Saturday 29 September 2012

சாருலதா:



சன் குழுமத்தின் முக்கிய பிரமுகரான சக்சேனாவின் தயாரிப்பில் வெளிவரும் படம்.. முதலிலேயே இது ஒரு கொரியபடத்தின் தழுவல், அவர்களிடம் அனுமதி பெற்றே இந்த படத்தை வெளியிடுகிறோம் என்று சொல்லிவிட்டார்கள். கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் உதவியாளர் இயக்கிய படம்.. ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் கதை என்பதாலும்… மாற்றானிலும் இதே இரட்டையர்கள் கதை என்பதாலும்.. இந்த படத்தை எப்படியும் பார்க்கவேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்.. படத்தின் டிரைலரே முக்கால்வாசி கதையை சொல்லிவிட்டதால் பெரியதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போய் இருந்தேன்…



வேறு நேரம் கிடைக்காததாலும்… இந்த வாரம் தாண்டவம் ரீலீஸ் என்பதால் கண்டிப்பாக படத்தை தூக்கிவிடுவார்கள் என்பதாலும் இரவு பத்தரை மணி காட்சிக்கு கமலாவிற்கு சென்றேன்.. மொத்தமே ஒரு 40 பேர்தான் இருந்திருப்போம்… என்னோடு நண்பர்களும் வரவில்லை.. இதில் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஆசாமி வேறு ஏதோ பேய் கதை சொல்லிவிட்டு அவனது நண்பனிடம் “இருந்தாலும் நைட்டு வந்திருக்க வேணாம்…” என்று சொன்னதும்… அவன் என்னிடம் சொல்லியது போலவே இருந்தது… ஒரு சிறிய கலக்கம்…


படம் தொடங்கியவுடன் அது அதிகமானது… காரணம் சுந்தர் சி. பாபுவும் ஆள் அரவம் இல்லாத தியேட்டரும்.. உண்மைலயே பேய் படத்தை ஆள் இல்லாத தியேட்டர்ல உட்கார்ந்து பாக்கவும் ஒரு தில்லு வேணும்… கவனத்தை படத்தில் குவிக்க முயன்றாலும்.. என் மனமோ “இருந்தாலும் நைட்டு வந்திருக்க வேணாம்…” என்ற வாக்கியத்தையே அசை போட்டுக் கொண்டு இருக்க… அவ்வபோது வீட்டுக்கு திரும்பி போகும் போது இந்த இந்த இடத்தில எல்லாம் லைட்டு இருக்காதேன்னு வேற நினைப்பு ஓடுது…
சரின்னு அதையும் மீறி படத்தை கவனிச்சா.. முன்னாடி உக்கார்ந்தவன் தொல்லை தாங்கமுடியல… எப்ப ப்ளாஸ்பேக் வரும் எப்ப ப்ளாஸ்பேக் வரும்னு உசிர எடுத்துகிட்டு இருக்கான்… ஏண்டாப்பா..னு கேட்டா…” இல்ல ப்ளாஸ்பேக்ல பேய் வராதுல்ல…:” அப்டிங்கிறான்.. இவிங்க நம்மள கொல்லாம விடமாட்டாங்க போலருக்கேன்னு நினைச்சிட்டு படத்த பாத்தா… நல்லவேளை.. நம்மூரு பேய் படந்தான…! பெருசா வெள்ளசேலையாது எதிர்பார்த்தேன்… அதுவும் இல்லாம ஏதோ உருவத்தையும் சத்தத்தையும் காட்டியே முடிச்சிட்டதால பெரிய பயம் இல்லாம போச்சி…


சரி என் கதை போதும்.. படத்தோட கதைக்கு வருவோம்.. ஒட்டி பிறந்த ரெட்டை குழந்தைகள், 20 வருசம் சேந்தே இருக்காங்க.. வயலின் கிளாஸ் கத்துக்க வந்த இடத்தில ஹீரோவ பாத்து சாரு, லதா ரெண்டு பேரும் காதலிக்க… அவரு சாருவ மட்டும் காதலிக்கிறாரு….(அவரு ரொம்ப நல்லவருங்க…) இதனால சாருக்கும் லதாவுக்கு ஈகோ முட்டிக்க… மனசளவுள பிரிஞ்ச ரெண்டு பேரையும் உடம்பாலயும் பிரிச்சிருவோம்னு டாக்டர் டிரை பண்ண… லதா செத்துருது… சரி அவதான் செத்துட்டாலே.. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு இவுங்க ரெடியாக.. செத்தாலும் விட்டேனா பாருன்னு லதா எடுக்கிற ரிவெஞ்தா “சாருலதா”


படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ், பிரியாமணியும், திரைக்கதையும், பிண்ணனியிசையும் தான்…. திரைக்கதையில் வரும் ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று… பருத்திவீரனுக்கு பிறகு மீண்டும் தன் திறமையை காட்ட ஒரு நல்ல வாய்ப்பு… அதிலும் சாரு கேரக்டரை விட லதா கேரக்டருக்கே ஏகப்பட்ட வெரைட்டி காட்டும் வாய்ப்பு.. அதை முத்தழகி சரியாக பயன்படுத்திக் கொண்டாள் என்றே சொல்ல வேண்டும்… படத்தில் காமெடி செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு வரும் குண்டு ஆர்த்தியும் அவரது தம்பியும் பொருமை சோதிக்கிறார்கள்… இவர்கள் இருவரும் படத்திற்கு பெரிய மைனஸ்.. இவர்கள் காமெடி என்ற பெயரில் செய்ததைவிட.. சாமியாரை கொண்டு சீரியஸாக செய்த சில விசயங்கள்.. நல்ல காமெடியாக இருந்தது…. அதுதவிர பாடல்களும்.. ஆனால் பாடலில் ப்ரியாமணி இருப்பதால் களைப்பு தெரியவில்லை…

ஹீரோ பாவம் ஏதோ மூன்றாம் தர ஹீரோ போல.. மொத்து மொத்து என்று பிரியாமணியிடம் அடிவாங்கவே கூட்டி வந்திருக்கிறார்கள்.. இதுதவிர சரண்யா பொன்வண்ணன், சீதா போன்றோரும் உண்டு.. மொத்தம் பிரதானமான கதாபாத்திரங்கள் என்று பார்த்தால் 8 கதாபாத்திரங்கள் மட்டுமே… ஆஸ்பிட்டல், வீடு என்று மாற்றி மாற்றி சுற்றும் திரைக்கதை என்பதால் சில இடங்களில் சோர்வு தட்டுவதை தவிர்க்கமுடியவில்லை.. மொத்த கதாபாத்திரங்களையும் செட்டையும் பார்க்கும் போது என்ன பட்ஜெட்டாக இருக்கும் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை..

மொத்தத்தில் ஒரு சாதாரண பொழுதுபோக்குப்படம்… நேரத்தை எப்படி கொல்லலாம் என்று நினைக்கும் போது… சாருவை லதா கொன்றாலா இல்லையா… என்று ஒரு எட்டு பார்த்து வரலாம்… தப்பில்லை…. மேலும் பிரியாமணி ரசிகர்கள் கண்டிப்பாக தவறவிடக்கூடாத படம்… ஏனென்றால் பேய் என் தூக்கத்தை கெடுத்துவிடும் என்று எதிர்பார்த்தேன்.. ஆனால் தூக்கத்தை கெடுத்தது  பேய் அல்ல… பிரியாமணி….!

No comments:

Post a Comment