Thursday 15 November 2012

BABEL



 Babel  என்று ஒரு மெக்சிகன் மொழி திரைப்படம். அதை மெக்சிகன் மொழி திரைப்படம் என்றும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் அதன் கதைக்களம் மெக்சிகோ, யு.எஸ், மொராக்கோ, ஜப்பான் ஆகியவற்றில் நடக்கும் இருவேறு நிகழ்வுகளைக் கொண்டு பின்னப்பட்டு உள்ளது. எனவே அந்தந்த இடங்களுக்கு ஏற்ப அவர்கள் அதற்குரிய மொழியை பேசுகின்றனர். இதன் இயக்குநர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த . இவரது முக்கியமான மற்றொரு திரைப்படம் தான்  ”ameros perross” ஆகும். அந்த திரைப்படம் அதன் திரைக்கதை உத்திக்காக சினிமா படைப்பாளிகளால் மிகவும் சிலாகிக்கப்பட்ட படம்.


Babel ம் ஏறத்தாழ அதே மாதிரியான ஒரு வகை திரைக்கதை உத்தியால் அமைக்கப்பட்டது தான். ஆனால் இதுவும் அமரோஸ் பெரோஸ் போல ஒரு அலாதியான காண்பனுவத்தைக் கொடுத்தது என்பது உண்மை. கதையின் ஆரம்ப களம் மொராக்கோ எனப்படும் பாலைவனப்பகுதியில் நடக்கிறது. ஆடு மேய்க்கும் தொழிலை செய்யும் ஒரு குடும்பத்தினர். மலைப்பகுதியில் ஆடுகளை மேய்க்கும் அந்த குடும்பத்தின் தலைவன் ஆடுகளை உண்ண வரும் நரிகளை கொல்ல ஒருவரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றை வாங்குகின்றான். விற்றவன் அதைக் கொடுக்கும் போது இந்த துப்பாக்கியைக் கொண்டு மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை சுடமுடியும் என்று தன்னிடம் விற்றவர் கூறியதாக சொல்லிவிட்டு செல்கிறான் அந்த துப்பாக்கியை விற்பவன். அதை பரிசோதிக்க விரும்பும் அவரது இரண்டு மகன்களும் மலைகளில் இருந்து கொண்டு, மலையை சுற்றிச் செல்லும் சாலைகளில் வரும் வாகனங்களை நோக்கி சுடுகின்றனர். முதலில் மூத்தவன் மெக்மூத் சுட.. சுடப்பட்ட வண்டி எந்த மாற்றமும் இல்லாமல் செல்கிறது. மெக்மூத் துப்பாக்கியை விற்றவன் நம்மை ஏமாற்றிவிட்டான் என்று சொல்ல, அவனது தம்பி உனக்கு சுடத் தெரியவில்லை என்று துப்பாக்கியை வாங்க, மெக்மூத் தம்பி யூசூப்பை ரோட்டில் தூரமாய் வந்து கொண்டிருக்கும் ஒரு பேருந்தை காட்டி அதை சுடச் சொல்ல… அவனும் சுடுகிறான். அந்த பேருந்தும் எந்த மாற்றமும் இல்லாமல் செல்ல.. “ஆம், அவன் நம்மை ஏமாற்றிவிட்டான் என்று யூசூப் ஆமோதிக்க.. அதே நேரம் யூசூப் சுட்ட பஸ் சற்று தூரம் சென்று பின் நிற்க.. பஸ்சுக்குள் ஏதோ சலசலப்பு ஏற்படுவதைக் கண்டு பதற்றம் அடைந்த அண்ணனும் தம்பியும் ஓடத் தொடங்குகின்றனர்.


ஒரு வீட்டின் உள்ளறையில் ஒரு சிறுவன் ஓடிச் சென்று ஒளிந்து கொள்வது போல் அடுத்த பகுதி அமெரிக்க நகர்பகுதியில் தொடங்குகிறது. அந்த சிறுவனும் அவனது தங்கையும் ஒளிந்து கொள்ள அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் தோற்பது போல் நடிக்கிறாள் அமெலியா(Amelia..). அமெலியா ஒரு 50 வயதை நெருங்கும் பெண்மணி. அந்த சிறுவர்களை கவனிப்பதற்காக அவர்களது பெற்றோரால் நியமிக்கப்பட்டவள். அப்போது போன் ஒலிக்கிறது. போனில் பேசும் அந்த குடும்பத் தலைவன் தாங்கள் இன்று இரவு திரும்பி வர இயலாது என்பதை தெரிவிக்கிறான். அமெலியா, மேடம் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரிக்கிறாள். அன்று இரவு அவர்களை அவள் பார்த்துக் கொள்கிறாள். அடுத்த நாள் காலையிலும் குழந்தைகளது பெற்றோர் வர இயலாது என்பதை குடும்ப தலைவன் தெரிவிப்பதோடு மட்டுமின்றி தாங்கள் வர இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆகும் அதுவரை நீ அவர்களை பார்த்துக் கொள் என்று ஆணையிடுகிறான்.

அமெலியா தன் எஜமானனிடம் கெஞ்சுகிறாள். அன்று தன் மகனுக்கு திருமணம் மெக்சிகோவில் வைத்து நடக்கிறது என்றும் தான் குழந்தைகளை வேறு யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு உடனடியாக சென்று திரும்புகிறேன் என்று கூறியும் அவன் அதை ஏற்க மறுத்துவிடுகிறான். வேறு சிலரிடம் உதவி கேட்டும் அவர்கள் மறுக்கவே.. வேறு வழியின்றி இரு குழந்தைகளையும் தன்னுடன் மெக்சிகோ அழைத்து செல்ல தீர்மானிக்கிறாள். தன் தம்பி மகன் மற்றும் இரு குழந்தைகளுடன் அவள் மெக்சிகோவை நோக்கி பயணிக்கிறாள்.


மொராக்கோ பள்ளத்தாக்கு பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் தற்காலிக டெண்டுகளில் சில பயணிகள் தங்கியிருக்கின்றனர். அதில் ஒரு கணவன் மனைவி இருவரும் ஒருவிதமான ஊடல் மனநிலையில் இருக்கின்றனர். அந்த பெண் சமீபத்தில் நோயால் பாதிக்கப்பட்ட இறந்து போன அவர்களது குழந்தையைப் பற்றி பேசிக் கொண்டு இருக்க.. இருவருக்கும் இடையே அது வாக்குவாதமாக மாறி சூழ்நிலையை மேலும் இறுக்கமாக்குகிறது. அவர்கள் வந்த டூரிஸ்ட் பஸ் அந்த இடத்தை விட்டு கிளம்புகிறது.. இருவரும் அருகருகே அமர்ந்திருந்தும் அவர்களுக்கு இடையேயான.. இறுக்கம் இன்னும் தளரவில்லை. மனைவி தன் கணவனின் கையை இறுக பற்றுகிறாள். அவனுடைய பிடியில் இறுக்கம் இல்லாமல் தளர்வாக இருப்பதை உணர்ந்து.. தன் கையை விடுவித்துக் கொள்கிறாள். பஸ்சில் பயணம் செய்யும் பலவிதமான முகங்கள் காட்டப்படுகிறது. பஸ் முன்னரே நமக்கு காட்டப்பட்ட ஒரு மலைச்சரிவுக்கு அருகே உள்ள ஓடுபாதையில் திரும்புகிறது. இறுதியில் அந்த மனைவியின் முகமும் அவள் சாய்ந்து அமர்ந்திருக்கும் பஸ் ஜன்னல் கண்ணாடியும் மிட்சாட்டில் தெரிய.. கேமரா அந்த காட்சியிலேயே சிறிது நேரம் நிலைக்க… கண்ணாடியை உடைத்துக் கொண்டு ஒரு தோட்டா அவளது உடலை துளைக்கிறது.. மனைவி ரத்தம் தோய்ந்த உடலுடன் கணவன் மீது சாய… கணவன் அதிர்ச்சியில் கத்த பஸ் ஸ்தம்பிக்கிறது..


ஜப்பான் நகரில் ஒரு வளை பந்தாட்ட போட்டி நடக்கிறது. அது காது கேட்காத வாய் பேசமுடியாத பெண்களுக்கான போட்டி. அந்த போட்டியில் நடுவர் தவறான தீர்ப்பளிக்க.. நடுவரிடம் முறையிடும் ஒரு பெண்.. நான் செவிடு.. குருடு இல்லை என கோபமாய் செய்கை செய்ய.. அவள் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு அவர்களது அணி தோற்கிறது. இதை காலரியில் அமர்ந்திருக்கும் நடுத்தர வயது மனிதர் ஒருவர் கவலை தோய்ந்த முகத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவளது நண்பிகள் அவளோடு இன்னும் யாரும் உடலுறவு கொள்ளவில்லை.. அதனால் தான் அவள் அப்படி கோபப்படுகிறாள்.. என்று கிண்டல் செய்ய.. அவள் ஆம்.. அந்த ஆசையை இன்று உன் அப்பாவுடன் இருந்து நான் தீர்த்து கொள்ளப் போகிறேன் என்று கோபமாக சொல்லி அவள் வெளியேறுகிறாள்.


காரில் காலரியில் அமர்ந்திருந்த அவளது தந்தையுடன் பயணிக்கும் அவள் தந்தையுடன் எதுவும் பேசுவதில்லை. அவர் கேட்கும் கேள்விக்கும் கோபத்துடன் பதில் சொல்லும் அவள் தன் தாய் இருந்திருந்தால் அவள் தன்னை நன்றாக கவனித்திருப்பாள் என்று குற்றம் சாட்ட… அவளது தந்தை தான் தன்னால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு சிறப்பாக பார்த்துக் கொள்வதாக கூறுகிறார். பப்புக்கு தன் நண்பிகளுடன் செல்லும் அவளை ஒரு இளைஞன் சைட் அடிக்க… அவள் அதை ரசிக்கிறாள். அதே இளைஞன் அவள் காது கேட்காத.. வாய் பேசமுடியாத பெண் என்பதை உணர்ந்து அவளை புறக்கணிக்கும் போது.. தன் பெண்மையின் அந்தரங்கத்தை காட்டி அவர்களை ஏளனம் செய்கிறாள். அவர்கள் அதையும் ஜாலியாக எடுத்துக் கொள்ள.. அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறாள். தன் தந்தை ஈவினிங்கில் பல் டாக்டரிடம் அப்பாய்ண்மெண்ட் தனக்காக வாங்கியதை நினைவு கூர்ந்து அங்கு செல்கிறாள்,

தன் பற்களை பரிசோதிக்கும் மருத்துவரின் உதட்டில் முத்தம் கொடுக்க முனைந்தும், தன் தொடைகளுக்கு இடையில் மருத்துவரின் கையை சொருகியும் உசுப்பேற்ற முயல்கிறாள். அவன் தன்நிலை உணர்ந்து அவளை திட்டி வெளியே போகச் சொல்ல அவள் அவமானத்துடன் வெளியேறுகிறாள். வீட்டிற்கு சென்றால் அவளது தந்தையை தேடி போலீஸ் வந்திருக்கிறது. தன் தாயின் மரணத்தைப் பற்றி விசாரிக்க அவர்கள் வந்ததாக எண்ணி அவள் தன் தந்தையையும் அவர்கள் கைது செய்துவிடுவரோ…? என பயம் கொள்ள.. அவர்கள் வேறு ஒரு வழக்கு தொடர்பாக விசாரிக்க வந்ததாக தெரிவிக்கின்றனர்.

 நான் மொத்த கதையையும் கூறவில்லை. இது முதல் நாற்பது மணி நேர காட்சி மட்டுமே. படம் மொத்தம் 2 மணி நேரமும் 13 நிமிடமும். குண்டடி பட்ட பெண்மணி பிழைத்தாளா…? தவறுதலாக ஒரு ஆர்வத்தில் சுட்ட சிறுவர்களின் நிலைமை என்ன ஆனது…? போலீஸ் அவர்களை கைது செய்ததா..? மெக்சிகோ சென்ற இடத்தில் அமெலியாவின் தம்பி மகன் டோல்கேட்டில் தப்பிச் செல்ல… குழந்தைகள் யு.எஸ், மெக்சிகோவிற்கு இடைப்பட்ட வனாந்தரத்தில் தனித்துவிடப்படுகின்றனர். அவர்களின் நிலைமை என்ன ஆனது..? புறக்கணிப்பையே சந்தித்துக் கொண்டிருக்கும் அந்த வாய்பேச முடியாத பெண்ணின் வாழ்க்கையில் உறைந்த வெறுமை என்ன ஆனது….? இவைகளை தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தால் நீங்கள் இந்த படத்தைப் பாருங்கள்…

கனவின் மெய்பொருளை திருடி உங்களுக்கு கூறுபவன் என்று நான் கூறிக் கொண்டாலும்.. அதற்கான தருணம் பெரும்பாலான தமிழ்சினிமாவில் அமைவது இல்லை. இது போன்ற திரைப்படங்கள்தான் அதற்கு தீனி போடுகின்றன… இந்த திரைப்படம் எந்த விசயத்தை பூடகமாக சொல்லவருகிறது என்று கேட்டால் எனது பதில் ”வாழ்க்கையைதான்” என்பதாக இருக்கும். ஏனென்றால் மாணிக்கவாசகரின் இறைவாழ்த்து எதைப் பற்றி கூறுகிறது என்று கேட்டால் எளிதில் கூறலாம் இறைவனைப்பற்றி என்று. திருக்குறளை கேட்டால் என்ன கூறமுடியும்.. ஏனென்றால் அது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிகளையும் ஆழமாக விளக்குகிறது.

அப்படித்தான் இந்தப்படம் மனிதனின் ஒவ்வொரு அழகிய உணர்வுகளை தெளிந்த நீராகவும், ஆழ்மனதின் அழுக்குகளை கறைபடிந்த பாசிகளாகவும் காட்டுகிறது. படத்தில் காதல்,காமம், வெறுப்பு, புறக்கணிப்பு, இயலாமை, வேட்கை, அழுகை, சிரிப்பு, என வாழ்வின் ஒவ்வொரு உணர்ச்சி தருணங்களை இந்த படத்தின் திரைக்கதை தத்ரூபமாக சுமந்து செல்கிறது. காதல், காமம், அழுகை இவை நான்கு பகுதிகளிலும் வருகின்றன. காதலில் தம்பி யூசுப் தன் அண்ணனை காப்பாற்ற சொல்லி கெஞ்சும் காட்சியிலும், எதிர் காற்றுவீசும் மலையில் அண்ணனும் தம்பியும் அதை எதிர்த்து நிற்கின்ற காட்சியை கூறலாம். குண்டடி பட்டு கிடக்கும் தன் மனைவியை கண்டதும் அவனது மனதில் இருந்த இறுக்கம் மறைந்து காதல் பிறக்கும் காட்சி.யும், வாய் பேசமுடியாத பெண் தன் அப்பாவை கடைசி காட்சியில் கட்டி தழுவிக் கொள்வதும், சிறு குழந்தைகளின் மேல் அமெலியா காட்டும் அன்பும் எடுத்துகாட்டாகும்.

   காமம் என்று பார்த்தோமானால் தன் தமக்கை ஆடைமாற்றுவதை அவள் அறியும் வண்ணம் பார்க்கும் தம்பி யூசூப் இருவருக்குமிடையில் இருக்கும் அறியாபருவ காமம், இளமை பருவத்தில் தன் காம வேட்கையை தீர்த்துக் கொள்ள போராடி அதன் மூலம் தன்னையும் ஒரு பெண்ணாக ஆண் பாவிக்கிறான் என்ற  மனநிலை அடைய முற்படும் ஊமைப் பெண் கதாபாத்திரம், தன் மனைவியின் கையைகூட பிடிக்க விரும்பாத கணவன், குண்டடிபட்ட தன் மனைவி சிறுநீர் கழிக்க பாத்திரத்தை அடியில் பிடித்துக் கொண்டே அவளது உதட்டில் முத்தமிடும் தருணங்கள் பக்குவப்பட்ட காமத்தின் வெளிப்பாடு. அமெலியாவின் காதலும் முத்தமும் முதிர்ந்த காதலுக்கான உதாரணமாக இருப்பவை.

அழுகையில் இரு குழந்தைகளையும் தொலைத்துவிட்டு அமெலியா அழும் அழுகையும், தன் அண்ணனை காப்பாற்ற சொல்லி யூசுப் அழும் அழுகையும், தன் இயலாமையின் வெளிப்பாடாக அந்த ஊமைப்பெண் போலீஸ் அதிகாரி முன் அழும் அழுகையும், குண்டடிபட்ட தன் மனைவியைப் பார்த்து கதறும் கணவனின் அழுகையும் முக்கிய உதாரணங்கள்.

நம் வாழ்க்கையில் சாலையோர பயணங்களின் போது எத்தனையோ விபத்துகளைப் பார்த்திருப்போம்.. அதில் மாட்டிக் கொண்டவர்களின் கதி என்ன என்பதை கூட அறிந்து கொள்ளாமல் எத்தனை தருணங்களில் நாம் அந்த இடத்தை வெகு எளிதாக கடந்து இருப்போம். அப்படிப்பட்ட நாம் திரைப்படத்தில் மட்டும் ஏன் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு முடிவை கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.. நமக்கு அந்த அறுகதை எப்படி வந்தது. நம் நிஜ வாழ்க்கையிலேயே அந்த நிகழ்வுகளைப் பற்றிய சலனமின்றி கடக்கும் போது… சலனப்படத்தில் மட்டும் அதை நாம் எதிர்பார்ப்பது எப்படி சரியாகும்… அதனால் தானோ என்னவோ இந்த படத்தில் சிலவிசயங்களுக்கு முடிவு சொல்லப்படவில்லை… அது பார்வையாளரின் விருப்பத்துக்கு விடப்படுகிறது…

ஒரு முஸ்லீம் படத்தின் ஆரம்பத்திலே துப்பாக்கியுடன் நடந்து வருகிறான். நமக்கு வழக்கமாக என்ன தோன்றும். (அவன் ஒரு தீவிரவாதி) ஆனால் அவன் ஆடுகளை காக்க துப்பாக்கியை விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஜீவனம் செய்பவன். சிறுவர்கள் விளையாட்டாக சுட்ட நிகழ்வை அமெரிக்கா தீவிரவாதிகளின் செயல் என்று அறிவித்து ஆர்பாட்டம் செய்யும் நையாண்டியும், அமெரிக்கனுக்கு உடன் வந்த அமெரிக்கர்கள் யாரும் உதவாத பட்சத்தில் அவனுக்கு உதவுபவனும் ஒரு முஸ்லீம், இப்படி ஏகப்பட்ட கேலிச் சித்திரங்கள் பார்ப்பவர்களின் கருத்தை கவரும்.

மேலும் யு.எஸ்சில் இருந்து வெளியில் செல்வது என்பது எளிது. ஆனால் யு.எஸ்சிக்குள்  நுழைவது எவ்வளவு கடினம் என்பதை சொல்லும் டோல்கேட் காட்சிகள், அமெரிக்கர்கள் சிறுவர்களிடம் கூட மெக்சிகன்ஸ் மக்களை பற்றி தவறான எண்ணங்களை பரப்புவதை வலுவாக முறையிடுகிறது. மெக்சிகோ தொடர்பான காட்சிகள் மெக்சிகோ மக்களின் கலாசாரத்தையும், மொராக்கோ காட்சிகள் அவர்களது கலாசாரத்தையும் அப்படியே அவர்களின் வாழ்க்கையை நம் கண்முன் நிறுத்துகிறது. நமது கலாசாரத்துக்கு தொடர்பில்லாத இசை என்றாலும் அது என்னை உலுக்கியது உண்மை. இது போன்ற சிறப்பான ஒளிப்பதிவும், பிண்ணனியிசையும், படத்தொகுப்பும் கொண்ட படங்களை பார்த்து வெகுநாட்களாகிவிட்டது. கண்டிப்பாக தவறவிடக் கூடாத ஒரு படம்…

No comments:

Post a Comment