Wednesday 26 December 2012

நீதானே என் பொன் வசந்தம்:


வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த படம். பெரும்பாலும் கெளதம் படங்கள் மிகப்பெரிய கலை பொக்கிச படங்களாக இல்லாமல் இருந்தாலும் அவை எப்போதுமே என் மனதுக்கு சற்று நெருக்கமானதாகவே இருந்திருக்கின்றன. உதாரணமாக மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு விண்ணை தாண்டி வருவாயா, போன்ற படங்களை சொல்லலாம். இந்த பட்டியலில் விடுபட்ட பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் கூட குறைபாடு உள்ள படங்களாக தெரிந்ததில்லை..

கதை, வசனங்கள், வித்தியாசமான கேமரா ஆங்கிள், புதிய முயற்சியிலான கலர் டோன் இப்படி நம்மை கட்டிப் போடும் விசயங்கள் இருந்தாலும், அதையும் மீறி பெரும்பாலும் ஒரு பெண்ணின் நுணுக்கமான மன உணர்வுகளை பிசகாமல் பிரதிபலிக்கும் இவரகு பாங்கு என்னை மற்ற எல்லா அம்சங்களையும் மீறி ஆக்ரமித்துக் கொள்ளும்… அவை ஒரே மாதிரியான பாணியிலான கதைகளாகவே இருந்தாலும் (ஆணின் காதலை ஏற்றுக் கொள்ளவா வேண்டாமா…? என்கின்ற ஒரு உச்சகட்ட குழப்ப நிலையில் அந்த பெண் கதாபாத்திரங்கள் புனையப்பட்டிருக்கும்…) அவை என்னை எப்போதும் சளிப்படையவோ அல்லது அயர்ச்சி அடையவோ செய்ததே இல்லை… சில நேரங்களில் இவரது படத்தை பார்த்துவிட்டு எனது நண்பர்களுடன் இதில் எதெல்லாம் இவரது வாழ்வில் நடந்திருக்கும் என்று மிகவும் காரசாரமாக விவாதித்து அதை நிருபிக்கும் முயற்சி வரைக்கும் நான் சென்றிருக்கிறேன்….

உதாரணமாக விண்ணை தாண்டி வருவாயாவில் ஹீரோ ஒரு உதவி இயக்குநர், அவனது காதலி ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கு காரணமாகவும், வீட்டில் சம்மதிக்காத காரணத்தாலும் பிரிந்து செல்கிறார். இந்த ஹீரோவான உதவி இயக்குநர், இயக்குநராகும் தனது முயற்சியில் தனது காதல்கதையையே தன் முதல் படமாக எடுக்கிறார். ஆனால் அதில் தன் காதலி பிரிந்து செல்லாமல் தன்னை திருமணம் செய்வது போன்று காட்சிப்படுத்தி இருப்பார். அதை பார்க்க தற்போது திருமணம் ஆகி இருக்கும் தன் பழைய காதலி ஜெஸியை அழைத்து வருவார். படம் பார்த்த ஜெஸி அழுது கொண்டே கூறுவார்…. “என்ன அழ வைக்காத கார்த்திக், நான் ஒண்ணும் அவ்வளோ நல்லவ இல்லியே…. நாந்தா உன்ன விட்டு போய்ட்டேனே” அதே திரைப்படத்தில் ஆரம்ப காட்சியில் திருமண கோலத்தில் இருக்கும் ஜெஸி, தன் காதலன் கார்த்திக்கின் நினைவால் திருமணத்தையே நிறுத்திவிடுவார்.

இப்போது அப்படியே கெளதமின் முதல் படத்திற்கு வாருங்கள்… “மின்னலே” இதில் க்ளைமாக்ஸ் காட்சியில் தனது திருமணத்தை நிறுத்தி விட்டு மாதவனுக்காக திரும்பி வருவார் ரீமாசென்… காதல் கைகூடிவிடும். இந்த மின்னலே என்கின்ற கெளதமின் முதல் படத்தை அவர் தன் காதலி (ஜெஸி=………………………………)க்கு காட்டி இருக்கலாம். அப்போது அவர் ஜெஸி கூறிய அதே வசனங்களை கூறி இருக்கலாம்.. “என்ன அழ வைக்காத கெளதம்.. நான் ஒண்ணும் அவ்ளோ நல்லவ இல்லையே… நாந்தா உன்னவிட்டு போய்ட்டேனே…” இப்படியெல்லாம் நான் வாதிட்டு இருக்கிறேன்… ஏனென்றால் இது போல் குழப்ப நிலையில் முடிவெடுக்க முடியாமல், சிறு சிறு சண்டைகளை மனதில் வைத்துக் கொண்டு வீம்பு செய்து கொண்டு தங்களையே தண்டித்துக் கொள்ளும் பெண்கள் எனக்கும் ஓரளவுக்கு பரிச்சயம். அவர்களது குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதை இவரது படங்களை விட வேறு எந்த படங்களும் தெள்ள தெளிவாக காட்டியதே இல்லை….

சரி… உனக்கு என்னாயிற்று.. நீதானே என் பொன் வசந்தம் படத்துக்கு விமர்சனம் எழுதுறதா சொல்லிட்டு வேற எல்லா பட டயலாக்கையும் சொல்றீயேன்னு கேக்குறீங்களா…. அவுங்க பேசுன டயலாக் எல்லாம் இருக்கட்டும்…. நீதானே என் பொன் வசந்தம் பார்த்துவிட்டு நான் பேசிய டயலாக் என்ன தெரியுமா…. கண்களில் நீர் கோர்க்க…. “என்ன அழ வைச்சிட்டீங்களே கெளதம், நான் ஒண்ணும் அவ்ளோ கெட்டவன் இல்லயே…, படம் வேணான்னு சொல்லிட்டு என்னால தியேட்டர விட்டும் போக முடியாதே…”

கதையென்று பெரிதாக ஒன்றும் இல்லை… அதே காதல், அதே ஈகோ, அதே குழப்பம், கல்யாணத்தை நிறுத்தி க்ளைமாக்ஸ்….. இதில் புதியதாக நான்கு பருவ காதல். குழந்தை பருவம், பள்ளி பருவம், கல்லூரி பருவம், வேலை பார்க்கும் பருவம்.

இது ஏறத்தாழ விண்ணை தாண்டி வருவாயா படத்தின் பாஸிட்டிவ் க்ளைமாக்ஸ் வைத்த பதிவுதான்… ஆனால் VTVல் இருந்த அந்த 
அற்புதமான காதல், அழகான ஆழமான வசனங்கள், காதலின் வலி, மொத்தத்தில் அந்த திரைக்கதைக்கான உயிர், இவை எதுவுமே இல்லாத வெற்று எழும்புகூடாகவே காட்சியளிக்கிறது இந்த நீதானே என் பொன் வசந்தம்….

பல இடங்களில் எனக்கு சந்தேகமாகவே இருந்தது… இது கெளதம் படம்தானா என்று… கதை, காதல், விஸ்வல், வசனம் என எதிலுமே அவரது சாயல் தெரியவில்லையே என்று குழம்பிக் கொண்டிருந்தேன்.. நண்பன் தான் தெளிவு படுத்தினான்… இது கெளதம் படம்தான்… ”நன்றாக பார்.. தமிழ் வசனங்களுக்கு இணையாக ஆங்கில வசனங்களும் வருகிறதே..” என்று.. நான் ஆமோதிக்க வேண்டியதாயிற்று…. கெளதம் வாசுதேவ் மேனனின் படம் என்பதற்கான ஒரே ஒரு அறிகுறியுடன் வந்திருக்கும் இந்த படம்தான் ”நீதானே என் பொன் வசந்தம்…”

Monday 24 December 2012

கும்கி:



”மைனா” புகழ் பிரபு சாலமனின் அடுத்த படம். மைனா திரைப்படத்தின் வெற்றி, கும்கி திரைப்படத்தின் எதிர்பார்ப்பை ஏகத்துக்கு எகிற வைத்தது. படம் திரைக்கு வருவதற்கு முன்பே அவ்வபோது படத்தைப் பற்றிய பல தகவல்கள் கசிந்து கொண்டே இருந்தன. முதலில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் சரியில்லை என்பதால் மீண்டும் சில காட்சிகள் மாற்றப்பட்டு ரீ-சூட் செய்யப்பட்டது என்ற அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்திய படம். திரைக்கு வெளியே இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்திய படம், திரைக்கதையில் இல்லாத பரபரப்பால் கும்கி என்னும் கம்பீரத்தை இழந்து கோவில் யானையாக அசமந்தமாகவே நடை போடுகிறது..

படத்தின் கதை இதுதான். மலையடிவார கிராமம் ஒன்றில் அத்துமீறி நுழையும் காட்டுயானை ஒன்று மலைவாழ் மக்களையும் கொன்று, பயிர்களை அழித்து நாசம் செய்கிறது. மலைவாழ் மக்களுக்கு உதவ வேண்டிய அரசாங்கமோ, மலை கிராமத்தை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு குடிபெயர வழி செய்கிறது. அதை மறுக்கும் கிராமமக்கள் கும்கி யானையின் துணையுடன் காட்டு யானையினை விரட்டி இந்த முறை அறுவடை செய்கிறோம் என்று சவால்விட்டு ஒரு கும்கி யானையை அழைத்து வருகின்றனர். ஆனால் வந்தது கும்கி யானை அல்ல, வேறு வழியில்லாத காரணத்தால் இரண்டு நாள் சமாளிக்க வந்த கோயில் யானை என்பது ஊர்காரர்களுக்கு தெரியாது. கோயில் யானையின் பாகனான நாயகனுக்கு கிராம தலைவரின் மகள் மீது காதல். காதல் மீது உள்ள பற்றால் உண்மையான கும்கி யானை வர தயாராகும் போதும் அதை தடுத்து என் திருவிழா யானையை கொண்டே காட்டு யானையை விரட்டுகிறேன் என நாயகன் முடிவெடுக்க… இறுதியில் என்ன ஆனது…? ஊரும், அறுவடையும், மக்களும், கோயில் யானையும் பிழைத்தார்களா இல்லையா…? என்பது பதரவைக்காத க்ளைமாக்ஸ்.

விக்ரம்பிரபு தான் சிறுவயதில் இருந்து வளர்க்கும் மாணிக்கம் என்ற யானையை கொண்டு பிழைப்பு நடத்துபவன். அவனை ஒட்டிக்கொண்டே திரியும் தாய்மாமாவாக தம்பி ராமையாவும், உண்டியல் என்ற சிறுவனும். மார்கெட்டில் தம்பி ராமையாவின் பழக்கத்தால் ஊறுகாய், சிப்ஸ் எனத் திருடும் மாணிக்கத்திடம் கோபித்துக்கொண்டு பொம்மன்(விக்ரம் பிரபு) செல்ல.. அவன் பின்னாலேயே குழந்தை போல் ஓடிச் சென்று மன்னிப்பு கேட்டு பாசம் காட்டும் மாணிக்கம் நெகிழ வைக்கிறான்..

ஆனால் கும்கி யானை என்ற பெயரில் அவர்கள் யானையை கூட்டிக் கொண்டு ஆதிக் காட்டுக்குள் நுழைந்தவுடனே திரைக்கதை நொண்டியடிக்க ஆரம்பிக்கிறது.. இந்த காட்சியில் இருந்து கடைசி க்ளைமாக்ஸ் வரை நடக்கும் காட்சிகள் எல்லாமே கொம்பனைப் பற்றிய பில்டப்களும், ஊர்காரர்களுடன் காமெடி என்ற பெயரில் ராமையா நடத்திக் கொண்டிருக்கும் சொற்பொழிவுகளும், பல படங்களில் பார்த்து சலித்த காதல் எபிசோட் டிராமாக்களுமே.. பொம்மனான விக்ரம் பிரபுவிக்கும் மாணிக்கம் என்கின்ற அந்த கோயில் யானைக்கும் இடையிலான உறவும், அல்லி(லட்சும் மேனன்) மற்றும் பொம்மன் இடையிலான  உறவும் படத்தில் இன்னும் வலுவாக சொல்லப்பட்டு இருக்க வேண்டும்.. இரண்டுமே ஒட்டவில்லை… இறுதியில் வரும் யானை சண்டை க்ராபிக்ஸ் பயங்கர காமெடி…

காதலில் கூட வசீகரிப்பது போன்ற காட்சிகள் எதுவும் இருப்பது போல் தெரியவில்லை. நாயகியை பார்த்ததும் காதலிக்கும் நாயகன், அவனை எந்த காரணமுமின்றி காதலிக்க தயாராகும் நாயகி, இப்படி பல படங்களில் பார்த்து அலுத்துப் போன அதே காட்சிகள். மைனா திரைப்படத்தில் தம்பி ராமையாவின் காட்சிகள் ரசனையாக வெகு இயல்பாக அமைந்திருந்தது. ஆனால் கும்கியில் அவர் பேசிக் கொண்டே இருப்பது பல இடங்களில் வெறுப்பாகவே இருக்கிறது. மைனாவுடன் ஒப்பிட்டு பேச பல விசயங்கள் படத்தில் உண்டு. விக்ரம் பிரபு பாடலின் போது தரையில் படுத்துக் கொண்டு காலைத் தூக்கி ஆட்டிக்கொண்டே இருப்பது, அழகு சார்ந்த காட்சிகளில் கேமரா அதிகமாக பயணிப்பது, மைனாவை செடி கொடிகளுக்கு இடையில் வைத்து கேமரா சுற்றி சுற்றி வருவது போல் இங்கும் அல்லியை கேமரா சுற்றி சுற்றி வரும் காட்சிகள்.. இப்படி நிறைய.. அதனை தவறு என்று சொல்ல முடியாவிட்டாலும்.. அவை படத்திற்கு எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தவில்லை என்பது தான் உண்மை.

பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவுக்கு முதல் படம். குறை ஏதும் இல்லை. கொடுத்த கேரக்டரை செவ்வனே செய்திருக்கிறார். கன்னத்தில் சற்று சதை பிடித்தால் இன்னும் நன்றாக இருக்கும்… லட்சுமி மேனனுக்கு இரண்டாவது படம். பார்வையிலும், முக பாவனையிலுமே பல உணர்வுகளை எளிதாகவே கடத்துகிறார்.. தம்பி ராமையா, உண்டியலாக வருகின்ற சிறுவன், ஜீனியர் பாலையா மற்றும் உண்மையான கும்கி யானையின் பாகனாக வரும் யார் கண்ணன் முதலானோரும் கதாபாத்திரத்திற்கு மிகச்சரியாக பொருந்தி போகின்றனர்…
        
படத்தின் மையகருத்து என்ன…? காடுகளில் மனிதர்களும், அரசாங்கமும் செய்யும் அத்துமீறல்களால் வழிதடம் மாறி ஊருக்குள் வரும் காட்டு யானைகளா…? கிராம மக்களுக்கு உதவி செய்ய முன்வராமல் அவர்களை அவர்களது பூர்வீக இடங்களை விட்டு வெளியேற்றுவதிலேயே குறியாக இருக்கும் அரசாங்கமா…? காட்டு யானையை கூட கரகரவென்று சுற்றி தூக்கி எறிந்துவிடலாம் என்ற தைரியத்தை கொடுக்கும் காதலா…? என்று கேட்டால் பிரபு சாலமன் தைரியத்தை கொடுக்கும் காதல் தான் என்று சொல்லுவார் போலும்… “லவ் பண்ணுங்க சார்…. லைஃப் நல்லா இருக்கும்…” என்று சொன்னவர்தானே….

படத்தின் ஆரம்பகாட்சிகள் ஒரு வசனம் வருகிறது…”முன்னெல்லாம் கொம்பன்(காட்டு யானை) எல்லக் காடு வரைய தான் வருவான்.. இப்ப இங்க வரைக்கும் வர்றான்னா என்ன அர்த்தம்யா.. நீங்க வழிநெடுக ஓட்டல கட்டி அவன் பாதைய மறிச்சிடுறீங்க… அவன் இங்க வாரான்….” இதுதான் உண்மையும் கூட… ஆனால் படம் பார்க்கும் ஆடியன்ஸ் மனதில் கொம்பன் என்கின்ற அந்த காட்டு யானையானது ஒரு கொடூர வில்லனாகவே சித்தரிக்கப்படுகிறது…. இது போன்ற காட்டு யானைகளின் வாழ்வியல் பாதிக்கப்படுவது முதலில் வந்த அந்த வசனத்தோடு முற்று பெற்றுவிடுகிறது. காட்டு விலங்குகளின் வாழ்வியல் என்கின்ற ஒரு உண்மை நிலவரத்துக்குள் மக்களை பயணிக்க அனுமதிக்காமல் படத்தின் திரைக்கதை ஏற்கனவே நாம் பழக்கப்பட்ட ஒருவகை காதல் சார்ந்த கமர்ஸியல் மசாலாவுக்குள் நம்மை தள்ளிக் கொண்டு செல்கிறது..

பிரபு சாலமன் இமான் இருவருக்குமான புரிந்துணர்வு இதிலும் சிறப்பாகவே இருக்கின்றது. பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம்… பிண்ணனி இசையும் குறை சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது.. சுகுமாரின் கேமரா வழக்கம் போல குறிஞ்சி நில அழகை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது.

இப்படி பல குறைகள் இருந்தாலும், பெரும்பாலான ஆடியன்ஸ்க்கு படம் பிடித்தே இருக்கிறது.. நீதானே என் பொன்வசந்தத்தின் தோல்வியும், யானை தொடர்பான கதை என்கின்ற அம்சமும் மட்டுமே கும்கியின் வெற்றியை சாத்தியமாக்கி இருக்கும் என்று நம்பத் தோன்றுகிறது….

Sunday 23 December 2012

வந்தார்கள் வென்றார்கள்:



       ஆசிரியர்:    மதன் (கார்டூனிஸ்ட்)
          பிரிவு:    வரலாறு.
      பதிப்பகம்:    விகடன் பிரசுரம்.
பெரும்பாலான மக்களால் கார்ட்டூனிஸ்டாகவும், திரைப்பட விமர்சகராகவும் அறியப்படும் திரு. மதன் அவர்களால் எழுதப்பட்டு 1 இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை புரிந்த வரலாற்று புத்தகம் இந்த ”வந்தார்கள் வென்றார்கள்”.
                                                      
ஏன் இந்த தலைப்பு:
     அது என்ன வந்தார்கள். வென்றார்கள். ஏன் இந்த தலைப்பு யார் வந்தார்கள், எதை வென்றார்கள்..? என்று கேட்கிறீர்களா….. வந்தவர்கள் துருக்கியர்களும் மங்கோலியர்களும். வென்றது இந்தியாவின் நெற்றியை  மங்களகரமாக அலங்கரிக்கும் முக்கிய பகுதியான டெல்லியையும் இந்தியாவின் பிறபகுதிகளையும்……

ஏன் படிக்க வேண்டும்:
இந்த புத்தகத்தை ஏன் நாம் படிக்க வேண்டும் என்றால்,
  1.    பாட்டி வடை சுட்ட கதை கேட்க இன்றைய பிள்ளைகள் தயாரில்லை.
  2.   வேறு கதை நமக்கு தெரியாது…
  3.   இந்த புத்தகத்தில் பிள்ளைகளுக்கு கதை சொல்ல பக்கத்திற்கு குறைந்தது இரண்டு கதை உள்ளது. ஒரு வருடம் முழுவதும் கதை சொல்லலாம்.
  4.   இது கதை மட்டுமல்ல… வரலாறு என்பதால் குழந்தைகளும் குழந்தைகளோடு நாமும் இந்தியாவின் வரலாற்றை எளிதில் புரிந்து கொள்ளலாம்…
  5.  அரசு தேர்வு எழுதுவோருக்கும் இவை உதவக்கூடும்.
  6.   இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுலா சென்று வரும் போது உங்களுக்கு ஸ்தல புராணம் பற்றி கூற கைடு தேவைப்படாது…
  7. இந்த புத்தகத்தை படிக்கும் போதே அருகில் ஒரு இந்திய வரைபடத்தையும் வைத்துக் கொண்டால் இந்திய வரலாறும் முக்கிய இடங்களும் நமக்கும் குழந்தைகளுக்கும் எப்போதுமே மறக்காது…
  8.      உண்மையான வரலாறுக்கும் நாம் சமூக அறிவியல் என்ற பெயரில் படித்த வரலாறுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்துகொள்ள….
  9.     குறிப்பாக எனக்கும் இந்தியாவின் வரலாறு தெரியும் என்று சட்டை காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம்…


ஏன் வந்தார்கள்:
     இந்தியாவின் மீது நடைபெற்ற முக்கியமான படையெடுப்புகள் அனைத்தும் வடக்கில் இருந்தே நிகழ்ந்திருக்கின்றன. காரணம் என்னவென்றால், வடக்கில் இருந்த அன்றைய துருக்கிய மங்கோலிய பகுதிகள் அனைத்துமே பாலைவனப்பகுதிகள். அவர்களுக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரே மணற்பரப்பு மட்டுமே… எனவேதான் இந்தியா போன்ற சில இயற்கை வளம் மிகுந்த நாடுகளை பார்க்கும் போது, அவர்களுக்கு இயல்பாகவே அதை கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை எழுந்தது. மேலும் இந்தியாவில் அபரிமிதமான அளவில் கொட்டிக் கிடந்த தங்கம், வெள்ளி, வைரம் போன்றவையும் மற்றொரு முக்கியமான காரணம்.. இந்தியாவின் செல்வசெழிப்பை பற்றி பெரும்பாலான மன்னர்கள் ஒற்றர்களின் வாயிலாக அறிந்தே இருந்தார்கள். இதுவே பல மன்னர்கள் இந்தியாவின் மீது படை எடுக்க காரணம்…

ஏன் வென்றார்கள்:
     பெரும்பாலும் இந்திய மன்னர்களுக்கு போர் என்பது வீரம் கலந்த ஒரு பொழுதுபோக்காகவே இருந்தது. ஆகவே தற்காப்புக்காக யுத்தம் செய்வதோடு நிறுத்திக்கொண்டார்கள். ”வலிய சென்று தாக்குதலே சிறந்த தற்காப்பு” என்பதை அவர்கள் அறியவில்லை…
   துருக்கிய மங்கோலிய படை வீரர்களின் நோக்கமானது மலை, ஆறுகளை கடந்து வந்து இந்திய செல்வங்களை கொள்ளை அடிப்பதில் இருந்தது. ஆனால் இந்திய வீரர்களுக்கோ, மன்னர்களுக்கோ நாடு பிடிக்கும் ஆசை அரிதாகவே இருந்தது. மேலும் பெரும்பாலான போர்களில் இந்திய வீரர்கள் கடமைக்காகவும் வீரமரணத்திற்காகவும் மட்டுமே பங்கேற்றனர்.
   இந்திய மன்னர்களுக்கு நல்ல ஜாதிக் குதிரைகள் வளர்ப்பு என்பது எப்போதுமே புரிபடாமலே இருந்தது. சோழர்கள் கூட குதிரையை அரபு நாடுகளில் இருந்தேதான் இறக்குமதி செய்தனர். ஆனால் ஆப்கன் குதிரைபடையோ பிரத்யேக போர் பயிற்சி பெற்ற குதிரைப்படை.
   ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த இந்தியமன்னர்கள் மிகச் சிறந்த வீரர்கள். ஆனால் அவர்கள் போர்தர்மத்தை கடைபிடிக்கிறேன் என்ற பேரில் செய்த பல செயல்கள் பேராபத்தாக முடிந்தது.
   முக்கியமாக அவர்களிடம் எப்போதுமே ஒற்றுமை இல்லை. வேற்று நாட்டுப் படைகள் இந்தியாவில் நுழைவதற்கு இருந்த இரண்டே இரண்டு வழிகள் கைபர் கணவாயும், கோமல் கணவாயும் மட்டுமே… அந்த இரண்டு இடங்களிலும் சிறு கோட்டைகூட கட்ட எந்த மன்னருமே முன்வரவில்லை.. உனக்கு வரும் ஆபத்தை தடுக்க நான் ஏன் கோட்டை கட்ட வேண்டும் என்ற ரீதியிலேயே மன்னர்களின் செயல்பாடுகள் இருந்தன..

நூலைப் பற்றி:
   மொகலாய(மொகல்=மங்கோலியர்) சாம்ராஜ்யத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை இந்த நூல் மிகவும் விரிவாக விளக்குகிறது.. கி.பி 1000 நூற்றாண்டில் தொடங்கி கி.பி 1858ல் கிழக்கிந்திய கம்பெனிகளின் ஆளுமையின் கீழ் இந்தியா சென்று மொகலாய பரம்பரையின் கடைசி மன்னரான பகதூர்ஷா கைதியாக பர்மாவிற்கு கப்பலில் நாடு கடத்தப்படுவது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை உண்மைக்கு மிக அருகில் இருந்து பேசுகிறது இந்த நூல்..
       இந்த நூலில் மொத்தமாக இருபத்து ஒன்பது மன்னர்களின் வாழ்க்கை மிக ஆழமாக விவரிக்கப்பட்டு உள்ளது. அத்தனை மன்னர்களையும் நான் விவரிக்க முயன்றால் அது புத்தகத்தின் மொத்த பக்கங்களைவிட அதிகமான பக்கங்களை எடுத்துக் கொள்ளும் என்கின்ற ஐயத்தால், எனக்கு முக்கியமான மன்னர்களாக தோன்றிய ஒரு சில மன்னர்களைப் பற்றி மட்டும் சற்று விரிவாக கூற முயற்சித்திருக்கிறேன்…

டெல்லி:
   முக்கியமாக போர் நடந்த இடங்கள் எல்லாம் டெல்லியை சுற்றிய பகுதிகள் என்பதால் டெல்லியை பற்றிய வரலாறு கொஞ்சம்…
டெல்லியை பற்றிய குறிப்புகள் கி.பி736ல் இருந்து மட்டுமே எழுத்து வடிவில் கிடைக்கின்றன.. ஆனால் அங்கு தோண்டி எடுக்கப்பட்ட புதைபடிவங்கள் அனைத்தும் கிறிஸ்து பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. மகாபாரத காலத்தில் பாண்டவர்களால் யமுனை நதிக்கரையில் இந்திரசேனா என்ற பெயரில் உண்டாக்கப்பட்ட நகரமே டெல்லி..
   பாண்டவர்களுக்கு பிறகு டெல்லியின் நிலைமை யாதென்றே தெரியவில்லை.. கி.முவில் வந்த மெகஸ்தனிஸ், ஹிவான்சுவாங் போன்ற வெளி நாட்டு பயணிகளின் குறிப்பிலும் டெல்லியை பற்றி ஏதுமேயில்லை.. கி.பி 736ல் தோமர்கள்(இராஜபுத்திரர்கள்) தில்லிகா என்ற பெயரில் டில்லியை ஆண்டு வந்தார்கள்..

ப்ருத்விராஜ்:
   நமக்கு மிகவும் பரிட்சயமான ப்ருதிவிராஜ்தான் இவர். குதிரையில் சென்று சம்யுக்தையை தூக்கிவந்து மணந்தாரே அவரேதான்… இவர் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர். ராஜபுத்திர வம்சத்தின் புகழ்பெற்ற மன்னன். கடைசி மன்னனும் கூட..
   கன்னோசி நாட்டு மன்னன் ஜெயசந்திரனின் மகள் சம்யுக்தையை ப்ருதிவிராஜ் காதலிக்க… அவனுக்கு தன் மகளை மணமுடிக்க விருப்பமில்லாத ஜெயசந்திரன், அவசர அவசரமாக சம்யுக்தைக்கு சுயம்வரம் நடத்துகிறான். ப்ருதிவிராஜ்க்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. ப்ருதிவிராஜ் போல ஒரு சிலையை செய்து அரண்மனை வாயிலில் காவலனாக நிறுத்தி வைத்து கேலி செய்யவே, ப்ருதிவிராஜ் குதிரையில் வந்து சம்யுக்தையை அவளது சம்மதத்துடன் தூக்கி செல்கிறான்….

முகமது கோரி:
   கி.பி 1000ல் இருந்தே சிந்துநதி பகுதியில் ஈரானியர்கள், ஆப்கானியர்கள், துருக்கியர்கள், மங்கோலியர்கள் அனைவரும் ராஜபுத்திர இனத்திற்கு தொல்லை கொடுத்து கொண்டே இருந்தனர்… கி.பி 1191ல் ஆப்கானிய மன்னன் முகமது கோரியின் படையை ப்ருதிவிராஜ் குறுநில மன்னர்களுடன் சேர்ந்து தோற்கடித்தான்.. தோற்று ஓடிய முகமது கோரியை ப்ருதிவிராஜ் விரட்டி சென்று வெட்டவில்லை… ( ஏற்கனவே பார்த்தோமே…. போர் தர்மமாம்…?!)
    கோபம் கொண்ட முகமது கோரி 1192ல் மீண்டும் பெரும்படையுடன் வந்து போரிட்டான்… அப்போது ப்ருதிவிராஜ்க்கு கன்னோசி மன்னன் ஜெயசந்திரனிடம் இருந்து உதவி வந்திருந்தால் வரலாறு மாறி இருக்கும். கன்னோசி மன்னனும் உதவிக்கு வரவில்லை. ப்ருத்வியும் உதவி கேட்கவில்ல்லை… ப்ருதிவிராஜின் படை தோற்றது.. சிறை பிடிக்கப்பட்ட ப்ருத்விராஜ் முகமது கோரியின் முன்னால் இழுத்து செல்லப்பட.. கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த ப்ருத்விராஜின் தலை துண்டிக்கப்பட்டது. (இதுவும் போர் தர்மம்தானாம்…?!)
      ஆர்ப்பாட்டமாக டெல்லி அரண்மனையில் நுழைந்த கோரியின் படை அரண்டு போய் நின்றது. அரண்மனையில் ஒரு பிணக்குவியலே கிடந்தது. ராணி சம்யுக்தை உட்பட பிற பெண்கள் அனைவரும் தீயில் குதித்து உயிர் துறந்து இருந்தனர்….
    எல்லாவற்றையும் கொள்ளையடித்த பிறகு முகமது கோரியின் படை படையெடுத்தது மன்னன் ஜெயசந்திரனின் கன்னோசி நாட்டின் மீது. அந்த போரில் ஜெயசந்திரனும் கொல்லப்பட்டான்.. முகமது கோரியிடம் அடிமையாக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் படைத்தளபதியாக உயர்ந்த ”குத்புதீன் அய்பெக்” டெல்லியின் மன்னனாக கோரியால் நியமிக்கப்பட்டார்….
    இந்த குத்பூதீன் அய்பெக்கால் கட்டப்பட்டது தான் குதுப்மினார். கி.பி 1368ல் இதன் மேல்தளத்தை இரண்டு பால்கனியாக பிரித்து கட்டியவர்தான் பிரோஷா துக்ளக். கி.பி 1848ல் கர்னல் ராபர்ட் ஸ்மித் குதுப்மினார் ஸ்தூபியின் மீது ஏற்றி வைத்த மேற்கூரை இடி தாக்கியதால் அகற்றப்பட்டு இன்றும் குதுப்மினாருக்கு அருகில் காட்சி அளிக்கிறது….
   குதுப்மினாருக்கு அருகே அலாவுதீன் கில்ஜியால் கட்டப்பட்ட ஒரு அரைகுறை ஸ்தூபியும் இன்றளவும் இருக்கிறது……

முகமது கஜினி:
           முகமது கஜினியை பற்றி நாம் என்ன படித்தோம்…. 17 முறை தோற்றாலும் விடாமுயற்சியால் பதினெட்டாவது முறை அவர் வெற்றி பெற்றார் என்று தானே… ஆனால் உண்மையான வரலாறு அவ்வாறு இல்லை நண்பர்களே… கஜினியின் முதல் 17 படையெடுப்புகளும் கூட வெற்றிதான்… ஏனென்றால் முகமது கஜினி முகமது கோரியை போல் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் வந்தவன் அல்ல… கொள்ளையடிக்கும் நோக்கம் மட்டுமே பிரதானம்… 17 படையெடுப்பிலும் அவன் வெற்றிகரமாக கொள்ளையடித்தே திரும்பினான்.
    கி.பி 1025ம் ஆண்டு ராஜஸ்தான் பாலைவனம் வழியாக குஜராத்தில் நுழைந்த கஜினியின் படை… புகழ்பெற்ற சோம்நாத் கோயிலை நோக்கி சென்றது… கோயில் என்பதால் தாக்குவதற்கு ஆட்கள் இருக்கமாட்டார்கள் என்று கஜினி முகம்மது எண்ணினான்… ஆனால் சாதாரண குடியானவர்கள் முதற்கொண்டு பூசாரிகள் வரை அனைவரும் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு போரிட்டனர்… கோபம் கொண்ட கஜினி முகம்மது எல்லாரையும் கொல்ல உத்தரவிட்டான்… அன்று அந்த கடற்கரையில் மட்டும் கொல்லப்பட்ட சாதாரண மக்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்திற்கும் அதிகம்….
   காந்தசக்தியால் கட்டப்பட்ட மிதக்கும் சிவலிங்கம் இடித்து தள்ளப்பட்டு அதற்கு உள்ளே மறைத்து வைக்கப்பட்டு இருந்த 6 டன் தங்க நகைகளை கஜினியின் படை கொள்ளையடித்து கொண்டு சென்றது… கடலின் நீர் 50000 மக்களின் உதிரத்தை வாங்கிக் கொண்டு ரத்த சிவப்பாக காட்சியளிக்க… கஜினியின் படை அடுத்த ஊரை நோக்கி நகரத் தொடங்கியது… கஜினிக்கு ஒரு பழக்கம் இருந்தது… அவன் தோற்கடித்த மன்னர்களின் கைவிரல்களை வெட்டி சேமித்துக் கொண்டிருந்தான்.
   இப்படிப்பட்ட ஒரு காட்டுமிராண்டி கொள்ளைக்காரனை எதிர்க்கும் திறன் பெற்ற ஒரு இந்திய மன்னன் இருக்கத்தான் செய்தான்… ஆனால் அவன் என்ன காரணத்தினாலோ வட இந்தியாவில் தன் ஆதிக்கத்தை பரப்ப விரும்பாமல் கடல் கடந்து சென்று இலங்கை, சுமித்ரா, பர்மா போன்ற நாடுகளை கைப்பற்றுவதில்தான் ஆர்வம் கொண்டு இருந்தான்… அந்த மாவீரன் தான் ”ராஜேந்திர சோழன்”
    ஏனோ நமது மாவீரன் ராஜேந்திர சோழனும், அந்த காட்டுமிராண்டி கொள்ளைக்காரன் முகமது கஜினியும் சந்திக்காமலே போய்விட்டனர்… அப்படி சந்தித்து இருந்திருந்தால் வரலாறு வேறுமாதிரி மாறி இருக்கலாம்… ஆனால் இந்த முகமது கஜினி வந்ததால் தான் மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய மன்னர்களான பாபரும், அக்பரும் நமக்கு கிடைத்தனர்.. இல்லையென்றால் நாம் அவர்களை இழந்து இருப்போம்

தைமூர்:
   மங்கோலிய துருக்கிய கலப்பினத்தின் மற்றொரு காட்டுமிராண்டி, போரில் விஷ அம்பு தைத்ததால் ஒரு காலை விந்தி விந்தி நடப்பான்… இதனால் அவனை நொண்டி என்றும் சிலர் மறைமுறைமாக விளிப்பர்… ஆனால் இவன் தோல்விகண்ட போரே கிடையாது… இவனுக்கு நம் யானைப்படையை கண்டு தான் பயம்… அவர்கள் யானையையே பார்த்தது கிடையாது… பாலைவனத்தில் எங்கு போய் யானைகளை பார்க்க….
      நம் யானைப்படைகளின் யானைகளை பார்த்தவன்… வியப்புடன் இந்த கரிய குன்று போன்ற பிராணிகள் எப்படி இவ்வளவு பெரிய உருவத்தை தூக்கிக் கொண்டு இவ்வளவு வேகமாக ஓடுகின்றன.. என வியந்தான்… அடுத்து ஆணையிட்டான்… போர்களத்தில் ஏற்கனவே குத்திவைத்து மண்ணால் மூடப்பட்டு இருந்த சூலாயூதங்கள் யானைகளின் கால்களை பதம் பார்க்க… யானைகள் மதம் பிடித்து ஒடத் தொடங்கின… மேலும் வெளிவட்டத்தில் இருந்து எருமை, குதிரை இவைகளின் பின்னால் வைக்கோலை வைத்து கட்டி…. அதன் வட்டங்கள் சுருங்கிக் கொண்டே வர.. யானைகளை நெருங்கும் சமயத்தில் வீரர்கள் வைக்கோலின் மீது தீயை பொருத்திவிட…. நெருப்பு வளையம் தங்களை நெருங்குவதை கண்டு பயத்தில் பிளிறிய யானைகள், கண் மண் தெரியாமல் ஓடி இந்திய படைகளுக்கே பெருத்த சேதத்தை ஏற்படுத்தின…. ஒரு நாள் மாலைக்குள் போர் முடிந்தது…
    பிணைக்கைதியாக பிடிக்கப்பட்ட ஒரு இலட்சம் கைதிகளின் தலைகள் ஒரு மணி நேரத்திற்குள் வெட்டப்பட்டன… நேரத்தை மிச்சப்படுத்த தைமூர் தனக்கு குர்-ஆன் வாசிக்கும் முதியவர் கையிலும் ஒரு வாளையை கொடுத்து தலையை வெட்ட சொன்ன குரூரமும் நடந்தது.. அவனுக்கு யானைகளின் கலர் பிடிக்கவில்லை என்று கூறி சிவப்பு, பச்சை, மஞ்சள் கலரில் யானைகளுக்கு பெயிண்ட் அடித்து அவைகளையும், கலைஞர்கள், ஓவியர்கள், கட்டட கலை நிபுணர்கள் இவர்களுடன் யானைகளும் துருக்கிக்கு அவனோடு பயணித்தன…..

பாபர்:
  பாபரின் வாழ்க்கையில் அவர் சிலகாலம் நாடோடியாக திரிந்தது…. வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது… தனித்துவிடப்பட்ட தன் நிலையை எண்ணி பாலைவனத்தில் அழுது புலம்பியது, சாமர்கண்ட் கோட்டையில் முற்றுகைக்கு ஆளான போது, மக்களுடன் சேர்ந்து கழுதை இறைச்சியை தின்றது என பல உண்மைகளை நாம் அறிந்து கொள்ளமுடியும்.
     மேலும் பாபரின் தனிப்பட்ட இயல்புகளான, இரு நண்பர்களை தனது புஜங்களில் தொங்க சொல்லி மைதானத்தில் ஓடுவது, எந்த ஆழமான ஆற்றைக் கண்டாலும் அதில் இறங்கி ஒரு கரையில் இருந்து மற்றொரு கரை நோக்கி நீந்திக் கடப்பது(கங்கை ஆறு உட்பட…), இந்தியாவின் பல பகுதிகளை கைப்பற்றிய போதும், பாபரின் ஆசை சாமர்கண்ட் நகரையே சுற்றி வந்த தகவலும், கடைசி வரை அவரால் சாமர்கண்டை வெல்ல முடியாமல் போன துரதிஷ்டத்தை எண்ணி கலங்குவது, இந்தியாவின் வெயிலை கண்டு பின்வாங்க எண்ணிய வீரர்களிடம் பாபர் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரை, போருக்கு போக வேண்டாம் என்று தடுத்த ஜோசியரை, போரில் வெற்றி பெற்று வந்து அவருக்கு பணமும் கொடுத்து நாடு கடத்தியது….. ராஜபுத்திர வீரர்களின் வீரத்தை குறிப்பாக ராணாசிங்கின் வீரத்தைக் கண்டு மெய்சிலிர்த்தது.. என பல முக்கியமான தகவல்களை காணலாம்…

அக்பர்:
  அக்பர் தன் சிறுவயதில் தனது கார்டியனாக இருந்த பைராம்கானுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் தந்தை ஹீமாயூன் இறந்துவிடவே, மக்களுக்கு அதை தெரிவிக்காமல் வேறு ஒரு நபரை மன்னர் போல இருளான இடத்தில் அமர்த்தி நான்கு நாட்கள் ஆள செய்து.. போரில் அக்பர் வெற்றி பெற்றவுடன்.. பஞ்சாப் மாநிலத்தில் இருந்த ஒரு வயல்வெளியில் தற்காலிக மேடை அமைத்து அதில் பைராம்கான் அக்பருக்கு முடிசூட்டி மன்னராக அறிவிக்கிறார்…..
    அந்த தற்காலிக மேடையை இன்றும் கூட பஞ்சாப் மாநிலத்தில் அந்த மேடைகளுக்கு இடையில் காணலாம்…
   அக்பர் சில காலம் வளர்ப்புத்தாய் மஹாம் அங்காவின் பிடியில் இருந்தார்… அதனால் அந்த வளர்ப்புத்தாயின் சொந்தமகன் ஆதாம்கானின் அடாவடித்தனம்… அதை நேரில் கண்ட அக்பர் கோபத்தில் அவனை மேல்மாடத்தில் இருந்து கீழே தூக்கிப்போட உத்தரவு இடுவார்.. முதல் முறை போட்டும் அவன் உயிர் பிரியாததால் மீண்டும் இன்னோரு முறை மாடியில் இருந்து கீழே தூக்கிப் போட சொல்லி உத்தரவு இட.. அவன் உயிர் பிரியும்…
   இது க்ருத்திக் ரோஷனும் ஐஸ்வர்யா ராயும் நடித்த ”அக்பர்” திரைப்படத்தில் கூட இடம்பெற்றிருந்த காட்சி ஆகும்.. இந்த கதையை கூறிக் கொண்டே குழந்தைகளுக்கு அந்த திரைப்படத்தை போட்டு காண்பித்தால் அக்பரின் வரலாறு என்றுமே மறக்காது..
   எல்லா மதத்தையும் சமமாக பாவித்தவர். இந்து மதத்தை மதிக்க வேண்டும் என்பதாலேயே ராஜபுத்திர இனத்தை சேர்ந்த ஒர் இந்து பெண்ணை மனைவியாக்கி கொண்டவர். பீர்பாலுக்கும் அக்பருக்கும் இடையிலான உறவு, பீர்பால் இறந்ததை கேட்டு அக்பரின் நிலை, பைராம்கானை யானை பாகனை கொன்றதால் கடிந்து கொண்ட அக்பர், ஒற்றை கண்ணுடன் வீரமாக போர் புரிந்த ஹேமுவை அக்பர் வெல்வது, “தீன் இலாஹி” இதுவே இந்தியாவின் இப்போதைய தேவை என எல்லா மதத்திலும் உள்ள நல்ல நல்ல கோட்பாடுகளை எடுத்து புதிய மதத்தை நிறுவ முயலுவது என அக்பரின் வாழ்க்கையிலும் பல முக்கியமான தருணங்களை அழகாகவும், ஆழமாகவும் எடுத்து கூறுகிறது இந்நூல்.
   நான் மேற்சொன்ன விசயங்கள் எல்லாமே மொத்த செய்திகளில் இரண்டு சதவீதம் கூட இருக்காது என்பது திண்ணம்… இதையும் மீறி நான் ஒன்று சொல்ல வேண்டும் என்றால் ஒன்று சொல்லலாம்… நம் வீட்டில் ஏதேனும் வரலாற்று புத்தகம் இருக்கிறதோ இல்லையோ… கண்டிப்பாக இருக்க வேண்டிய, கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு வரலாற்று நூல் இந்த
                வந்தார்கள்………    வென்றார்கள்…………

Rabbit proof fence:



 2002ம் ஆண்டு வெளிவந்த ஒரு முக்கியமான ஆஸ்திரேலிய நாட்டு திரைப்படம் இந்த ”ரேபிட் ப்ரூஃப் ஃபென்ஸ்” இது ஆஸ்திரேலிய மக்களின் கலாசாரத்தை வாழ்க்கையை அச்சு அசலாக காட்டும் ஒரு திரைப்படம். புனைவு கதையல்ல… ஒரு உண்மை சம்பவத்தைக் கொண்டு எழுதப்பட்ட நாவலை தழுவி எடுக்கப்பட்ட ஒரு படம். என்னை வெகுவாக பாதித்த படங்களில் கண்டிப்பாக இந்தப் படத்திற்கும் இடம் உண்டு.

நீங்கள் சிறுவயதில் என்றாவது திருவிழா கூட்டத்திலோ அல்லது வேறு எங்காவதோ தொலைந்து போய் உங்கள் வீட்டையும் அம்மாவையும் தேடி அழுது இருக்கின்றீர்களா…? எவ்வளவு தவிப்புகள் நிறைந்த தருணம் அது.. ஆனால் இப்படி பெற்றோரையும் பிள்ளைகளையும் பிரித்து, தன் அம்மாவிடம் போக வேண்டும் என்று சொல்லி ஒரு குழந்தையை அழக்கூடிய நிலைக்கு ஒரு அரசாங்கமே தன் அதிகாரத்தைக் கொண்டு தள்ளினால் எப்படி இருக்கும்…? அதுதான் இந்த ”ரேபிட் ஃப்ரூப் ஃபென்ஸ்”
ஆஸ்திரேலியா விடுதலை பெற்ற பின்னர், பழங்குடியின மக்கள் வாழ்ந்த பகுதிகளிலும் வாணிபம் செய்யும் நோக்கத்தில் வெள்ளை நிற ஆஸ்திரேலியர்கள் அங்கு சென்று குடியமர்ந்தனர். அவ்வாறு அவர்கள் குடியமர்ந்த போது வெள்ளை நிற ஆஸ்திரேலியர்களுக்கும் கருப்பின பழங்குடி மக்களுக்கும் இடையே உறவு ஏற்பட்டு அதனால் பிறந்த குழந்தைகள் ஹாஃப் காஸ்ட் (Half castes) என்று அழைக்கப்பட்டனர். இவ்வாறு பிறக்கின்ற இந்த சந்ததியினர் எதிர்கால தலைமுறைக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்.. ஏனென்றால் அவர்களது ரத்தத்தில் aboriginal என்று சொல்லக்கூடிய பழங்குடியின மக்களின் பழக்கவழக்கங்களும் கலந்து இருக்கும்.

இத்தகைய half castes இன குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி பழங்குடி இனத்திலேயே மீண்டும் திருமணம் செய்யும் போது aboriginal என்று சொல்லக்கூடிய பழங்குடியின பழக்கவழக்கங்கள் அதிகமாக பரவும் என்பதால், அதை தடுக்கவிரும்பி சிறுவயதிலேயே இது போன்ற half castes எனப்படும் கலப்பின குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து செல்ல அரசாங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு என்று ஆஸ்திரேலிய அரசு சட்டம் இயற்றியது. இவ்வாறு பிரிக்கப்படும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் Moore எனப்படும் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட முகாமில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுவர். அவ்வாறு அவர்கள் வளரும் போது அவர்களுக்கு வெள்ளை ஆஸ்திரேலியர்களின் பழக்கவழக்கங்கள் கற்றுக் கொடுக்கப்படும். மத நம்பிக்கைகள், உணவு முறைகள் என அவர்கள் பிறந்ததில் இருந்து செய்துவந்து பழக்கவழக்கங்கள் அத்தனையையும் மாற்றி, அவர்களது கலாச்சாரமே மாற்றப்படும்..

திருமணவயதை இவர்கள் நெருங்கும் பட்சத்தில் இவர்கள் ஏதேனும் வெள்ளை நிற ஆஸ்திரேலியர்களின் வீட்டில் வேலையாளாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அந்த வீட்டில் உள்ள வெள்ளை ஆஸ்திரேலிய ஆண் அந்த கலப்பின பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஆசைபட்டால் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் வெறும் ஆசைநாயகியாக வைத்துக் கொள்ளலாம். கலப்பின ஆணுக்கும் இதே கதிதான். மொத்தத்தில் இந்த கலப்பின குழந்தைகளின் சந்ததிகள் வளரவே கூடாது. அவ்வாறு வளர்ந்தாலும் அதில் வெள்ளை ஆஸ்திரேலியனுக்கான ஜீன்கள் தான் அதிகம் இருக்க வேண்டும்.. அவர்கள் மீண்டும் தங்களது பழங்குடியின மக்களிடையே திருமணம் செய்துகொள்ள தடை விதிக்கப்பட்டது.

இந்த நடைமுறை 1970 ஆண்டு வரை வழக்கத்தில் இருந்தது. சிறு குழந்தைகள் வலுக்கட்டாயமாக பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு தனியாக ஒரு முகாமில் அடைத்து வளர்க்கப்பட்டனர்.. அவர்கள் சாகும் வரை தங்கள் பெற்றோரை பார்க்க முடியாது. அவர்கள் இனமும் விருத்தியாகாது. ஏதேனும் வெள்ளை ஆஸ்திரேலிய ஆணோ அல்லது பெண்ணோ மனம் வைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

1931ம் ஆண்டில் இது போன்று நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் ”ரேபிட் ஃப்ரூப் ஃபென்ஸ்”. மாலி, டெய்சி, கிரேஸி என்ற மூன்று சிறுமிகளும் half castes என அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்டு பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்படுகிறார்கள். பிரிக்கப்பட்ட அவர்கள் ஒரு விலங்குகள் அடைக்கும் கூண்டில் அடைக்கப்பட்டு ரயிலில் மேற்கு ஆஸ்திரேலியா நோக்கி கொண்டு செல்லப்பட்டு அங்கு மோரி ஆற்றங்கரையில் உள்ள ஒரு முகாமில் அடைக்கப்பட… அங்கு ஏற்கனவே இவர்களை போல பல குழந்தைகள் இருக்கின்றன..

இவர்கள் முகாமிற்கு வந்த அதே நாளில் முகாமில் இருந்து தப்பித்து தன் பாய் பிரெண்டை பார்க்க சென்ற சிறுமி, டிராக்கர் எனப்படும் aboriginal மனிதனால் பிடித்து வரப்படுகிறாள். தண்டனையாக அவளது தலைமுடி முழுவதுமாக அலங்கோலமாக வெட்டப்படுகிறது. அடுத்த நாள் காலையில் இந்த மூன்று சிறுமிகளும் தப்பி ஓடுகின்றனர். மற்ற இரண்டு சிறுமிகளையும் மூத்தவளான மாலி வழிநடத்தி செல்கின்றாள். டிராக்கர் தங்களை தேடிவந்து பிடித்து விடுவான் என அவர்கள் பயப்படும் போது, மழை நம் தடங்களை அழித்துவிடும், அவனால் நம்மை பிடிக்க முடியாது என்று நம்பிக்கை ஊட்டுகிறாள்.. சிறுமிகள் காணாமல் போனதை தெரிந்து கொண்டு டிராக்கர் குதிரையில் இவர்களை தேடி புறப்படுகிறான்… டிராக்கர் அவர்களை கண்டுபிடித்தானா…? அந்த மூன்று சிறுமிகளும் வீடு போய் சேர்ந்து தங்கள் தாயையும் பாட்டியையும் பார்த்தார்களா…? என்பதே கதை.

அவர்கள் பிரித்து செல்லப்பட்ட தூரம் 1200 மைல் தூரம். அவர்கள் தங்கள்  இருப்பிடத்தை கண்டறிய உதவும் ஒரே வழி, ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதிகளில் இருக்கும் வயல்வெளிகளுக்குள் முயல் மற்றும் மேய்ச்சல் விலங்குகள் புகுந்துவிடாமல் இருக்க.. மூன்று இடங்களில் 3700 மைலுக்கு போடப்பட்டு  இருக்கும் வேலியான ரேபிட் ஃப்ரூப் பென்ஸ்”தான். இந்த வேலி இவர்களது ஊரின் வழியாகவும் செல்கிறது. அதைக் கொண்டே அவர்கள் தங்கள் இருப்பிடத்தை அறியவேண்டும்..

மாலியாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பு அபாரம். அவளது உடல்மொழி நான் இதுவரை எந்த கதாபாத்திரத்திடமும் கண்டிராத ஒன்று.. இந்த மூன்று பிள்ளைகளையும் பிடிக்க பின்னால் துரத்திக் கொண்டு ஜீப் வரும்… மூன்று பிள்ளைகளும், அவர்களது தாயும் பாட்டியும் அந்த வனாந்தர பூமியில் அதிகாரியிடமிருந்து தப்பிக்க உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடுவார்கள்… அப்போது ஒரு பிண்ணனி இசை…… இப்படி ஒரு இசையை நான் என் வாழ்நாளில் கேட்டதே இல்லை… உயிரை பிழியக்கூடிய ஒரு இசை…. அந்த காட்சியை நான் பார்க்கும் ஒவ்வொரு முறையும் கண்டிப்பாக என்னையும் அறியாமல் கண்ணில் நீர் தளும்புகிறது…

இத்திரைப்படத்தை பார்க்கும் போது இனவெறி மற்றும் நிறவெறி எவ்வளவு மோசமானது என்பதும், பிற இனத்தின் வாழ்க்கையையும், கலாசாரத்தையும் இழிவானதாகவும் தன் இனத்தின், வாழ்க்கையையும் கலாசாரத்தையும் உயர்ந்ததாகவும் நினைக்கும் ஒரு குறுகிய மனப்பான்மைக்குள் தான் மனிதன் எப்போதுமே வாழ்கிறான் என்கின்ற உண்மையும் தெள்ள தெளிவாக புரிகிறது.

தன் இனம் இல்லாத மற்றொரு இனத்தையும் அதன் கலாசாரத்தையும் இருந்த சுவடே தெரியாமல் அழித்துவிட துடிக்கும் இத்தகைய மனப்பான்மையை என்னவென்று சொல்வது…? குடியமர சென்ற ஆஸ்திரேலிய ஆண்களோ, பெண்களோ பழங்குடியின மக்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாமே…? மூன்றாம் இனம் தோன்றி இருக்காதல்லவா..? அல்லது அப்படி செய்தவர்களை தண்டிக்காமல் பிறக்கும் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரிப்பது எப்படி நியாயம்…?

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இத்தகைய கீழ்தரமான செயல்களின் தொடர்ச்சியாகத்தான் இன்றும் இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் சில வன்கொடுமைகள் காட்சி தருகின்றன… நாகரீகம் அடைந்த மனிதன் என்று சொல்ல உண்மையாகவே நா கூசுகிறது…. இத்தகைய விலங்கினும் கீழான மனிதர்களின் ஒரு பகுதியாகத்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை…

   இத்திரைப்படம் ஒரு அற்புதமான வாழ்க்கைப் பதிவு…. தவறவிடாதீர்கள் நண்பர்களே….

Monday 3 December 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்:



தமிழ்சினிமாவில் இது முக்கியமான காலகட்டம் என்று நினைக்கிறேன்.. தமிழ் சினிமாவின் பிடி மெல்ல மெல்ல ஸ்டார் வேல்யூ உள்ள ஹீரோக்களின் கைகளில் இருந்து நல்ல கதையுடன் வரும் இயக்குநர்களின் கைக்கு மாறிக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. ஏனென்றால் மாஸ் ஹீரோக்கள் நடித்த படங்கள் எல்லாம் மண்ணைக் கவ்விக் கொண்டிருக்க, கதையை நம்பி புதுமுகங்களுடன் களம் இறங்கும் இளம் இயக்குநர்களின் படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்து கொண்டிருக்கின்றன. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் சுப்ரமணியபுரம், களவாணி, அட்டகத்தி, பீட்சா.. இந்த வரிசையில் இப்போது ”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்..”

கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றும் கிடையாது.. இங்கு கதையை ஒரு பத்தியில் சொல்வதால் உங்கள் சுவாரஸ்யங்கள் படம் பார்க்கும் போது எந்தவிதத்திலும் குறைந்துவிடாது என்பதால்……

    இரண்டு நாட்களில் திருமணத்தை வைத்துக் கொண்டு ஹீரோ ப்ரேம் (விஜய் சேதுபதி) தன் நண்பர்களுடன் விளையாட செல்ல… அங்கு கேட்சை பிடிக்கப் போய் தடுமாறி விழுந்து மண்டையில் அடிபட.. கடந்த ஓராண்டு காலமாக நடந்த விசயங்களை மறந்துவிடுகிறார். இந்நிலையில் அவரது கல்யாணம், ரிசப்சன் இவை நடந்ததா..? இல்லையா..? உடன் சென்ற நண்பர்கள் என்ன முடிவு செய்தார்கள்.. எப்படி இந்த பிரச்சனையை சமாளித்தார்கள்..? ப்ரேம் என்ன ஆனான்…? இதுதான் கதை

இந்த ஒன்லைனை வைத்துக் கொண்டு ஒரு காமெடி தர்பாரே நடத்தியிருக்கிறார்கள். விஜய் சேதுபதிக்கு இது ஹீரோவாக மூன்றாவது படம். பீட்சாவிலேயே அவரது நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது என்று பலர் கூறினாலும் எனக்கு என்னவோ இந்த படத்தில் தான் அவர் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.. இந்த படத்தில் மொத்தத்து அவருக்கு 5 அல்லது 6 வசனங்கள் தான். ஆனால் ஒவ்வொரு வசனத்தையும் அவர் 5 அல்லது 6 இடங்களில் பேச வேண்டும். மனுசர் ரணகளப்படுத்தி இருக்கிறார். அதிலும் கல்யாணப் பெண்ணை பார்த்துவிட்டு ஒரு ரியாக்சன் கொடுப்பாரே தியேட்டரே குலுங்குகிறது. ஹாட்ஸ் ஆப் சேதுபதி..

ஹீரோவை தவிர படத்தில் பெரும்பாலான ஆட்கள் புதுமுகங்கள். ஆனால் அதற்கான அறிகுறியே தெரியவில்லை. அவ்வளவு இயல்பான நடிப்பு. அதிலும் குறிப்பாக விஜய் சேதுபதியின் நண்பர்களாக வரும் அந்த 
சரஸ், பப்ஸ் மற்றும் இன்னொரு நண்பரின் நடிப்பு மிக அருமை. சரஸ்க்கு சற்று சீரியஸான ரோல். ப்ரேமுக்கு மிக நெருக்கமான நண்பன் என்பதால் அவரை முழுமையாக கையாளும் பொறுப்பு இவருக்கு. இதனால் இவர் சம்பந்தபட்ட சில காட்சிகள் மட்டும் செண்டிமெண்ட் ரகம். ஆனால் இவர் ப்ரேமிடம் கேட்கும் அந்த வசனமான “நான் சொன்னா கேப்பியா..? மாட்டியா..? என்ற வசனத்தை அவர் சொல்வதற்கு முன் ஆடியன்ஸ் சொல்லி கத்துவதன் மூலமே தெரிகிறது அந்த கேரக்டர் எந்த அளவு ரீச் என்பது..

மற்ற இரண்டு நண்பர்கள் தான் மொத்த காமெடியையும் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள்.. கிரிக்கெட் ஆடும் போது ஆரம்பிக்கும் இவர்களது ஆர்பாட்டம் க்ளைமாக்ஸ் வரை தொடர்கிறது. சீரியஸாக கிரிக்கெட் ஆடுவது, கிரிக்கெட் சீரியஸாக ஆடியதால் தான் நண்பனுக்கு இப்படி ஆகிவிட்டது என தங்களை நொந்து கொள்வது, ப்ரேமின் கேள்விக்கு பதில் சொல்ல பயந்து அவனை மாற்றி மாற்றி பைக்கில் ஏற்றி செல்வது, காதலியின் முகத்தை பார்த்ததும் அவனுக்கு எல்லாமே ஞாபகம் வரும் என்று நம்புவது, அதற்கு உல்டாவாக அங்கு நடக்கும் களேபரம், ஹாஸ்பிட்டலில் இருந்து கொண்டே ஆபிஸில் இருப்பது போல் போன் பேசுவது, சலூன் கடையில் அவனது வாயில் வெள்ளரியை வைத்து சமாளிப்பது.. இப்படி நான் சொல்லத் தொடங்கினால் படத்தில் வரும் எல்லா காட்சியையுமே சொல்ல வேண்டி இருக்கும்.. அப்படி அதகளப்படுத்தி இருக்கிறார்கள்…

இப்படி ஒட்டு மொத்த தியேட்டரே குலுங்கி குலுங்கி சிரிப்பதை பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன… அது சமீபத்தில் மசாலா கபேயில் சற்று நிறைவேறியது. இந்த படத்தின் மூலம் முழுவதுமாக நிறைவேறி இருக்கிறது. குறையென்று சொல்லப் போனால் பர்ஸ்ட் ஆப் சற்றே இழுவை ரகம்.. பேசியதையே மீண்டும் மீண்டும் பேசும் காட்சிகள் சில இடங்களில் பொறுமையை சோதிக்கின்றன. இரண்டாம் பாதியில் படம் ஜெட் வேகத்தில் பரக்கிறது. ஆனால் கடைசி இருபது நிமிடங்களில் சீக்கிரம் முடிங்கப்பா என்ற எண்ணம் தோன்றிய பிறகுதான் க்ளைமாக்சே வருகிறது.. கதை, சஸ்பென்ஸ், திருப்பங்கள், அறிவுரைகள், லாஜிக், இப்படி எந்த ஒரு கச்சடாவும் இல்லாமல் காட்சிக்கு காட்சிக்கு சிரிக்க வேண்டும் என்பதை மட்டுமே மனதில் வைத்து எடுக்கப்பட்ட படம் போல் தோன்றுகிறது. ஆனால் வழக்கமான தமிழ் சினிமாவின் பாணியில் இருந்து மாறுபட்ட கதைக்களம் என்பதே இந்த படத்தின் பெரிய ப்ளஸ்..

கடைசியில் இது ஒளிப்பதிவாளர் ப்ரேமின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் என்று வேறு சொல்லிவிடுவதால் நம்புவதை தவிர வேறுவழி இல்லை. பாடல்கள் என்று எதுவும் பெரிதாக கிடையாது.. பிண்ணனி இசை பரவாயில்லை ரகம்.. கேமராவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை… ஹீரோயினை பற்றி சொல்லவே இல்லையல்லவா… இப்படி படம் பார்க்கும் போதும் நினைக்க தோன்றும்.. அப்படி தோன்றிய பின்னர்தான் ஹீரோயினே வருவார்… 18 வயசு படத்தில் நடித்த பெண் தான் ஹீரோயின். அவருக்கு நடிப்பை வெளிப்படுத்த பெரிதாக வாய்ப்பு ஏதும் இல்லை. கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

பாலாஜி முரளிதரனுக்கு இது முதல்படம். முதல்படமே வெற்றிப்படமாக அமைந்திருப்பதற்கு வாழ்த்துக்கள் பாலாஜி.இந்தபடம் இந்த வருடத்திற்கான மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றாக அமையும் என்றே தோன்றுகிறது.. போய் ஒரு மூன்று மணி நேரம் எதைப் பற்றியும் யோசிக்காமல் சிரித்துவிட்டு வாருங்கள்.

Saturday 1 December 2012

நீர்ப்பறவை:



”தென் மேற்கு பருவக்காற்று” சீனு ராமசாமியின் அடுத்த படம். மீனவர்களைப் பற்றிய கதை என்பதால் இலங்கை கடற்படையால் கொல்லப்படும் தமிழக மீனவர்களைப் பற்றிய தகவல்கள் அதிகமாக இருக்கும் என்ற எண்ணத்துடன் திரையரங்குக்கு சென்றால் ஏமாற்றமே மிஞ்சும்.. மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் சென்றால் ஒரு நல்ல திரைப்படத்தை கண்ட அனுபவம் கிடைக்கும்..

ஊருக்குள் கடன் வாங்கி குடித்துக் கொண்டு திரியும் நாயகன்… சுவிசேசம் செய்து கொண்டிருக்கும் நாயகி.. நாயகியின் மீது ஏற்பட்ட காதலால் நாயகன் திருந்தி, சொந்த போட் ஒன்றை வாங்கி வாழ்வின் நல்ல நிலைக்கு உயரும் வழக்கமான தமிழ் சினிமா கதைதான்… புதுசு என்னவென்றால் க்ளைமாக்ஸ் மற்றும் யாரும் தொட்டிருக்காத.. தொடத் தயங்கும் கதைக் களனை எடுத்தது.. அதற்காகவே சீனு ராமசாமியின் குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கடலுக்கு போன தன் கணவன் (விஷ்ணு) திரும்பி வருவான் என்று   27 வருடமாக காத்திருக்கும் மனைவி (வயதான சுனைனா == நந்திதா தாஸ்). தன் மகன் வீட்டை விக்க முயலும் போதும் தன் கணவன் உயிரோடு திரும்பி வருவான்.. அவன் வரும் போது வாழ வீடு வேண்டும் என்று சொல்லி வீட்டை விற்க மறுக்கிறாள்.. அன்று இரவே தன் அப்பாவை அம்மாவே கொன்று புதைத்திருக்கிறாள் என்ற உண்மை மகனுக்கு தெரியவர… அதிர்ந்த மகன் போலீஸ்க்கு தகவல் சொல்ல… கோர்ட்டில் தன் கணவனை தாந்தான் கொன்றேன் என்று அவள் கோர்ட்டில் கூறுகிறாள்… ஏன் கொன்றால் என்கின்ற விவரணகதையாக அவர்களது கடந்தகால வாழ்க்கை விரியத் தொடங்குகிறது…

முதல்பாதி முழுவதும் கதாநாயகன் ஊரெங்கும் கடன் வாங்கி குடிப்பதும், ஊரில் இருப்பவர்களிடம் எல்லாம் அடிவாங்கி திரிவதுமாக இருக்க… ஒரு கட்டத்தில் கதாநாயகியை ஏமாற்றி பணம் பறித்து அவன் குடித்துவிட.. அதை தொடர்ந்து மீண்டும் பணம் கேட்டு வந்த அவன் தலைமேல் கைவைத்து ஜெபம் செய்து அனுப்ப… அவனுக்கு காதல் பைத்தியம் பிடிக்கிறது… தன் காதலி சொன்னால் என்ற ஒரே வார்த்தைக்காக அதுவரை எந்த வேலைக்கும் போகாதவன் சொந்தமாக படகு வாங்கி மீனவனாக உயர்கிறான்..

விஷ்ணு சம்பந்தப்பட்ட காட்சிகளில் அவரது உழைப்பு தெரிகிறது.. இருப்பினும் குடிச்சிவிட்டு ஊதாரியாக சுற்றி திரியும் கேரக்டருக்கு அந்த உடல்வாகுவும் முகசாயலும் பொருந்தவில்லை… ”ஏய் சர்ச் பாப்பா… சர்ச் பாப்பா..” என்று சுனைனாவை கூப்பிட்டு லந்து செய்வது, உருட்டு கட்டையை எடுத்துக் கொண்டு சாராய பானைகளை உடைத்து எரிந்துவிட்டு.. “அப்பாலே போ சாத்தானே” என தம்பி ராமையா தலையில் கைவைத்து ஜெபம் செய்வது, பாவ மன்னிப்பு கேட்க போய் 20 ரூபாய் கடன் கேட்பது என நடிப்பதற்கு பல இடங்களில் வாய்ப்பு… சுனைனா உண்மையாகவே நன்றாக நடித்திருக்கிறார்… தன் வருங்கால கணவனின் வல்லத்தை பார்த்து விட்டு ஆனந்தத்தில் அழும் போதும், அருளப்பசாமியை “மிஸ்டர் அருளப்ப சாமி… மிஸ்டர் அருளப்பசாமி” என்று அழைக்கும் போதும்… பயந்து போய் “அப்பாலே போ சாத்தானே” என்று துரத்தும் போதும் கவனம் ஈர்க்கிறார்...

சரண்யா பொன்வண்ணனுக்கு பேர் சொல்லும்படி இன்னொரு படம்… அம்மணிக்கு அம்மா கேரக்டர் கைவந்த கலையாகிருச்சின்னு நினைக்கிறேன்.. நடிப்பு ரசிக்கும்படி இருந்தாலும் சில இடங்களில் களவாணி சாயல் தெரிவதை இயக்குநர் கவனித்து தவிர்த்திருக்கலாம்.. தங்கச்சி மடம் கிராமத்தில் வள்ளம் செய்து கொடுப்பவராக சமுத்திரக்கனி கதாபாத்திரம்.. தொழிலில் காட்டும் இறுக்கமும், உதவும் போது காட்டும் நெகிழ்வும் உருக வைக்கிறது.. இந்த உடல்மொழி சமுத்திரக்கனி நடிப்புக்கு புதிது.. அருளப்ப சாமிக்கு தயாராகும் வள்ளத்தை பார்க்க… வரும் எஸ்தரை உள்ளே அழைத்து அவர் பேசும் காட்சி ரசனை…

இப்படி பாராட்ட பல விசயங்கள் இருந்தாலும்.. பல இடங்களில் கதை நகராமல் அதே இடத்திலேயே நிற்பது சலிப்பை ஏற்படுத்துகிறது… இரண்டாம் பாதியில் வரும் உப்பள கதாபாத்திரம் அவரது தங்கை கதாபாத்திரமும் கதைக்கு எந்தவிதத்தில் பொருந்துகிறது என்றே தெரியவில்லை… உப்பள தொழிலில் உள்ள கஷ்டத்தையும் சேர்த்தே.. கூறிவிடுவோமென இயக்குநர் நினைத்தாரோ என்னவோ….? மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த வேண்டிய க்ளைமாக்ஸ் காட்சிகள் மிகச் சாதாரணமாக கடந்து போவது பலவீனம்..

இதனை ஒரு கடலோர காதல்கதை என்று ஓரிரு வரிகளில் சொல்லிவிடலாம்… எந்தவித சுவாரஸ்யத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாத சாதாரண திரைக்கதை… ஆரம்ப காட்சியில் நந்திதா தாஸை போலீஸ் கைது செய்யும் காட்சியும், ஹீரோ அருளப்பசாமிக்கு (விஷ்ணு) விரோதியாக மாறலாம் என்று யூகத்தை கிளப்ப ஜோடிக்கப்பட்ட சிலுவை கதாபாத்திரமும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாதது படத்திற்கு மிகப்பெரிய மைனஸ்… மேலும் மனதை அரித்துக் கொண்டே இருந்த ஒரு கேள்வி…? இந்த படத்திற்கு நந்திதாதாஸ் எதற்கு..? அந்த காட்சிகளையும் சுனைனாவே செய்திருக்கலாமே…?

மீனவர்கள் என்பதால் பின்புலமாக கிறிஸ்துவ சமூகத்தை சேர்த்தது… பிறப்பால் மீனவனாக இல்லாதவனை இந்தியாவில் எந்த பகுதியிலும் கடலில் இறங்கி மீன்பிடிக்க அனுமதிக்கமாட்டார்கள்… என்பதும் மீன்களின் இனப்பெருக்க காலத்தில் 45 நாட்கள் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல மாட்டார்கள் என்ற தகவலும், படக்குழுவினரின் கள ஆய்வை சொல்கிறது.. கள ஆய்வில் கவனம் செலுத்தியது போல் சிறிது கதையிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்…
வசனம் ஜெயமோகனும் சீனுவும். “அப்பாலே போ சாத்தானே” ”உங்க வலைய கடல்ல வீசுங்க… என்மேல வேணாம்” “இழவு சொல்ல வந்தவன்கிட்ட இவன் ஒரு இழவு சொல்லி காசு வாங்கிட்டானாம்…” “நம்மகிட்ட ஒற்றுமை இல்லையா… மீனவனுக்குன்னு ஒரு 30 தொகுதி இருந்ததுன்னா… நம்ம குரலும் வெளிய கேக்கும்…” “நீங்க நூறு பேரு சேந்து பண்ணா போராட்டம்… நாங்க பண்ணா தீவரவாதம்…” என ஆங்காங்கே வசனம் கடலளவு ஆழம்…

பாலசுப்ரமணியத்தின் கேமரா ராமேஸ்வரத்தின் கடல் சார்ந்த அழகை அள்ளி வந்திருக்கிறது… ரகுநந்தனின் இசையில் “பற பற பற.. பறவையொன்று…” ரசிக்கும் ரகம்… பிண்ணனியிசை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை…
இன்றைய அரசியல் சூழலில் இலங்கை பிரச்சனை சார்ந்த கதையை பதிவு செய்து அதை திரையிடுவது என்பது மிக கடினம்தான்.. ஆனால் படத்தை பார்க்கும் போது அவர்கள் கடக்க நினைத்த தூரத்தில் பாதியை கூட கடக்கவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.. இருப்பினும் இது ஒரு நல்ல முயற்சி கண்டிப்பாக ஒருமுறை இந்த நீர் பறவையை கண்டு வரலாம்..  

LIFE OF PI:



2002ல் கனடா நாட்டை சேர்ந்த YANN MARTEL என்ற எழுத்தாளரால் எழுதப்பட்டு புக்கர் பரிசை வென்ற நாவல் லைஃப் ஆப் பை (LIFE OF PI). இந்த நாவலை அதே பெயரில் படமாக்கி இருக்கிறார் CROUCHING TIGER புகழ் இயக்குநர் ”ஆங் லீ”. ”3 டி” படங்களுக்கான விஸ்வலில் இது அடுத்த தளத்தை தொட்டிருக்கிறது என்றே கூறலாம்.

கதையென்னவென்றால் ப்ரெஞ்சு ஆதிக்கத்திற்கு உட்பட்டு காலணியாதிக்க நாடாக இருந்த பாண்டிச்சேரியில் வாழ்ந்த ஒரு தமிழர் தான் பராமரித்துவந்த மிருக காட்சி சாலையை மேற்கொண்டு பராமரிக்க இயலாத காரணத்தால் பிழைப்பு தேடி தன் குடும்பம் மற்றும் விலங்குகளுடன் ஒரு ஜப்பானிய நிறுவனத்தின் கப்பலில் கனடா நோக்கி பயணம் செய்கிறார்.. அந்த பயணத்தின் போது ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் கப்பல் மூழ்கி அனைவரும் இறந்துவிட.. ஹீரோவான ”ஃபை” ஒரு வரிக்குதிரை, சிம்பன்சி குரங்கு, ஒரு கழுதை புலி, மற்றும் ஒரு பெங்கால் டைகர் இவை மட்டும் ஒரு உயிர் காக்கும் படகில் தப்பிக்கின்றன…

இப்படி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் அந்த சிறுவனின் கடல் பயணம் என்னவானது என்பதை விஷ்வல் ட்ரீட்டுடன் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. சுருங்க சொல்ல போனால் கடலில் ஒரு படகில் மிருகங்களுடன் மாட்டிக் கொண்ட ஒரு சிறுவனின் கதி என்ன…? என்பதுதான்.. இது ஒன்றும் ஹாலிவுட்டுக்கு புதிது அல்ல.. Tom hanks நடிப்பில் வெளிவந்த Cast away மற்றும் Big fish போன்ற படங்கள் சில கூறுகளில் இந்த லைப் ஆஃப் பையோடு ஒத்துப் போகும்…

ஏன்…? நமக்குமே இந்த கதை ஒன்றும் புதிதல்ல… நாம் சிறுவயதில் புத்தி கூர்மையை பரிசோதிக்க ஒரு விளையாட்டு விளையாடுவோமே.. ஒரு புதிர் விளையாட்டு… ஒரு புல்லு கட்டு, ஒரு ஆடு, ஒரு புலி, ஒரு பையன், ஒரு படகு. ஆற்றை கடக்க வேண்டும்… ஆனால் ஒரு சமயத்தில் இரண்டு பேர் மட்டுமே படகில் பயணம் செய்ய முடியும்… மூன்று பேராக சென்றால் படகு கவிழ்ந்துவிடும்… முதலில் புலியை கொண்டு சென்றால், ஆடு புல்லை தின்றுவிடும்…. புல்லை தூக்கி சென்றால் புலி ஆட்டை தின்றுவிடும்.. அப்படியென்றால் முதலில் ஆடை தூக்கி செல்லவேண்டும்.. ஆட்டை அக்கரையில் விட்டுவிட்டு… அடுத்து புல்லை தூக்கி வர வேண்டும்.. இப்போது புல்லை அங்கே வைத்துவிட்டு ஆட்டை மீண்டும் தூக்கி வர வேண்டும்… இப்போது ஆட்டை இங்கே கட்டி விட்டு புலியை கூட்டி செல்ல வேண்டும்…. புலியை அங்கே விட்டுவிட்டு மீண்டும் வந்து ஆட்டை தூக்கி செல்ல வேண்டும் என்ற பதிலை சொல்கிறார்களா என்று பார்க்க புதிர் போடுவோம்.. ஆனால் அதில் சிறுவன் எப்படி புலியுடன் பயணம் செய்வான்… அவனை புலி தின்றுவிடாதா…? என்று நாம் கேள்வி கேட்கவே மாட்டோம்… அப்படி கேள்வி கேட்டால் நமக்கும் ”லைப் ஆஃப் பை” படம் கிடைத்துவிடும்…

இங்கும் அதுபோலத்தான்.. வரிக்குதிரை, கழுதைபுலி, சிம்பன்சி குரங்கு, சிறுவன், புலி… இதில் யார் யாரை காப்பாற்றுவது….? யார் யார் பிழைப்பார்கள் என்று தெரிந்து கொள்ள படத்தை பாருங்கள்…. இது போக இந்தியா மற்றும் தமிழ்மொழி தொடர்பான சில பெருமைகளும் நம் குறைபாடு தொடர்பான சில நையாண்டிகளும் இதில் உண்டு..

கதை நடக்கின்ற களம் பாண்டிச்சேரி தமிழ்நாடு என்பதால்.. தபு போன்ற நடிகைகளும், ஆங்காங்கே தமிழ் வாடைகளும் உண்டு.. இவைதவிர இந்தியாவில் மதம் என்பது ஒரு மனிதனை சந்திக்கின்ற தருணங்கள் எது மாதிரியானவை… வாழ்க்கையில் நாம் கடைபிடித்துவரும் ஒழுக்கங்கள், கோட்பாடுகள், நெறிமுறைகள் போன்ற சில விசயங்களை கேள்விக்குறி ஆக்கும் சில தருணங்கள் இந்த திரைப்படத்தில் உண்டு…

வாழ்வியலின் விதி என்பது வாழ்வது மட்டுமே… இங்கு தான் வாழ வேண்டும் என்கின்ற ஒரே காரணத்துக்காகதான் எல்லாவிதமான கொடூரங்களும் நிகழ்த்தப்படுகின்றன…. இரண்டு உயிர்களுக்கு இடையிலான வாழ்வியல் போராட்டத்தில் பாவம், புண்ணியம் என்பதே இல்லை… தன் உயிரை எப்படியாவது தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற இலக்கே ஒவ்வொரு உயிருக்கும் முன்னே வைக்கப்படுகின்றது… அது தன் உயிரை காத்துக் கொள்ளும் போது அடுத்த உயிரின் மரணம் நிகழ்ந்துவிடுகிறது… இது தர்க்கத்துக்குரிய விவாதப் பொருள்தான்…. ஆனால் நம் அன்றாட வாழ்க்கையில் நாம் இது போன்ற நிதர்சனங்களை கடந்து வந்து கொண்டுதான் இருக்கிறோம்…

ஒரு கட்டத்தில் திரைப்படம் வாழ்வியலை மீறிய ஒரு புனைவு கதையாக மைய நீரோட்டத்தில் இருந்து விலகி செல்வது போல் தோற்றமளிக்கும்.. ஆனால் அதற்கும் அவர்கள் படத்தின் இறுதியில் சரியான காரணத்தை கூறிவிடுகிறார்கள்… PI என்ற பெயர் காரணத்தை கூட அவர்கள் விளக்கமாகவே கூறிவிடுகிறார்கள்….
படத்தைப் பார்க்கும் போது இந்த காட்சிகளை எல்லாம் எப்படி செய்தார்கள்.. எப்படி படம் பிடித்தார்கள் என்று வியக்கும் அளவுக்கு பல காட்சிகள் உண்டு.. ஆனால் அவை அனைத்தும் கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ்(CG) மற்றும் பிற தொழில்நுட்ப உதவியால் செய்யப்பட்டது என்பதை அறியும் போது அதை நம்புவது இன்னும் சிரமமாகத்தான் இருக்கும்….

எப்படியும் நம் வாழ்வில் நடுக்கடலில் 20 நாட்கள் என்ன 20 நிமிடங்கள் கூட மாட்டிக் கொண்டு முழிக்கும் சூழ்நிலை பெரும்பாலும் வரப்போவதில்லை… குறைந்தபட்சம் மாட்டிக் கொள்பவர்களின் உணர்வுநிலை அதுவும் தனியாக இல்லை.. விலங்குகளுடன் மாட்டிக் கொண்டவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை குடும்பமாக சென்று ஒரு 2 மணி நேரம் பார்த்து வரலாம்…. அது உங்களுக்கு மட்டும் அல்ல… உங்கள் குழந்தைகளுக்கும்.. நல்ல அனுபவமாக இருக்கும் என்பது மட்டும் உண்மை…