Friday 15 March 2013

பரதேசி:


பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளிவந்திருக்கும் படம். படத்தின் ரீலிசுக்கு சற்று முன்பு, பாலா பரதேசி தொடர்பான ஒரு டீசரை வெளியிட ஏகத்தும் விமர்சனங்கள் குவியத் தொடங்கின. அதைப்பற்றி பதிவின் இறுதியில் பார்ப்போம்.

1939-ல் சென்னை மாகாணத்தின் தென் பிராந்தியத்தில் இருக்கும் சாலூர் என்னும் ஒரு கிராமத்தில் இருந்து வேலையும் நல்ல கூலியும் தருகிறோம் என்று நயவஞ்சகமாகப் பேசி ஒரு கங்காணியால் ஏமாற்றப்பட்டு, கொத்தடிமைகளாக தேயிலைத் தோட்டங்களுக்கு இழுத்துச் செல்லப்படும் ஆதரவற்ற ஒரு ஏழை மக்களின் கூட்டத்துக்கு “பச்சைமலை எஸ்டேட்” என்னும் தேயிலைத் தோட்டத்தில் ஏற்படும் துன்பவியல் தீண்டல்களே இந்த பாலாவின் பரதேசி.

கி.பி1969ல் “RED TEA” என்ற நாவல் PAUL HARRIS DANIEL என்பவரால் எழுதப்பட்டு, அதன் தமிழ் மொழிபெயர்ப்பு “எரியும் பனிக்காடு” என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அந்த நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதே இந்த பரதேசி என்று சொல்லப்படுகிறது. ஆனால் நான் எரியும் பனிக்காடு என்ற அந்த நாவலை இதுவரை வாசித்ததில்லை என்பதால் அது எந்த அளவுக்கு நம்பகத்தனமான செய்தி என்பதை அழுத்தந் திருத்தமாக பேச இயலவில்லை. எனினும் திரைப்படத்தின் எந்த இடத்திலும் இது இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டது என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றது போல் தெரியவில்லை என்பதால் இதை பாலாவின் படைப்பாகவே தற்போது அணுகலாம்.

படத்தின் ஆரம்பத்தில் கேமரா ஒவ்வொரு குடிசைகளுக்கும் ஊடாக பயணித்து செல்கிறது. செல்லும் போதே அந்த மக்களின் வாழ்க்கை முறையை பதிவு செய்த வண்ணமே செல்கிறது. இடிந்த நிலையில் கிடக்கும் வீட்டின் நிலைச்சுவரின் மீதேறி விளையாடும் சிறுவர்கள், தட்டாங்கல் ஆடும் சிறுமிகள், பழக்கம் பேசிக் கொண்டிருக்கும் பெண்கள், பஞ்சாயத்து நடத்திக் கொண்டிருக்கும் ஆண்கள், மத்து கொண்டு தயிரு கடையும் பெரியம்மா, முற்றம் தெளிக்கும் அக்கா என நீண்ட காட்சியாக பயணிக்கும் கேமரா, தமுக்கடிப்பவனின் மீது முட்டி தன் பயணத்தை நிறுத்திக் கொள்கிறது.

தமுக்கடிப்பவனாக அதர்வா. பேருக்கு பஞ்சமில்லை அவனுக்கு. சோறுக்குத் தான் பஞ்சம். அவனை நினைக்கிறேன் என்று சொல்லித் திரியும் அங்கம்மா (வேதிகா) கூப்பிட ……….. பொறுக்கி என்று ஒரு பெயர், ஊர்காரர்கள் கூப்பிட ஓட்டுப் பொறுக்கி என்று ஒரு பெயர், ராசா என்று உண்மையாக ஒரு பெயர், அதை அவன் மட்டுமே சொல்லிக் கொள்வான். “நியாயமா……ரே, ஏதோ கூலு, கஞ்சி ஊத்துங்க.. ராசா வண்டிய வுடணும்…” இந்த வசனம் படத்தில் பல இடங்களில் வருகிறது.

படத்தின் ஆரம்பத்தில் தமுக்கடித்து கல்யாணசேதி சொல்பவனாக வரும் ராசா…, இறுதிகாட்சியில் கையில் தமுக்கு இல்லாமல் மேகம் முட்டிக் கொண்டு இருக்கும் ஒரு உச்சிப் பாறையின் மீது அமர்ந்து பெருங்குரலெடுத்து கத்தி சேதி சொல்லுவான். உயிரை உலுக்கும் காட்சி அது. சேதி சொல்லி ஒவ்வொரு வீடாக படியரிசி கேட்டு நிற்கும் போதும் சரி, தங்கராசு கல்யாணத்தில் நெல்லு சோறு திங்க ஆசைப்பட்டு, பந்தியில் உட்கார.. பால், பணியாரம் என எதுவுமே அவனது இலையில் விழாமல் நகர்ந்து செல்ல… இலையில் விழும் நிழலைப் பார்த்துக் கொண்டே, “ராசாக்கு பாலு.. ராசாக்கு பணியாரம்…” என்று பரிதாபமாக கேட்க, ஊரார் எல்லாம் அவனை கேலி பண்ணிச் சிரிக்க.. (இங்கு சாதிய தீண்டல் இலைமறை காயாக சொல்லப்பட்டுள்ளது) விம்மி உடைகின்ற நிலையில் “ராசா வண்டிய உட்டுருவேன்…” என்று சொல்லும் போது அனுதாபம் அள்ளுகிறார். அதர்வா ஒரு மிகச்சிறந்த நடிகன் என்று சொல்ல இந்த ஒரு காட்சியே போதும். பாவம் பார்த்து ரசிக்க முரளிதான் இல்லை.

அழகான பதுமையாக மட்டுமே நாம் கண்டு வந்த வேதிகாவை, அவருக்கு அழகாக நடிக்கவும் வரும் என்று நிருபித்துக் காட்டியிருக்கிறார் பாலா. தயிரு கடையும் மத்தைக் கொண்டு குடத்தை அடித்துக் கொண்டே அதர்வாவை இமிடேட் செய்து கேலி செய்யும் அங்கம்மாவாக வேதிகா. ஓயாமல் அதர்வாவை வம்பிழுத்துக் கொண்டும், பந்தியில் அவனை சாப்பிட விடாமல் “உங்க பெரியப்பனக் கூட்டிட்டு வா அப்பத்தா பணியாரம்..” என்று துரத்தி அடிக்கும் போதும், அவன் அழுது கொண்டே அந்த இடம்விட்டு செல்வதைக் கண்டு கலங்கி, காட்டுக்குள் தனியாக உட்கார்ந்து ஆவேசமாக தமுக்கடித்துக் கொண்டிருக்கும் அவனுக்கு சோறூட்ட முயல, அவன் ஆவேசமாக மறுக்க.. அவன் தலைமயிரைப் பற்றிக் கொண்டு அதே ஆவேசத்துடன் அவள் வாயில் சோற்றைத் திணிக்கும் போதும், ஆடவனின் தலையில் தன் கை இருப்பதை உணர்ந்து சட்டென்று கையை விலக்கி வெட்கப்படும் போதும், அதே வெட்கத்துடனே “நான் உன்ன நினைக்கிறேன்..” என்று தன் காதலை வெளிப்படுத்தும் இடத்திலும், பஞ்சாயத்து நடக்கும் போது மரத்துக்கு நடுவில் தன் அடிபொடுசுகளுடன் மறைவாக நின்று கொண்டு, வசனம் இல்லாமலே ராசாவோடு பேசும் போதும் முற்றிலும் புதிய, அழகான, கருப்பு சாயம் பூசப்பட்ட வேதிகா.

பச்சைமலை எஸ்டேட்டில் ஏற்கனவே கொத்தடிமையாக பிழைப்பு நடத்தும் மரகதமாக தன்ஷிகா. தன்னையும் தன் மகளையும் தனியாக தவிக்கவிட்டு, தன் உயிரை மட்டும் காப்பாத்திக் கொண்டு எஸ்டேட்டில் இருந்து தப்பி ஓடிய தன் கணவனால் ஆண் சமூகத்தையே வெறுக்கும் கதாபாத்திரம். எப்படி உடை அணிய வேண்டும் என்று வகுப்பு எடுக்கும் போதும் சரி, கருத்தகன்னி மனதை புண்படுத்தும் ராசாவை புடதியில் அடித்து தன் கோபத்தை வெளிப்படுத்தும் இடத்திலும், கருத்தகன்னியை சோரம் போகச் சொல்லித் தூண்டும் பெண்களை கண்டிக்கும் போதும், ஆடவன் கைபட்ட தன் துணியை எரிக்கும் போதும், ஊருக்கு திரும்ப முடியாத சோகத்தில் பெட்டியை தூக்கி எரிந்து விட்டு விம்மி அழும் போதும் பிரமாதமான நடிப்பு. தன்ஷிகா தமிழில் நடிக்கத் தெரிந்த அழகான, தமிழ் நடிகை இல்லை என்ற பஞ்சத்தைப் போக்குவார் என்று உறுதியாக நம்பலாம்.

பெரியப்பாவாக வந்து செல்லும் விக்ரமாதித்தன், சிறிது நேரமே வந்தாலும் வரும் இடமெல்லாம் மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொள்கிறார். அந்த மந்திரி காமெடிக்கு தியேட்டரே அதிர்கிறது. கருத்தகன்னியாக வரும் ரித்விகா, தங்கராசாக வரும் உதய் கார்த்திக் என்று அனைவருமே சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

கொத்தடிமையாக வந்தவர்களை 18 மாதங்களுக்குப் பிறகு ஊருக்கு திரும்ப அனுப்பப் போகிறார்கள் என்று கனவோடு காத்திருக்கச் செய்து, அந்தக் கனவை சுக்கு நூறாக நொறுக்கி, அவர்களை மீண்டும் அந்த மரணக் குழியில் தள்ளி, முடிந்த அளவுக்கு அட்டைப் பூச்சிகளும் அதிகாரப் பூச்சிகளும் ரத்தம் குடிப்பதற்கு, கங்காணி பயன்படுத்தும் குறுக்குவழி திட்டம் கொடூரமானது.

நாஞ்சில் நாடனின் வசனங்கள் வசீகரிக்கின்றன. கிராம மக்களுக்கே உள்ள துடுக்குத்தனதோடு, தூய்மை என்று அறியப்படும் மாயையை விலக்கி இயல்பான மக்களின் பேச்சுவழக்கை நம்மை எட்ட நின்று எட்டிப் பார்க்கத் தூண்டுகிறது நாடனின் சொல்லாடல்கள். கடல் அதிர்வால் ஏற்பட்ட இலக்கியத்துக்கும் சினிமாவுக்குமான இடைவெளியில் ஒரு அழகான ஆபத்தில்லாத பாலத்தைக் கட்டி இணைத்திருக்கிறது நாடனின் வசனங்கள். உதாரணத்துக்கு ஒன்றிரண்டு… “இது தேயிலைத் தோட்டமா.. இல்ல கல்லறை தோட்டமா…” “ உன் வண்டிய கொண்டு போயி ஊர் காரன் …..” “ம்ம்ம் அத உங்க மந்திரிகிட்டயே கேளுங்க…” “நான் உன்ன நினைக்கிறேன்..”

செழியனின் கேமரா இல்லாமல் படத்திற்கு இத்தனை எதார்த்தம் வந்திருக்குமா என்பது சந்தேகமே. அற்புதமான ஒளிப்பதிவு. கதையை மீறாத கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவு. பஞ்சம் பிழைக்கச் செல்லும் கூட்டத்தைக் காட்டும் எஸ்டாபிளிஸ்மெண்ட் சாட்டும், விறகு வெட்டிய கூலியை வாங்கும் முன் நெட்டி முறியும் அதர்வாவுக்கு நெற்றிப் பொட்டில் வைத்த டாப் ஆங்கிள் ஷாட்… க்ளைமாக்ச் காட்சியின் போது பாறைமீது அமர்ந்திருக்கும் அதர்வாவுக்கு வைக்கப்பட்ட லோ ஆங்கில் சாட்டும் அற்புதம். இப்படி ஒவ்வொரு பிரேமிலும் ஒரு தனித்தவம் தெரிகிறது.

ஜி.வி. பிரகாஷ்குமாருக்கும் லைஃபில் இது ஒரு மைல்கல். ஏற்கனவே “Gangs of wasseypur” ல் தன் பிண்ணனி இசை திறமையை நிருபித்தவர் இதிலும் மிகமிக சிறப்பான பிண்ணனி இசையை கொடுத்திருக்கிறார். பாடல்களிலும் செங்காடே, அவித்த பையா இரண்டும் கதைக்களனோடு இயைந்து வாழ்வை உணரச் செய்யும் அனுபவத்தைக் கொடுக்கிறது. அதற்கு வைரமுத்துவின் வரிகள் மிகுந்த துணை செய்திருக்கிறது. “நண்டுகளை கூட்டிகிட்டு நரி போகுதே…” ”கூட்டம் கூட்டமாய் வாழப் போகிறோம்.. கூட வருகுதே சாவு.” “உள்ளூரில் காக்கா குருவி இறை தேடுதே” வாட்டும் பஞ்சத்தில் கொக்கு காலைப் போல் வத்திப் போச்சையா வாழ்வு” உண்மையாகவே ரத்தத்தைக் கொண்டு எழுதிய எழுத்துக்களோ என்று ஐயமுறத் தோன்றுகிறது. செங்காடே பாடல்களின் வரிகளைக் சற்று கவனியுங்கள்.. நான் எழுதிய வார்த்தைகளில் பசப்பு இல்லை என்று புரியும். கலை இயக்குநர் C.S.பாலச்சந்தர் புதியவராம், நம்பவேமுடியவில்லை. அற்புதமான கலை வடிவம்….

குறையே இல்லை என்று சொல்லிவிட முடியாது. படம் தொடங்கி வெகு நேரம் சென்றப் பின்னரே கதை தொடங்குகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அதர்வா பிழைப்பு தேடி அயலூரில் விறகு வெட்டிவிட்டு கூலி கேட்டு கங்காணியிடம் மாட்டிக் கொள்வதில் இருந்துதான் கதை தொடங்குகிறது. அதற்கு முன்புவரை ஒட்டுப் பொறுக்கியின் கேரக்டரைசேசன் மற்றும் அங்கம்மாளுக்கும் ஒட்டுபொறுக்கிக்கும் இடையேயான காதல் என்று வழக்கமான தமிழ்சினிமா பாணியில்தான் பயணிக்கிறது. ஆனால் ஒட்டுப் பொறுக்கியாக வரும் அதர்வாவின் கேரக்டரைசேசன் அந்த சலிப்பை வெளித் தெரியாமல் அமுக்கிவிடுகிறது.

மேலும் அங்கம்மாளின் கதாபாத்திரம் ஏற்கனவே பல பாலா படங்களில் பார்த்துப் பழகிய அடாவடி பெண்களின் டச் தான். அது போல ஊரில் பஞ்சம் என்னும் செய்தியை, ஒரு வேளையாவது ஊர் மக்கள் நெல்லு சோறு திங்கட்டும் என்று இழவு விழுந்த செய்தியைக் கூட மறைத்து, திருமணம் நடத்தும் காட்சி மட்டும் விளக்குகிறது. அந்த ஊர் மக்களின் தொழில் என்ன..? பஞ்சத்தால் அந்த தொழிலுக்கு என்ன பாதிப்பு வந்தது…? வேறு எந்தக் கூலித் தொழிலுமே செய்ய இயலாத சூழ்நிலையா? இது போன்ற கேள்விக்கு பதில் இல்லை. மேலும் இது போன்ற படங்களுக்கு கதைக்களன் மிகமிக முக்கியம். இவர்கள் பஞ்சம் பிழைக்கச் செல்லும் பச்சைமலை எங்கு இருக்கிறது என்பதையும் போகிறபோக்கில் எங்காவது சொல்லியிருக்கலாம். கிறிஸ்துவ மதத்தை பரப்பும் நோக்கம் எந்த அளவுக்கு கீழ்தரமானதாக இருந்தது என்பதை விளக்கும் காட்சிகளில் இருந்த நையாண்டிகள் யதார்த்தத்தை கொன்றுவிடுகிறது. அதனையும் யதார்த்தமான தொனியில் சொல்லி இருந்தால் இன்னும் ஆழமாகவே தைத்திருக்கும்.

இயக்கத்தைப் பற்றி பேச வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அது அந்த டீசரில் பாலா எப்படி வேலை வாங்கினார் என்பதனை அடிப்படையாகக் கொண்டது. எல்லோரையும் அடித்து, அதட்டி மிரட்டி வேலை வாங்கினார் என்று ஒரு குற்றச்சாட்டு. படத்தில் கங்காணி சொல்வது போல் ஒரு வசனம் வரும்…”போ… போய் ஒரு வருசமோ ரெண்டு வருசமோ வேலயப் பாரு.. பின்ன ஊரு வந்து சேந்து, ஒரு வீட்டக் கட்டு, மாட்ட வாங்கி கட்டு, காடு கழனி வாங்கி வேலயப் பாரு, பொண்டாட்டி புள்ளைகளுக்கு நகை வாங்கிப் போடு.., மீதி காசு பணம் இருந்தா இன்னொருத்திய சேத்துக்க…” என்று. ஆனால் கங்காணியின் இந்த வாக்குறுதிகள் காற்றில் கரைந்தவைதான்.. கடைசிவரை நிறைவேறாமலே போய்விடும்.

பாலா படத்தில் நடிப்பதும் ஒரு தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்ப்பது போன்றது தான். ஆனால் கங்காணியின் வாக்குறுதிகள் நிச்சயமாக நிறைவேறும். பாலா படத்தின் நாயகர்களை எடுத்துப் பார்த்தால் அந்த உண்மை விளங்கும். உண்மையாகவே ஒரு சிறு கூலிக்காக இன்றும் தினம் தினம் செத்துப் பிழைக்கும் எந்த ஒரு மனிதக் கூட்டத்தைக் கண்டும் காணாமல் விலகிச் செல்லும் நாம், 20 நாளோ 60 நாளோ கால்சீட் கொடுத்துவிட்டு லட்சம் லட்சமாக, கோடி கோடியாக சம்பாதிக்கும், சம்பாதிக்கப் போகும் நடிகர் நடிகைகளை காட்சியின் எதார்த்தத்திற்காக சற்று உடல் வருத்தி வேலை வாங்கினால் மட்டும் கண்டனக் குரல் எழுப்புவது எப்படி நியாயமாகும்.. இங்கு எந்த வேலைதான் கஸ்டம் இல்லாமல் இருக்கிறது.. விமர்ச்சிக்கும் வேலையை தவிர… உலக சினிமா என்று நாம் போற்றும் படங்களுக்காக அந்த நடிகர் நடிகைகள் எப்படிப்பட்ட உடலுழைப்பையும் அர்ப்பணிப்பையும் கொடுக்கிறார்கள் என்று நாம் அறிவதில்லை. இது போன்ற அர்ப்பணிப்புகள் இல்லாமல் தமிழில் உலகம் போற்றும் படைப்புகள் எப்போதுமே சாத்தியப்படாது. ஒரு படைப்பாளனுக்கு சுதந்திரம் மிகமிக முக்கியம். அதை அவனிடம் பறிக்கும் நடவடிக்கைகளில் இறங்காமல் இருப்பது கலைக்கு நல்லது.

உண்மையாக நடந்த சம்பவம் என்பதால் அதன் வீரியம் சற்றும் குறையாமல், எந்தவிதமான வணிகசினிமா கலப்பும் இல்லாமல், தமிழ் மக்களின் மறைக்கப்பட்ட, அறியப்படாத வாழ்க்கையை அச்சில் ஒரு படைப்பாக கொண்டு வந்து, அதை அழியாத சாட்சியாக ஆவணப்படுத்தி இருக்கும் இந்த அற்புதமான உழைப்புக்காக பாலாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இப்படி நம் சொந்த மக்களின் அடிமை வாழ்க்கையை கண்முன் விரித்துக் காட்டி, அவர்களை உறக்கத்தில் இருந்து விழித்தெழச் செய்ய வேண்டியது காலத்தின் அவசியம் என்பதைப் புரிந்து கொண்டு, தமிழ் சினிமா தன் தடங்களை மாற்றிக் கொண்டு புதிய தளத்தில் பயணிக்கத் தொடங்கினால் அதற்கு இந்த பாலாவின் பரதேசி ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும்.

No comments:

Post a Comment