Saturday 29 September 2012

சாருலதா:



சன் குழுமத்தின் முக்கிய பிரமுகரான சக்சேனாவின் தயாரிப்பில் வெளிவரும் படம்.. முதலிலேயே இது ஒரு கொரியபடத்தின் தழுவல், அவர்களிடம் அனுமதி பெற்றே இந்த படத்தை வெளியிடுகிறோம் என்று சொல்லிவிட்டார்கள். கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் உதவியாளர் இயக்கிய படம்.. ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் கதை என்பதாலும்… மாற்றானிலும் இதே இரட்டையர்கள் கதை என்பதாலும்.. இந்த படத்தை எப்படியும் பார்க்கவேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்.. படத்தின் டிரைலரே முக்கால்வாசி கதையை சொல்லிவிட்டதால் பெரியதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போய் இருந்தேன்…



வேறு நேரம் கிடைக்காததாலும்… இந்த வாரம் தாண்டவம் ரீலீஸ் என்பதால் கண்டிப்பாக படத்தை தூக்கிவிடுவார்கள் என்பதாலும் இரவு பத்தரை மணி காட்சிக்கு கமலாவிற்கு சென்றேன்.. மொத்தமே ஒரு 40 பேர்தான் இருந்திருப்போம்… என்னோடு நண்பர்களும் வரவில்லை.. இதில் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஆசாமி வேறு ஏதோ பேய் கதை சொல்லிவிட்டு அவனது நண்பனிடம் “இருந்தாலும் நைட்டு வந்திருக்க வேணாம்…” என்று சொன்னதும்… அவன் என்னிடம் சொல்லியது போலவே இருந்தது… ஒரு சிறிய கலக்கம்…


படம் தொடங்கியவுடன் அது அதிகமானது… காரணம் சுந்தர் சி. பாபுவும் ஆள் அரவம் இல்லாத தியேட்டரும்.. உண்மைலயே பேய் படத்தை ஆள் இல்லாத தியேட்டர்ல உட்கார்ந்து பாக்கவும் ஒரு தில்லு வேணும்… கவனத்தை படத்தில் குவிக்க முயன்றாலும்.. என் மனமோ “இருந்தாலும் நைட்டு வந்திருக்க வேணாம்…” என்ற வாக்கியத்தையே அசை போட்டுக் கொண்டு இருக்க… அவ்வபோது வீட்டுக்கு திரும்பி போகும் போது இந்த இந்த இடத்தில எல்லாம் லைட்டு இருக்காதேன்னு வேற நினைப்பு ஓடுது…
சரின்னு அதையும் மீறி படத்தை கவனிச்சா.. முன்னாடி உக்கார்ந்தவன் தொல்லை தாங்கமுடியல… எப்ப ப்ளாஸ்பேக் வரும் எப்ப ப்ளாஸ்பேக் வரும்னு உசிர எடுத்துகிட்டு இருக்கான்… ஏண்டாப்பா..னு கேட்டா…” இல்ல ப்ளாஸ்பேக்ல பேய் வராதுல்ல…:” அப்டிங்கிறான்.. இவிங்க நம்மள கொல்லாம விடமாட்டாங்க போலருக்கேன்னு நினைச்சிட்டு படத்த பாத்தா… நல்லவேளை.. நம்மூரு பேய் படந்தான…! பெருசா வெள்ளசேலையாது எதிர்பார்த்தேன்… அதுவும் இல்லாம ஏதோ உருவத்தையும் சத்தத்தையும் காட்டியே முடிச்சிட்டதால பெரிய பயம் இல்லாம போச்சி…


சரி என் கதை போதும்.. படத்தோட கதைக்கு வருவோம்.. ஒட்டி பிறந்த ரெட்டை குழந்தைகள், 20 வருசம் சேந்தே இருக்காங்க.. வயலின் கிளாஸ் கத்துக்க வந்த இடத்தில ஹீரோவ பாத்து சாரு, லதா ரெண்டு பேரும் காதலிக்க… அவரு சாருவ மட்டும் காதலிக்கிறாரு….(அவரு ரொம்ப நல்லவருங்க…) இதனால சாருக்கும் லதாவுக்கு ஈகோ முட்டிக்க… மனசளவுள பிரிஞ்ச ரெண்டு பேரையும் உடம்பாலயும் பிரிச்சிருவோம்னு டாக்டர் டிரை பண்ண… லதா செத்துருது… சரி அவதான் செத்துட்டாலே.. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு இவுங்க ரெடியாக.. செத்தாலும் விட்டேனா பாருன்னு லதா எடுக்கிற ரிவெஞ்தா “சாருலதா”


படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ், பிரியாமணியும், திரைக்கதையும், பிண்ணனியிசையும் தான்…. திரைக்கதையில் வரும் ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று… பருத்திவீரனுக்கு பிறகு மீண்டும் தன் திறமையை காட்ட ஒரு நல்ல வாய்ப்பு… அதிலும் சாரு கேரக்டரை விட லதா கேரக்டருக்கே ஏகப்பட்ட வெரைட்டி காட்டும் வாய்ப்பு.. அதை முத்தழகி சரியாக பயன்படுத்திக் கொண்டாள் என்றே சொல்ல வேண்டும்… படத்தில் காமெடி செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு வரும் குண்டு ஆர்த்தியும் அவரது தம்பியும் பொருமை சோதிக்கிறார்கள்… இவர்கள் இருவரும் படத்திற்கு பெரிய மைனஸ்.. இவர்கள் காமெடி என்ற பெயரில் செய்ததைவிட.. சாமியாரை கொண்டு சீரியஸாக செய்த சில விசயங்கள்.. நல்ல காமெடியாக இருந்தது…. அதுதவிர பாடல்களும்.. ஆனால் பாடலில் ப்ரியாமணி இருப்பதால் களைப்பு தெரியவில்லை…

ஹீரோ பாவம் ஏதோ மூன்றாம் தர ஹீரோ போல.. மொத்து மொத்து என்று பிரியாமணியிடம் அடிவாங்கவே கூட்டி வந்திருக்கிறார்கள்.. இதுதவிர சரண்யா பொன்வண்ணன், சீதா போன்றோரும் உண்டு.. மொத்தம் பிரதானமான கதாபாத்திரங்கள் என்று பார்த்தால் 8 கதாபாத்திரங்கள் மட்டுமே… ஆஸ்பிட்டல், வீடு என்று மாற்றி மாற்றி சுற்றும் திரைக்கதை என்பதால் சில இடங்களில் சோர்வு தட்டுவதை தவிர்க்கமுடியவில்லை.. மொத்த கதாபாத்திரங்களையும் செட்டையும் பார்க்கும் போது என்ன பட்ஜெட்டாக இருக்கும் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை..

மொத்தத்தில் ஒரு சாதாரண பொழுதுபோக்குப்படம்… நேரத்தை எப்படி கொல்லலாம் என்று நினைக்கும் போது… சாருவை லதா கொன்றாலா இல்லையா… என்று ஒரு எட்டு பார்த்து வரலாம்… தப்பில்லை…. மேலும் பிரியாமணி ரசிகர்கள் கண்டிப்பாக தவறவிடக்கூடாத படம்… ஏனென்றால் பேய் என் தூக்கத்தை கெடுத்துவிடும் என்று எதிர்பார்த்தேன்.. ஆனால் தூக்கத்தை கெடுத்தது  பேய் அல்ல… பிரியாமணி….!

சாட்டை:



பிரபு சாலமனின் தயாரிப்பில் அவரது உதவி இயக்குநரின் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வந்திருக்கும் படம். முதலில் ஒரு வலுவான கருத்தை எடுத்துக் கொண்டு அதை திரையில் கதையாக சொல்ல முயன்ற முயற்சிக்கு பாராட்டுக்கள். ஆனால் இது போன்ற ஒரு நல்ல கதைக்களம் அமைந்துவிட்டால் மட்டுமே படம் வெற்றிப்படமாக அமைந்துவிடுமா என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை என்றே சொல்ல வேண்டி இருக்கும்.. அதற்கான சமீபத்திய உதாரணம் தான் இந்த சாட்டை..

சிறப்பான தேர்ச்சி சதவீதத்தை காட்ட போராடிக் கொண்டு இருக்கும் ஒரு அரசு பள்ளி… அங்கு பணிபுரியும் பொறுப்பற்ற ஆசிரியர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறும்….!? தலைமை ஆசிரியர்.. அப்பள்ளிக்கு புதிதாக பணியில் அமர்த்தப்படும் தயாளன்(சமுத்திரக்கனி) என்ற ஆசிரியர் எப்படி அந்த பள்ளியை முன்னேற்றம் அடையச் செய்கிறார் என்பதே கதை.. இதை பல சினிமாத்தனங்களோடு கலந்துகட்டி கூறியிருக்கிறார்கள்..

சமுத்திரக்கனி அவர்களுக்கு அந்த கம்பீரமான உடல் தோற்றமும், அந்த குரலும் ப்ளஸ். அவரது உடல்மொழியை விட குரல் மொழி நன்றாக நடித்திருக்கிறது. ஒரு பொறுப்பான ஆசிரியராக மாணவர்களுடன் நட்பாக பழகி அவர்களின் துன்பம் அறிந்து அதை கலைய முயற்சிப்பதும்.. அவர்களுக்கு உற்சாகம் அளித்து.. அவர்களை வாழ்க்கையில் முன்னேற்ற முயல்வதுமாக… சமுத்திரக்கனி அவர்களுக்கு திரைவாழ்க்கையில் இது ஒரு சின்ன முன்னேற்றம்…(அவர் பெரிய முன்னேற்றத்தை விரும்பவில்லை போலும்…)


பேசும் போது நாக்கு குழறும் ஒரு மாணவிக்கு பயிற்சி கொடுத்து அவளை பேச்சுப் போட்டியில் பங்கேற்க வைக்கும் அளவுக்கு மாற்றுவது.. செயல்முறை விளக்க பாடத்துடன் பாடம் எடுக்க வேண்டிய அவசியத்தை புரிந்து கொண்டு அதை மற்ற ஆசிரியர்களுக்கு எடுத்துரைக்க முயல்வது.. லேடிஸ் டாய்லெட் எப்படி இருக்கிறது என்கின்ற ஆர்வத்தில் அதைப் பார்க்க போன சிறுவனை ஊக்கப்படுத்துவது… ”நீ 12வது படிக்கும் போதுதானே வாத்தியாரின் கையை பிடித்தாய்.. நான் 9-வது படிக்கும் போதே கணக்கு வாத்தியின் கையை உடைத்துவிட்டேன்…” ”அவ உன்ன லவ் பண்ணனும்னா நீ முதல்ல நல்லா படிக்கணும்…” என அறிவுரை கூறுவதுமாக ஏதேத் சொல்லுகிறார்… செய்கிறார்…

அவர் இவ்வளவு செய்யும் போது அவருக்காக மாணவர்கள் எதுவுமே செய்யாமல் இருந்தால் எப்படி…? அவரை போலீஸ் கைது செய்ய வரும்போது ஒட்டு மொத்த பள்ளியே கூடி கட்டை, செங்கல் என போலீசை வழி மறிக்கிறது… இது போக க்ளைமாக்ஸ் காட்சியில்…. அவருக்காக எல்லோரும் சேர்ந்து கண்ணீர் வடிப்பது, அவருக்காகவே விளையாட்டு போட்டிகளில் ஜெயிப்பது என்று அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்கிறார்கள்…

இதையே எழுதிக்கொண்டு இருக்கின்றேனே…. படத்தில் வேறு எதுவுமே இல்லையா என்று கேட்டீர்களானால்,,,, வேறு எதுவுமே இல்லை என்று தான் சொல்லுவேன்… தயாளன் என்கின்ற அந்த ஒரு கதாபாத்திரத்தை தவிர வேறு எந்த கதாபாத்திரமுமே படத்தில் இயல்பாக இல்லை.. எல்லாமே சினிமாத்தனம் நிறைந்த கதாபாத்திரங்கள்.. அதில் துணை தலைமை ஆசிரியராக வலம் வரும் தம்பி ராமையாவின் கதாபாத்திரம் படு அபத்தம்.. அவர் செய்யும் அழிசாட்டியம் போதாதென்று.. சைடு டிராக்கில் பள்ளி பருவ காதல் வேறு…

இதில் ‘பிள்ளைங்க பெத்தவங்கள நம்புறாங்க.. ஆனா பெத்தவங்க தான் பிள்ளய நம்புறதில்ல…”னு டயலாக் சொல்லுமுடிச்சி… பெத்தவங்க பிள்ளைய நம்ப ஆரம்பிச்சி நீ படிக்க போம்மான்னு சொல்லி ஸ்கூலுக்கு அனுப்புனா அது… அங்க போயி பன்ற முத வேல லவ்வு…. என்ன டைமிங் பாருங்க… பின்ன எதுக்கு சார் அந்த டயலாக்….

ஒரு நல்ல கதைக்களனை எடுத்துக் கொண்ட பின்னரும் அதை ஒரு யதார்த்தமான நல்ல சினிமாவாக கொடுக்க முயலாமல்.. அதில் ஏன் இது போன்ற சினிமாத்தன்மையான மசாலாக்களை சேர்க்கிறார்கள் என்றே தெரியவில்லை.. சத்தியமாய் ஜீரணிக்க முடியவில்லை…
  
நகைச்சுவையை சேருங்கள்… வேண்டாம் என்று சொல்லவில்லை.. ஆனால் அவையும் சற்று யதார்த்த சாயலுடன் இருப்பது நல்லது… படத்தின் ஆரம்பத்தில் பள்ளியின் அறிவிப்பு பலகையில் கடன் வாங்கிவர்கள் விபரம் எழுதியிருக்கிறது.. கேட்டால் அது நகைச்சுவைக்காக… என்பார்கள்… இந்த கதைக்கான நகைச்சுவை அதுவல்ல… அது திணிக்கப்பட்ட ஒரு நகைச்சுவை..

இப்படி ஏகப்பட்ட காட்சிகள்… வாத்தியாரின் மகன் மக்கு, விரசமாக ஆடை ஆணியும் ஆசிரியை, சிறுவன் கத்தி வைத்திருப்பான் குத்திவிடுவான் என்று பயப்படும் எ.ஹெச்.எம் ஹெச்.எம்மையே கை நீட்டி அடிக்கிறார்…, தயாளனை அடிக்க ஆள் அனுப்புகிறார், தன்னை கேலி செய்யும் மாணவர்களை கண்டு கொள்ளாமல் போகின்றார்… இது எந்த வகையிலான கேரக்டரைசேசன் என்றே தெரியவில்லை… ஏகப்பட்ட குழப்பம்.. முரண்பாடு..

மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்க தயாளன் அளிக்கும் வார்த்தை விளையாட்டு தொடர்பான பயிற்சிகள், தோப்புக்கரணத்துக்கு அவர் கூறும் விளக்கம் போன்றவை நல்ல காட்சிகள் தான்.. ஆனால் அவை காட்சி கோர்வைக்கு மட்டுமே பயன்படுமே தவிர.. கதை நகர்வுக்கு அல்ல என்பதை ஏன் மறந்தீர்கள்….

இசையும், கேமராவும் கூட சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.. சமூகத்திற்கு தேவையான மிக வலுவான கதை.. ஆனால் மிக பலவீனமான திரைக்கதை… (கண்டிப்பாக இந்த கதையையே விறுவிறுப்பான திரைக்கதையாக மாற்றமுடியும்…) எனவே பல இடங்களில் கதை நகராமல் கிணற்றில் போட்ட கல் போலவே கிடக்கிறது… இருப்பினும் எத்தனையோ குப்பைகளுக்கு மத்தியில் நல்ல கதையம்சத்துடன் வந்த ஒரு படம் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்…

ஆனால்… இந்த
சாட்டையால் அடித்தால் யாருக்குமே உரைக்காது…..!

Thursday 20 September 2012

சுந்தரபாண்டியன்:



      சசிக்குமாரின் தயாரிப்பில் வரும் அடுத்த படம் என்பதாலும்.. அவரது சிஷ்யரே இயக்குநர் என்பதாலும் சுப்ரமணியபுரம், நாடோடிகள் போன்று எதாது வித்தியாசமான முயற்சியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.. ஆனால் படம் பார்த்த பின்னர் இது சுப்ரமணியபுரம், நாடோடிகள் போலவே இருக்கிறதே என்று எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.. அதே காதல், அதே டீக்கடை வாசல், அதே நண்பர்கள், அதே துரோகம்.. அதே ரத்தம்.. என நிறைய அதே.. அதே… அதே… என்ன இங்கு வேறு நண்பர்கள் (புரோட்டா சூரியை தவிர்த்து…) வேறு காதல் (லட்சுமி மேனனுடன்..) வேறு துரோகம்…

    படத்தின் டிரைய்லரே எதிர்பார்ப்பை சற்று குறைத்துவிட்டதால் பெரிய ஏமாற்றம் ஒன்றும் இல்லை… படத்தில் ஓபனிங் சாங்க், ஹீரோவிற்கான முகஸ்துதிகள் என கமர்சியல் ஹீரோவிற்கான அத்தனை கசாடாக்களுடன் அறிமுகமாகிறார் சசிக்குமார்.. பின்பு நாடோடிகள் ஸ்டையிலில் காதலுக்கு உதவப் போய் அதில் ஏற்படும் குழப்பங்களுடன்.. சுப்ரமணியபுரம் சுவடுகளுடனான துரோகங்களும் துரத்த.. கடைசியில் என்னாகிறது என்பது க்ளைமாக்ஸ்.
    படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் நேட்டிவிட்டி.. மதுரையின் மேற்குப்பகுதிகளான உசிலம்பட்டி, கண்டமனூர் போன்றவையே கதைக்களன் என்பதால் வசனங்கள் மிக யதார்த்தமான தொனியில் வந்து விழுகிறது.. படத்திற்கு சசிக்குமார் மிகப்பெரிய ப்ளஸ்.. அந்த கதாபாத்திரத்தில் அவரைத் தவிர வேறு யாரையுமே பொருத்திப் பார்க்கமுடியவில்லை.. என்ன கதைத்தான் இவரது படங்களிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்து பிணைக்கப்பட்டது போல் இருப்பதால் பல இடங்களில் எரிச்சலாக இருக்கிறது..

   ஆனால் சசிகுமாரின் ஸ்கீரின் ப்ரசன்ஸ், சில மேக்கிங் ஸ்டைல், ஆங்காங்கே புரோட்டா சூரி, சசிக்குமார் கூட்டணியின் காமெடி கைகொடுப்பதால் பாஸாகிறார் சுந்தரபாண்டியன்.. ரணகலமான சண்டை காட்சிகளை வெகு அநாயசமாக கையாள்வது சசிக்குமார் கூட்டணிக்கு கை வந்த கலை.. அது இந்த படத்திலும் சிறப்பாக அமைந்து இருக்கிறது.. என்ன இவர்கள் டிவிஸ்ட் என்று நினைக்கும் விசயங்கள் எல்லாம் வெளிப்படையாக தெரிவதால்.. பெரிய எதிர்பார்ப்புக்கு பதிலாக ஏமாற்றமே மிஞ்சுகிறது..

   சசிக்குமாரும் ஒரே தளத்தில் இயங்கிக் கொண்டு இருப்பது போல் தெரிகிறது. இது தொடரும் பட்சத்தில் அவர் தனக்கான ஓபனிங்கை இழக்க நேரிடும்.. பொதுவாக விஜயின் பட ஸ்டில்களை மட்டும் பார்த்து அது என்ன படம் என்று சொல்வது மிக கடினம்.. அது இனி சசிக்குமாருக்கும் பொருந்திப் போகும் ஆபத்து இருக்கிறது.. அதை புரிந்து கொண்டு அவர் தவிர்ப்பது நலம்..

    பாடல்களோடு ஒப்பிடுகையில் பிண்ணனியிசை பரவாயில்லை ரகம்.. விஜய் சேதுபதியும் அப்புகுட்டிக்கும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் என்றாலும் அதிலும் தங்களது திறமை வெளிப்படுத்தி இருக்கின்றனர். லட்சுமி மேனன் கவனிக்கப்பட வேண்டிய அறிமுகம்… மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ள பெரிதாக ஒன்றும் இல்லை.. எதைப் பற்றியும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் ஒரு இரண்டரை மணி நேரம் பொழுது போக வேண்டும் என்று நினைத்து வருபவர்களுக்கு சுந்தரபாண்டியன் நல்ல சாய்ஸ்.. சுந்தரபாண்டியன் சில நாட்கள் ஓடுவார்.. அதுவும் சசிகுமாருக்காக மட்டும்…

BARFI!:



      போன வார இறுதியில் பார்த்த ஒரு சிறப்பான படம். இயக்குநர் அனுராக் பாஸூ. இந்த படத்தைப் பற்றி சில மாதங்களுக்கு முன் ஆனந்தவிகடனில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பேசியிருந்தார். அதைப் படித்த போதே எனக்கு இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பொதுவாக எனக்கு இந்தி படங்களைப் பார்ப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஹிந்தியைக் கொண்டு ஓரளவிற்கு இவர்கள் இதைத்தான் சொல்ல வருகிறார்கள் என்பதை ஊகித்துவிடுவேன்.. இருந்தாலும் அதன் வசனங்களின் உட்பொருள் உட்பட அனைத்தையும் சரியாக புரிந்து கொள்ள முடியாததால்.. அந்த படத்தை முழுமையாக பார்த்த திருப்தி ஏற்படுவதில்லை.. மீண்டும் சில மாதங்கள் கழித்து சப்டைட்டிலுடன் குறுந்தகடில் பார்க்கும் போதுதான் பல விசயங்கள் புரியும்.. ஆனால் அந்த சிக்கல்கள் இந்த திரைப்படத்தில் இல்லை.

        ஏனென்றால் படத்தின் புரோட்டகோனிஸ்ட் என்று சொல்லப்படும் முக்கிய கதாபாத்திரங்களான பர்ஃபி(ரன்பீர் கபூர்) ஒரு வாய் பேசமுடியாத காது கேட்காத கதாபாத்திரம், கில்மில் (பிரியங்கா சோப்ரா) ஆட்டிச குறைபாட்டால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரம். எனவே இங்கு வசனங்கள் முக்கியத்துவம் பெறுவதில்லை.. பெரும்பாலும் கதை சொல்லல் என்பது காட்சிகளின் மூலமே நிகழ்கிறது.. காட்சிகளின் ஊடான கதையாடலுக்கு ஒரு சரியான தளம் அமைந்திருக்கிறது.. அதை அனுராக் பாஸூவின் குழுவினர் மிகச் சரியாக பயன்படுத்தி உள்ளனர் என்றே சொல்ல வேண்டும்…
       சினிமா என்பது ஒரு காட்சி ஊடகம்.. அதில் காட்டப்படும் காட்சியே அங்கே நடக்கும் கதையை விளக்கமாக பார்வையாளனுக்கு உணர்த்திவிடும்.. அதை மீறிய வசனங்கள் என்பது மிகக்குறைவான இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது விதி.. ஆனால் அதை எல்லாம் இன்னும் தமிழ்சினிமாவில் (ஏன் பெருவாரியான இந்திய சினிமாவில் கூட..) கொண்டு வரமுடியவில்லை என்பது நம் தலைவிதி.. விதிவிலக்காக சில படங்கள் அமையும்.. அதில் இந்த பர்ஃபிக்கும் நிச்சய இடம் உண்டு..

     கதையை ஒருவரியில் சொல்வதென்றால் பிறவியிலேயே காது கேட்காத வாய் பேசமுடியாத ஒரு இளைஞன், பிறவியிலேயே ஆட்டிச குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், எந்தவிதமான உடல் குறைபாடும் இல்லாத மற்றொரு பெண்… இவர்கள் மூவரையும் பிணைத்து இழுத்துச் செல்லும் வாழ்வியல் நீரோட்டமே இந்த பர்ஃபி..

    முக்கியமாக பாராட்டப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால்.. இந்த உடல் குறைபாடுள்ள கதாபாத்திரங்கள் எந்த இடத்திலும் கேலிக்குரிய கதாபாத்திரங்களாகவோ அல்லது பரிதாபத்துகுரிய கதாபாத்திரங்களாகவோ சித்தரிக்கப்படுவதில்லை.. இவர்களது உடல் பலகீனத்தைக் காட்டி நம்முடைய கண்களில் இருந்து கண்ணீரை எப்படியாவது பிடுங்கி காசு பார்க்க வேண்டும் என்கின்ற ரீதியில் எடுக்கப்பட்ட காட்சிகள் இப்படத்தில் இல்லவே இல்லை… அவர்களின் வாழ்க்கை அச்சு அசலாக காட்டப்படுகிறது.. அவர்கள் அவ்வாறு பிறந்ததற்காக எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பது இல்லை.. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் அவர்கள் அந்த குறையை கண்டு கொள்ளாமல் சர்வ சாதாரணமாக வாழ்க்கையின் தருணங்களை கடந்து செல்ல முயல்கிறார்கள்.. அதுதான் யதார்த்தம்… அந்த யதார்த்தம் இங்கு பதிவாகிறது…

    இன்னும் சொல்லப்போனால் எந்தவிதமான உடல்குறைபாடும் இல்லாமல் இருக்கின்ற அந்த கதாபாத்திரம் தனக்கான சந்தோசத்தை பர்ஃபியிடம் தேடி வருகிறது…. என்னவொரு அற்புதமான கருத்தியல் கோட்பாடு.. உடல் குறைபாடு இல்லாத மனிதர்களின் வாழ்க்கை மட்டும் எப்போதுமே சந்தோசமாக அமைந்துவிடுவது இல்லை.. அதுபோலத்தான் அதன் எதிர்பதமும்.. அதைப் புரிந்து கொண்டு ஒரு மிகசிறப்பான படத்தைக் கொடுத்த இந்த குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்..

     நீங்கள் இந்தப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.. நீங்கள் படத்திற்கு செல்வதற்கு முன்னர் சில விசயங்களை உங்களுக்குள்ளாகவே கேட்டுக் கொண்டு படத்திற்கு செல்லுங்கள்.. அப்போது படத்தை இன்னும் சற்று அதிகமாக ரசிக்க முடியும்.. ஒரு வாய் பேசமுடியாத இளைஞன்.. அவன் யாரையாவது அழைக்க வேண்டும் என்றால் எப்படி அழைப்பான்…? நான் உன்னைப் பார்க்க வந்திருக்கிறேன் என்பதை எப்படி தெரிவிப்பான்..? அவசரத்திற்கு அவனை அழைக்க வேண்டும் என்றால் பிறர் என்ன செய்வார்கள்..? அவனுக்கு காது வேறு கேட்காது அதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.. அவன் வீட்டில் அழைப்பு மணியின் பயன்பாடு எத்தகையதாக இருக்கும்..? இப்படி எத்தனையோ கேள்விகளுக்கு குறும்பாகவும் புத்திசாலித்தனமாகவும் பதில் சொல்லி இருக்கிறார்கள்.. உங்கள் குழந்தைகளையும் தைரியமாக அழைத்து செல்லுங்கள்… அவர்களும் படத்தை ரசிப்பார்கள்… அவர்களோடு சேர்ந்து நாமும் புரிந்து கொள்ளலாம் உடல்குறைபாடுள்ள மனிதர்களின் உலகத்தை…
    குறையென்று சொல்லவேண்டும் என்றால் ஆரம்பகாட்சிகளில் வரும் ரன்பீர் கபூர், இலியானா காதல் தொடர்பான காட்சிகள் ஒட்டவே இல்லை.. யதார்த்த மீறல்களாகவே தெரிகின்றன.. போலீஸ் பர்ஃபியை துரத்தும் காட்சிகளும்… போலீஸ் அதிகாரியின் சில கிறுக்குத்தனமான நடவடிக்கையும் நாடகத்தன்மையில் இருக்கின்றன… லேம்ப் போஸ்ட்டில் எத்தனை தடவை மோதி விழுந்தாலும் சிறு காயம் கூட அடையாத நாயகன்… போன்ற காட்சிகள் இது போன்ற படத்திற்கு தேவையே இல்லையென்றே தோன்றுகிறது… அது போன்ற காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்..

     சிறு குழந்தையின் கையில் உள்ள சாக்லேட்டை சாப்பிடும் நாயகன், சிலை திறப்பு விழாவில் சிலையின் கைகளில் படுத்திருக்கும் நாயகன் போன்ற காட்சிகள் சார்லி சாப்ளின் வகைப்படங்களை நினைவு படுத்துவதாலும்.. ரன்பீரும் பிரியங்காவும் காரை நிறுத்துவதற்கு செய்யும் முயற்சிகள்.. போன்றவை கிக்கிஜிரோவில் இருந்து உருவப்பட்ட காட்சிகள் என்று அப்பட்டமாக தெரிவதாலும் பிற நல்ல நல்ல காட்சிகளையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது..
    ரன்பீரும், பிரியங்காவும் மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர்… இலியானாவுக்கு அறிமுகமே சொல்லிக் கொள்ளும் படி அமைந்திருக்கிறது.. வெகு நாளைக்கு பிறகு அழகாக தெரிகிறார் இலியானா.. ரவிவர்மனின் பிரமிக்க வைக்கும் உழைப்பும்.. மிகச்சிறப்பான பிண்ணனியிசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.. ப்ரதீமின் பிண்ணனியிசை மிகமிக அருமை.. பல இடங்களில் பர்ஃபியின் உணர்வுகளை நம்மிடையே கடத்தும் பணியை வெகு சிறப்பாக செய்கிறது.. நான் – லீனியர் கதை சொல்லும் முறை இப்படத்திற்கு சில இடங்களில் சிறப்பாக உதவி இருக்கிறது.
     கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டிய படம்.. நீங்களும் என்னைப் போல் ஹிந்தி தெரியாத ஆளாக இருந்தாலும் பரவாயில்லை.. தைரியமாக சென்று வாருங்கள்.. உங்களுக்கு எதுவுமே புரியாமல் போகாது என்பதற்கு நான் கேரண்டி…
     

Saturday 15 September 2012


நான்

  பள்ளி பருவத்தில் தான் திட்டமிட்டு செய்த இரண்டு கொலைகளுக்காக சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படும் கார்த்திக்.. தன் இளமை பருவத்தில் சிறையில் இருந்து வெளிவந்து இந்த சமூகத்தின் இயல்பான வாழ்க்கையுடன் தன்னை இணைத்துக் கொள்ள முற்பட… அவனது கொலைகார அடையாளத்தைக் கண்டு இந்த சமூகம் அவனை ஏற்க மறுக்கிறது.. தன் எதிர்காலம் குறித்த ஐயப்பாட்டுடன் சென்னை நோக்கி செல்லும் கார்த்திக்கு.. வேறு ஒரு மாணவனின் அடையாளத்தை பயன்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.. கொலைகாரனாகிய நான்.. என்கின்ற அடையாளத்தை உதறி.. மாணவனாகிய நான் என்கின்ற அடையாளத்தில் குடிபுகுந்து… அந்த அடையாளத்தை காப்பாற்றிக் கொள்ள அவன் எதிர்கொள்ளும் போராட்டங்களே இந்த ”நான்”.

          விஜய் ஆண்டனிக்கு கதாநாயகனாக முதல்படம்.. சில பல இடங்களில் அவர் நடிக்க முயற்சி செய்திருக்கிறார் என்பது தெரிகிறது.. நடிப்பு மோசம் என்று சொல்லமுடியாது என்றாலும்.. கடக்க வேண்டிய தூரம் அதிகம்.. சித்தார்த் அவரது பாத்திரத்திற்கு மிகச் சரியாக பொருந்திப் போகிறார். தீபா மஞ்சரியின் எதார்த்தமான நடிப்பு ஈர்க்கிறது.. அனுயாவிற்கு சொல்லிக் கொள்ளும்படியான ரோல் இல்லை.. என்பதால் சொல்லிக் கொள்ள ஏதும் இல்லை.. மக்கயாலா, தப்பெல்லாம் தப்பே இல்லை போன்ற பாடல்கள் படத்திற்கு பலம்.  இப்படி பாராட்ட பல அம்சங்கள் இருந்தாலும் சில உறுத்தல்களும் உண்டு.

      இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் என்பதால் நான் சொல்லப் போகும் சில விசயங்கள் உங்கள் சுவாரஸ்யத்தை கெடுக்கும். எனவே இதற்குப் கீழே எழுதிய விமர்சனத்தை படம் பார்த்தவர்கள் மட்டும் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

படம் பார்த்தவர்கள் மட்டும் படிக்க:

      முதல் உறுத்தல் என்னவென்றால் கார்த்திக்கின் கேரக்டர். அவரது அறிமுக காட்சியில் சொல்லப்படும் விசயம் என்னவென்றால் அவர் நன்றாக படிக்கின்ற மாணவன்.. தன் நண்பர்களின் மதிப்பெண் அட்டையில் தன் நண்பர்களுக்காக அவர்களது பெற்றோரின் கையெழுத்தை போட்டு மாட்டிக் கொள்கிறான். அதற்கு பெற்றோரை அழைத்து வரச் சொல்லி வீட்டுக்கு அனுப்பப்படும் கார்த்திக் தன் தாய் மற்றொரு நபருடன் படுக்கையை பகிர்வதை பார்த்து தன் தந்தையிடம் தெரிவிக்க.. தந்தை தூக்கில் தொங்குகிறார். தாய் மீண்டும் தவறு செய்ய.. அவர்கள் இருவரையும் வீட்டுக்குள் வைத்து கொளுத்துகிறார் கார்த்திக்.

      ஆரம்பகாட்சிகளில் தொடங்கி வேறு எந்த காட்சியிலும் நல்லவிதமான செயல்களில் (தன் நண்பனின் மதிப்பெண் பட்டியலில் அவனது பெற்றோரின் கையெழுத்தை போட்டது உட்பட) கார்த்திக் ஈடுபடுவதே இல்லை. ஆனால் அவனுக்கு தன் தாய் தவறு செய்கிறாள் என்று தெரிந்ததும் அவளை கொல்லும் அளவுக்கு கோபம் வருகிறது. தொடர்ந்து வரும் காட்சிகளில் பணம், படிப்பு தொடர்பான சான்றிதலை திருடுகிறான். நண்பன் தன் தாயைப் போன்ற அதே தவறான பழக்கம் கொண்டவன் என்று தெரிந்தும் அவனோடு ஒத்துப் போகிறான். (அவனை எதிர்க்க வேண்டாம்… ஆனால் அவனுக்கு சப்போட்டிவ்வாக பேசுவதாகவே காட்சிகள் உள்ளன..) பொய் சொல்கிறான், நாடகம் ஆடுகிறான், கொலையும் செய்கிறான், இவ்வளவு தவறுகளையும் எதற்காக செய்கிறான் என்றால் தான் ”சந்தோசமாக” வாழ வேண்டும்.. இங்கு கவனிக்கவும்… வாழ வேண்டும் என்பதற்காக அல்ல.. சந்தோசமாக வாழ வேண்டும் என்பதற்காக… செய்கிறான்.

          அவன் வாழ வேண்டும் என்று மட்டுமே நினைத்திருந்தால் அவன் சாதாரணமான ஒரு வாழ்க்கையைகூட வாழ்ந்திருக்கலாம்.. ஆனால் கார்த்திக் அவன் ஆசைபட்ட ஒரு வாழ்க்கையை வாழ துணிந்து இந்த தவறுகளை செய்யத் துவங்குகிறான். இது எதுவுமே அவனுக்கு தவறாக தெரியவில்லை. ஆனால் தன் தாய் செய்த தவறுக்காக அவளை அவன் கொலையே செய்திருக்கிறான். அது அவன் அறியாவயதில் செய்த தவறு என்று சப்பைகட்டு கட்டமுடியாது.. ஏனென்றால் அவன் வளர்ந்தபிறகும் தாயை வெறுக்கிறான். இந்த கேரக்டர் எப்படி இருக்கிறது தெரியுமா..? தன் ராஜ போக வாழ்க்கைக்காக ஒரு மாளிகையில் திருடிவிட்டு வரும் திருடன் ஒருவன்.. வழியில் பசிக்காக… திருடியவனை தர்ம அடி அடிப்பது போல் இருக்கிறது.. ஆனால் இதையெல்லாம் ஆடியன்ஸ் யோசிக்கமாட்டார்கள் என்பதற்காக அதை சரியென்று ஏற்றுக்கொள்ளமுடியவில்லை..

    மேலும் மந்திரப்புன்னகை, 18 வயசு, நான் என தொடந்து வரும் படங்களில் தாய் தவறு செய்கிறாள், தந்தை தற்கொலை செய்கிறார் என்ற மேம்போக்கான ஜோடனைகள் வெறுப்பையே தருகின்றது.. அதைப் பற்றி மேற்கொண்டு பேச விரும்பவில்லை.

    அடுத்ததாக என்ன உறுத்தல் என்றால் எதிர்பாராமல் அசோக் மரணமடைந்து விடுகிறான். அந்த நேரத்தில் அசோக்கின் அப்பாவிடம் இருந்து போன் வர.. பிணத்தை என்ன செய்வது.. போலீஸ் தன்னை சந்தேகிக்குமே என்ற குழப்பத்தில் இருக்கும் சலீமாக மாறிய கார்த்திக் எதுவும் யோசிக்க முடியாமல் போனில் அசோக் போல பேசி அவன் அந்த நேரத்தில் உயிரோடு தான் இருந்தான் என்பது போல் ஜோடிப்பது மிகச்சரி. ஆனால் அடுத்த நாள் அவனது அப்பா குடும்ப நண்பரிடம் ஒரு ஃபைலை போய் வாங்கி வா என்று சொல்லும் போது.. அவர் தன்னை பார்த்தது இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அவன் அதை ஒப்புக் கொண்டு செல்வது என்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை..

      அங்கு தாந்தான் அசோக் என்று கூறிக் கொண்டு சென்றால் அதனால் எந்தவிதமான பிரச்சனைகள் ஏற்படும் என்பதை யூகிக்க அவனுக்கு நிரம்பவே நேரம் இருக்கும் போதும் அவன் அந்த முடிவை எடுக்கிறான் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.. இது திரைக்கதையில் சுவாரஸ்யத்திற்கு வேண்டுமானால் பயன்பட்டு இருக்கலாம்.. ஆனால் அது நெருடலான விசயம் என்பதை மறுப்பதற்கு இல்லை.. ஏனென்றால் சில குழப்பமான தருணங்களில் அசோக்கின் குரலைப் போல் பேசி சமாளிக்கிறான் என்பது ஓகே..

     ஆனால் நான் தான் அசோக் என்று சொல்லத் தொடங்கினால் அதில் இருந்து தப்பிக்க இன்னும் பல கொலைகளை செய்தால்தான் முடியும் என்பது நிதர்சனமான உண்மை.. அல்லது அசோக் இறந்துகிடக்கும் இடத்திலேயே அவனது அப்பா அந்த பைலை வாங்கச் சொல்லி கேட்கிறார் என்று வைத்திருந்தால் கூட ஓகேதான்.. அல்லது அசோக்கின் நண்பன் நான்.. அவன் வேறு வேலையாக சென்று இருப்பதால் நான் வந்தேன் என்று சொன்னால் கூட ஓகேதான்.. ஏனென்றால் விசாரணையில் போலீசே சலீம் என்னும் கார்த்திக்கிடம் சொல்கிறார்.. ”கடந்த பதினைந்து நாட்களில் அசோக்கை பார்த்தவர் நீங்கள் மட்டும்தான்” என்று…

    வேறுமாதிரி சொல்வதென்றால் கார்த்திக் அந்த இடத்தில் அசோக்காக நடிக்க தீர்மானிக்கிறான் என்பது.. அந்த இடத்தில் இயக்குநர் உள் நுழைந்து விடுவதால் நிகழ்கிறதோ என்றே தோன்றுகிறது.. அதாவது அடுத்து வரும் காட்சிகளில் அசோக்கின் நண்பன் கொல்லப்பட்டு… அந்த கொலைப்பழியை அசோக்கின் மீது திருப்பி அதனால் தான் அசோக் தலைமறைவானான் என்று கதை நகர ஏதுவாக இருக்கும் என்று இயக்குநர்.. அந்த கார்த்திக் கதாபாத்திரத்தை அந்த முடிவு எடுக்க தள்ளுகிறார்.. என்று எடுத்துக் கொள்ளலாம்...

    அடுத்ததாக சலீமை சந்தேகப்பார்வை பார்க்கும் அதிகாரி அவனைப் பற்றி விசாரிக்க சொல்லி ஃபேக்ஸ் அனுப்ப.. பேக்ஸ் வந்து சேரும் அதே நேரத்தில் கையில் கட்டுடன் சென்னை ஹாஸ்பிடலில் இருக்கும் கார்த்திக்.. கையில் கட்டுகூட இல்லாமல் திருநெல்வேலியில் வந்து வீட்டு கதவைத் திறக்கும் காட்சி.. நல்ல நகைச்சுவை..

    அசோக் அப்பாவின் நண்பர் குடும்பம் பேப்பரில் கூடவா உண்மையான அசோக்கின் போட்டோவைப் பார்க்கவில்லை என்ற சந்தேகம் தோன்றும் போது தொடரும்… என்று போட்டு தப்பித்துக் கொள்கிறார்கள்…

    இப்படி சில குறைகள் இருந்தாலும் தமிழ்சினிமாவின் இன்றைய சூழலுக்கு இது ஒரு வித்தியாசமான கரு. இதை ஒரு நல்ல சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லராக கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.. ஒரு சில இடங்களில் தோன்றும் உறுத்தல்களைத் தவிர்த்து திரைக்கதையில் பெரிதாக எதும் பலவீனம் இருப்பதாக தெரியவில்லை.. கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டிய நல்ல முயற்சி.. இந்த நான்…

Sunday 9 September 2012

18 வயசு



   ரேனிகுண்டாவின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநரின் அடுத்த படம். நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து ஒருவழியாக திரைக்கு வந்துள்ள படம்… திரை மறைவில் படத்தை வெளியிடும்முன் பல விசயங்கள் நடந்ததாக பேசப்படுகிறது.. முதல்படத்தில் ஒரு சமூகமானது எப்படி சமூக விரோதிகளை உருவாக்குகிறது என்பதை யதார்த்தவியலுடன் பதிவு செய்தவர்.. இரண்டாம் படம் என்பதாலோ என்னவோ கதைக்கு ஏன் சிரமப்பட வேண்டும் என்று ஒரு காதல் கதையை கையில் எடுத்திருக்கிறார்… திரைக்கதையை எப்படி விறுவிறுப்பாக்குவது என்று யோசித்தவர் புதிதாக ஒரு மனோவியாதியை கையில் எடுத்திருக்கிறார்… அருகில் உள்ள விலங்கைப் பார்த்து அதைப் போலவே நடந்துகொள்ளும் மனோவியாதி..
     தாயின் தவறான நடத்தையால் தந்தை தற்கொலை செய்துகொள்ள.. மகனுக்கு மனநலம் பாதிக்கிறது.. அவனது அப்பா அவனுக்கு கதைகளில் கூறிய காடு மலைகளையே நிஜ வாழ்விலும் கற்பிதம் செய்து கொண்டு வாழ்கிறான்.. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தாயையே மகன் கொலை செய்துவிட.. அவனை பிடித்து தண்டனை வாங்க துடிக்கும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்.. மனநலம் பாதித்தவன் என்பதால் அவனை காப்பாற்ற துடிக்கும் ஒரு மனநல மருத்துவர்.. இதற்கு இடையில் தான் இழந்த எல்லா பாசத்தையும் ஒட்டு மொத்தமாக கொடுக்க ஒருத்தி வந்திருக்கிறாள் என்று எண்ணி அந்த மனநலம் பாதிக்கப்பட்ட நாயகன் துரத்தி துரத்தி காதலிக்கும் ஒரு பெண்.. இவர்களுக்கு இடையே நடக்கும் கதைதான் 18 வயசு..

      மீண்டும் காதல் கோஷம் போட்டுக் கொண்டு ஒரு படம்.. நம் மக்களுக்கு(என்னையும் சேர்த்தே…) படம் பார்ப்பதிலும் அதைப் புரிந்து கொள்வதிலும் ஒரு பிரச்சனை இருக்கிறது.. அது தொடர்பாக ஒரு பதிவு எழுதலாம் என்று இருக்கிறேன்.. இத்திரைப்படம் பார்க்கும் போது எனக்கு இரண்டு விதமான அனுபவங்கள் ஏற்பட்டன.. ஒன்று என் காது கிழியும் அனுபவம்… சென்னை தியேட்டர்களின் டி.டி.எஸ்க்கு காதைக் கிழிக்கும் அளவு சக்தி இல்லையே என்று எக்கசக்கமாக யோசிக்காதீர்கள்… என் காதை கிழித்தவர் என் பின்னால் அமர்ந்திருந்த ஒரு சக பார்வையாளர்… பாவம் காதலில் பல(மான) அடி வாங்கியவர் போலும்… கசிந்துருகும் ஒவ்வொரு காதல் வசனத்திற்கும் விசிலடித்தே என் காதைக் கிழித்துவிட்டார்…
         மற்றொரு அனுபவம்.. என் வாழ்நாளில் முதன்முதலாக பக்கத்துக்கு இருக்கையை நகத்தால் கிழித்த அனுபவம்.. (முக்கால்வாசி இருக்கைகள் காலியாகத்தான் இருந்தன…) முதல் பாதியில் சில காதல்…! எபிசோடுகள் வருகின்றன… மிக மிக அபத்தமான காட்சிகள்… சமீபத்தில் நான் பார்த்த மிக மிக எரிச்சலூட்டும் காட்சிகள்… அவைதான் என்னை இருக்கையை கிழிக்கும் அளவிற்கு கொண்டு சென்றன.. என்றால் மிகையாகாது… எப்படியும் படத்தை பார்த்தே தீர வேண்டும் என்ற கட்டாயம்.. (நானே ஏற்படுத்திக் கொண்டதுதான்) மோசமான காட்சிகளையே சலித்துக் கொண்டு அமர்ந்ததால்.. இரண்டாம் பாதி பரவாயில்லை ரகமாகவே தெரிந்தது… சற்று கூர்ந்து கவனிக்கும் போதுதான் தெரிந்தது.. இது மற்றொரு ஏமாற்றுவகைச் சினிமா என்பது…

     அதைப் பற்றி மேலும் பேசுவதற்குமுன் உங்களிடம் சில பிரத்யேகமான கேள்விகள்.. உங்கள் மனசாட்சியிடமே நீங்கள் பதிலளியுங்கள்.. முதலாவது கேள்வி பார்த்தவுடனே பிடித்துப் போகும் ஓரளவு அழகான ஒரு பெண்ணை நீங்களும் காதலிக்கிறீர்கள்… ஒரு வகை மனநோயால் பாதிக்கப்பட்ட இளைஞனும் காதலிக்கிறான்… அவன் உலகில் அதிகம் நேசிக்கும் ஒரு ஜீவன் அந்த பெண் மட்டும்தான்.. அவனுக்கென்று வேறு யாருமே இல்லை.. அவன் இருவரை கொலை வேறு செய்தவன் என்பதால்.. அந்த பெண்ணின் உயிருக்கும் இவனால் ஆபத்து ஏற்படலாம்… இந்த இரண்டு காதல்களில் எந்த காதல் வெற்றிபெற வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள்….?
    இரண்டாவது கேள்வி மனநிலை பாதிக்கப்பட்ட உங்கள் நண்பன் தன் தாயால் புறக்கணிக்கப்பட்ட அன்பிற்காக ஏங்கி தவிக்கும் நிலையில் இருக்கிறான்.. அவனிடம் நீயும் என்னைப் போல் ஒரு பெண்ணை காதலி… அவளது அன்பு உன்னை மாற்றும் என்று அறிவுரை கூறுவீர்களா…? அல்லது அவனுக்கு தேவையான அன்பையும் அரவணைப்பையும் செலுத்தி மருத்துவ சிகிச்சை கொடுப்பீர்களா…?
    மூன்றாவது கேள்வி.. ஒருவன் மனநிலை பாதிக்கப்பட்ட தன் நண்பனைப் பார்த்து ஒரு பெண்ணை காதலிக்கச் சொல்லி தூண்டிவி்டுவான் என்றால் உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் யாராக இருக்கும்…?
   இவைகளுக்கு நீங்களே பதிலளித்துக் கொள்ளுங்கள்… படத்தில் என்ன நடக்கிறது தெரியுமா… அந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒரு காட்சியில் பாம்பு போன்ற உடலசைவுடன் தனக்கு உதவி செய்யும் மற்றொரு காதல் பைத்தியத்தை கடித்துவிடுகிறான்… (சுயநினைவின்றியே…) ஆனாலும் அந்த மனிதன் சாவதில்லை… ஏனென்றால் அவன் சாவவது போல் காட்சி அமைத்தால் திரைக்கதை வீக்காகிவிடும்.. பார்வையாளன் நாயகன் நாயகி சேர வேண்டும் என்று நினைக்க மாட்டான்… மேலும் மனோதத்துவ டாக்டர் வேறு ஒரு காட்சியில் அவன் செய்த இரண்டு கொலையும் எமோஷ்னலில் செய்தது.. வேறு யாரையும் அவன் கொல்லமாட்டான் என்று கட்டியம் வேறு கூறுகிறார்…

    இதனால் காட்சியமைப்புகள் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் மனநிலையையும் உண்மையை சிந்திக்க விடாமல் மாற்றி அந்த காதல்ஜோடி சேர வேண்டும் என்ற குரூரமான எண்ணத்தை நம்முள் மெல்ல மெல்ல விதைக்கிறது… சரி அவந்தான் மனநலம் பாதிக்கப்பட்டவன்.. இந்த பெண்ணுக்கு என்ன தலையெழுத்து.. அப்படியென்றால் அவளையும் அனாதை ஆக்குவோம்… சரி அவளும் அநாதை… இவ்வளவு அழகான அந்த பெண்ணை வேறு யாருமே காதலிக்கவில்லையா..? அது எப்படி நடக்கும்.. அவள்தான் தழிழ் கதாநாயகி ஆயிற்றே..? அவள் மேல் முதன் முறை மோதுபவனும்.. கண்ணுக்குள் காதல் பார்வைப் பார்ப்பவனும் கதாநாயகனாக மட்டுமே இருக்கமுடியும்…
    இப்படி உண்மை வேறொன்றாய் இருக்க… அதைப் பற்றி யோசிக்க விடாமல் படத்தில் வரும் காதல் பைத்தியம் கதாபாத்திரத்தை போல.. காதல் வாழ்க.. இந்த காதல் ஜெயிக்கணும் என்று நீங்களும்.. உங்கள் எண்ணங்களும் கொந்தளிக்குமானால்… இது உங்களை ஏமாற்றும் சினிமாதானே…
   மேலும் தவறான வழியில் சென்ற தாய்.. தந்தை சுத்த ஒழுக்கசீலர்… தந்தை அட்ட கருப்பு… பிள்ளையும் அதே போல்.. தாயோ செக்க சிவப்பு… இது போன்ற பொதுப்புத்தி சார்ந்த விவரணைகள் மேலும் வெறுப்படைய செய்கின்றது… மேலும் அந்த போலீஸ் கதாபாத்திரத்திற்கு ஏன் அத்தனை வெறுப்பு நாயகன் மீது…. அதற்கு எத்தனைக் காரணங்கள் சொன்னாலும்.. அது கதையின் விறுவிறுப்புக்காக திணிக்கப்பட்ட கதாபாத்திரமாகவே தெரிகிறது.. அந்த கதாபாத்திரத்தை எடுத்துவிட்டால்.. திரைக்கதை படுமோசமாகிவிடும் என்பதும் உண்மை… மேலும் பல நாடகத்தனமான காட்சிகள்… ஒட்டவே இல்லை…
     அங்கங்கே ரேனிகுண்டாவின் சாயலும் இருக்கத்தான் செய்கிறது.. தாய் தந்தையை இழந்த நாயகன்.. நாயகியின் கற்பை சூறையாட துடிப்பவன்.. நாயகனை வெறி கொண்டு துரத்தும் போலீஸ்… போன்றவைகளை சொல்லலாம்.. சில இடங்களிலும் சில பிரேம்களிலும் குணா, காதல் கொண்டேன் படங்கள் மனதில் வந்து போவதை தவிர்க்கமுடியவில்லை.. ஒளிப்பதிவு முந்தைய படத்தைப் போல் மிகச்சிறப்பானதாக இருந்தது.. ஜானி கடக்க வேண்டிய தூரம் ரொம்பவே உள்ளது… கதாநாயகி சில காட்சிகளில் அழகாக தெரிகிறார்… செவ்வாழை மற்றும் சத்யேந்திரன் சம்பந்தபட்ட காட்சிகள் படத்திற்கு ப்ளஸ்..
     க்ளைமாக்ஸ் காட்சியின் போது கண்களை துடைத்துக் கொண்டும்.. காது கிழிய விசிலடித்த ஒரு சிலரைப் பார்க்கும் போது…. படத்தில் காதல் வாழ்க.. காதல் ஜெயிக்கணும்.. என்று சொல்லிக் கொண்டு அலையும் அந்த காதல் பைத்தியம் கதாபாத்திரம்தான் மனதில் நிழலாடியது…
     இறுதியாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்… அந்த அமைதியான சூழலில் குண்டுகள் முழங்குகின்றன.. சில பெண்மணிகள் அழுது கொண்டு இருக்கிறார்கள்.. ஒரு மெல்லிய இசை முழங்குகிறது.. வீரர்கள் அணிவகுப்பில் வந்து உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.. இறுதியில் ராஜபக்சே வந்து சிங்கள வீரர்களின் தியாகத்தை பாராட்டுகிறார்… அல்லது ஒபாமா நேட்டோ படைவீரர்களின் தியாகத்தை பாராட்டுகிறார்.. அந்த இடத்தில் அந்த சூழ்நிலையில் நீங்கள் நின்று கொண்டு இருந்தால்….. ஒரு வேளை உங்களுக்கும் அழுகை வரலாம்..
    ஆனால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வரும் போது உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்.. உங்களது ரத்தம் கொதிக்காதா…? ஒரு பொய்யான நாடகத்தை நடத்தி என்னையும் கண்கலங்க வைத்தாயே.. என்று கோபம் வருமல்லவா…? அதுதான் இது போன்ற ஏமாற்று சினிமாவைப் பார்க்கும் போதும் வர வேண்டும்… ஏனென்றால் உங்களது கண்ணீர் அவ்வளவு மலிவானதன்று…. அதை இப்படி வீணாக்காதீர்கள்… தமிழ் சினிமா இயக்குநர்கள் நம் தமிழ் மக்கள் இன்னும் இது போன்ற காதல் பைத்தியங்களாகவே இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள்..
ஏமாறாதே…… ஏமாறாதே……

Wednesday 5 September 2012


முகமூடி:
    படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக மிஷ்கின் அவர்கள் கூறிக்கொண்டது.. ”நான் குழந்தைகளுக்கான ஒரு சூப்பர்மேன் திரைப்படத்தை எடுக்கப் போகிறேன்”… ஆனால் படம் வெளிவருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் முன்பு கூறிய செய்திகளுக்கு முரணான சில செய்திகளை கூறினார்.. அவை கீழே…
     ”இது பேட்மேன், ஸ்பைடர்மேன் மாதிரியான படம் இல்லை..(அதாவது குழந்தைகளுக்கான படம்..) எம்.ஜி.ஆர் மாஸ்க் போட்டுக்கிட்டு தெள்ளத்தெளிவா ஒரு படம் எடுத்திருக்கேன்.. இதை நம்ம சமகாலத் தமிழ்ச் சூழலில் வெச்சிப் பார்க்கணும்.. எளிமையான சகல மனிதருக்கும் போய் சேரும் முயற்சி இது..”
    இது மட்டுமே அவரால் கூறப்பட்ட செய்தி அல்ல… ஆனால் அவை இந்த படம் சார்ந்த பதிவிற்கு புறம்பான விசயம் என்பதால் அதை இங்கு குறிப்பிட விரும்பவில்லை.. சரி படத்திற்கு வருவோம்… படம் சார்ந்த இயக்குநரின் கருத்திலேயே முன்னுக்குப் பின் முரணான செய்திகள் இருக்கும் போது படம் எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும்…
     இருந்தாலும் சொல்கிறேன்.. அவர் என்னதான் இது குழந்தைகளுக்கான படம் இல்லை என்று பூடகமாக சொல்லிக் கொண்டாலும்.. நான்கில் மூன்று பங்கு போஸ்டர்களில் முகமூடி அணிந்து கொண்டு ஒரு சூப்பர்ஹீரோ போல் ஜீவாவே முற்றுகை இட்டு இருந்ததால்.. ஒரு குழந்தை சூப்பர்மேன் படம் பார்க்க செல்லும் மனநிலையிலேயேதான் சென்றேன்… ஆனால் அந்த குழந்தை மனநிலையை கூட திருப்திபடுத்த முடியாத ஒரு படமாக முகமூடி இருந்தது தான் பரிதாபம்… அது தியேட்டருக்கு வந்து திரும்பிய பல குழந்தைகளின் முகங்களில் பார்க்க முடிந்தது…

      விமர்சனம் என்கின்ற பெயரில் கதை முழுவதையும் சொல்லி அதில் வருகின்ற சம்பவங்களையும் விவரித்து விட்டால் அது இதனைப் படித்துவிட்டு படம் பார்க்க செல்லும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை கெடுத்துவிடும்.. மேலும் அது விமர்சனம் எழுதுவதற்கான நியதியும் அல்ல.. என்பதால் முடிந்தளவிற்கு அதை தவிர்க்கப் பார்க்கிறேன்..
    கதை என்னவென்றால்.. போலீசால் பிடிக்க முடியாத ஒரு கொள்ளை கும்பல்.. அதனுடன் எதிர்பாராத விதமாக முட்டிக் கொள்ளும் ஹீரோ… இறுதியில் ஹீரோ வில்லனை ஜெயிப்பது… 70 களிலிருந்து அடித்து துவைத்து அதர பழசான அதே கதைக்களம்….(இதான் எம்.ஜி.ஆர் மாஸ்க்கோ..) அதில் சூப்பர்ஹீரோ என்ற கலர் பொடியை தூவி கடைவிரித்திருக்கிறார்.. இதை யார் வேண்டுமானாலும் செய்யமுடியுமே… இதை செய்வதற்கு மிஷ்கின் எதற்கு…? கதைதான் அதர பழசான கதை… அதை தூக்கி நிறுத்தும் அளவுக்காவது திரைக்கதை வேண்டாம்.. ஆனால் அந்த திரைக்கதையோ பாதிக்கு மேல் படுத்த படுக்கையாகி விடுகிறது…
     இன்னும் கூட இதை நம்புவதற்கு ஆச்சரியமாக இருக்கிறது.. இதை மிஷ்கின் தான் செய்தாரா..? என்று. அவரது சர்ச்சைகுள்ளான சில படைப்புகள் என் மனதுக்கு நெருக்கமானவை… அவரிடம் இருந்து இப்படி எவரையுமே திருப்திபடுத்தாத ஒரு திரைப்படத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. படத்தின் ஆரம்பத்தில் ஒரு காட்சி.. கேமரா ஸ்டேட்டிக் பொசிசனில் இருக்க.. தெருவின் ஒரு மூலையில் இருந்து வரும் லாரி ஒன்று கேமராவை நோக்கி வந்து வலதுபுறம் திரும்பிச்சென்று மறைகிறது.. சற்று நேரத்தில் அதே தெருவிலிருந்து வரும் மற்றொரு குப்பை அள்ளும் லாரி கேமராவின் முகப்பில் வந்து நிற்கிறது… இந்த காட்சியில் இது மிஷ்கினின் படம் என்று காட்டி விடுகிறார்… ஏனென்றால் அடுத்து எங்குமே அந்த அடையாளம் இருக்காது…
   அதையும் மீறி சில இடங்களில் அந்த அடையாளம் உண்டு.. ஆனால் அவை பார்வையாளர்களுக்கு ஒருவித அயர்ச்சியையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் மிஷ்கினின் கிளிஷே காட்சிகள்.. உதாரணமாக ஹீரோயினை அடிக்க வரும்போது ஜீவாவின் உடல்மொழி, ஹீரோவிடம் அடி வாங்கிவிட்டு மீண்டும் அடிவாங்க வரிசைகட்டி நிற்கும் வில்லன்கள், உடல் குறைபாடுள்ள மனிதர்களின் காட்சிகள், டிரேடு மார்க் டாஸ்மார்க் பாடல்.. போன்ற அதே வகையறாக்கள்…

     ஹீரோவின் கேரக்டரைசேசனிலேயே பல குழப்பங்கள் இருக்கின்றன.. முதலில் தான் ஒரு புருஸ்லீ போல் வர வேண்டும் என்று சொல்லித் திரிகிறான்.. ஆனால் இரண்டு காட்சிக்கு ஒருமுறை சரக்கடிக்க மறப்பதில்லை.. ஹீரோயினைப் பார்த்தப்பின்னர் அவள்தான் உலகம் என்று சுற்றுகிறான்.. ஆனால் முதல் சந்திப்பில் அவள் தன்னை பொறுக்கி என்று தவறாக நினைத்துவிட்டாள் என்பதற்காக அடுத்து அவளை சந்திக்க செல்லும் போது.. முக(த்தை) மூடி(க்) கொண்டு செல்ல சூப்பர்மேன் உடையணிந்து செல்கிறான்.. இடையில் தர்மத்தை காக்கவும் தவறுவதில்லை.. ஒரு பாதியில் நண்பன் வில்லனால் கொல்லப்பட அவனை பிடிக்க சூளுரைத்து.. அம்மாடி… என்னால முடியல….
     நாகர்ஜீனா சொன்னமாதிரி ஒரு படத்தை பார்க்க போரடிக்கலாம்.. அதப்பத்தி பத்து லைன் எழுதவே போரடிச்சா….. இதுல ஹீரோயின் வேற.. அநியாயத்தைக் கண்டா அநியாயத்துக்கு பொங்கி எழுறாங்க…. அப்பாவ கொல்ல ஆளுங்க வரும்போது மட்டும் ஹீரோக்கு பின்னாடி அமுங்கி போய்டுறாங்க… இதில அவுங்க ரியாக்சன் எல்லாம் படு அமெச்சூர்தனம்.. இதுல குங்க்-பூ மாஸ்டர்னு ஒரு குட்டி கதை வேற.. அத சொல்லாட்டினாலும் கதைல எந்த குழப்பமும் வராது… அதனால அது நமக்கு வேண்டாம்… ப்ளீஸ்…

    க்ளைமாக்ஸ்ல ஏகப்பட்ட வகை இருக்கு.. செண்டிமெண்ட் க்ளைமாக்ஸ், ஆக்சன் க்ளைமாக்ஸ், காமெடி க்ளைமாக்ஸ்ன்னு… ஆனா ஆக்சன் க்ளைமாக்ஸ் காமெடி க்ளைமாக்ஸா மாறினது எனக்கு தெரிஞ்சி இந்த முகமூடிலதான்னு நினைக்கிறேன்… எல்லாருமே குழந்தையா மாறி சிரி சிரின்னு சிரிச்சோம்… எல்லாப் புகழும் நரேனின் நடிப்புக்கே.. (பாவம்.. அவர குத்தம் சொல்லி என்ன பண்ண…) இது போக பிரெண்ட்ஸ்னு ரெண்டு மூணு பேரு… ஒரு ரெண்டு தாத்தா வர்றாங்க… செம்ம ரோலு அவுங்களுக்கு.. ஹீரோ சூப்பர் மேன்னா.. இவுங்க ரெண்டு பேரும் சூப்பர் ஓல்ட் மேன்.. இது போக ட்விஸ்ட்ன்னு ஒரு விசயம் வச்சிருக்காரு சத்தியமா சகிக்கமுடியல….
    நான் நினைக்கிறேன்… சில நல்ல படங்கள்  கொடுத்தும் ஓடலையேங்கிற விரக்தில.. மத்தவங்கள மாதிரி கமர்சியலா… ஆனா.. வித்தியாசமா ஒரு படம் பண்ணுவோம்னு முயன்றிருப்பாருன்னு நினைக்கிறேன்.. ஒரு சின்ன வேண்டுகோள் மிஷ்கின் உங்களுடைய முந்தைய படங்கள் வணிகரீதியா வெற்றி அடைஞ்சதா இல்லையான்னு தெரியல…. ஆனா அது உங்களுக்குன்னு ஒரு குறுகிய அளவிளாவது ரசிகர் வட்டத்தை கொடுத்தது.. ஆனா இந்தமாதிரி படம் அதையும் கெடுத்துரும்ன்னு நினைக்கிறேன்…
    இது எளிமையான சகல மனிதருக்கும் போய் சேரும் முயற்சின்னு சொல்லீருக்கீ்ங்க…. மன்னிக்க வேண்டும்.. இது சத்தியமாக அவர்களை திருப்திபடுத்தாது.. சென்றடையவும் செய்யாது…. என்றே அனுமானிக்கிறேன்…