Thursday 16 May 2013

The way home:


உங்களுக்கு உங்கள் பாட்டியைப் பிடிக்குமா..? உங்களது பாட்டியின் பாசமழையில் நனைந்து, மீண்டும் ஒருமுறை மூச்சடைத்துப் போய் நிற்க விரும்புகிறீர்களா…? நீங்கள் உங்கள் பாட்டியுடன் இருந்த அந்த சந்தோசமான தருணங்களை மீண்டும் மீட்டெடுக்க விரும்புகிறீர்களா…? ஆம், என்றால் உங்களுக்கான படம்தான் “தி வே ஹோம்”.



ஒரு திரைப்படம் திடகாத்திரமான கதாநாயகன் இன்றி, கவர்ச்சியான அழகு ததும்பும் கதாநாயகி இன்றி, மனதை மயக்கும் பாடல்கள் இன்றி, அழுத்தமான கதையமைப்பு இன்றி, எதிர்பாராத திடுக் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை இன்றி நம்முடைய மனதை கவர முடியுமா…? இந்த திரைப்படத்தை பார்த்து முடித்துவிட்டு சொல்வீர்கள் முடியும் என்று… இந்த திரைப்படத்தில் மேற்குறிப்பிடப்பட்ட எந்த சமாச்சாரமும் இல்லை.. தோல் சுருங்கிய ஒரு வயதான பாட்டியும், அழகான துடுக்குத்தனம் நிறைந்த, பல நேரங்களில் நம்மைக் கோபப்படுத்தும் தன்மை கொண்ட ஒரு சிறுவனும் மட்டுமே பெரும்பாலும் வருகிறார்கள்… ஆனாலும் படம் முடியும்போது அது நம் மனதை ஏதோ செய்கிறது. மொத்த திரைப்படத்திலும் அந்த பாட்டி ஒரு அன்பின் அடையாளமாக இருந்து கொண்டே இருக்கிறாள். அதனால் தான்  ஒவ்வொரு காட்சி பிம்பத்திலும் அந்த அன்பு நிறைந்து வழிந்து கொண்டே இருக்கிறது.

நாம் வீடு என்று எதைச் சொல்லுகிறோம்..? கல்லும் மண்ணும் சிமெண்டும் கலந்து கட்டிய ஒரு கட்டிடம் மட்டுமே வீடாகி விட முடியுமா…? அல்லது அதில் மனிதர்கள் குடியிருப்பதால் மட்டும் அது வீடாகி விட முடியுமா…? அந்த வீட்டில் உள்ள மனிதர்களுக்கு இடையில் அன்பு என்பது இல்லாமல் ஆகிவிட்டால் அது பலருக்கு சுடுகாடாகத்தானே காட்சி அளிக்கும். அப்படிப் பார்க்கையில் அன்போடு மனிதர்கள் குடியிருக்கும் இடம் மட்டுமே வீடு என்னும் முழுமையான வடிவம் பெறுகிறது. அதைத் தான் இந்த திரைப்படம் குறிப்பாக உணர்த்துகிறதோ என்று தோன்றுகிறது.


”தி வே ஹோம்…” ”வீட்டை நோக்கிச் செல்லும் பாதை” என்னும் அர்த்தம் பொதிந்த தலைப்பு. படத்தின் ஆரம்பக் காட்சியில் இருண்ட திரையின் மத்தியில் வாக்கியங்கள் விரிகின்றன.. 76 வயதான அம்மா வழிப்பாட்டி, 7 வயது சிறுவன், 32 வயதான தாய், கதை எப்போது நடக்கிறது, ஜீன் ஜீலை மாதத்துக்கு இடையே. காட்சிகள் விரியத் தொடங்க.. ஒரு சொகுசு பஸ்சில் அந்தச் சிறுவன் தன் கையில் ஒரு விமான பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டு இருக்கிறான். அவன் எழுப்பும் சத்தம் அருகில் இருக்கும் அவனது தாயை தொந்தரவு செய்ய.. அவள் இவனை முறைக்கிறாள். அவன் பாட்டியைப் பற்றி கேட்கத் தொடங்குகிறான். “அவள் ஊமையா… காதும் கேட்காதா..? பிறகு எப்படி அவள் என்னை கவனித்துக் கொள்வாள்…? என்னும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அவள் பதில் சொல்லாமல் இருக்கவே.. அவன் தாயைத் தோளில் இடிக்கிறான்..


இருவரும் ஒரு நடுத்தர பஸ்சுக்கு மாற, அந்த பேருந்தின் உட்புறச் சூழ்நிலை அந்தச் சிறுவனை வெறுப்பாக்க.. அவன் தன் வீடியோ கேம் எடுத்து விளையாடத் தொடங்குகிறான். அவனது தாய் அருகில் தூங்கிக் கொண்டு இருக்கிறாள். மீண்டும் ஒரு பேருந்து மாறுகிறார்கள். அது புகையைக் கக்கிக் கொண்டு செல்கிறது. சாதாரண கிராமப்புற மக்களால் அந்த பஸ் நிரம்பி இருக்க.. அருகில் அமர்ந்திருக்கும் ஒரு வயதான பெண்மணி தன் தோள் மீது இடிப்பதால், அந்தச் சிறுவன் அவளது தோளைப் பிடித்து தள்ள… அவனது தாய் அவனை அடிக்கிறாள். பாட்டியின் கிராமத்தில் இருவரையும் இறக்கி விட்டுவிட்டு புகையை கக்கியவாறே பஸ் செல்லுகிறது. தாய் முன்னால் நடக்க.. சிறுவன் “இந்த இடம் நல்லாவே இல்ல.. எனக்கு பிடிக்கல.. நான் வரல… “ என்று சொல்ல.. அவனது தாய் அவனை அடிக்க.. அவன் தன் தாயை காலால் எத்த… அவள் வலுக்கட்டாயமாக அவனை இழுத்துக் கொண்டு செல்கிறாள். ஒரு நீண்ட பாதை தென்பட… அந்தப் பாதையை ஒட்டி படத்தின் டைட்டில் பிரசன்னமாகிறது. “தி வே ஹோம்”  

                  

இதற்கு முன் நாம் கடந்து வந்த எந்தக் காட்சியிலும் அன்பு என்பது துளி அளவும் இருக்காது. இயந்திர பொம்மைகளை விரும்பும் சிறுவனால் அருகில் இருக்கும் உயிருள்ள மனிதர்களையோ, கோழியையோ விரும்ப முடியாது, தாயை திருப்பி அடிக்கிறான்… தாயைப் பிரிந்து இருக்க வேண்டியதைப் பற்றி அவன் கவலை கொள்வதில்லை… தான் இருக்கப் போகும் இடம் நாகரீகம் அற்ற ஒரு இடமாக இருப்பதால் அங்கு அவனால் ஒன்ற முடிவதில்லை. அதனால் தான் நான் இங்கு இருக்கமாட்டேன்… என்று அடம் பிடிக்கிறான். சற்று யோசித்துப் பார்த்தால் இந்தச் சிறுவனின் கதாபாத்திரம் தற்காலத்து சிறுவர்களின் மனோஇயல்பை வெளிக்காட்டுகிறது. அவர்களுக்கு இயந்திரங்களின் மீது உள்ள அன்பு, ஈடுபாடு, காதல் கூட சக மனிதர்களிடம் இருப்பதில்லை.. மரியாதை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் மனோபாவம் இயல்பாகிப் போய்விட்டது. அதையும் பெற்றோராகிய நாம் ரசிக்கத் தொடங்கிவிட்டது தான் காலத்தின் கொடுமை.. இது தலைமுறை இடைவெளிக்கான மாற்றம் தான். ஆனால் இந்த மாற்றம் நல்லவிதமான மாற்றம் இல்லை என்பதுதான் நெருடலாக இருக்கிறது.

பாட்டியின் வீட்டில் அவனது தாய், தான் சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிப் போனதற்காக, இதுநாள் வரை தன் தாயை பார்க்க வராமல் இருந்ததற்காக என பொது மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இருக்க… சிறுவன் வீட்டை நோட்டம் விடுகிறான். பல்பு இல்லாமல் தொங்கிக் கொண்டு இருக்கும் ஹோல்டர், ஓட்டடை படிந்த சுவர்கள், தரைப் பலகையின் இடுக்குகளுக்கு இடையே ஓடும் பூச்சிகள் என இவைகளைக் கண்டு அவன் அறுவெறுப்பு அடைகிறான்… “தன் மகன் தொந்தரவு எதுவும் கொடுக்க மாட்டான்…” என்று தாய் சொல்லிக் கொண்டு இருக்க.. அவன் பாட்டியின் செருப்பின் மீது சிறுநீர் கழிக்கிறான்.


சிறுவனின் தாய் ஊருக்கு சென்றுவிட, பாட்டியும் சிறுவனும் அந்த ரோட்டில் தனித்து விடப்படுகிறார்கள்.. குனிந்த நிலையில் தரையில் கம்பை ஊன்றி நடந்து வரும் பாட்டி தன் பேரனை நோக்கி பாசத்துடன் நெருங்க.. சிறுவன் அருவெறுப்புடன் பின்னால் செல்கிறான்… அவனைத் தொட முயலும் பாட்டியை திட்டிக் கொண்டே.. அடிக்க கை நீட்டுகிறான். தான் தொடுவது அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்த பாட்டி தன் நெஞ்சில் கையைத் தடவி, மன்னிப்பு கேட்பது போல் சைகை செய்துவிட்டு முன்னோக்கி நடக்க… பாட்டியை “லூசுக் கிழவி, செவிட்டு கிழவி” என்று வசை பாடிக் கொண்டே அவன் பின்னால் நடக்கிறான். அவன் வருகிறானா என்று பாட்டி பின்னால் திரும்பிப் பார்த்தால்.. நடப்பதை நிறுத்திக் கொண்டு இவனும் பின்னால் திரும்பிக் கொள்கிறான்…


வீட்டில் பாட்டி கொடுக்கும் உணவுப் பொருட்களைப் புறக்கணித்துவிட்டு தன் தாய் கொடுத்துச் சென்ற டின்னில் அடைக்கப்பட்ட உணவுகளை உண்ணுகிறான். மரத்தினால் செய்யப்பட்ட விளையாட்டு சாமான்களை பாட்டி கொடுக்க.. அதை அவன் கண்டு கொள்வதே இல்லை.. அவன் அங்கும் தனக்கு பொழுது போக்காக தன் வீடியோ கேம்மை கையில் எடுக்கிறான். பாட்டி ஊசியையும் நூலையும் கோர்த்துக் கொடுக்கும்படி அவனை நெருங்க வேண்டா வெறுப்பாக அதைச் செய்து கொடுக்கிறான்… காலைக் கடன்களை இரவு நேரத்தில் அவசரமாக கழிக்க வேண்டி இருக்கையில் மட்டும் பாட்டியின் உதவியை நாடுகிறான். அருகில் வசிக்கும் கிராமத்து சிறுவன் சியோல் இவனுடன் நட்பாக முயல, சியோலுடன் இவன் ஒரு வார்த்தைக் கூட பேசுவது இல்லை.. காலை நக்கிக் கொடுக்கும் நாய்குட்டியை எட்டி உதைக்கிறான்..


வீடியோகேமில் பேட்டரி தீர்ந்துவிட…பேட்டரி வாங்க பணம் கேட்கிறான். பாட்டியிடம் பணம் இருப்பதில்லை… கோபத்தில் பாட்டி கழுவி வைத்த பீங்கான் பாத்திரத்தை காலால் எத்தி உதைக்கிறான்.. அது உடைந்து சிதறுகிறது. பாட்டியின் செருப்பை எடுத்து ஒளித்துவைக்கிறான்.. வெறும் காலுடன் அந்த மலைக் கிராமத்தில் தண்ணீர் எடுக்கச் செல்லும் பாட்டியைப் பார்த்து வன்மமாகச் சிரிக்கிறான்.. பாட்டியின் கொண்டையில் சொருகி இருக்கும் வெண்கல ஊசியை அவள் தூங்கும் போது எடுத்துக் கொண்டு ஓடுகிறான். அதை விற்று பேட்டரி வாங்க நினைக்க.. வழிதவறிப் போய் ரோட்டில் அழுது கொண்டு நிற்கிறான். ஒரு விவசாயி சைக்கிளில் அவனை அவர்கள் கிராமத்தில் விட்டுவிட்டு செல்ல.. எதிரே பாட்டி அவனைத் தேடி வந்து கொண்டு இருக்கிறாள். இவன் பாட்டி தன்னை அடிப்பாளோ.. திட்டுவாளோ என்று பயந்து போய் நிற்க.. பாட்டி இவனைக் கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல… இவன் பாட்டியின் கொண்டையைப் பார்க்க அதில் ஒரு வெண்கல ஸ்பூன் சொருகப்பட்டு இருக்கிறது… அவன் பாட்டியின் பின்னால் மெதுவாக வீட்டை நோக்கி நடக்கத் தொடங்குகிறான்… இந்த இடத்தில் தான் அவன் தன் தவறை உணரத் தொடங்குகிறான். துவைத்து காயப் போட்ட துணிகள் மழையில் நனைய.. முதலில் தன் துணியை மட்டும் எடுப்பவன், பின்பு பாட்டியின் துணிகளையும் எடுத்து உள்ளே போடுகிறான். உடனே மழை நின்றுவிடுகிறது… வெறுத்துப் போன சிறுவன் மீண்டும் துணிகளைக் காயப் போடுகிறான். இந்தப் புள்ளியில் இருந்து பாட்டியின் மீது அவனுக்கு அன்பு பிறக்கிறது


இப்படி படம் முழுக்க அவன் பாட்டியை பாடுபடுத்துவதும்.. அதற்காக அவன் மீது கொஞ்சம்கூட கோபம் கொள்ளாத பாட்டி மெல்ல மெல்ல.. அவனைத் தன் அன்பால் மாற்றுவதும் தான் மொத்தப்படமும்… ஒரு முறை பாட்டி உனக்கு என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்க.. இவன் பீட்ஸா, பர்கர், கெண்டகி சிக்கன் என்று சொல்லிவிட்டு, உனக்கு எதுவுமே தெரியாது என்று சலிப்புடன் சொல்ல.. கோழி என்பதைப் புரிந்து கொண்ட பாட்டி, சிக்கனா என்று கேட்டுவிட்டு, தன் தோட்டத்தில் விளைந்த பருத்திகளை சந்தையில் விற்று, கோழி வாங்கச் செல்கிறாள். சிறுவன் சந்தோசத்தில் குதிக்கிறான்.. பேட்டரி வாங்க காசு தராத கோபத்தில் பாட்டியைப் பற்றி சுவற்றில் திட்டி எழுதிய வாசகங்களை அடிக்கிறான்.. பாட்டியை எதிர்பார்த்து காத்திருந்து தூங்கிப் போகிறான்.. மழை பெய்து கொண்டு இருக்க… அதில் கோழியுடன் நடந்து வரும் பாட்டி, கோழியை தண்ணீரில் வேக வைத்து சமைத்து, பேரனை எழுப்ப.. அதைப் பார்த்து அதிர்ந்த அவன் “கோழி ஏன் தண்ணீல இருக்கு.. எனக்கு எண்ணெய்ல பொறித்ததுதா வேணும்… உனக்கு ஒன்னுமே தெரியல..” என்று அழத் தொடங்கிவிட்டு அருகில் வைத்திருந்த வெண்ணெயை தூக்கி எறிகிறான். எனக்கு எதுவும் வேணாம் என்று கோபத்தில் படுத்துக் கொள்கிறான்.. மீண்டும் நடுராத்திரியில் எழுந்தவன் பசியால் பாட்டி அறியாமல் அந்தக் கோழியை தின்னத் தொடங்குகிறான்.


மழையில் நனைந்ததால் பாட்டிக்கு காய்ச்சல் வருகிறது. சிறுவன் பாட்டிக்கு பணிவிடை செய்து பார்த்துக் கொள்கிறான். மெல்ல மெல்ல பாட்டியின் மேல் அன்பு கொள்கிறான்.. சந்தைக்கு சென்று தன் தோட்டத்தில் விளைந்த காய்களை விற்று ஹோட்டலில் பேரனுக்கு சாப்பாடு வாங்கித் தருவதும், புதிய செருப்பு வாங்கிக் கொடுப்பதும், தன் பேரனை மட்டும் பஸ்சில் அனுப்பி வைத்துவிட்டு, அவனுக்கு செலவளிக்க காசு வேண்டும் என்று பாட்டி பின்னால் நடந்து வருவதும் நெகிழ்வானக் காட்சிகள். இது போன்ற நிகழ்வுகளை நாமும் கூட கடந்துதானே வந்திருக்கிறோம்.. அதனால் தான் இவை நம் மனதுக்கு நெருக்கமாக அமைந்துவிடுகின்றன.. 


மேலும் பாட்டி இன்ப அதிர்ச்சியாக அவனுக்கு ஒரு பரிசு கொடுக்க.. அதில் காகிதத்தில் சுற்றப்பட்ட அவனது வீடியோகேமும், பேட்டரியும் இருக்கிறது. அவன் சந்தோசத்தில் சிரிக்கிறான். ஆனால் அடுத்து அவனுக்கு அது தேவைப்படுவதே இல்லை.. பாட்டியுடனே பெரும்பாலானபொழுதைக் கழிக்கிறான். அவனை அழைத்துச் செல்ல வருவதாக அம்மாவிடம் இருந்து கடிதம் வர.. பாட்டியை பிரியப் போவதை நினைத்து அழுகிறான். முதன் முதலின் அன்பின் பிரிவை அவன் உணரும் தருணமாக அதைக் கொள்ளலாம். பாட்டியின் மீது உள்ள பாசத்தால் அவளுக்கு, “நான் உடல் நலமின்றி இருக்கிறேன்…” என்றும் ”நான் உன் நினைவாக இருக்கிறேன்..” என்றும் கடிதம் எழுத கற்றுக் கொடுக்கிறான்.. அம்மாவுடன் பஸ்சில் ஏறும் போது அழுது கொண்டே, தன் கையால் நெஞ்சில் தடவி தான் செய்த தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்கிறான்.. பாட்டியின் கண்களும் தன் பேரனையே பார்த்துக் கொண்டிருக்க…. நம்மை விட்டு நிரந்தரமாகவும் தற்காலிகமாகவும் பிரிந்து சென்ற எல்லா பாட்டிகளின் நினைவும் நம் நெஞ்சை அழுத்த… அது கண்ணில் கண்ணீராய் வெளிப்படுகிறது…

இத்திரைப்படம் எல்லா பாட்டிகளுக்கும் சமர்ப்பணம் என்ற வாசகத்துடன் படம் முடிகிறது. பாட்டியாக நடித்திருக்கும் அந்த மூதாட்டியின் நடிப்பும் அந்தச் சிறுவனின் நடிப்பும் மிகமிக அருமை. இந்தப் படத்தின் இயக்குநர் Lee jeong hyang ஒரு பெண் இயக்குநர். படம் எத்தனையோ செய்திகளை நம்மிடையே சொல்லாமல் சொல்கிறது. வயதான காலத்தில் பெற்றோரின் தனிமை, தங்கள் சுயநலத்திற்காக மட்டும் பெற்றோரை அணுகிச் செல்லும் பிள்ளைகள், நாகரீக வாழ்க்கை என்கின்ற போர்வையில் இயந்திரத்தனமான வாழ்க்கையில் பெற்றோர்கள் பிள்ளைகளை கவனிக்காததால் இயந்திரத்தைப் போலவே செயலாற்றும் குழந்தைகள், அன்பு, மரியாதைப் போன்ற அடிப்படை மனித இயல்புகளை ஒட்டு மொத்தமாக தொலைத்துவிட்ட நகர மாந்தர்கள்… இவர்களுக்கு மத்தியிலும் அன்பை மட்டுமே கொடுக்க.. எப்போதும் தனிமையில் காத்திருக்கும் இது போன்ற பாட்டிகள்… என்று எத்தனை எத்தனையோ….. செய்திகளைச் சொல்கிறது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்…

No comments:

Post a Comment