் கொண்டாலும் நவீன் பேசும் கம்யூனிசம் மற்றும் உலகமயமாக்கல் தொடர்பான வசனங்களும் அவருடைய செயல்பாடுகளும் எந்த இடத்திலும் அவரை ஒரு முட்டாளாக காட்டவே இல்லை என்பது ஒரு குறை..

செண்ட்ராயனாக நடித்திருக்கும் செண்ட்ராயனுக்கு நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவது போன்ற கதாபாத்திரம். அதிலும் குறிப்பாக கஞ்சா வாங்க வந்தவர்களிடம் அவர் பேசும் வசனங்களின் தொணியும், வெள்ளக்காரண்ட்ட தமிழ்ல பேசுவியா..? என்று சாஃப்ட்வேர் இஞ்சீனியரை வாறும் இடமும், முதன் முதலில் ஓவியாவைப் பார்த்துவிட்டு அவர் கொடுக்கும் ரியாக்சனும் க்ளாஸ்….


இவர்களைத் தவிர்த்து வழக்கம் போல் ஜெயப்பிரகாஷும், ஜெயப்பிரகாஷோடு போனில் பேசும் அந்த சிறுமியும் கவனம் ஈர்க்கிறார்கள்.. அந்த சிறுமியின் டயலாக் டெலிவரி அத்தனை க்யூட்.. முதன்முதலாக கதாநாயகி என்று இல்லாமல் ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் ஓவியா.. நடிப்பதற்கு பெரிதாக ஸ்கோப் இல்லாத கதாபாத்திரம் தான்… அதனால் அவரைப் பற்றி பெரிதாக பேச ஒன்றுமில்லை… குபேரனுக்கும் அந்த சிறுவனுக்கும் ஏற்படுகின்ற உறவு ஒரு குட்டி சிறுகதை…


ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்புலக்கதையையும் விவரிக்கும் விதம் அருமை.. 2D அனிமேஷன், மெளனப்படம் என்று வகைவகையாக விரிகிறது.. ஆரம்பக் காட்சிகளில் செண்ட்ராயனை தேடி வரும் போலீஸ், போலீசிடமே மாட்டிக் கொள்ளும் செண்ட்ராயன், பொம்மை திருட வந்த திருடன் ஒவ்வொரு ரூமிலும் மாட்டிக்கொண்டு முழிக்கும் காட்சி, போனில் அந்தச் சிறுமி ஜெயப்பிரகாஷை வெறுப்பேற்றும் காட்சி, நாய்க்கான பின்புலக் கதை, பாடல்கள் எடுக்கப்பட்ட விதம், பாடல்கள் வந்து போகும் சூழ்நிலை, வசனங்களின் கூர்மை, ஜேசுதாஸின் நீயும் பொம்மை, நானும் பொம்மை பாடலை பயன்படுத்திய விதம் என்று பாராட்டப் பல இடங்கள் உண்டு..

ஆனாலும்……. முக்கியமான குறையாகப்படுவது திரைக்கதையில் இல்லாத விறுவிறுப்பு… ஆரண்யகாண்டத்தில் பசுபதி தன் மனைவியை காப்பாற்றுவானா..? சப்பை சுப்பு உறவு சிங்கப்பெருமாளுக்கு தெரிந்துவிடுமா..? காளையனை அந்தச் சிறுவன் எப்படி காப்பாற்றுவான்..? இப்படி எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு திரைக்கதை எழுதப்பட்ட போதும் கூட அது வணிகரீதியான வெற்றியை அடையவில்லை.. சூதுகவ்வும் திரைப்படமோ… அந்த முட்டாள் கும்பல் போலீஸிடம் மாட்டிக்கொள்ளுமோ என்னும் இரண்டாம் கட்ட பரபரப்பையும், அதன் எதிர்பார்க்காத பின்புல விளைவுகளையும் சாத்தியமாக்கியதால் வெற்றிபெற்றது…


ஆனால் மூடர்கூடத்தில் அந்த கதாபாத்திரங்களுக்கான ஒரு தேடல் என்பது இல்லாமல் இருப்பதே மிகப்பெரிய குறையாக இருக்கிறது… அவர்கள் கொள்ளையடிக்கச் செல்கிறார்கள்… ஒருவேளை அவர்கள் போலீஸில் மாட்டிக் கொள்வார்களோ என்ற திகைப்பு ஆடியன்ஸ்க்கு இருக்காது…. ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே ஜெயிலில் இருந்துதான் வந்தவர்கள்.. மேலும் அந்தக் கொள்ளையில் அவர்கள் வெற்றிபெற வேண்டுமென்கின்ற துடிப்பும் ஆடியன்ஸ்க்கு இருக்காது…. ஏனென்றால் கதாபாத்திரத்திற்கு பணத்திற்கான தேவை இருப்பது போன்ற காட்சிகள் ஏதுமே காட்டப்படுவதில்லை… இதனால் கதை பல இடங்களில் மெதுவாக நகர்வது போன்ற பிம்பம் தோன்றுகிறது.. மேலும் அவர்கள் திருடித்தான் தங்கள் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய கட்டாயமும், அதற்கான நியாயமும் சரிவர சொல்லப்படவில்லை.. மேலும் சில காட்சிகளை தூக்கிவிடுவதன் மூலம் படத்தின் திரைக்கதை செல்லும் விதத்தில் எந்தவிதமான மாற்றமும் ஏற்பட்டுவிடாது… உதாரணமாக அந்த பீட்ஸா சாப்பிடும் காட்சி (உலகமயமாக்கலைப் பேசிவிட்டு நீங்கலும் பீட்ஸாவா..?), அந்த சாப்ட்வேர் இஞ்சினியரின் வருகை, ஓவியாவின் காதல் கைகூடுவது போன்றவை பெரிதாக எந்த முரணையும் திரைக்கதையில் நிகழ்த்துவதில்லை.. இப்படி சில காட்சிகள் அமைந்திருப்பதும் பெரும் குறை.. மேலும் எல்லோருக்கும் ஒரு பின்புல கதையை விவரிப்பதும் ஒரு கட்டத்தில் அழுப்பை ஏற்படுத்துகிறது…



இருப்பினும் இது தமிழ் சினிமாவில் ஒரு நல்ல முயற்சி என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது.. மேலும் இது இயக்குநருக்கு முதல்படம் என்பதால், இதுபோன்ற சிறுசிறு குறைகளை பூதக் கண்ணாடி கொண்டு பார்க்காமல் அலட்சியப்படுத்துவதில் தவறில்லை.. மேலும் தற்போதைய சில வணிகவெற்றி பெற்ற குப்பைப்படங்களை ஒப்பிடுகையில் இது எல்லாவகையிலும் திரையில் சென்று காண்பதற்கான தகுதிகளைக் கொண்டிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை… வழக்கமான தமிழ்சினிமாவிலிருந்து விடுப்பு பெற்று ஒரு தமிழ்ப்படம் பார்க்க நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த மூடர் கூடத்துக்கு விஜயம் செய்யலாம்…