Wednesday 5 September 2012


முகமூடி:
    படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக மிஷ்கின் அவர்கள் கூறிக்கொண்டது.. ”நான் குழந்தைகளுக்கான ஒரு சூப்பர்மேன் திரைப்படத்தை எடுக்கப் போகிறேன்”… ஆனால் படம் வெளிவருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் முன்பு கூறிய செய்திகளுக்கு முரணான சில செய்திகளை கூறினார்.. அவை கீழே…
     ”இது பேட்மேன், ஸ்பைடர்மேன் மாதிரியான படம் இல்லை..(அதாவது குழந்தைகளுக்கான படம்..) எம்.ஜி.ஆர் மாஸ்க் போட்டுக்கிட்டு தெள்ளத்தெளிவா ஒரு படம் எடுத்திருக்கேன்.. இதை நம்ம சமகாலத் தமிழ்ச் சூழலில் வெச்சிப் பார்க்கணும்.. எளிமையான சகல மனிதருக்கும் போய் சேரும் முயற்சி இது..”
    இது மட்டுமே அவரால் கூறப்பட்ட செய்தி அல்ல… ஆனால் அவை இந்த படம் சார்ந்த பதிவிற்கு புறம்பான விசயம் என்பதால் அதை இங்கு குறிப்பிட விரும்பவில்லை.. சரி படத்திற்கு வருவோம்… படம் சார்ந்த இயக்குநரின் கருத்திலேயே முன்னுக்குப் பின் முரணான செய்திகள் இருக்கும் போது படம் எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும்…
     இருந்தாலும் சொல்கிறேன்.. அவர் என்னதான் இது குழந்தைகளுக்கான படம் இல்லை என்று பூடகமாக சொல்லிக் கொண்டாலும்.. நான்கில் மூன்று பங்கு போஸ்டர்களில் முகமூடி அணிந்து கொண்டு ஒரு சூப்பர்ஹீரோ போல் ஜீவாவே முற்றுகை இட்டு இருந்ததால்.. ஒரு குழந்தை சூப்பர்மேன் படம் பார்க்க செல்லும் மனநிலையிலேயேதான் சென்றேன்… ஆனால் அந்த குழந்தை மனநிலையை கூட திருப்திபடுத்த முடியாத ஒரு படமாக முகமூடி இருந்தது தான் பரிதாபம்… அது தியேட்டருக்கு வந்து திரும்பிய பல குழந்தைகளின் முகங்களில் பார்க்க முடிந்தது…

      விமர்சனம் என்கின்ற பெயரில் கதை முழுவதையும் சொல்லி அதில் வருகின்ற சம்பவங்களையும் விவரித்து விட்டால் அது இதனைப் படித்துவிட்டு படம் பார்க்க செல்லும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை கெடுத்துவிடும்.. மேலும் அது விமர்சனம் எழுதுவதற்கான நியதியும் அல்ல.. என்பதால் முடிந்தளவிற்கு அதை தவிர்க்கப் பார்க்கிறேன்..
    கதை என்னவென்றால்.. போலீசால் பிடிக்க முடியாத ஒரு கொள்ளை கும்பல்.. அதனுடன் எதிர்பாராத விதமாக முட்டிக் கொள்ளும் ஹீரோ… இறுதியில் ஹீரோ வில்லனை ஜெயிப்பது… 70 களிலிருந்து அடித்து துவைத்து அதர பழசான அதே கதைக்களம்….(இதான் எம்.ஜி.ஆர் மாஸ்க்கோ..) அதில் சூப்பர்ஹீரோ என்ற கலர் பொடியை தூவி கடைவிரித்திருக்கிறார்.. இதை யார் வேண்டுமானாலும் செய்யமுடியுமே… இதை செய்வதற்கு மிஷ்கின் எதற்கு…? கதைதான் அதர பழசான கதை… அதை தூக்கி நிறுத்தும் அளவுக்காவது திரைக்கதை வேண்டாம்.. ஆனால் அந்த திரைக்கதையோ பாதிக்கு மேல் படுத்த படுக்கையாகி விடுகிறது…
     இன்னும் கூட இதை நம்புவதற்கு ஆச்சரியமாக இருக்கிறது.. இதை மிஷ்கின் தான் செய்தாரா..? என்று. அவரது சர்ச்சைகுள்ளான சில படைப்புகள் என் மனதுக்கு நெருக்கமானவை… அவரிடம் இருந்து இப்படி எவரையுமே திருப்திபடுத்தாத ஒரு திரைப்படத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. படத்தின் ஆரம்பத்தில் ஒரு காட்சி.. கேமரா ஸ்டேட்டிக் பொசிசனில் இருக்க.. தெருவின் ஒரு மூலையில் இருந்து வரும் லாரி ஒன்று கேமராவை நோக்கி வந்து வலதுபுறம் திரும்பிச்சென்று மறைகிறது.. சற்று நேரத்தில் அதே தெருவிலிருந்து வரும் மற்றொரு குப்பை அள்ளும் லாரி கேமராவின் முகப்பில் வந்து நிற்கிறது… இந்த காட்சியில் இது மிஷ்கினின் படம் என்று காட்டி விடுகிறார்… ஏனென்றால் அடுத்து எங்குமே அந்த அடையாளம் இருக்காது…
   அதையும் மீறி சில இடங்களில் அந்த அடையாளம் உண்டு.. ஆனால் அவை பார்வையாளர்களுக்கு ஒருவித அயர்ச்சியையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் மிஷ்கினின் கிளிஷே காட்சிகள்.. உதாரணமாக ஹீரோயினை அடிக்க வரும்போது ஜீவாவின் உடல்மொழி, ஹீரோவிடம் அடி வாங்கிவிட்டு மீண்டும் அடிவாங்க வரிசைகட்டி நிற்கும் வில்லன்கள், உடல் குறைபாடுள்ள மனிதர்களின் காட்சிகள், டிரேடு மார்க் டாஸ்மார்க் பாடல்.. போன்ற அதே வகையறாக்கள்…

     ஹீரோவின் கேரக்டரைசேசனிலேயே பல குழப்பங்கள் இருக்கின்றன.. முதலில் தான் ஒரு புருஸ்லீ போல் வர வேண்டும் என்று சொல்லித் திரிகிறான்.. ஆனால் இரண்டு காட்சிக்கு ஒருமுறை சரக்கடிக்க மறப்பதில்லை.. ஹீரோயினைப் பார்த்தப்பின்னர் அவள்தான் உலகம் என்று சுற்றுகிறான்.. ஆனால் முதல் சந்திப்பில் அவள் தன்னை பொறுக்கி என்று தவறாக நினைத்துவிட்டாள் என்பதற்காக அடுத்து அவளை சந்திக்க செல்லும் போது.. முக(த்தை) மூடி(க்) கொண்டு செல்ல சூப்பர்மேன் உடையணிந்து செல்கிறான்.. இடையில் தர்மத்தை காக்கவும் தவறுவதில்லை.. ஒரு பாதியில் நண்பன் வில்லனால் கொல்லப்பட அவனை பிடிக்க சூளுரைத்து.. அம்மாடி… என்னால முடியல….
     நாகர்ஜீனா சொன்னமாதிரி ஒரு படத்தை பார்க்க போரடிக்கலாம்.. அதப்பத்தி பத்து லைன் எழுதவே போரடிச்சா….. இதுல ஹீரோயின் வேற.. அநியாயத்தைக் கண்டா அநியாயத்துக்கு பொங்கி எழுறாங்க…. அப்பாவ கொல்ல ஆளுங்க வரும்போது மட்டும் ஹீரோக்கு பின்னாடி அமுங்கி போய்டுறாங்க… இதில அவுங்க ரியாக்சன் எல்லாம் படு அமெச்சூர்தனம்.. இதுல குங்க்-பூ மாஸ்டர்னு ஒரு குட்டி கதை வேற.. அத சொல்லாட்டினாலும் கதைல எந்த குழப்பமும் வராது… அதனால அது நமக்கு வேண்டாம்… ப்ளீஸ்…

    க்ளைமாக்ஸ்ல ஏகப்பட்ட வகை இருக்கு.. செண்டிமெண்ட் க்ளைமாக்ஸ், ஆக்சன் க்ளைமாக்ஸ், காமெடி க்ளைமாக்ஸ்ன்னு… ஆனா ஆக்சன் க்ளைமாக்ஸ் காமெடி க்ளைமாக்ஸா மாறினது எனக்கு தெரிஞ்சி இந்த முகமூடிலதான்னு நினைக்கிறேன்… எல்லாருமே குழந்தையா மாறி சிரி சிரின்னு சிரிச்சோம்… எல்லாப் புகழும் நரேனின் நடிப்புக்கே.. (பாவம்.. அவர குத்தம் சொல்லி என்ன பண்ண…) இது போக பிரெண்ட்ஸ்னு ரெண்டு மூணு பேரு… ஒரு ரெண்டு தாத்தா வர்றாங்க… செம்ம ரோலு அவுங்களுக்கு.. ஹீரோ சூப்பர் மேன்னா.. இவுங்க ரெண்டு பேரும் சூப்பர் ஓல்ட் மேன்.. இது போக ட்விஸ்ட்ன்னு ஒரு விசயம் வச்சிருக்காரு சத்தியமா சகிக்கமுடியல….
    நான் நினைக்கிறேன்… சில நல்ல படங்கள்  கொடுத்தும் ஓடலையேங்கிற விரக்தில.. மத்தவங்கள மாதிரி கமர்சியலா… ஆனா.. வித்தியாசமா ஒரு படம் பண்ணுவோம்னு முயன்றிருப்பாருன்னு நினைக்கிறேன்.. ஒரு சின்ன வேண்டுகோள் மிஷ்கின் உங்களுடைய முந்தைய படங்கள் வணிகரீதியா வெற்றி அடைஞ்சதா இல்லையான்னு தெரியல…. ஆனா அது உங்களுக்குன்னு ஒரு குறுகிய அளவிளாவது ரசிகர் வட்டத்தை கொடுத்தது.. ஆனா இந்தமாதிரி படம் அதையும் கெடுத்துரும்ன்னு நினைக்கிறேன்…
    இது எளிமையான சகல மனிதருக்கும் போய் சேரும் முயற்சின்னு சொல்லீருக்கீ்ங்க…. மன்னிக்க வேண்டும்.. இது சத்தியமாக அவர்களை திருப்திபடுத்தாது.. சென்றடையவும் செய்யாது…. என்றே அனுமானிக்கிறேன்…

No comments:

Post a Comment